இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது.
செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22) 322,000 ரூபாயாக குறைந்துள்ளது.
அதேநேரம் நேற்றைய தினம் (21) 370,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (22) 350,000 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக 410,000 ரூபாய் வரை அதிகரித்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார்.
அவர் இன்று (22) காலை பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், படுகாயமடைந்த அவரை பிரதேச சபை அதிகாரிகள் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.
துப்பாக்கிதாரிகள், பிரதேச சபை தலைவரிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறுவது போன்று பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
புத்தளம் கனமூலையைச் சேர்ந்த முஹம்மது அஷாம் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக நியமனம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் கனமூலை கிராமத்தின் முஹம்மது அஷாம், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் ஆகிய இரு இடங்களுக்குமான உதவி திட்டமிடல் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் பாடசாலை ஆசிரியரான இவர், இலங்கை நிர்வாக சேவை (SLAS) இலங்கை திட்டமிடல் சேவை (SLPS) இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) ஆகிய மூன்று பரீட்சைகளிலும் சித்தியடைந்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக இலங்கை திட்டமிடல் சேவை பரீட்சையிலும் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று இலங்கை திட்டமிடல் சேவைக்கு (Sri lanka planning Service) தெரிவு செய்யப்பட்டு தற்போது உதவித் திட்டமிடல் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்
கனமூலை மண்ணின் வரலாற்று சாதனையின் மூலம் தடம் பதிக்கும் முதலாவது திட்டமிடல் அதிகாரி இவர் ஆவார்.
தனது ஆரம்பக் கல்வி முதல் க.பொ.த சாதாரண தரம் வரை கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்று, புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில் உயர் தர கற்கையை தொடர்ந்தார்.
பட்டப்படிப்பை இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் ஆகிய இரு இடங்களுக்குமான உதவி திட்டமிடல் பணிப்பாளராக நியமனம் பெற்று கனமூலை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையக ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டமை காரணமாக இன்று (21) கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த கண்டி, மாத்தளை மற்றும் பிராந்திய ரயில் சேவைகள் உட்பட 22 பயணிகள் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை மற்றும் நானுஓயா வரை இயக்க திட்டமிடப்பட்ட 4 ரயில் சேவைகள் கண்டி ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சேவைகள் திட்டமிட்ட நேரத்தில் கண்டி ரயில் நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், நானுஓயா மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படும் 04 ரயில் சேவைகள் பேராதனை மற்றும் கண்டி வரை பயணிக்கவுள்ளன.
மலையக ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் இந்த மூன்று நாட்களில் இரத்து செய்யப்பட்ட மொத்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை 42 ஆகும்.
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை சுமார் 16 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம் (NDRSC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகங்களை சேர்ந்த 62 பேர் குறித்த சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்கொடுவ, மஹவெவ, நவகத்தேகம மற்றும் நாத்தாண்டி பிரதேச செயலகங்களுக்கு உற்பட்ட 16 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் இவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நவகத்தேகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட இங்கினிமிட்டி கிராம சேவகர் பிரிவில் உள்ள ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாத்தாண்டிய பிரதேச செயலகத்தின் தெற்கு முது கட்டுவ பிரிவில் உள்ள கால்நடை அலுவலக வளாகம் நீரில் மூழ்கியுள்ளதுடன், பல மாடி கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கங்களின் பேரவையின் (YMMA) 75வது ஆண்டு மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு.
ஒக்டோபர் 20ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற, அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கங்களின் பேரவையின் (YMMA) 75வது ஆண்டு மாநாட்டில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டார்.
முன்னாள் அரச சிவில் உத்தியோகத்தரும் செனட்டருமான கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட YMMA, இளைஞர்களின் சமூக ஈடுபாட்டின் மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நிறுவப்பட்டதாகும். பல ஆண்டுகளாக இந்த நோக்கு பேணப்பட்டு வருகின்றது. பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டு, ஒரு தொண்டு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள YMMA, சமூக நலன் மற்றும் சமூக மேம்பாட்டின் தூணாக விளங்குகின்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
“கல்வி, இளைஞர் அபிவிருத்தி, அனர்த்த நிவாரணம் , உதவிகள் தேவைப்படுகின்ற பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு வலுவூட்டுதல், சமூக நலன்புரி சேவை ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் செயல்திட்டங்கள் மூலம், இந்த அமைப்பு ஆயிரக்கணக்கான தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் ஆதரவளித்து வருகின்றது.
இளம் முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் (YWMA) ‘பெண்களை வலுவூட்டல் திட்டம், ‘மீண்டும் பாடசாலைக்குத் திட்டம்’ போன்ற முயற்சிகள் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவளிப்பதில் YMMA முக்கியப் பங்காற்றி வருகின்றமை பாராட்டத்தக்கது. இவ்வாறான செயல்திட்டங்கள் தனி மனித வளர்ச்சிக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைகின்றன.
உங்களது உறுப்பினர்கள் மற்றும் கிளைகளின் இந்த வருடாந்த அங்கீகாரமானது, மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகத் தமது நேரத்தையும், ஆற்றலையும், வளங்களையும் வழங்கியவர்களின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
75 ஆண்டுகால சேவையைப் பற்றி நாம் சிந்திக்கும் போது, எதிர்காலத்தைப் பற்றியும் பார்க்க வேண்டும். வேலையின்மை மற்றும் சமூகப் புறக்கணிப்பு உட்பட இளைஞர்கள் இன்று எதிர்கொள்ளும் சவால்களுக்கு, அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் YMMA போன்ற அமைப்புகளுக்கு இடையில் வலுவான கூட்டுறவுத் தேவைப்படுகின்றன.
குறிப்பாக சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை முடித்த பின், பெண் பிள்ளைகளுடன் ஒப்பிடுகையில் ஆண் பிள்ளைகளில் பெருமளவானோர் உயர் கல்வியை விட்டு விலகிக் கொள்கின்றமை தரவுகள் அடிப்படையில் பார்க்கின்ற பொழுது தெரிய வருகின்றது. இதனால் இளம் வயதில் இருக்கும் ஆண்கள் உயர் கல்வி மற்றும் தொழில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆகையினால் அவர்களுக்கான வழிகாட்டுதல், ஊக்குவித்தல் ஆகியன மூலம் இளைஞர்களுக்கு அவர்களது கல்விப் பயணத்தைத் தொடர ஆதரவளிக்க வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கின்றது.
ஆகையினால் பொறுப்பும், திறமையும் மிக்க இளைஞர் சமுதாயத்தினை உருவாக்குவதில் YMMA இன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நான் பாராட்டுகிறேன். இந்த முயற்சிகளின் மூலமே சமத்துவம், புரிதல் மற்றும் சம வாய்ப்புகள் மிக்க சமூகத்தை உருவாக்குதல் சாத்தியமாகும், எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் , பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், YMMA உறுப்பினர்கள் உள்ளிட்ட விசேட அதிதிகளும் கலந்துகொண்டனர்.
உடன் அமலுக்கு வரும் வகையில் முக்கிய பதவி ஒன்றை முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஐக்கிய தேசிய கட்சி வழங்கியுள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட பதவியின் பொறுப்பு, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவற்றை ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவதாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்யும் 1,000 கூட்டங்களுக்கும் ஹரின் பெர்னாண்டோவே பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பானது எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள குறித்த அறிக்கையில் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் கிழக்கே உள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் தற்போது குறைந்த அழுத்தப் தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது.
இது மேலும் வலுவடைந்து இலங்கைக்கு அருகே வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றானது (55–65) கிமீ வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும்.
இதேவேளை கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிலாபம் வாரியபொல வீதியில் பிங்கிரிய நகரில் இன்று செவ்வாய்க்கிழமை (21) லொறி ஒன்றுடன் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாட்டில் மிக மோசமான காலநிலை நிலவிவரும் நிலையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், வேன் சாரதி கவனக்குறைவாக வண்டியை செலுத்தியதில் தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் சாரதிகள் இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ள நிலையில் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பிங்கிரிய போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெய்து வரும் அதிக மழை காரணமாக, தப்போவ நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் இன்று 21 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு தலா 01 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டதாக புத்தளம் நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்தார்.
திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து வெளியேறும் நீர் மீ ஓயாவில் சங்கமிக்கின்றது.
தெதுரு ஓயாவின் 04 வான் கதவுகள் தலா 06 அடி உயரமும், 02 வான் கதவுகள் தலா 02 அடி உயரமும் திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து தெதுரு ஓயாவில் வினாடிக்கு 16,900 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை கூறுகிறது.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் தலா 06 அடி உயரமும் திறக்கப்பட்டுள்ளன. இந்த வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 6832 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதற்கிடையில், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் தலா 06 அடி உயரமும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 2898 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீர் கலா ஓயாவில் வெளியேற்றப்படுவதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருக்குமாறு புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.