Saturday, May 2, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 169

புத்தகங்களின் விலை சடுதியாக உயர்வு!

0

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதால் அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்திர ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர இந்தக் கருத்தை வெளியிட்டார். 

ஒரு புத்தகத்தின் விலை 20% அதாவது ஐந்தில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் குழம்பியுள்ளனர். முன்பு, எழுதுபொருள் உட்பட அனைத்திற்கும் VAT வரி விகிதம் 15% ஆக இருந்தது. ஆனால் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு VAT வரி இல்லை. அதற்குதான் நேரடியாக 0 – 18%ஆக அறவிடப்பட்டது. எழுதுபொருட்களுக்கு 3%ஆக மட்டுமே இருந்தது. அவர்கள் இந்த இரண்டு விடயங்களால் குழம்பிப் போயுள்ளனர். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது, அதில் அவர்கள் VAT வரி தொடர்பாக சில விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும், பின்னர் ஒரு பதிலை வழங்குவதாகவும் தெரிவித்தனர். 

தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் புரவலர் காமினி மொரகொடவும் இது குறித்து ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை தெரிவித்தார். 

உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எங்கள் புத்தகங்களுக்கு VAT வரி அறவிடப்படுகிறது. இலங்கையில் 75 ஆண்டுகளாக நடைமுறையில் இல்லாத VAT வரி, ஜனவரி 2024 முதல் விதிக்கப்பட்டதால் புத்தக விற்பனை அழிவடைந்து வருகிறது. இது தொடருமாக இருந்தால் ஒரு பிள்ளைக்கு புத்தகம் கூட வாங்க முடியாது.

பங்களாதேஷை துவம்சம் செய்த இலங்கை அணி!

0

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

அதன்படி, 6 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இன்றைய நான்காவது நாளில் ஆட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

பங்களாதேஷ் அணி சார்பாக முஸ்பிகுர் ரஹீம் 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

பங்களாதேஷ் அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 247 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதோடு, இலங்கை அணி அதன் முதலாவது இன்னிங்ஸில் 458 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இந்த வெற்றியின் ஊடாக இலங்கை அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் தலைவர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

”ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டமிட்டோம். ஆனால், அவர் நிலத்துக்கு அடியில் அவர் சென்று பதுங்கினார்,” என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

கமேனி எங்கள் கண்ணில் பட்டிருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் கொன்றிருப்போம். இதனை அறிந்து கொண்ட அவர், நிலத்துக்கு அடியில் சென்று பதுங்கு குழியில் பதுங்கினார். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதில் வந்தவர்களுடனான தொடர்பையும் அவர் துண்டித்து கொண்டார். இதனால், எங்களது முயற்சி சாத்தியம் இல்லாமல் போனது. போரின் போது, தீவிரமாக அவரை தேடினோம். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. தலைமையை மாற்றுவதே நோக்கம். கமேனியை கொல்வதற்கு அமெரிக்காவின் அனுமதி ஏதும் தேவையில்லை என்று கூறிய விடயம் தற்போது பெரும் பரபரப்பாக மாறியுள்ளது.

ஈரான் தயாரிக்கும் அணுஆயுதங்களினால், தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என குற்றம்சாட்டிய இஸ்ரேல் அந்நாடு மீது தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் முக்கிய படை தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்தப் போர் 12 நாட்கள் நீடித்த நிலையில், தற்போது போர் நிறுத்தம் அமலானது குறிப்பிடத்தக்கது.

கல்பிட்டியில் சிக்கிய போதை வில்லைகள்!

0

சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்ட போதை வில்லைகளை கல்பிட்டி பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொஹத்துவாரம் கடற் கரையோரத்தில் கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்களால் 26.06.2025 ஆந் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 317000 (04 பார்சலில்) போதை வில்லைகள் கைப்பற்றபட்டுள்ளது.

தீவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள கடற்படையினரின் நடவடிக்கையினால் குறித்த போதை மாத்திரை பொதி கைவிடப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதுடன் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக கல்பிட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளம் மாநகர சபை SJB உறுப்பினர் இடைநிறுத்தம்!

0

புத்தளம் மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது. 

அந்த மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை நியமிப்பதில் கட்சி எடுத்த முடிவை மீறியமை காரணமாக இவ்வாறு கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில், கட்சியின் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் என்.எம்.என். நுஸ்கியின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேச சபை SLMC வசம்!

0

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (27.06.2025) நடைபெற்றது.

நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்மொழியப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷர்ரப் ஏகமானதாக தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

உப தவிசாளர் பதவிக்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.மாபிர், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்நத டீ.சுபோகரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

வாக்கெடுப்பில் டீ.சுபோகரன் 3 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.மாபிர் ஆதரவாக 13 வாக்குகளைப் பெற்று சபையில் ஏகமனதாக உப தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, பொத்துவில் அமைப்பாளரும் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ்.வாசித், கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளர் ஏ.சி.சமால்தீன், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பொத்துவில்லில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு!

0

பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான அப்துல் வாசித் மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம் எம். முஷர்ரப் ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு இன்று (26) அங்கு கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இடம் பெற்றது.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் இணைந்துகொண்டதை அடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் அப்துல் வாசித் மற்றும் கட்சிக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்தே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் உலமாக்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பிரதித் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர், பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் ஆகியோரும் உடனிருந்தனர்.

இஸ்லாமிய புத்தாண்டில் சமாதானம் நிலவட்டும்!

0

ஹிஜ்ரி 1447 வாழ்த்துச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

“நாம் அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு,எல்லா வாய்ப்புகளையும்  நன்றாகப் பயன்படுத்தி, ஒற்றுமைக்காகப் பாடுபடுவதோடு,பிறந்துள்ள இஸ்லாமியப் புத்தாண்டில் உலகில்   நிலையான சமாதானம்  ஏற்பட இறைவனைப்  பிரார்திப்போமாக” என ஹிஜ்ரி 1447 ஆவது இஸ்லாமிய புத்தாண்டையிட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்   விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பிரதேசங்களில் முஹர்ரம் தலைப் பிறை தென்பட்டதாக இன்றிரவு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து அவர்  வெளியிட்டுள்ள இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளளதாவது,

மக்கமாநகரில் இஸ்லாத்தின் எதிரிகளின் தொல்லைகள்     அதிகரித்த போது, இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் சஹாபாக்களுடன்  அங்கிருந்து வெளியேறி, மதீனாவுக்கு இடம்பெயர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  சம்பவத்தை அடியொட்டியே  இஸ்லாத்தில் ஹிஜ்ரி ஆண்டுக் கணிப்பு  மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது.

மத்திய கிழக்கில் பலஸ்தீனத்தில் சில வல்லரசுகளின் ஒத்துழைப்புடன், இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்  படுகொலைகளுக்கு மத்தியிலும், ஈரான் மீது  இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒரு தலைப் பட்சமாகத் தொடுத்த பலத்த தாக்குதலுக்கு மத்தியிலும் இன்னொரு இஸ்லாமியப்  புத்தாண்டை உலக முஸ்லிம்கள் சந்திக்கின்றனர்.

இவ்வாறு,முதல் மாதம் முஹர்ரம் தலைப்பிறையோடு நாம் ஒரு புதிய இஸ்லாமிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சந்தர்ப்பத்தில், அல்லாஹ் நம்மனைவருக்கும் சிறந்த  வழிகாட்டுதல்களையும், பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், சமாதானத்தையும்,நீதியின் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் ஆற்றலையும் வழங்கி  அருள்வானாக .

Rauf Hakeem, MP.
Leader,Sri Lanka Muslim Congress.

வெளியேற்றப்பட்டார் சீ.வி.கே. சிவஞானம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அணையா விளக்கு” போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற வட மாகாண சபை அவைத் தலைவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (25) மூன்றாவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பகல் வேளையில் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றியிருந்தனர். 

யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டப்பட்டு வரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருடன் கூட்டு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும், அவ்வாறானவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தகுதியற்றவர்கள் என்றும் கூறியே போராட்டகளத்தில் இருந்து சிவஞானத்தை அப்புறப்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். 

அதேவேளை செம்மணியில் இடம்பெறும் அனையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக கிளிநொச்சி வர்த்தகர்கள் கதவடைப்பை மேற்கொண்டுள்ளனர். உணவங்கள், மருந்தகங்கள், வங்கிகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாட்சப் தடை!

0

அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரபூர்வமான சாதனங்களில் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான இந்த செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறி இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறிய தடைக்கான காரணமாக, பயனர்களின் தரவு பாதுகாப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, சேமிக்கப்பட்ட தரவுகள் குறியாக்கப்படாமல் இருப்பது, மற்றும் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை சைபர் பாதுகாப்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வாட்ஸ்அப் பயன்பாடு பயனர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் கருதுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை மெட்டா நிறுவனம் மிகவும் கடுமையாக எதிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப், அங்கீகரிக்கப்பட்ட மற்ற செயலிகளை விட உயர் பாதுகாப்பு தரங்களைக் கொண்டிருப்பதாக மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2022ம் ஆண்டில் பாதுகாப்பு பிரச்சினைகளைக் காரணத்தை சுட்டிக்காட்டி, டிக்டாக் உள்ளிட்ட சில செயலிகளை நாடாளுமன்ற ஊழியர்களின் சாதனங்களிலிருந்து பிரதிநிதிகள் சபை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.