Home Blog Page 165

இது உண்மையான செவ்வந்தியா? சர்ச்சையை கிளப்பிய கம்மன்பில!

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தியா என்பதில் தனக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சனல் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தியின் கைது தொடர்பில் விசாரணை அதிகாரிகள் செயற்படும் விதம் தனக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லும் போது வெளியான புகைப்படங்களில் அவரது முகம் நீள்வட்டமாக இருந்தது. எனினும், தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள செவ்வந்தியின் முகம் வட்டமாக உள்ளது.செவ்வந்தியின் தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள் உள்ளன.

பியூமி ஹன்சமாலியின் க்ரீமை பாவித்தால் கூட 8 மாதங்களில் இவ்வாறான தோற்றத்தை பெற வாய்ப்பில்லை. அத்துடன், உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல, செவ்வந்தியை நேபாளத்தில் வைத்து பார்த்தவுடன் அவரிடம் ‘நலமா?’ என வினவுகின்றார்.

செவ்வந்தியை போன்ற உருவ அமைப்பை உடைய மற்றொரு பெண்ணும் அங்கு இருக்கின்றார். இவ்வாறிருக்க, அவர் செவ்வந்தியை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டார்?

வாகனம் செலுத்தும் ஒருவர் சாதாரண தவறொன்றை செய்துவிட்டு காவல்துறையினரிடம் சிக்கினால் அவர் பதற்றமடைவார். ஆனால், கொலைக் குற்றம் புரிந்த செவ்வந்தி, காவல்துறையிடம் சிக்கும் போது அவரது முகத்தில் எந்தவொரு பதற்றமும் இல்லை. மாறாக, அவரது முகத்தில் சிரிப்பே இருந்தது.

சாதாரணமாக ஒரு குற்றவாளியை மற்றுமொரு நாட்டிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரும் போது, முகத்தை மூடி அழைத்து வருவது வழக்கம். எனினும், செவ்வந்தி இலங்கைக்கு அழைத்து வரப்படும் போது அவர் தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு பகிரப்பட்டன.

இந்நிலையில், செவ்வந்தி தங்கியிருந்த இடத்தை பார்வையிட காவல்துறையினர் அவரை அழைத்துச் செல்லும் போது, முகத்தை மூடி அழைத்து செல்கின்றனர். முழு நாடே செவ்வந்தியின் முகத்தை பார்த்த பின்னர் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?

இதேவேளை, பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மே தான் செவ்வந்தி நேபாளத்திற்கு தப்பிச்செல்ல உதவினார்.அவர் காவல்துறையிடம் சிக்கிய பின்னர் செவ்வந்தி தொடர்பான உண்மைகளை கூறுவார் என அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறான நிலையில், செவ்வந்தி ஏன் நேபாளத்தை விட்டு தப்பிச் செல்லாமல் இருந்தார்? இவ்வாறான விடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார். 

வாகனங்களை விடுவிக்க வர்த்தமானி அறிவித்தல்!

சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்காக புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (24) முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட போதிலும், 2013ஆம் ஆண்டு இல. 02 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் விதிமுறைகளை மீறி குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இலங்கை சுங்கத்தில் சிக்கியுள்ளன 

இந்த புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, இறக்குமதி செய்யப்பட்ட நாட்டைத் தவிர வேறு ஒரு நாட்டில் திறக்கப்பட்ட கடனுறுதி ஆவணங்கள் (cross-border LC) தொடர்பான ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க அனுமதி வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்த வாகனங்களை விடுவிப்பதற்கும் பதிவு செய்வதற்கும் பல நிபந்தனைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை – இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்!

இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

குறித்த கப்பல் போக்குவரத்து சேவையானது கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14-ஆம் திகதி முதல் ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. 

இந்த கப்பலில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டினர் என ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை மாற்றத்தின் காரணமாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நாகை – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது. 

இதனால் கப்பலில் செல்ல இரு மார்க்கத்திலும் முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சிக்கினார் துப்பாக்கிதாரி!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தெற்காசியாவின் வேகமான மனிதர் சாமோத் யோதாசிங்க!

புதிய போட்டி சாதனையுடன் இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற யோதாசிங்கே…..!

தெற்காசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் 2025 இல் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாமோத் யோதாசிங்க தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த ஓட்டப்பந்தய போட்டியை 10.30 வினாடிகளில் முடித்து வெற்றிபெற்றதன் மூலம் புதிய போட்டி சாதனை அவர் படைத்துள்ளார்.

தெற்காசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் 2025 இல் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற சாமோத் யோதாசிங்கே, வேகமான மனிதர் பட்டத்தை வென்றார்.

அவரது அற்புதமான செயல்திறன் இதற்கு முன் இருந்த சாம்பியன்ஷிப் போட்டி சாதனையையும் முறியடித்தது!

உலக சாதனை படைத்த கிங் கோலி!

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று (25) நடைபெற்றது. 

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

அதிகபட்சமாக ரென்ஷா 56 ஓட்டங்களைப் பெற்றார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

பின்னர் 237 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா – விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது. 

வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. 

ரோஹித் சர்மா 121 ஓட்டங்களுடனும், விராட் கோலி 74 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இந்த ஆட்டத்தில் பெற்ற 74 ஓட்டங்களையும் சேர்த்து சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ஓட்டங்களை குவித்துள்ளார். 

இதன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற உலக சாதனையை இவர் படைத்துள்ளார். 

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 18,436 ஓட்டங்களைப் பெற்றிருந்ததே அதிகபட்சமாக இருந்தது. 

தற்போது அதனை முறியடித்துள்ள விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். 

அந்த பட்டியல்: 

1. விராட் கோலி – 18,443 ஓட்டங்கள் 
2. சச்சின் டெண்டுல்கர் – 18,436 ஓட்டங்கள் 
3. குமார் சங்கக்கார – 15,616 ஓட்டங்கள் 
4. ரோஹித் சர்மா – 15,589 ஓட்டங்கள் 
5. மஹேல ஜயவர்தன – 14,143 ஓட்டங்கள்

மத்திய மலைநாட்டின் பல இடங்களில் மண்சரிவு அபாயம்!

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. 

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. 

இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் மழையுடன் அடிக்கடி பனிமூட்டமும் காணப்படுவதால், வளைவுகள் நிறைந்த மலைநாட்டு வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள், வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து, மெதுவாகப் பயணிப்பதன் மூலம் வீதி விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவல, தியகல, வட்டவளை, ஹட்டன் ஆகிய பகுதிகளிலும், ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளயார், தலவாக்கலை, ரதல்ல, நானுஓயா ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுகிறது. 

மேலும், இவ்வீதிகளில் பல இடங்களில் மண் திட்டுகள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், மண்சரிவு அபாயமும் நிலவுகிறது. 

எனவே, இந்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய மலைநாட்டின் நீரேந்து பிரதேசங்களில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

விமலசுரேந்திர, காசல்ரி, லக்ஸபான, நவலக்ஸபான, கெனியோன், மவுசாக்கலை, மேல்கொத்மலை, பொல்பிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 

மழைவீழ்ச்சி மேலும் அதிகரித்தால், நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் எந்நேரமும் திறக்கப்படலாம் என்பதால், நீர்த்தேக்கங்களுக்கு கீழே உள்ள ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொறுப்பு பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற கார் விபத்து!

ஜூட் சமந்த

வீதியில் பயணித்த மோட்டார் கார் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பெல்ஜியத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் சாரதி ஆகியோர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் – சிலாபம் சாலையில் மதுரங்குளிய – செம்பெட்டே பகுதியில் நேற்று 24 ஆம் தேதி மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய மோட்டார் கார், சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்றவேளையில் வாகனம் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும வாகனத்தை செலுத்திய ஓட்டுநர் தூங்கிவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களின் நிலை மோசமாக இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுரங்குளிய காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

போதைப்பொருள் பாக்கெட்டுகளை விழுங்கிய இளைஞர்!

ஜூட் சமந்த

ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பாக்கெட்டுகளை விழுங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடுவாவ – மஹாவெவ, குடமடுவெல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவராவார்.

போதைப்பொருள் பாக்கெட்டுகளை விழுங்கிய பின்னர் வீட்டில் மயக்கமடைந்த நபரை அவரது சகோதரர் நேற்று 24 ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக போதைப்பொருள் பாக்கெட்டுகளை விழுங்கினாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவுடன் அனைத்து வர்த்தகப் பேச்சுகளும் நிறுத்தம்!

கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

அந்த வகையில், கனடாவை அமெரிக்காவோடு இணைப்பது குறித்து அவ்வபோது பேசி வந்த அவர், கனடாவிற்கு அதிக வரிவிதிப்பையும் அமல்படுத்தி உள்ளார். இதற்கிடையே, கனடாவின் பிரதமராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து, மார்க் கார்னி லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமரானார்.

மார்க் கார்னி பிரதமரான பின்பும் அமெரிக்காவை எதிர்த்து வந்தார். இந்தச் சூழலில், அமெரிக்காவிற்குச் சமீபத்தில் பயணம் மேற்கொண்ட கனடா பிரதமர் மார்க் கார்னி, வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், கனடாவின் வரிவிதிப்பு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொலைக்காட்சியில் விளம்பரம் வெளியானதைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் வர்த்தக வரிகள் பற்றிப் பேசியதை, கனடா தனது விளம்பரத்தில் தவறாகச் சித்திரித்திருப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். வரி விதிப்பு குறித்து எதிர்மறையாகப் பேசும் ரீகனின் விளம்பரங்களைக் கனடா தவறாகப் பயன்படுத்தியதாகவும் அது போலியானது என்றும் அண்மையில் ரொனால்டு ரீகன் அறக்கட்டளை அறிவித்திருந்ததை ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வரிகள் மிகவும் முக்கியமானவை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடுமையான அமெரிக்க வரி விதிப்பிற்குத் தளர்வு வழங்கக் கோரி கனடா பிரதமர் மார்க் கார்னி ட்ரம்பைச் சந்தித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த எதிர்பாரா முடிவு வெளிவந்துள்ளது. முன்னதாக, ”அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்குச் செய்யப்படும் ஏற்றுமதி அடுத்த பத்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கப்படும், அதேநேரத்தில், உள்நாட்டு முதலீடும் உள்கட்டமைப்பும் வரும் பட்ஜெட்டில் அதிகரிக்கப்படும். பல தசாப்தங்களாக நீடித்துவந்த அமெரிக்காவுடனான நெருக்கமான பொருளாதார உறவு முடிந்தது” என்று மார்க் கார்னி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.