Tuesday, November 11, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 162

ஆதிவாசிகளை சந்தித்த பிரதமர்!

0

பழங்குடி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட பாராளுமன்ற சட்டமூலத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக மற்றும் பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து காணப்படும் சட்ட சிக்கல்களை தீர்ப்பதற்கு சுற்றாடல் அமைச்சு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நேற்று  (22)  பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

பழங்குடி மக்களின் வரலாற்றுப் பெறுமதி தொடர்பாக தெளிவுபடுத்திய இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலெத்தன், தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பிரதமரின் கவனத்திற்கு முன் வைத்தார். ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான சட்டம் குறித்தும், பழங்குடியினரின் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்திய ஆதிவாசி மக்களின் தலைவர், இதுவரை காலமும் இருந்த அரசாங்கங்கள் ஒவ்வொரு நடவடிக்கைகளை எடுத்தாலும் அப்பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, பழங்குடி மக்கள் நாட்டின் வரலாற்றுச் சொத்து என்றும், அவர்களைப் பாதுகாத்து, அவர்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொடுப்பது அத்தியாவசியமானது என்றும் கலாசார அமைச்சர் சுனில் செனவி வலியுறுத்தினார்.

சுற்றாடல் அமைச்சின் ஊடாக ஆதிவாசிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவசியமான சட்ட விதிகளை அங்கீகரித்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதாகவும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி சுட்டிக்காட்டினார்.

அதற்காக காணப்படும் சட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக சுற்றாடல் அமைச்சு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் தெளிவுபடுத்தினர். 

சிறை சென்ற மற்றுமொரு அரச உயரதிகாரி!

0

500,000 ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்ட முறைப்பாட்டாளர், வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு மையத்திலிருந்து விடுவிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக சந்தேகநபர் இந்த இலஞ்சத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. 

சந்தேகநபர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு மையத்தில் பணிபுரியும்  குடிவரவு அதிகாரி ஆவார்.

சந்தேகநபர் 20 ஆம் திகதி மதியம் வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தடுப்பு மையத்தில் வைத்து இலஞ்ச  ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

0

40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு COPD என்ற நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பதாக சுவாச வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் குறித்து சமூகத்தில் சரியான புரிதல் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உலகில் நிகழும் இறப்புக்களுக்கான காரணங்களில் இந்த நோய் 7வது இடத்தில் உள்ளது.”

உங்களுக்கு ஆஸ்துமா நோய் இருந்தாலும், நீங்கள் மருந்து எடுத்துக்கொள்வதில்லை. இதனால் 20 அல்லது 30 வருடங்களில், நீங்கள் ஒரு COPD நோயாளியாக என்னிடம் வருவீர்கள். சிகரெட் புகை பயன்படுத்துகிறீர்கள். இதனால் உங்கள் நுரையீரல் காலப்போக்கில் சேதமடைகிறது என்பது உங்களுக்குத் தெரியாது.

உங்களுக்கு 45 வயது ஆகும்போது, ​​நீங்கள் மருத்துவர்களைத் தேடத் தொடங்குவீர்கள். அப்போது மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது போல் உணர்வீர்கள். மலை பங்கான பகுதியில் ஏறும் போது அது உணரப்படும்.

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இலங்கையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10% பேருக்கு இது உள்ளது.

“இது முதலில் கண்டுபிடிக்கப்படாததற்குக் காரணம், அதைப் பற்றிய புரிதல் இல்லாததே.” என்றார்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து மேலும் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது,

“இதைத் தடுக்க வேண்டுமானால் நாம் எங்கு வேலை செய்தாலும் சரி, எங்கு வாழ்ந்தாலும் சரி, தேவையற்ற காற்று மாசுபாட்டிற்கு ஆளாகாமல் இருப்பதன் மூலமும், முகக்கவசங்களை அணிவதன் மூலமும் இந்த நோயைத் தடுக்கலாம்.”

பெற்றோருக்கு இந்த COPD நோய் இருப்பது கண்டறியப்படாமலேயே உள்ளது. நடக்கவே கஷ்டமா இருக்கும். பின்னர் முச்சு விடுவதில் சிரமம்  ஏற்படும். லேசான தடிமன் ஏற்பட்டாலும் அவர்களுக்கு கடினமாக இருக்கும்.

ஒரே சிகிச்சை இன்ஹேலர் மட்டுமே. வேறொன்றுமில்லை.

COPD என்பது ஆஸ்துமாவிலிருந்து வேறுபட்ட ஒரு நாள்பட்ட நோயாகும். “அதனால்தான் இன்ஹேலரை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.” என்றார்.

சின்னமும் தலைமைத்துவமும் பிரச்சினை அல்ல!

0

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஏதேனுமொரு வகையில் அரசியல் இணக்கப்பாட்டினை எட்ட வேண்டும் என்று இரு கட்சிகளினதும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே தலைமைத்துவம் மற்றும் சின்னம் தொடர்பில் முரண்பட்டுக் கொள்ளாது இணைந்து பயணிப்பதே எமது இலக்காகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் புதன்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஏதேனுமொரு வகையில் அரசியல் இணக்கப்பாட்டினை எட்ட வேண்டும் என்று இரு கட்சிகளினதும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நாம் நம்புகின்றோம். இதன் பிரதான இலக்கு இணக்கப்பாட்டுடன் இணைந்து செயற்படுவதாகும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்த தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை. எதிர்கால பேச்சுவார்த்தைகள் ஊடாக இது குறித்த இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு எதிர்பார்க்கின்றோம். கூட்டணியொன்றை அமைப்பதற்கு இணக்கப்பாட்டை எட்ட முடியும்.

ஐக்கிய மக்கள் கூட்டணியை மேலும் விரிவுபடுத்தி அதில் ஏனைய பல கட்சிகளையும் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். எவ்வாறிருப்பினும் இது இறுதி தீர்மானம் அல்ல. சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இறுதி கட்டத்திலேயே தீர்மானிக்கப்படும். அதேவேளை தலைமைத்துவம் தொடர்பில் விவாதித்துக் கொண்டு ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பத்தை நழுவ விடுவதற்கும் நாம் தயாராக இல்லை.

தேசிய தேர்தலொன்று வரும் போது அவை தொடர்பில் சிந்திக்கலாம். அதுவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

அஸ்வெசுமைக்கு அர்த்தம் கேட்ட வன்னி எம்.பி

0

அரசாங்கத்தின் செயற்திட்டங்களின் பலவற்றின் சொற்கள் மக்களுக்கு புரியவதில்லை. திட்டத்தின் தலைப்பு புரியாத சந்தர்ப்பத்தில் அந்தத் திட்டம் எவ்வாறு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியது. அஸ்வெசும என்பதன் அதன் தமிழாக்கம் என்ன, 16ஆம் திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆட்சி மொழி தமிழாகும். புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய தமிழ் பதங்களை அறிமுகம் செய்யுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22)  நடைபெற்ற கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் நாட்டுக்கு தேவையானதொரு செயற்திட்டமாகும். இதனூடாக பல விடயங்கள் இந்த நாட்டில் கிளீன் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூக கட்டமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் ஊடாக இந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தின் நல்ல விடயங்களுக்கு இந்த அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இந்த செயற்திட்டத்தின் நோக்கமாக நீண்டகாலமாக நிலைத்திருக்க சமூக கலாச்சார மாற்றங்களை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். . இது ஒரு இனத்திற்காக அன்றி அனைத்து இன மக்களுக்குமான வேலைத்திட்டமாக உங்களுடன் பணியாற்ற நாங்கள் விரும்புகின்றோம். நல்ல நடத்தை மாற்றத்தை செய்யாது இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது.

இதனை நாங்கள் முதலில் செய்ய வேண்டும். இந்த வேலைத்திட்டம் தொடர்பான விளக்கமளிக்கும் நிகழ்ச்சியொன்றை பார்க்க முடியுமாக இருந்தது. அது இரண்டு மொழியில் மட்டுமே செய்யப்பட்டது. தமிழ் மொழியில் அது இருக்கவில்லை. இதனால் நடத்தை மாற்றத்தை எங்களிடம் இருந்து ஆரம்பித்து தமிழையும் அதில் சேருங்கள் என்று கோருகின்றோம்.

இதேவேளை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பலவற்றின் சொற்கள் மக்களுக்கு புரியவதில்லை. வேலைத்திட்டத்தின் தலைப்பு புரியாது அந்தத் திட்டம் எவ்வாறு வெற்றியளிக்கும் என்பது சந்தேகத்திற்குரியதே.

அஸ்வெசும என்றால் அதன் தமிழாக்கம் என்ன? 16ஆம் திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆட்சி மொழி தமிழாகும். புதிய சொற்பதங்களை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய தமிழ் பதங்களையும் கொண்டு வாருங்கள். உறுமய போன்ற திட்டங்களின் தமிழ் பொருளையும் வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன் மத நல்லிணக்க அமைச்சின் பௌத்த சாசன அமைச்சு மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கங்களில் மூன்று மதங்களுக்கும் தனித்தனி அமைச்சுகள் இருந்தன. இந்நிலையில் கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தில் அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கக்கூடிய வகையில் திட்டத்தை முன்னெடுப்பீர்கள் என நம்புகின்றோம் என்றார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

0

லங்கா சதோச நிறுவனத்தால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த பொருட்கள்  இன்று (22) முதல் குறைந்த விலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோச விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ கிராம் நிலக்கடலையின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 995 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 300 ரூபாயாகும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 180 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம்  சிவப்பு கௌப்பியின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 765 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம்  நெத்திலியின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 940 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாயின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 830 ரூபாயாகும்.

பாஸ்மதி அரிசி கிலோ கிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 645 ரூபாயாகும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 230 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 288 ரூபாயாகும்.

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 240 ரூபாயாகும்.

அனுரவின் அரசுக்கு அள்ளிக்கொடுத்த உலக வங்கி!

0

உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், இலங்கைக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர் விஜயத்தை இன்று (22) முடித்தார்.

தமது இரண்டு நாள் விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற அரசாங்க அதிகாரிகள், தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகளைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார்.

ரைசரின் வருகையின் போது கவனம் செலுத்தப்பட்ட முக்கிய துறைகளில் வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மேம்பாடு மற்றும் கிளீன் சிறிலங்கா முன்முயற்சிக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு ஆகியவை அடங்கும்.

அடுத்த மூன்று மாதங்களில் 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று பெரிய திட்டங்களுக்கு நிதியளிக்கத் திட்டமிட்டுள்ள உலக வங்கி, இந்த துறைகளுக்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டங்கள் கிராமப்புற அபிவிருத்தி மற்றும் கல்வியை ஆதரிப்பதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வசதியை நிறுவும்.

தேவையென்றால் ரஷ்யாவிடம் வாங்கவும்!

0

அமெரிக்கா கடுமையான வரி விதிப்புகளை மேற்கொண்டால்.. கண்டிப்பாக அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் எரிபொருளை நம்பி நாங்கள் இல்லை. கனடாவின் எரிபொருளை நம்பித்தான் அமெரிக்கா இருக்கிறது . அப்படி இருக்க அமெரிக்கா எங்கள் மீது கூடுதல் வரியை விதிப்பது சரியாக இருக்காது. அப்படி விதிக்கும் பட்சத்தில் கனடாவின் எரிபொருளை அவர்கள் வாங்க முடியாது . மாறாக ரஷ்யாவிடம் எரிபொருள் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம்.

சீனா, வெனின்சுலா போன்ற நாடுகளிடம் வேண்டுமானால் எரிபொருள் வாங்கிக்கொள்ளலாம். எங்கள் மீது 25% வரி விதிக்கும் பட்சத்தில் நாங்கள் அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்க மாட்டோம் என்று கனடா அறிவித்து உள்ளது. கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ.. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ.. அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகிறது.

2024 இல், கனடா ஒரு நாளைக்கு சுமார் 2.76 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60% ஆகும். அந்த அளவிற்கு அமெரிக்கா கனடாவை நம்பி உள்ளது.

2024 இல், கனடா ஒரு நாளைக்கு சுமார் 7.1 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்க இயற்கை எரிவாயு இறக்குமதியில் குறிப்பிடத்தக்க அளவு ஆகும். 2022 ஆம் ஆண்டில், கனடா சுமார் 53 டெராவாட் (TWh) மின்சாரத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. கணக்குப்படி பார்த்தால் மின்சாரம், கச்சா எண்ணெய் , இயற்கை எரிவாயு என்று அனைத்திற்கும் கனடாவையே அமெரிக்கா நம்பி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ.. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ.. அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 4 முக்கியமான நாடுகளை அல்லது வேறு நாட்டின் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ராணுவ படைகளை களமிறக்கவும் தயார் என்று அவர் அறிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக அவர் கடந்த சில நாட்களாகவே பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் உடனே இந்த பகுதிகளை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும். பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். இந்த பகுதிகளை அமெரிக்காவிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அதற்காக படைகளை கூட அனுப்புவேன்.

தேவைப்பட்டால் மொத்த ராணுவத்தை கூட அனுப்புவேன். கனடாவை பொறுத்தவரை அப்படி இல்லை. அவர்களுக்கு பொருளாதார அழுத்தம் தருவேன். மெக்சிகோ அமெரிக்காவின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது போலத்தான். இவர்களுக்கும் பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களை கொடுப்பேன். அவர்கள் அமெரிக்காவின் புதிய மாகாணங்களாக மாற வேண்டும், என்றுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நேரம் பார்த்து கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியை மீண்டும் மேற்கொண்டு உள்ளாராம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கனடாவில் அரசியல் சிக்கல் நிலவி வரும் நிலையில் டிரம்ப் மீண்டும் இந்த முயற்சியில் இறங்கி உள்ளாராம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்!

0

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கு என்று நேற்று (21) மாலை, “தாருஸலாம்” தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் கொழும்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் , எம்.எஸ் .உதுமாலெப்பை, எம்.எஸ்.நழீம் மற்றும் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குறித்த கூட்டம் நடைபெற்றது.

கொழும்பு மாவட்ட மத்திய குழு கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி நீண்ட நேரமாக கலந்துரையாடப்பட்டதன் பின்னர், கொழும்பு , தெஹிவலை-கல்கிஸ்ஸ, கோட்டே ,மொரட்டுவை,கொலன்னாவ மாநகர சபைகளுக்கும்,கொடிகாவத்தை-முல்லேரியா போன்ற பிரதேச சபைகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்ற முடிவை தலைவர் அறிவித்ததோடு அடுத்த கட்ட நடவடிக்கைகளை கட்சி உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவித்தார்.

பா.உ ரவூப் ஹக்கீமின் நூல் வெளியீடு!

0

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் – மறைகரம் வெளிப்பட்டபோது” மற்றும் “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள் -முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்” ஆகிய இரு மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி, வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு கொழும்பு -7இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது.

பேராசிரியர் ராஜன் ஹூல் ஆங்கிலத்தில் எழுதிய “SRI LANKA’S EASTER TRAGEDY. When the deep state gets out of its depth” என்ற ஆங்கில நூலை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் பி.ஏ தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அன்று வெளியிடப்படும் அடுத்த நூல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த “WE ARE A PART NOT APART – Demystifying Myths Against Muslims of Sri Lanka” என்ற நூலின் தமிழாக்கம் ஆகும்.

இந்த நூல்கள் இரண்டினதும் ஆய்வுரையை பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் நிகழ்த்துவதோடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் மஹிந்த ஹத்தக்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

இவ்விரு நூல்களும் அண்மை காலத்தில் இலங்கையை உலுக்கிய அதிர்ச்சியான சம்பவங்களையும், அச்சுறுத்தல்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை.