Saturday, May 2, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 176

வரலாற்று வெற்றியை பெற்றது தென் ஆபிரிக்க அணி!

0

தென் ஆப்ரிக்க அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று வரலாறு படைத்தது. பைனலில், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடின. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, தென் ஆப்ரிக்கா 138 ரன் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 207 ரன் எடுத்தது.

பின், 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்திருந்தது. மார்க்ரம் (102), கேப்டன் பவுமா (65) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் கைவசம் வைத்திருந்த தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 69 ரன் தேவைப்பட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு 147 ரன் சேர்த்த போது கம்மின்ஸ் ‘வேகத்தில்’ பவுமா (66) வெளியேறினார். ஸ்டார்க் பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (8) போல்டானார். பொறுப்பாக ஆடிய மார்க்ரம், வெற்றிக்கு கைகொடுத்தார். ஹேசல்வுட் ‘வேகத்தில்’ மார்க்ரம் (136) அவுட்டானார்.

தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பெடிங்ஹாம் (21), வெர்ரேன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் ஐ.சி.சி., தொடர்களின் ‘நாக்-அவுட்’ போட்டியில் கண்ட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தென் ஆப்ரிக்கா, டெஸ்ட் அரங்கில் புதிய உலக சாம்பியன் ஆனது.

தென் ஆப்ரிக்க அணி 27 ஆண்டுகளுக்கு பின், ஐ.சி.சி., நடத்தும் மிகப் பெரிய தொடரில் கோப்பை வென்றது. கடைசியாக, 1998ல் சாம்பியன்ஸ் டிராபி வென்றிருந்தது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை!

0

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இன்று (14) பிற்பகல் 02.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (15) பிற்பகல் 02.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கும் என்பதுடன், அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும். 

அந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

இதற்கிடையில், கடல்சார் மற்றும் மீனவ சமூகங்கள் மேற்கூறிய கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை வெல்லும் தென் ஆபிரிக்க அணி?

0

தென் ஆப்ரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைக்க காத்திருக்கிறது. பைனலில் மார்க்ரம் சதம் கைகொடுக்க, வெற்றியை நெருங்குகிறது. ஆஸ்திரேலிய பவுலர்கள் ஏமாற்றினர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான பைனல், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

இதில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212, தென் ஆப்ரிக்கா 138 ரன் எடுத்தன.

இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்திருந்தது. ஸ்டார்க் (16), லியான் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஸ்டார்க் அரைசதம்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரபாடா ‘வேகத்தில்’ நாதன் லியான் (2) வெளியேறினார். ஸ்டார்க், டெஸ்ட் அரங்கில் தனது 11வது அரைசதத்தை பதிவு செய்தார். பத்தாவது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்த போது மார்க்ரம் பந்தில் ஹேசல்வுட் (17) அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஸ்டார்க் (58) அவுட்டாகாமல் இருந்தார்.

தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 4, லுங்கிடி 3 விக்கெட் சாய்த்தனர்.
மார்க்ரம் அபாரம்: பின், 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ரிக்கிள்டன் (6) ஏமாற்றினார். ஸ்டார்க் ‘வேகத்தில்’ முல்டர் (27) வெளியேறினார். பவுமா, டெஸ்ட் அரங்கில் தனது 25வது அரைசதத்தை பதிவு செய்தார்.

ஹேசல்வுட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்க்ரம், தனது 8வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 213 ரன் எடுத்திருந்தது. மார்க்ரம் (102), பவுமா (65) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்காவுக்கு இன்னும் 69 ரன் மட்டும் தேவைப்படுவதால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

பலஸ்தீனுக்கு ஆதவளித்த இலங்கை!

0

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. 

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரிலிருந்து மோதல் நடந்து வருகிறது. 

இந்த போரில், காசாவில் இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோர் இறந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ஐக்கிய நாடுகளின், பொதுச் சபையில் ஸ்பெயின் சார்பில் போர் நிறுத்த தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தின் உள்ளடக்கங்களாக, நிரந்தர போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகளுக்கான தடையை இஸ்ரேல் நீக்க வேண்டும், பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும், இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையில், 193 உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில், 149 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 

12 நாடுகள் எதிராக வாக்களித்தன. 

இந்தியா உட்பட, 19 நாடுகள் வாக்களிப்பைத் தவிர்த்தன. 

இந்த நிலையில், தமது நாட்டின் நிலைப்பாட்டை வெளியிட்ட, ஐக்கிய நாடுகளின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ், “இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையில், இரு தரப்புக்கும் இடையே நேரடி அமைதி பேச்சு மீண்டும் ஆரம்பிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே, வாக்களிப்பை இந்தியா தவிர்த்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

உச்சக்கட்டத்தில் ஈரான் இஸ்ரேல் போர்!

இஸ்ரேலும் இரானும் பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரானின் ஏவுகணைகளை இடைமறிக்க இஸ்ரேலுக்கு உதவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இரான் தலைநகர் டெஹ்ரானில் விமான நிலையம் ஒன்றில் தீப்பற்றி எரிவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி இருப்பதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேலை ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன.

இரான் தாக்குதலில் காயமடைந்த 40 பேர் இஸ்ரேலிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இஸ்ரேலை நோக்கிச் சென்ற இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று உறுதிப்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.

இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன.

இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், இந்த போர் விமானங்களில் ஒன்றின் விமானி பிடிபட்டதாகவும் அவர் பெண் விமானி என்றும் இரானின் தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

விமானி பிடிபட்டதாக வெளியான இரானிய ஊடக அறிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. இரானிய ஊடகங்களால் பரப்பப்படும் இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே தெரிவித்துள்ளார்.

பட்டம் வாங்கச் சென்று 6 மாதம் பூர்த்தி!

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக ரன்வல அந்த பதவியை இராஜினாமா செய்து நேற்று நள்ளிரவுடன் 6 மாதங்களாகின்றன.

அவரது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலையே அவரது இராஜினாமாவுக்குக் காரணம்.

எதிர்காலத்தில் தனது பட்டதாரி சான்றிதழை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக தெரிவித்து டிசம்பர் 13ஆம் திகதி பதவி விலகினார்.

ஆனால், 6 மாதங்கள் கடந்தும், இதுவரை பட்டப்படிப்பு சான்றிதழ் முன்வைக்கப்படவில்லை.

ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும் பெற்றதாகவும் ஆனால் இதுவரை சான்றிதழ் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

0

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. 

மத்திய மருந்து சேமிப்பு மையத்தில் தற்போது சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார். 

கடந்த பல மாதங்களாக புற்றுநோய் நோயாளிகளுக்கான மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் விளைவாக புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சில வரையறைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கில் அரசு அறிமுகப்படுத்திய புதிய செயலி!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் செயலக சேவை நடைமுறை தொடர்பான செயலியை அங்குரார்பணம் செய்யும் நிகழ்வு இன்று (13-06-2025) நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தின் மக்களுக்கான சேவை இலகுவாக வழங்கும் வகையில் நடைமுறைப் படுத்தும் செயலியை அங்குராணம் செய்யும் நிகழ்வு இன்று பகல் 10 மணிக்கு கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ. ரஜீவன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன், மற்றும் துறை சார்ந்த திணைக்களின் தலைவர்கள், பிரதேச மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையின் முதலாவது பொதுமக்கள் சேவையை வழங்கும் இந்த செயலி கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டவளை பிரதேச செயலகத்தினால் இணைய வழி பங்கீட்டு அட்டையும் வழங்கி வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கில் அதிகரித்துள்ள சட்ட விரோத மணல் அகழ்வு!

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாகவும், பல ஆட்சிகள் மாறிவந்த போதிலும் சட்டவிரோத மணல் அகல்வுக்கு நிரந்தர தீர்வு காண முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் கடல்தொழில் அமைச்சரும் கிளிநொச்சி, யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன், கண்டாவாளை பிரதேச செயலாளர் பிருந்தகன் மற்றும் நீர் பாசன தினைக்களத்தின் குழுவினர்கள் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.

கல்லாறு பகுதியில் காணப்பட்ட பறவைகள் சரணாலயம் முற்றாக அளிக்கப்பட்டு உள்ளதுடன், கடல் நீர் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு உள்வரும் அபாய நிலையில் தோன்றியுள்ளதாகவும் கண்டறியப்பட்டது.

தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள வனப்பகுதி முற்று முழுதாக அழிவடைந்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்லாறு பகுதியில் மீண்டும் இராணுவ காவலர் அமைத்து இங்கு இடம் பெறுகின்ற சட்ட விரோத மணல் அகல்வினை முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடத் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

சீனி மோசடி தொடர்பில் வெளியான அதிரடி முடிவு!

0

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக குறைத்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எந்த குற்றவியல் குற்றமும் கண்டறியப்படவில்லை என்று சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு நேற்று (12) கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அதன்படி, குறித்த விசாரணைகளை முடிக்க அனுமதி வழங்கிய நீதவான், இந்த சம்பவத்தில் ஏதேனும் ஊழல் அல்லது இலஞ்சம் வெளிப்பட்டால், வழக்கு கோப்புகளை விசாரணைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பலாம் என்று தெரிவித்தார். 

2020 ஒக்டோபர் 13 நள்ளிரவு முதல் சீனி மீதான செஸ் வரியை ரூ.50-ல் இருந்து 25 சதங்களாக குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவின் விளைவாக அரசுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தக் கோரி முறைப்பாடு அளிக்கப்பட்டது. 

அப்போது, ​​சீனி வரியைக் குறைக்கும் முடிவால் அரசுக்கு 1,600 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும், வரி குறைப்பின் பலனை மக்கள் பெறாமல் மிகப்பெரிய சீனி வரி மோசடி நடந்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர். 

அதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி, அனைத்துப் பகுதிகளையும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்தது. 

அவற்றைப் படித்த பிறகு, இந்த விசாரணையின் மூலம் எந்தவொரு குற்றவியல் குற்றமும் அடையாளம் காணப்படவில்லை என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தெரிவித்திருந்தார். 

சீனி வரியைக் குறைப்பதன் மூலம் எந்தவொரு தரப்பினரோ அல்லது தனிநபரோ தேவையற்ற இலாபத்தைப் பெற்றுள்ளனரா அல்லது ஊழல் குற்றத்தைச் செய்துள்ளனரா என்பதை விசாரிக்கவும், சீனி வரியைக் குறைப்பதன் மூலம் ஏதேனும் இலஞ்சம் அல்லது பிற பரிவர்த்தனை நடந்துள்ளதா என்பதை மேலும் விசாரித்து கண்டறியவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் மேலும் அறிவுறுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேலதிக நீதவான், சீனி வரி குறைப்பு செயல்முறை தொடர்பான விசாரணை அறிக்கைகளை மேலும் விசாரிக்கவும், தேவைப்பட்டால் வழக்கு கோப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி குற்றவாளிகளைக் கண்டறியவும் உத்தரவிட்டார்.