Monday, March 16, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 177

ஜமிய்யதுல் உலமா வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை!

0

2019 ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம், இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தக் கொடூரமான தாக்குதல்களை நாங்கள் தெளிவாகவும் உறுதியான முறையிலும் கண்டிக்கிறோம். இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் இஸ்லாத்தையோ அல்லது முஸ்லிம் சமூகத்தையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்களின் செயல்கள் எமது நம்பிக்கைக் கொள்கைகளையும், நாம் நிலைநிறுத்தும் விழுமியங்களையும் முற்றிலுமாக மீறுவதாகும். ஆரம்பத்திலிருந்தே, மத அறிஞர்களின் வழிகாட்டுதலின் கீழ் முஸ்லிம் சமூகம் குற்றவாளிகளை நிராகரித்து கண்டனம் செய்தது, எங்கள் வெறுப்பின் உறுதியான அறிக்கையாக இஸ்லாமிய இறுதிச் சடங்குகளை மறுத்தது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, முஸ்லிம்கள் இந்த மண்ணில் விசுவாசமான, அமைதியான மற்றும் தொழில்முனைவோர்களாகவும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் குடிமக்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கையில் சுமூகமான மற்றும் குழப்பமான எல்லாக் காலங்களிலும் சகவாழ்வு, விசுவாசமான சேவை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற வரலாற்றைக் கொண்டுள்ளதோடு குறிப்பிடத்தக்கவிதமாக அநீதிகள், பாகுபாடு மற்றும் அவதூறுகளை எதிர்கொண்ட போதிலும், நாங்கள் எப்போதும் பொறுமை மற்றும் அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம், ஒருபோதும் தீவிரவாதம் அல்லது வன்முறையை பதிலாக நாங்கள் பயன்படுத்தவில்லை.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவங்கள் பயங்கரவாதச் செயல்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தை அவதூறு செய்வதையும், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதையும், நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பது தெளிவாகிறது. முழு உண்மையும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதில் பலிக்கடாவாக உள்ளவர்களை விடுத்து உண்மையிலேயே பொறுப்பானவர்கள் – தாக்குதலின் சூத்திரதாரிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும்;, தாக்குதல் நடந்து; ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்படாமலும், தாக்குதல்களைச் சுற்றியுள்ள முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமலும் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் முஸ்லிம் தனிநபர்கள் நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் அல்லது தீர்ப்புகள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் மேலும் ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டுகிறோம். இத்தகைய நடைமுறைகள் அவநம்பிக்கையையும் பயத்தையும் மேலும் ஆழப்படுத்தியுள்ளன. மேலும் தாமதமின்றி அனைத்து விசாரணைகளையும் வெளிப்படையான மற்றும் நம்பகமான முடிவுக்குக் கொண்டுவருமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையில் வன்முறைகளை தூண்டுவதும் தண்டனைகளின்றி விடுபடுவதும் மீண்டும் மீண்டும் வேரூன்ற காரணமாக உள்ள நிறுவனங்கள், கட்டமைப்புகள் மற்றும் அரசியல் கலாசாரம் என்பவற்றில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்துமாறு நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியால் துயருற்றிருக்கும் நீண்ட உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 1971, 1989ம் ஆண்டுகளில் இடம்பெற்ற கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மற்றும் அழுத்கம, ஜின்தோட்டை, திகன, மினுவாங்கொட போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அத்துடன் கோவிட்-19 காலத்தில் கட்டாய தகனம் செய்ததன் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் என எல்லாம் சமூகங்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இதில் முழுமையான கரிசனை இல்லையெனில், நம்பிக்கையுடனும் முன்னோக்கியும் செல்லும் ஒரு தேசியத் தரமான கூட்டு முன்னேற்றப் பாதை என்றும் எட்டமுடியாத ஒன்றாகவே இருக்கும்.

கூட்டு தண்டனைக்கு எதிராகவும், அதைத் தொடர்ந்து வந்த குழப்பமான காலங்களில் நீதிக்காக போராடிய கௌரவ கர்தினால் மால்கம் ரஞ்சித், கத்தோலிக்க திருச்சபை மற்றும் அனைத்து மத மற்றும் இனக் குழுக்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது துணிச்சலும் ஒற்றுமையும் ஒருபோதும் மறக்கப்படக்கூடாதவை.

ஓரங்கட்டப்பட்ட குழுவாக அல்லாமல் இந்த நாட்டின் சமமான அந்தஸ்துடன் அறிவொளி பெற்ற சமூகமாக நாம் முன்னேற உறுதிபூண்டுள்ளோம். அனைத்து இலங்கையர்களும் பிரிவினை மற்றும் சந்தேகத்தையும், அவற்றை உருவாக்கும் வெளிப்புற மற்றும் உள் கூறுகளையும் நிராகரிக்கவும், சமூகங்களிடையே நம்பிக்கையை வளர்க்கவும், அமைதி, இரக்கம் மற்றும் உண்மையான தேசிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை வடிவமைக்கவும் முன்வருமாரு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகள் அதிக வெறுப்பு மற்றும் அநீதியால் மதிக்கப்படக்கூடாது, மாறாக உண்மை மேலோங்கி நிற்கும், நீதி நிலைநாட்டப்படும், மேலும் ஒவ்வொரு குடிமகனும் – இன மத பேதமின்றி – கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய ஒரு நாடாக இலங்கை மாறுவதை உறுதி செய்வதன் மூலம் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

கொரிய மொழிப் பரீட்சை திகதியில் மாற்றம்!

0

கொரிய மொழிப் பரீட்சை இடம் பெறுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த திகதியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் குறித்த அறிவித்தல்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக, கொரிய மொழிப் பரீட்சை இடம் பெறுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த திகதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது,

அதற்கமைய, 2025 மே மாதம் 06ஆம் தககதி இடம்பெறவிருந்த பரீட்சை – 2025 மே மாதம் 10ஆம் திகதியும், 2005 மே மாதம் 07ஆம் திகதி இடம் பெறவிருந்த பரீட்சை 2025 மே மாதம் 17ஆம் திகதியும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

நான்கு அமர்வுகளின் கீழ் இடம்பெறவிருக்கும் இந்தக் கொரிய மொழிப் பரீட்சையானது, முதலாவது அமர்வு காலை 9 மணிக்கும், இரண்டாவது அமர்வு காலை 10.30 மணிக்கு, மூன்றாவது அமர்வு மதியம் 12.00 மணிக்கும், நான்காவது அமர்வு பிற்பகல் 2:00 மணிக்கு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் அறிவித்துள்ளது.

அத்துடன், பரீட்சை நடைபெறுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு வருகை தரும்படியும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அன்னைபூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல்!

தியாகங்களால் கட்டமைக்கப்பட்ட விடுதலைத் தீயின்
வீரியம் ஒருபோதும் ஓயாது – சிறீதரன் எம்.பி…!!!

தியாகத்தாய் அன்னைபூபதியினதும், தியாகதீபம் திலிபன் அவர்களினதும் அகிம்சைப் போராட்டங்களாலும், அதன் பின்னரான ஆயுதப் போராட்ட காலத்திலும் நிகழ்த்தப்பட்ட உயிர்த்தியாகங்களின் உந்துதலால் உருப்பெற்ற, விடுதலைக்கனலின் வீரியம் குறைந்துவிட்டதாக, எமது மக்களின் விடுதலை தாகத்தை மலினப்படுத்துவோர் மார்தட்டிக் கொண்டாலும், இனவிடுதலை என்ற இறுதி இலக்கை அடையும் வரை திகாயகங்களால் கட்டமைக்கப்பட்ட எங்கள் அறப்போரின் வீரியம் ஒருபோதும் ஓயப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், மாவட்டக் கிளைப் பணிமனையில் நேற்றையதினம் (19) உணர்வெழுச்சியோடு நடைபெற்ற அன்னைபூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தலில் நினைவுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் வட்டாரக்கிளைத் தலைவி குணலக்சுமி குலவீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் அருள்ச்செல்வி கனகராசா நினைவுச்சுடரினை ஏற்றிவைத்தார்.

அகவணக்கம், மலர்மாலை அணிவித்தல், மலரஞ்சலி என்பவற்றைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், போராளிகள் நலன்புரிச்சங்க உறுப்பினர் செல்வரட்ணம் தனுபன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று உயிர்த்த ஞாயிறு தினம்!

0

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது. 

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பலஸ்தீனில் வாழ்ந்து இறையாட்சி பற்றி மக்களுக்கு போதித்து, சிறையில் அறையுண்டு இறந்த இயேசு கிறிஸ்து 3 நாட்களின் பின் கல்லரையிலிருந்து உயிர்த்தெழுந்தார். 

நியாயமும் சத்தியமும் என்றும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசுவின் உயிர்த்தெழுல் நிகழ்வு அமைந்துள்ளது. 

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் மனிதர்களுக்கு புதுவாழ்வு கிடைத்ததுடன், பேரின்பத்திற்கான வழியும் திறக்கப்பட்டதாக கிறிஸ்தவ மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். 

இந்நாளில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூருவதுடன், 40 நாள் தவக்காலம், உயிர்த்த ஞாயிறான இன்று முடிவடைகிறது. 

இன்றைய நன்நாளில் கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று, விசேட வழிபாடுகளில் ஈடுபடுவது பண்டைய காலம் தொட்டு பின்பற்றப்படும் மரபு ரீதியான செயற்பாடாகும். 

இதற்கிடையில், நேற்று (19) இரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன. 

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கலந்து கொண்ட விசேட ஆராதனை நேற்று இரவு கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் நடைபெற்றது. 

அத்துடன் இன்றும் நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆராதனைகள் இடம்பெறவுள்ளன. 

இதற்கிடையில், கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு நாளையுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திதகி நடந்த இந்த தாக்குதலில் 273 பேர் கொல்லப்பட்டதுடன், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இதற்கிடையில், புனித வெள்ளியான கடந்த 18 ஆம் திகதி முதல் நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்!

0

புத்தளம் நாகவில்லு பகுதியில் அழுகிய நிலையில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று (19.04.2025) பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம், நாகவில்லு பகுதியில் அமைந்துள்ள டயலொக் மாவத்தை பகுதியில், பூர்த்தி செய்யப்படாத தனியார் கடை ஒன்றுக்குள் அழுகிய நிலையில் குறித்த சடலம் இன்று பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று காலை அழுகிய துர்வாடை வீச ஆரம்பித்த பிறகே குறித்த கடைக்குள் அழுகிய நிலையில் சடலம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், உயிரிழந்த குறித்த நபர் சுமார் 3 நாட்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் நாகவில்லு பகுதியை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபராக இருக்குமென மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புத்தளம் போலீசார் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/enews1st.lk/videos/1705928660007583

தந்தையை அடித்துக்கொன்ற மகன்!

0

கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளதாக கிரேண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர், 54 வயதுடைய அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தந்தையின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குற்றத்தைச் செய்த 20 வயதுடைய உயிரிழந்தவரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரேண்ட்பாஸ் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களைகட்டிய ஸ்ரீ தலதா யாத்திரை!

0

16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” நேற்று (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமானதோடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, நேற்று காலை 7.00 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்பட்ட புகையிரதத்தின் சிறப்பு கண்காணிப்புப் பெட்டியில் பயணித்தது.

இலங்கை மீண்டும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்து வருவதுடன், இதுவரை நாட்டைச் சூழ்ந்திருந்த அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு, நாட்டிற்குள் சகவாழ்வு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை நட்பு நாடுகளுக்கு தெரிவிக்கவும், அந்தப் பயணத்திற்கு அவர்கள் அனைவரின் ஆதரவையும் பெறும் நோக்கத்துடனும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்டியை நோக்கிப் பயணித்த இக்குழு, முதலில் மகாவலி ரீச் ஹோட்டலை சென்றடைந்ததுடன், அங்கு ஹெல பாரம்பரியத்திற்கு ஏற்ப அவர்களுக்காக சிறப்பு சிங்கள-தமிழ் புத்தாண்டு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு இந்தக் குழுவுடன் மற்றொரு இராஜதந்திரிகள் குழுவும் இணைய திட்டமிடப்பட்டது. பின்னர் 44 பேர் கொண்ட இந்தக் குழு “சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க தலதா மாளிகைக்குச் சென்றதோடு, அதன் பின்னர் அந்தக் குழு அதே புகையிரதத்தில் மீண்டும் கொழும்புக்கு நோக்கித் திரும்பியது.

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசரசனையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட “சிறி தலதா வழிபாடு” நேற்று முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும்.

ஆரம்ப நாளான நேற்று (18) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு “தலதா” புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று (19) முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

மன்னாரில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

0

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கை கடற்படையினர், 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி மன்னாரின் கிராஞ்சி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குல் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான புவனேகவுடன் இணைக்கப்பட்ட விரைவு நடவடிக்கை படைப் பிரிவினால், மன்னாருக்கு வடக்கே உள்ள கிரன்சி கடல் பகுதியில் 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி மேற்கொண்ட இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்துக் கொண்டிருந்த, சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) பொதிகள் பரிசோதிக்கப்பட்டன.

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குல் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூவாயிரத்து இருநூறு (3200) ஷம்போ பக்கெட்டுகள், முந்நூற்று எழுபத்தாறு (376) அழகுசாதனப் பொருட்கள் மற்றும் எழுபத்தைந்து (75) அழகுசாதன சவர்க்காரங்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜெயபுரம் காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

விமான நிலையத்தில் சிக்கிய மூன்று பெண்கள்!

0

பெங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 5 கிலோ 248 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. 

சந்தேக நபர்கள் 25, 48 மற்றும் 50 வயதான மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை செலுத்திய டிப்பரில் சிக்கி குழந்தை பலி!

கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ள உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள் குளம் பகுதியிலுள்ள வீடொன்றில், தந்தை செலுத்திய டிப்பர் வாகன பின் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயதுடைய குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று (18-04-2025) பிற்பகல் 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தவக்குமார் சிந்துஜன் எனும் ஒன்றரை வயது நிரம்பிய பச்சிளம் பாலகன் தந்தை பின்புறம் கவனிக்காத டிப்பர் வாகனத்தை பின்புறம் செலுத்தியபொழுது டிப்பரின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது டிப்பர் வாகன மோதியதன் காரணமாக சிறுவர் உடல் நசுங்கி பலியானார்.

சம்பவ இடத்தை சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்ரமணியம் உடற்கூற்று விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.