Sunday, May 3, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 185

78 மாணவர்களை கொட்டித் தீர்த்த தேனீக்கள்!

ஒட்டுசுட்டானில் தேனீ கொட்டியதில் 78இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் இன்று 30.05.2025 தேனீக்கொட்டிற்கு இலக்காகி 78இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேனீக் கொட்டிற்கு இலக்கான மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்டார்.

அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை அகற்றாமல் அசமந்தமாகச் செயற்பட்டமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரை நேரடியாகச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மிகக் கடுமையாக எச்சரித்ததுடன், பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய, பாடசாலைக் கட்டடத்தொகுதியிலிருந்த பப்பரக்கொப்பான் எனும் தேனீக்கூடு, தற்போது வீசிவரும் கடுமையான காற்றினால் உதிர்ந்து வீழ்ந்தமையினால், பாடசாலை மாணவர்கள் மற்றும், ஆசிரியர்களைத் தாக்கியுள்ளது.

இதனால் பாடசாலையில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த 78இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிலே 45 வரையான மாணவர்களும், சில ஆசிரியர்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதிலும் குறிப்பாக இருமாணவர்களும், ஒரு ஆசிரியருமாக மூவர் மிகமோசமாக தேனிக் கொட்டிற்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தீவிர சிகிச்சைப்பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை தேறியுள்ளதாகவும், எதுவித உயிர் பாதிப்புக்களும் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதுதொடர்பில் அறிந்தவுடன் உடனடியாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலை மற்றும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு விரைந்து அங்கு சிகிச்சைபெற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்வையிட்டதுடன், நிலமைகள்தொடர்பிலும் கேட்டறிந்தார். அத்தோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் ஆசிரியர்களையும் பார்வையிட்டார்.

இந்நிலையில் பாடசாலைச் மூகத்தினரிடமிருந்து கடிதத்தின் பிரதிகளைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சென்று, பாடசாலை மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாமென வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரை மிகக் கடுமையாக எச்சரித்தார்.

அத்தோடு பாடசாலைச் சமூகத்தால் வழங்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்தும் கேள்வி எழுப்பியுமிருந்தார்.
அதேவேளை உடனடியாக பாடசாலைக் கட்டடங்களிலுள்ள தேனீக்கூடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில் 30.05.2025 இன்று இரவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திலுள்ள தேனீக்கூடுகள் அகற்றப்படுமென வனஜீவராசிகள் திணைக்களத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவுடன் கால அவகாசம் நிறைவு!

0

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று (30) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

பெயர்கள் கிடைத்தவுடன் மறுநாள் (31) அந்த பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறினார். 

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2025 ஜூன் 2 ஆம் திகதி தொடங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் தொடங்குவதற்கு முன்னர், தெரிவு செய்யப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட வேண்டும். 

தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, தேர்தல் ஆணைக்குழு மே 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்று 21 நாட்கள் கடந்த பின்னரும், தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 50%க்கு மேல் வாக்குகளைப் பெற்ற கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட அந்த உள்ளூராட்சி மன்றத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் பெயர்களையும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். 

அதன்படி, இன்று நள்ளிரவிற்கு முன்னர் அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பொது மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

0

பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. 

நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. 

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, அதிகரித்த தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காற்று நிலைமை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரபல திரைப்பட நடிகர் காலமானார்!

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ், உடல் நலக்குறைவு காரணமாக இன்று (29) காலை காலமானதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 

“அவள் ஒரு தொடர் கதை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில், ராஜேஷ் நடிகராக அறிமுகமானார்.

தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். 

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். 

நடிகர் ராஜேஷின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை வங்கி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

0

ஊக்குவிப்பு தொகை குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மதியம் 12.30 க்கு பின்னர் சகல இலங்கை வங்கிக் கிளைகளிலும் தங்களின் நடவடிக்கைகளில் இருந்து விலகி, பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இன்றைய தினத்துக்குள் தங்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை அடையாளப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் நஜித் விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

குறித்த பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு நேற்று மதியம் உணவு இடைவேளை நேரத்தில் இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கம், 22 வங்கி கிளைகளுக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வசமாக சிக்கிய போலி வாகன வியாபாரி!

0

வாகனங்கள் விற்பனைக்கு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் விளம்பரமொன்றை பதிவிட்டு பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸாரினால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரை நேற்று (28) பலாங்கொடை நகரில் வைத்து ஹல்துமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர் சமூக வலைத்தளத்தில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனை இருப்பதாக தெரிவித்து விளம்பரமொன்றை பதிவிட்டு முற்பணத்தையும் வங்கிக் கணக்கின் ஊடாக பெற்றுக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். 

சந்தேகநபர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவராவார். 

சந்தேக நபர் ஹல்துமுல்ல, சமனலவெவ, கேகாலை மற்றும் கண்டி போன்ற பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் உள்ள நபர்களிடம் சுமார் 200,000 ரூபா பணம் மோசடி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதோடு, சந்தேக நபர் செய்த ஏனைய மோசடிகள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய ஹல்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நாட்டில் புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து இவ்வாறு முற்கூட்டிய பதிவுகள் செய்வதாக கூறி பண மோசடியில் பலர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

120 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதி யாருக்கு?

0

கொட்டாவ, மலபல்ல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 120 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதி ரயில்வே துறையின் காணிகளில் வசிப்பவர்களுக்கு விரைவில் கையளிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் இறுதி நிலையை எட்டியுள்ளது.

கொட்டாவ மலபல்லயில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரு வீட்டுத் தொகுதியின் முன்னேற்றத்தை சரிபார்க்கும் சிறப்பு ஆய்வுப் பணியில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு இன்று (2025.05.28) கலந்து கொண்டார்.

தற்போது ரயில்வே துறைக்குச் சொந்தமான காணிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றும் நோக்கில் கட்டப்பட்ட இந்த வீட்டுத் தொகுதியில் 120 வீடுகள் அமையப்பெற்றுள்ளதுடன், நாவின்ன முதல் பாதுக்கை வரையிலான ரயில்வே காணிகளில் வசித்து வந்த குடியிருப்பாளர்கள் இந்த வீட்டுத் தொகுதியில் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.

ஏற்கனவே பெரும்பாலான நிர்மாணப்பணிகள் முடிவடைந்துள்ள இந்தத் திட்டத்தை விரைவாக முடித்து பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இந்திய அரசின் மனிதாபிமான உதவிகள்!

எமக்கு மிக வேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது. வடக்கு மாகாணம் இந்தியாவின் உதவிகளை நம்பியிருக்கின்றது. எங்களுக்கு இதுவரை உதவிகளை வழங்கிய இந்திய மக்களுக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் வடக்கு மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களிடமிருந்து மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (28.05.2025) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

முல்லைத்தீவு மாவட்டச் செயலராக நான் பணியாற்றியிருக்கின்றேன். இங்குள்ள கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக்கு மிக நன்றாகவே தெரியும். போரால் பாதிக்கப்பட்ட நீங்கள் மீள்குடியமர்வின் பின்னர் சட்டவிரோத மீன்பிடியால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள். உங்கள் பெறுமதியான வலைகளையும் இழந்திருந்தீர்கள். இன்று இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் உங்களுக்கு பெறுமதியான வலைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குகின்றனர்.

இந்திய மக்களும், இந்திய அரசாங்கங்களும் எங்களுக்கு காலத்துக்கு காலம் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தன. முக்கியமாக இந்திய வீட்டுத் திட்டத்தை குறிப்பிடவேண்டும். அவர்களால் எமது ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டன. இன்றைய தினம் முல்லைத்தீவு மருத்துவமனையின் புனரமைப்பை இந்தியா பொறுப்பேற்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அறிவித்திருக்கின்றார். அதற்கு அவருக்கு நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன். எதிர்காலத்திலும் எமது மக்களுக்கான உதவிகளை இந்தியா தொடரவேண்டும், என்றார் ஆளுநர்.

இதன் பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் விசேட உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கான குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் வலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தூதுவர் சந்தோஷ் ஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிக்கிய பெருந்தொகை ஐஸ் போதைப் பொருள்!

0

இலங்கை கடற்படையினர், புலனாய்வு சேவை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மற்றும் பிராந்திய செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மையம் ஆகியன இணைந்து மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பில், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற இரண்டு உள்ளூர் மீன்பிடி படகுகளுடன் பதினொரு (11) சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

குறித்த, நீண்ட நாள் மீன்பிடி படகுகள் டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு இன்று (2025 மே 28) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் நிபுணர்களின் உதவியுடன் கொண்டுவரப்பட்டதுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் பங்குபற்றலுடன் குறித்த போதைப்பொருள் சோதனையிடப்பட்டது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் நிபுணர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் குறித்த படகுகளிலிருந்து மீட்கப்பட்டது.

இரண்டு (02) படகுகளில் இருந்து சுமார் 503 கிலோகிராம் 618 கிராம் ஐஸ் மற்றும் சுமார் 275 கிலோகிராம் 594 கிராம் ஹெரோயின் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்படி போதைப்பொருட்கள், சந்தேக நபர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி ஈடுபட்ட படகுகள் இன்று (2025 மே 28) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம், இலங்கை கடற்படை, மற்ற தரப்பினருடன் இணைந்து, 2025 ஆம் ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கைகளின் மூலம் 544 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 1217 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதுடன், எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து மீட்பதற்காக கடற்படை தொடர்ந்து இதுபோன்ற கூட்டு நடவடிக்கைகளுக்கு பங்களிக்கும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

யாழில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு!

தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குமாறு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை.!!!

ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரசாங்க மாற்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரையிலான தற்போதைய தமிழ் அரசியல் குறித்து உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான நிலப் பிரச்சினைகள், வடக்கு மாகாணத்தில் சுமார் 6000 ஏக்கர் கடலோர நிலங்களை அரசு நிலங்களாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பு குறித்தும், தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வாக வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்கள், காவல்துறை மற்றும் நிதி ஆகியவற்றில் மீளமுடியாத அதிகாரங்களைக் கொண்ட சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு நிறுவப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், அவரது துணைவியார் கிரிட்டினா ஸ்டீபன்ஸ், திட்ட ஒத்துழைப்புக்கான முதல் செயலாளர், திருமதி ஜோ கிட், அரசியல் துறைக்கான இரண்டாவது செயலாளர் திரு. மேத்யூ லார்ட் மற்றும் மூத்த ஆராய்ச்சி அதிகாரி திரு. சில்வெஸ்டர் வொர்திங்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.