Wednesday, June 24, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 164

வடக்கு கிழக்கில் ஹர்த்தால்!

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. 

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் நுழைந்த ஒரு குழுவினர் இராணுவ அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், முகாமுக்குள் நுழைந்த மற்றொரு இளைஞர் முத்துஐயன்கட்டு குளத்தில் உயிரிழந்து கிடந்ததை அடுத்து இராணுவம் இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. 

சம்பவம் குறித்து இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதுடன், மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இருப்பினும், இளைஞரின் மரணத்திற்கு நீதி கோரி இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் நடத்துவதாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று (18) ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுவதாகவும், அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றும் மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறானது என்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

எனினும் முப்படைகளுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ‘ரெலோ’ ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, சுமந்திரனால் தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுத்து அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்காமல் எதிர்ப்பினை தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் சபாரத்தினம் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார். 

அத்துடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார். 

தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து திரிபுவாதங்கள் மற்றும் பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். 

இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு அவர்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை இன்று காலை வவுனியா நகரின் வணிக நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மதியம் 12.00 மணி முதல் மீண்டும் வணிக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்க நடவடிக்கையில் தபால் ஊழியர்கள்!

0

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாட்டின் சகல மாவட்டங்களிலும் உள்ள பிரதான தபால் நிலையங்கள் மற்றும் கிளை தபால் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை  (17) மாலை முதல் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

விமான சேவையை நிறுத்துவதாக ஏர் கனடா அறிவிப்பு!

0

கனடா நாட்டின் மிக பெரிய விமான நிறுவனமான ஏர் கனடா 64 நாடுகளுக்கு தினமும் 300க்கும் மேல் விமானங்களை இயக்கி வருகிறது.

ஊதியம் தொடர்பாக ஏர் கனடா விமானப்பணியாளர்களுக்கும் ஏர் கனடா நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக புதன்கிழமை இரவே விமான பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலையில் இருந்தே சுமார் 10,000க்கும் அதிமான விமான பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் விமான சேவையை நிறுத்துவதாக ஏர் கனடா நேற்று அறிவித்தது. ஏர் கனடாவின் இந்த அறிவிப்பால் 1,30,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பயணச்சீட்டு உறுதி செய்யப்படாத பயணிகள் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்றும், மற்ற பயணிகள் விமான சேவையை உறுதி செய்த பிறகு விமான நிலையத்திற்கு வரவும் ஏர் கனடா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

வவுனியா, ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து!

0

வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கெப் ரக பொலரோ வாகனம், வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது. விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.

விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தனர்.

மேலும் இலகுரக வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகிய பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனம் குறித்த வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த யாழினி (வயது 33, சுயன் (வயது 30) என்று தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்று விட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பாக வவுனியா ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கில் இதுவரை 344 பேர் பலி!

பாகிஸ்தானின் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலியானவர்கள் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் 279 பேர் இறந்ததாக முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை 344ஆக அதிகரித்துள்ளது.

புனேர் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் சுமார் 184பேர் உயிரிழந்துள்ளனர். ஷாங்க்லா மாவட்டத்தில் 36 பேர், மன்சேராவில் 23 பேர், ஸ்வாட்டில் 22 பேர், பனெஜரில் 21 பேர், பட்டாகிராமில்15 பேர் லோயர்ட டிர் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே வருகிற 21ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கும் இராணுவத்திற்கும் சம்பந்தமே இல்லைய

0

ஒட்டுசுட்டான் இராணுவ முகாம் சம்பவத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ள நபருக்கும் இராணுவத்துக்குமிடையில் எந்தவித சம்பந்தமும் கிடையாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.

பொலிசார் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நாம் பொலிசாருக்கு விசாரணைகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். தொடர்ந்தும் எமது முழுமையான ஒத்துழைப்பு அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுசுட்டான் இராணுவ முகாமிற்குள் பலபந்தமாக உட்பிரவேசிக்க முயன்றவர்களை துரத்த முற்பட்ட போது நபர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் தொடர்பில் குறிப்பிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பி்ல் விளக்கம அளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு  நேற்று தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது. அங்கு விளக்கமளிக்கும் போதே இராணுவ ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

”இராணுவ முகாமுக்குள்  பலவந்தமாக ஒரு தரப்பினர் உட்பிரவேசிக்க முயன்றதிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் அவர்களை துரத்துவதற்கு அங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நபரை இராணுவத்தினர் பிடித்து  அவரை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த நபர் இதற்கு முன்னர் மேற்படி இராணுவ முகாமில் திருட வந்துள்ள சம்பவத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதுதான் இந்த சம்பவத்தில் இராணுவத்திற்கு காணப்படும் தொடர்பு.

எனினும் சம்பவம் இடம்பெற்றுள்ள மறுநாளே ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு மரணமடைந்தவர் இராணுவ முகாமிற்குள் பிரவேசிக்க முற்பட்டவர்களின் ஒருவர் என்றும் தெரியவந்தது. எவ்வாறெனினும் மேற்படி மரணத்துடன் இராணுவத்தினருக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது. பொலிஸார் அது தொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வுட்லர் தெரிவிக்கையில்;

”மேற்படி சம்பவம் தொடர்பில் தற்போது இரண்டு குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.  13 இராணுவத்தினரிடமும் மேலும் 11 சிவில் நபர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

மேற்படி சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நபர்கள் சிலர் இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக உட்பிரவேசித்தமை தொடர்பில் இராணுவத்தினருக்கு தொடர்புள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனித உயிரை பலியெடுத்த காட்டு யானை

0

அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 

குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் பின்னர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அந்த நபர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

சம்பவம் குறித்து அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் எம்.பி சுமந்திரனை கிழித்த அமைச்சர் பிமல்!

தற்பொழுது வடக்கு கிழக்கில் இருக்கின்ற அரசியல்வாதிகள் பலர் முன்னைய காலங்களில் போலவே தமது செயற்பாடுகளை தற்போதும் மேற்கொண்டு வருகின்றார்கள் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் 17.08.2025 கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து பேசியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்;

தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள், முத்தையங்கட்டு பகுதியில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கேட்டு 18.08.2025 நாளைய தினம் வடக்கு கிழக்கு பகுதிகளில் கதவடைப்புக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இவர் பல பதவிகளை வகித்த காலப்பகுதியில் இதற்கு முன்னர் முத்தையங்கட்டு பகுதிக்கு சென்றுள்ளாரா, அங்குள்ள நிலைமைகள் பற்றி ஏதும் அறிந்துள்ளாரா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், தற்பொழுது அரசியல் லாபத்திற்காகவே இப்படியான சில விடயங்களை மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.

முத்தையங்கட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முற்படுத்தப்பட்டுள்ளனர். சில அரசியல்வாதிகள் இச்சம்பவத்தை தொடர்புபடுத்தி அரசியல் லாபத்தை பெறுவதற்காகவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும், நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இனி வரும் காலங்களில் இவர்களுக்கு தக்க பாடத்தினை மக்கள் கற்பிப்பார்கள் எனவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாக்க தெரிவித்தார்.

வடக்கில் 40,000 தென்னை செய்கை ஆரம்பம்!

தேங்காய் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கிலும், வடக்கு கிளிநொச்சி மக்களின் எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டும், வடக்கில் சுமார் 40,000 தென்னை செய்கையினை மேற்கொள்ள ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் 17.08.2025 கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து பேசியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்;

எதிர்வரும் இரண்டாம் திகதி அளவில் புது குடியிருப்பு பகுதிக்கு எமது நாட்டின் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க அவர்கள் வருகை தர உள்ள நிலையில், இதன் முதற்கட்டமாக இவ்வருடத்தில் 16 ஆயிரம் தென்னை செய்கையை மேற்கொள்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் தென்னை செய்கை தொடர்பான சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளுடனும், தென்னை செய்கையாளர்களுடன் பெருந்தோட்ட அமைச்சர் கலந்துரையாடி ஆலோசனைகளை பெற்றுச் சென்றுள்ளார்.

அதில் முதல் கட்டமாக வருகின்ற 02.09.2025 புது குடியிருப்பு பகுதிக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி, புது குடியிருப்பு பகுதியில் உள்ள தென்னை செய்கையாளர்களுக்கான ஆவணங்களை வழங்குவதுடன், ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதுகுடியிருப்பு வட்டு வாகல் பாலத்தின் புனரமைப்பு ஆரம்ப நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளதாக அமைச்சர் பிமல் ரத்னாக்க தெரிவித்தார்.

சட்ட மாஅதிபர் அலுவலகம் நீதிக்கு ஒரு முக்கிய தடையா?

0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு வழங்கவேண்டிய பதிலை, சட்ட மாஅதிபர் திணைக்களம் தற்போது தயாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவர் இலங்கை குறித்த தனது அண்மைய அறிக்கையில் சட்ட மாஅதிபர் அலுவலகத்தை நீதிக்கு ஒரு முக்கிய தடையாக விபரித்துள்ளார். 

அதே நேரத்தில் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அதிகாரத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார். 

இதனையடுத்தே குறித்த கருத்துக்கள் தொடர்பில் வெளியுறவு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து பதில் வரைவு செய்யப்பட்டு வருவதாக சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் அறிக்கையில் அவர் முன்வைக்கும் கருத்துகளுக்கு, இலங்கை அரசாங்கத்தின் பதிலின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக கடந்த செவ்வாயன்று, வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடுமையான மனித உரிமை மீறல்களைத் தொடர ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அதிகாரத்தை உறுதி செய்வதற்காக சட்ட மாஅதிபர் அலுவலகத்திற்குள் சீர்திருத்தம் தேவை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார். 

இலங்கையில் சட்ட மாஅதிபருக்கு வழங்கப்பட்டுள்ள வழக்குத் தொடரும் விருப்புரிமை, காவல்துறையின் வரையறுக்கப்பட்ட புலனாய்வுத் திறன், தகுதிவாய்ந்த தடயவியல் நிபுணர்கள் இல்லாமை மற்றும் தமிழ் பேசும் அதிகாரிகளின் வெற்றிடங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறுவதைக் கூட்டாகத் தடுக்கின்றன மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கின்றன என்று அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அத்துடன் அரசாங்கம் தனது கொள்கை அறிக்கையில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இருந்து சுயாதீனமான பொது வழக்குத் தொடரும் பணியகத்தை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது என்பதையும் உயர்ஸ்தானிகரின் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. 

ஏற்கனவே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், இந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்கவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.