முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பன்முகப் படுத்தப்பட்ட நிதியின் மூலம் உடப்பு ராக்குர்ஷி அம்மன் ஆற்று மீன்பிடி சங்கத்திற்கு ரூ. 500,000.00 பெறுமதியான மீன்பிடி வலைகள் அன்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய குறித்த மீன்பிடி வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை உடப்பு ராகுர்ஷி அம்மன் மீன்பிடி மற்றும் மகளிர் சங்கத்திற்கான ஒரு தொகை கதிரைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
கடந்த காலங்களில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களினால் மக்களுக்கு செய்யப்பட சமத்துவமான சேவைகள் குறித்தும் பயனாளர்களினால் நினைவுகூரப்பட்டது.
முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களின் உடப்பு இணைப்பாளர் திரு. செல்வநாயகம் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் BCMH நிறுவன செயற்திட்ட அதிகாரி எம்.எம். நௌபர் அதிதியாக கலந்து கொண்டு மீன்பிடி வலைகளை சங்க அங்கத்தவர்களுக்கு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நேற்று (25) மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மாகாணக் கல்வித் திணைக்களத்தின் நிர்வாகம் மிகவும் பலவீனமடைந்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் தமது தமக்குரிய சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் சிரமப்பட்டு வருவதுடன், புதிய மாகாணக் கல்விப் பணிப்பாளர் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட ஐ.ம.ச பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே இவர் இதனை தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில் தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,
“சில கடிதங்களுக்கு ஒப்பமிட உரிய உத்தியோகத்தர்கள் இல்லை என்ற காரணம் காட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பரீட்சைக் கடமை முடிந்து வந்த பின்னர் தான் ஒப்பம் பெற முடியும் என விடயத்திற்குப் பொறுப்பானவர்கள் கூறுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பரீட்சை ஒரு மாதமாக நடக்கின்றது. இதிலிருந்து தாமதத்தின் அளவைக் கணக்கிட்டுக் கொள்ள முடியும்.
எனவே, நிர்வாகத்திற்குப் பொறுப்பானவருக்கு பரீட்சைக் கடமைகள் வழங்கக் கூடாது அல்லது அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாகாணக் கல்விப் பணிப்பாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் கும்புறுபிட்டியில் அமைந்துள்ள உப ஒலிபரப்பு நிலையம் முன்னர் ஜேர்மன் வானொலிக்கு சொந்தமாக இருந்தது. தற்போது அது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உப நிலையமாக செயற்படுகின்றது.
தற்போது இந்த வானொலி உப ஒலிபரப்பு நிலையத்தினூடாக உள்ளுர் நிகழ்ச்சிகள் எதுவும் ஒலிபரப்பப் படுவதில்லை. வெளிநாட்டு ஒலிபரப்பு ஒன்றுக்காக மட்டும் இந்த நிலையம் பயன்படுத்தப்படுகின்றது. அதுவும் மாலை வேளையில் மட்டும் இந்த ஒலிபரப்பு இடம்பெறுகின்றது. இதற்காக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் வாடகை பெறப்படுகின்றது. ஏனைய நேரங்களில் இந்த நிலையம் எவ்வித செயற்பாடும் இன்றி இருக்கின்றது.
இம்மாவட்டத்தில் உள்ள பெறுமதி மிக்க வளம் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது கவலைக்குரியது.
எனவே, இந்த ஒலிபரப்பு நிலையம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இப்பகுதி கலை பண்பாட்டு நிகழ்வுகளை ஒலிபரப்ப முக்கியத்துவம் கொடுக்கப்படலாம். உள்ளுர் செய்திகள் ஒலிபரப்ப வாய்ப்புகள் வழங்கப்படலாம். அறிவு சார்ந்த நிகழ்வுகள், மாணவர் நிகழ்வுகள் எனப் பல்வேறு நிகழ்வுகளுக்கு முக்கியத்தவம் கொடுக்கப்படலாம். இதன் மூலம் மக்கள் மத்தியில் இந்த ஒலிபரப்பு நிலையம் பிரபலமடைந்து விளம்பரங்கள் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். குறிப்பிட்டளவு வேலைவாய்ப்பையும் உருவாக்கலாம்.
எனவே, இப்பகுதி முக்கியஸ்தர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றை நியமித்து பரிந்துரைகளைப் பெற்று இதனை அபிவிருத்தி செய்ய வேண்டும். இது தொடர்பான கோரிக்கையை நமது இந்த அபிவிருத்திக்குழு ஊடகத்துறை அமைச்சருக்கு முன் வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர், கிண்ணியா நகரசபைப் பகுதியின் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஈச்சந்தீவாகும். விவசாயக் குடும்பங்களே இங்கு அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. தென்னை போன்ற வான் பயிர்களை யானைகள் சேதப்படுத்தகின்றன. யானைகளால் வீடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. இதனால் இம்மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இந்த விடயம் கிண்ணியா பிரதேச செயலாளருக்கு நன்கு தெரியும்.
எனவே, காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த இப்பகுதியில் யானை வேலி அமைக்கப்பட வேண்டும். சுமார் 2 கிலோமீற்றர் நீளமுள்ள யானை வேலி போதுமானதென இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இது குறித்து கவனம் செலுத்தி ஈச்சந்தீவுக் கிராமத்தில் யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலாவது அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய கமகே, டிசம்பர் 23 முதல், ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மீதமுள்ள இராணுவ அதிகாரிகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் திரும்பப் பெற்றது.
பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.டி.யால் ஜனாதிபதி பாதுகாப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி. 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான அச்சுறுத்தல்களை முன்னிலைப்படுத்தி, உளவுத்துறை அறிக்கைகள் ISIS ஆல் ஆளில்லா விமானத்தை அடிப்படையாகக் கொண்ட குண்டுத் தாக்குதலுக்கான திட்டங்களையும் சுட்டிக்காட்டுகின்றன என்று கூறினார்.
விடுதலைப் புலிகள் மற்றும் பாதாள உலகக் குழுக்களிடமிருந்து முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு மேலும் அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அனுபவம் வாய்ந்த மற்றும் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களுக்குப் பதிலாக ராஜபக்சேவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கும் நடவடிக்கையை கமகே விமர்சித்தார்,
அச்சுறுத்தல்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இது போதுமானதாக இல்லை என்றும் கூறினார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபையின் 62 பணியாளர்களும் மீண்டும் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் விசேட பணிப்புரைக்கமைய அவர்கள் மீண்டும் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம், இலங்கை மின்சார சபையைத் தனியார் மயமாக்குவதற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.
அதன்போது, மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நுகர்வோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக, குறித்த 62 பேரும் அப்போதைய மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பணிப்புரைக்கமைய இடைநிறுத்தப்பட்டனர்.
இலங்கையை வந்தடைந்த சீன “Peace Ark” மருத்துவமனை கப்பலை பிரதமர் பார்வையிட்டார்.
சீன அரசாங்கத்தின் Mission Harmony-2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான “Peace Ark” என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.
“Peace Ark” என்ற இந்த கப்பல் டிசம்பர் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், 2024 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 வரை இலங்கை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகளைகளை வழங்கும்.
இந்த சமாதானக் கப்பல் திட்டத்தின் மனிதாபிமான முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கை மக்களுக்கு இந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதற்காக சீன அரசாங்கத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கும் பொது சுகாதாரத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும் இத்தகைய முயற்சிகளின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்த கப்பலின் பணியின் முக்கியத்துவத்தை சீனத் தூதுவர் வலியுறுத்தினார். கப்பலில் உள்ள நவீன வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து கப்பலின் மருத்துவக் குழுவினர் விளக்கமளித்தனர்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கொமடோர் மேஜர் ஜெனரல் ஹீ யோங்மிங், கொமடோர் மேஜர் ஜெனரல் யிங் ஹொங்போ, கப்டன் டெங் கியாங் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர்.
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர்.
துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை. அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாகத் தான் தேவதூதர்கள் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டு வந்தார்கள். எனவே, நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம், வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும். நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தமான அமைதியின் பின்னணியில் இருந்து இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடி வருவதை உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிடுவதாக தனது வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சகல மக்களும் ஒன்றாக ஒரே நோக்கத்துடன் கூட்டுப் பொறுப்பாகக் கருதி நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்த ஒரு காலகட்டத்தை நாம் அடைந்துள்ளோம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தினால் பிணைந்து பூமியில் ஒரு புதிய விடியலின் அரவணைப்பை நாங்கள் அனுபவித்து வருகிறோம். அந்த பிரகாசமே இயேசு நமக்குக் கொண்டுவந்த அன்பின் விடியலாகும் என தெரிவித்துள்ளார்.
பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மனித சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் யேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார். அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளதாக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கைக்குத் தேவையான சமூக மாற்றம் என்பது பாரியதொரு சமூக மாற்றமாகும். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சில துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட முழு சமூக மாற்றமாகும். இது ஒரு மறுமலர்ச்சியாகும். அந்தத் தேசிய மறுமலர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதானம், அடங்காத துணிச்சல், இடையறாத முயற்சியுடன் பணியாற்றும் நமது அரசைச் சுற்றி திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடைய விடாது அவர்கள் எதிர்பார்க்கும் “வளமான நாடு-அழகான வாழ்க்கையை” உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன்,மென்மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை புனித நத்தார் தினத்தில் மீண்டும் வலியுறுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சுயநலம் மற்றும் தீங்கான போட்டியை சமூக கட்டமைப்பு தள்ளப்பட்டுள்ள போதும் , கிறிஸ்மஸில் வெளிப்படுத்தப்படும் மனித பண்புகளை வளர்த்து, சமத்துவத்தை மதித்து, மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம், சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மதிப்பதன் மூலம், அந்த சமூக கட்டமைப்பை நல்வழிப்படுத்தி மகிழ்ச்சிகரமான சமூகமொன்றுக்காக பிரஜைகள் என்ற வகையில் நாம் அனைவரும் கைகோர்க்க உறுதி பூணுவோம்.
வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான உண்மையான அரசியல் கலாச்சாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள் என தனது நத்தார் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வருடாந்த சமூக பராமரிப்பு நிகழ்வு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் மகாவலி மையத்தில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சு சிறுநீரக நோயை மிக விரைவாக வெற்றி கொள்ள வேண்டிய ஒரு சுகாதார சவாலாகக் காண்பதாகவும், இந்நாட்டில் பல குடும்பங்களை எல்லா வகையிலும் ஆதரவற்றவர்களாக ஆக்கும் இந்தநோய்க்கு உடனடித் தீர்வுகளைத் தேடுவதன் மூலம் இந்த குடும்பங்களுக்கு இந்நோயை சுகாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எதிர்கொள்ளத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் வழங்க வேண்டும் என்பதையும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
மேலும், தேசிய மற்றும் சர்வதேச ஆதரவைப் பெற்று இந்த சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டும் எனவும், நோயைத் தடுப்பதிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் அரசாங்கம் என்ற வகையில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் ஆரோக்கியத்தை அணுகுவதற்கான உரிமையை அடிப்படை மனித உரிமையாக புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரகடனப்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு தெரிவித்தார்.
அவ் உரிமை மீறப்படும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தின் உதவியை மக்கள் நாட முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.
அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வருடாந்த சமூக சேவை நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கம் பல வருடங்களாக அரசாங்கத்தினால் செய்ய வேண்டிய பல முக்கிய பணிகளை செய்துள்ளது.
அகில இலங்கை சிறுநீரக நோயாளர்களின் வருடாந்த சமூகப் பாதுகாப்பு நிகழ்வில் எனக்கு சிறுநீரகச் சங்கத்தின் பாராட்டுகளும் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் குறித்த நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டதுடன், சிறுநீரக நோயாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள், புலமைப்பரிசில்கள் வழங்குதல் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றன.
இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும் இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று(23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினதும் நிதியியல் உளவறிதல் பிரிவினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சுக்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் முகவராண்மை நிறுவனங்கள் உள்ளடங்கலாக தொடர்புள்ள 24 நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை நிதியியல் உளவறிதல் பிரிவு இங்கு வலியுறுத்தியது.
நிதியியல் நடவடிக்கைச் செயலணியினால் (FATF) தயாரிக்கப்பட்டு பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியிலான மறுசீரமைப்புகள், இயலளவு விருத்தி, முகவராண்மைகளுக்கிடையிலான மேம்பட்ட கூட்டிணைப்பு, அனைத்தையுமுள்ளடக்கிய புள்ளிவிபரங்களை பேணுதல் என்பவற்றுக்கு இந்த செயற்பாட்டுத் திட்டம் முன்னுரிமையளித்துள்ளது.
இத்திட்டங்களுடன் முழுமையான இணக்கப்பாட்டினை உறுதிசெய்வதற்கு பிரத்தியேகமான குழுக்களை நியமிக்குமாறும், அதன் முன்னேற்றத்தினை உன்னிப்பாக கண்காணிக்குமாறும் நிதியியல் உளவறிதல் பிரிவு,பொறுப்புடைய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்தோடு இந்தச் செயற்பாடு தொடர்பில் ஒத்துழைப்புடன் அர்ப்பணிக்குமாறு கோரிய ஜனாதிபதி, இலங்கையின் நிதிக்கட்டமைப்பு ஸ்தீரத்தன்மையைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நம்பிக்கையினை மேம்படுத்துவதற்கும் அதன் ஊடாக சாதகமான பெறுபேறுகளை பெறவும் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியீடலை ஒழிப்பதற்கு பலமான மற்றும் செயற்திறனுள்ள கட்டமைப்பொன்று அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
இலங்கையில் முதன்முறையாக சுகாதாரத்துறைக்கு மின்சார முச்சக்கரவண்டிகளை வழங்கும் திட்டத்தின் முதல் கட்ட வேலைத்திட்டம் பதுளை மாவட்டத்தில் உள்ள 16 வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (21) பதுளையில், பெருந்தோட்ட அமைச்சர் மற்றும் சமூக உள்கட்டமைப்பு திரு. சமந்தா வித்யாரத்ன தலைமையில் இடம்பெற்றது.
ஊவா மாகாண சுகாதார அமைச்சின் தலையீட்டில் உலக வங்கியின் உதவியுடன் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் ஊடாக சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான மின்சார முச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த முச்சக்கர வண்டிகள் அந்தந்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் களப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த முச்சக்கர வண்டிகளை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் திரு.சமந்த வித்யாரத்ன, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் செலவீனங்களைக் குறைக்க அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் சேவைத் தேவைகளுக்கு மின்சாரக் கார்களைப் பயன்படுத்துவது முக்கியமான தீர்மானமாகும் என குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் விலையுயர்ந்த சொகுசு வாகனங்களை பயன்படுத்திய போதும் தமது அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும் அந்த வாகனங்களை ஏற்றுக்கொள்ளாது சாதாரண வாகனங்களையே பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.
சம்பந்தப்பட்ட சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தினிந்து சமன் ஹென்நாயக்க, ஊவா மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.எம். தயானந்தா மற்றும் சுகாதார அதிகாரிகள் மற்றும் டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.