Home Blog Page 184

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!

ஆசியக்கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக சாம்பியன்.. கோப்பையை வாங்க மறுப்பு!

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் இருந்து வெற்றிக் கோப்பையை பெற இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கு இடையே சச்சரவுகள் நீடித்து வரும் நிலையில், இது மேலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கூட்டியது. அதிலும், 41 ஆண்டுகால ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் 146 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ஃபர்ஹான் 57 ரன்களும், ஜமான் 46 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், பும்ரா, வருண், அக்‌ஷர் ஆகியார் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, இந்த முறை 5 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. அதேபோல் சுப்மன் கில் 12 ரன்களிலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் நடையைக் கட்ட, இந்தியா ஆரம்பத்திலேயே தள்ளாட்டத்தைச் சந்தித்தது. எனினும், திலக் வர்மா இந்தப் போட்டியில் நங்கூரமாய் இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்தப் போட்டியில் திலக் வர்மா 53 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 69 ரன்கள் எடுத்தார். அவருக்குத் துணையாக சஞ்சு சாம்சன் (24 ரன்கள்), ஷிவம் துபே (33 ரன்கள்) ஆகியோர் கைகொடுக்க இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றதுடன் சாம்பியன் கோப்பையையும் 9வது முறையாகத் தட்டிச் சென்றது.

இந்த தொடரில் எல்லாப் போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் அணியை மட்டும் மூன்று முறை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், ஆசியக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், அந்நாட்டின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து வெற்றிக் கோப்பையைப் பெற மறுத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோப்பை வழங்க நக்வி மேடைக்கு வந்தபோது, இந்திய வீரர்கள் 15 அடி தூரத்தில் விலகி நின்று கோப்பையை வாங்க மறுத்தனர். பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்கியா கூறுகையில், “இந்தியா மீது பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல் நடத்தியது. அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கோப்பையை பெற மாட்டோம். அதேசமயம், இந்தியாவுக்கான கோப்பை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

போட்டியில் வென்ற அணிக்கு மைதானத்தில் கோப்பை வழங்கப்படாமல் போனது இதுவே முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது.

அதேநேரத்தில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதில் விளைவு ஒன்றுதான்; இந்தியா வெற்றி பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

மன்னாரில் நாளை பொது முடக்கம்?

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். 

மன்னாரில் இன்றைய தினம் (28) 57 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில், அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை திங்கட்கிழமை பொது முடக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

எமது போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பொது போக்குவரத்துகள் அனைத்தையும் நிறுத்தி, வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து எமது போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டுகோள் விடுக்கின்றோம். 

அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்கள் நாளைய தினம் கடமைகளுக்கு செல்லாது எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

நாளை (29) காலை 10.00 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகும். குறித்த பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடையும். பின்னர் அங்கு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்படும். 

குறித்த போராட்டம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும். போராட்டத்தின் இறுதியில் எமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கப்படும். 

எனவே மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள், வர்த்தகர்கள், பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும்” என்றார்.

நாட்டில் இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதார மையங்கள்!

பொதுமக்கள் தங்கள் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வுடன் இல்லாமல் இருந்தாலும் அவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது சுகாதார மற்றும் நல்வாழ்வு மைய ஊழியர்களின் பொறுப்பாகும்…

– சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ –

இந்த நாட்டில் வாழும் மக்கள் கண்ணியமான முறையில் சுகாதாரசேவையை எளிதில் பெற்றுக்கொள்ளகூடியவகையில் உறுதிசெய்வதற்காக, தற்போதைய அரசாங்கத்தின் சுகாதாரக்கொள்கையின் முதல் கட்டமாக சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் ஆயிரம் ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவ அமைச்சகம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.

மேலும் மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய இடத்தில் நிறுவப்படும் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள்” ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுமையம்” என்று பெயரிடப்பட்டுள்ளன. இது நாட்டின் சுகாதாரசேவையை நல்லவழியில் மாற்றி அமைக்கும் சிறந்த மாற்றத்தின் முதல் ஆரம்பமாக இது காணப்படுகிறது.

மேலும் புதிய அரசாங்கத்தின் சிறந்த திட்டமான “HEALTHY SRI LANKA” இன் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதார மையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் இரண்டாவது சுகாதார மற்றும் நல்வாழ்வு மையமான இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அத் ஓயா சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம், நேற்று (27) மதியம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.

முதல் அங்கத்துவர் பதிவு செய்யப்பட்டு, அதற்கான பதிவு அட்டை அமைச்சரால் வழங்கப்பட்டது. சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தால் வழங்கப்படும் சேவைகள் குறித்து அங்கு வந்திருந்த மக்களுக்குத் தெரிவித்த அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, நான்கு அல்லது ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான மக்களை உள்ளடக்கிய ஒரு சுகாதாரக் குழு அறிமுகப்படுத்தப்படும் என்றும், இந்த மக்கள் அந்த மையத்தால் உள்வாங்கபடுவார்கள் என்றும் பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இது ஒரு நல்வாழ்வு மையம் என்றும் தெரிவித்தார்.

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், மக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே நோய்களை குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்று அல்லாத நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு இந்த மையம் உதவும் என்றும் அங்கு கூடியிருந்த மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதற்காக மாவட்ட மக்கள் பதிவு செய்யப்பட்டு தேவையான அடிப்படை பரிசோதனைகள் நடத்தப்படும், மேலும் இந்த மையத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவ அதிகாரியின் எல்லைக்கு அப்பாற்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு அருகிலுள்ள இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள்.

இந்த மையம் இந்த திட்டத்தின் இரண்டாவது மையம் என்றும், நாட்டில் இதுபோன்ற ஆயிரம் சுகாதார மையங்கள் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தில் எட்டு பேர் கொண்ட சுகாதார ஊழியர்கள் இணைக்கப்படுவார்கள் என்றும் மக்கள் தங்கள் உடல்நலத்தைப் பற்றி சிந்திக்காவிட்டாலும், இந்த ஊழியர்கள் அந்த மக்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த மையங்கள் மக்களுக்கு சுகாதார ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சுகாதார சேவைகளையும் படிப்படியாகத் தொடங்கும் என்றும், உடல் உடற்பயிற்சி, யோகா, இசை சிகிச்சை போன்றவற்றை உங்கள் வாழ்க்கையுடன் பழகுவதற்கான இடமாக மாற்றும் என்றும் அவர் கூறினார்.

கரூர் சம்பவம் குறித்து விஜய் அதிரடி அறிவிப்பு!

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல்.

நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான்.

இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்.

இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை. அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.

தலைவர், தமிழக வெற்றிக் கழகம் – த.வெ.க

மஹிந்தவை பார்க்கச்சென்ற ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க இன்று (28) தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் நீண்ட நேரம் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், காலி, ஹினிதும மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளிலிருந்து இன்றும் ஆதரவாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க பேருந்துகளில் தங்காலைக்கு சென்றிருந்தனர்.

செல்போன் பார்க்கும் குழந்தைகள் குறித்து அதிர்ச்சி தகவல்!

குழந்தைகள் அதிகநேரம் செல்போனைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

குழந்தைகள் அதிகநேரம் செல்போனைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தைகள் அதிகநேரம் குனிந்து, செல்போனைப் பார்ப்பதால், அவர்களுக்கு கழுத்து மற்றும் முதுகெலும்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கழுத்து, தோள்பட்டையில் வலியோ அல்லது முதுகெலும்பு அடுக்கில் மாற்றம் ஏற்பட்டு, குழந்தைகள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவோ அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாளடைவிலான பழக்கம், குழந்தைகளின் தோற்றத்தை மாற்றக் கூடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குழந்தைகள் முன்பைப் போன்று, வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடாததே இதற்கு முக்கியக் காரணம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். செல்போனில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவை அளிப்பது, இதற்குத் தீர்வு என்றாலும், எவ்வாறு அமர்வது என கற்றுக் கொடுப்பது, சரியான தலையணை உபயோகிப்பதும் நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

விஜய்யின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழப்பு!

தவெக தலைவர் விஜய் நேற்று மாலை கரூரில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் மற்றும் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டநெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும் 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் நிவாரணம் அறிவித்தார்.

அதேபோல தவெக தரப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 20 லட்ச ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும் நிவாரணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் மக்கள் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி.

அந்தபதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

இந்தசூழலில் தற்போது மத்திய அரசு சார்பில் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேபிள் கார் விபத்தில் மற்றொரு பிக்குவும் பலி!

குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) உயிரிழந்தார். 

இதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 

நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு பிக்குகள் முன்னதாக உயிரிழந்தனர். 

ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு பிக்குகளும் அவர்களில் அடங்குகின்றனர். 

மேலும், 5 பிக்குகள் காயங்களுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உயிரிழந்த உள்நாட்டு பிக்குகளின் இறுதி கிரியையகள் நேற்று இடம்பெற்றது.

13,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த BOSCH நிறுவனம்!

ஜெர்மனியின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் BOSCH-ல் இருந்து 13,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து தாறுமாறாக முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பாதிப்புகள் நிலவிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக இந்தியாவை குறிவைத்து அதிகளவு நடவடடிக்கை எடுத்து வருகிறார். விசா விவகாரம் தொடங்கி வரி உயர்வு வரை உள்ள நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் வரி உயர்வு காரணமாக செலவு அதிகரித்துள்ளதால் வாகன உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று போஸ். ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். இதற்கிடையே, உலகளாவிய வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தமான சூழலால் வாகன உற்பத்தி வெகுவாக சரிந்தது.

இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பி.ஒய்.டி. போன்றவை ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இந்நிலையில், போஸ் நிறுவனமும் தற்போது ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி, உலகம் முழுவதிலும் உள்ள அதன் கிளையில் இருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் ஒரு காரணம் என போஸ் நிறுவனம் குற்றம் சாட்டி உள்ளது.

தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 100 பேர் மண்ணில் புதையுண்டு பலி!

நைஜீரியாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நைஜீரியா நாட்டின் ஜம்ஃபாரா மாகாணத்தில், சட்டவிரோத தங்கச் சுரங்கத் தொழில் பரவலாக நடைபெற்று வருகிறது.

இங்குள்ள தங்க வயல்களை ஆயுதம் ஏந்திய கும்பல்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி அடிக்கடி வன்முறைச் சம்பவங்களும், கொடிய விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த சட்டவிரோத சுரங்கங்களில், உள்ளூர் மக்கள் எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அபாயகரமான முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்ஃபாரா மாகாணத்தில் உள்ள கடவுரி சுரங்கப் பகுதியில், நேற்று தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. சம்பவத்தின் போது, ஏராளமான உள்ளூர் சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்தனர். இந்த கோர விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உயிர் தப்பியவர்களும், அப்பகுதி மக்களும் கூறுகின்றனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 15 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிலரும் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து ஜம்ஃபாரா காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.