Monday, March 16, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 185

டிரம்பின் வரிக்கு பதிலடி வரி அறிவிப்பு!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த 34% பரஸ்பர வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 34% வரி விதிக்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இந்த புதிய வரிகள் அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சீனாவின் இந்த முடிவு, அமெரிக்காவின் “லிபரேஷன் டே” திட்டத்தின் ஒரு பகுதியாக டிரம்ப் அறிவித்த வரிகளைத் தொடர்ந்து வந்துள்ளது. 

அமெரிக்காவின் புதிய வரிகள், சீன பொருட்களுக்கு 34% வரியை விதித்து, சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாகவும், ஒருதலைப்பட்சமான அடக்குமுறையாகவும் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. 

சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, சர்வதேச வர்த்தக ஒழுங்கை சீர்குலைப்பதோடு, சீனாவின் நியாயமான உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதற்கு பதிலடியாக, சீனா தனது தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிரம்ப் அரசு, பெப்ரவரி 27 அன்று சீன பொருட்களுக்கு மேலும் 10% வரியை உயர்த்தியது, இது மார்ச் 4 முதல் அமலுக்கு வந்தது. 

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 3 அன்று 34% பரஸ்பர வரிகளை அறிவித்தது. இந்த வரிகள், சீனாவுடன் அமெரிக்காவின் வர்த்தக உறவுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளன. 

டிரம்ப், வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் பேசுகையில், “நாங்கள் பல ஆண்டுகளாக அநியாயமாக நடத்தப்பட்டு வருகிறோம். இனி அது மாறும். பரஸ்பர வரிகள் மூலம் நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்வோம்,” எனக் கூறினார். 

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2019 ஆய்வு ஒன்று, அமெரிக்கா மற்றும் சீனா இடையே 25% வரி உயர்வு இரு நாடுகளுக்கும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என மதிப்பிட்டிருந்தது. 

மேலும், 2024 ஜனவரியில் டேவிட் ஆட்டர் தலைமையிலான ஆய்வு, 2018-2019 டிரம்ப் வரிகள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றும், ஆனால் சீனாவின் பதிலடி வரிகள் அமெரிக்க விவசாயத் துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியது. 

சீனாவின் புதிய வரிகள், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரை மேலும் தீவிரமாக்கலாம். சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டம், இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மேலும் தெளிவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய போட்டியில் மகுடம் சூடிய கிளிநொச்சி மாவட்டம்!

மாற்றுவலுவுள்ளோருக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

2025ம் ஆண்டுக்கான தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான விளையாட்டு நிகழ்வு இன்றைய தினம் ஹோமாகம மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

25 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாற்றுவலுவுள்ளோர் கலந்து கொண்ட குறித்த போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.

நடைபெற்ற சகல போட்டிகளிலும் அதீத திறமையை வெளிப்படுத்தி கிளிநொச்சி மாவட்டம் 50 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

43 புள்ளிகளைப் பெற்று கம்பஹா மாவட்டம் இரண்டாம் இடத்தினையும், 36 புள்ளிகளைப்பெற்று முல்லைத்தீவு மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வடக்கு மாகாணம் முதல் மூன்று இடங்களில் இரண்டு இடங்களை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுசுட்டானில் தாறுமாறாக தாக்கப்பட்ட பெண்!

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் – ரவிகரன் எம்.பியின் தலையீட்டையடுத்து தலைமறைவான சந்தேகநபர் கைது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னசாளம்பன் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்ணை கொடூரமாகத் தாக்கி தலைமறைவான நபரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 03.04.2025 இன்று ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று பொலீசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.

இந் நிலையில் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய குறித்தநபர் ஒட்டுசுட்டான் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச்சேர்ந்த இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து, பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை வீதியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந் நிலையில் இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்டபெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த பெண்ணைத் தாக்கிய நபர் தலைமறைவாகியிருந்தார்.

இத்தகைய சூழலில் குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பெண்ணை தாக்கிய நபரைக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த இடத்திற்கு விரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பெண்ணை கொடூரமாகத் தாக்கிய குறித்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டுமென பொலிசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய 2 4மணிநேரத்திற்குள் குறித்த நபர் கைது செய்யப்படுவார் என ஒட்டுசுட்டான் பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடமும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் உத்தரவாதமளித்திருந்தனர்.

அந்தவகையில் குறித்த நபர் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச – தனியார் பேருந்துகள் மோதல்

கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் பேருந்து மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல்நிலை ஏற்பட்டு வருவதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளருக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கும் இடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இடம்பெற்று வருகின்றமையால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இன்றைய தினமும் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று காலை 8.30மணியளவில் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்ல முற்பட்ட இரண்டு பேருந்தினருக்கும் முறுகல் ஏற்பட்டதை அடுத்த்து பயணிகள் அசெளகரியங்களை எதிர்நோக்கி வேறு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரு தரப்பினரும் கிளிநொச்சியில் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாய் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Click here to join our whatsApp group

இலங்கைக்கு வரவுள்ள கொரியாவின் பாரிய முதலீடு!

0

கொரிய குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக கொரிய குடியரசின் தூதுவர் திருமதி மியான் லீ மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோருக்கு இடையே நேற்று (2ஆம் தேதி) கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பிரபல கொரிய முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய அமைச்சர் ஹந்துன்நெத்தி அழைப்பு விடுத்ததுடன், கைத்தொழில் அமைச்சகம் அந்த முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கும் என்று உறுதியளித்தார்.

கொரியாவில் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் கார்ப்பரேட் வங்கி முறையை (கூட்டுறவு வங்கி முறை) பாராட்டிய அமைச்சர் சுனில் ஹந்துன்நேதி, விவசாயம் மற்றும் உற்பத்தித் தொழில்களை ஒருங்கிணைத்து இலங்கையில் அத்தகைய கூட்டுறவு வங்கி முறையை நிறுவுவதற்கு கொரிய குடியரசின் ஆதரவைக் கோரினார்.

இதற்கு மிகவும் சாதகமாக பதிலளித்த கொரிய குடியரசின் தூதுவர் திருமதி மியான் லீ, தனது நாட்டில் செயல்படுத்தப்பட்ட கூட்டுறவு வங்கி முறை கொரிய பொருளாதாரம் அதன் தற்போதைய உயர் நிலையை எட்டுவதற்கு விதிவிலக்கான ஆதரவை வழங்கியுள்ளது என்றும், இலங்கையிலும் அத்தகைய வங்கி முறையை நிறுவ தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் கூறினார்.

கொரியக் குடியரசின் மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய அழைத்து வருவதில் அவர் தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். இலங்கையில் அந்தத் துறைகளில் பொருட்களை உற்பத்தி செய்து அந்த தயாரிப்புகளை தெற்காசிய சந்தைக்கு அனுப்பும் வாய்ப்பு குறித்து கவனத்தை ஈர்த்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கொரிய தூதரகத்தின் துணை செயல்பாட்டுத் தலைவர் யூன்ஜி காங் மற்றும் அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ரசிது மரகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாம்பியன் ஆன தம்பபன்னி ஸ்கார்பியோஸ் அணி!

0

SLCL மாகாண லீக்கின் முதல் சீசனை தம்பபன்னி ஸ்கார்பியோஸ் அணி வெற்றிகொண்டது.

SLCL மாகாண லீக்கின் முதல் சீசனின் இறுதிப் போட்டி அண்மையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இதில் தம்பபன்னியின் ஸ்கார்பியோஸ் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் லயன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற தம்பபன்னி ஸ்கார்பியோஸ் அணியின் கேப்டன் கிங்கினி கமகே முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தம்பபன்னி ஸ்கார்பியோஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தி லயன்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதன்படி, தம்பபன்னி ஸ்கார்பியோஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான விருதை முகமது ஹாலன் பெற்றுக்கொண்டதுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான விருதை சரித் திசாநாயக்க பெற்றார்.

சரித் திசாநாயக்கவுக்கு ஆட்ட நாயகன் விருதும், இறுதிப் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதும், இறுதிப் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் உருவாகியுள்ள புதிய பிரச்சினை!

வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகியவற்றால் சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், இது புதியதொரு சவாலாக மாறியுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வட மாகாண ஆளுநரை இன்று புதன்கிழமை (02.04.2025) சந்தித்துக் கலந்துரையாடிய போதே வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது ஆளுநரிடம், யுனிசெப் அமைப்பு முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தமது கள நிலைமை ஆய்வு தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

1991ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபராக தான் பதவியேற்ற காலத்திலிருந்து யுனிசெப் அமைப்பு பல்வேறு வகையான உதவிகளை எமது மக்களுக்குச் செய்து வருகின்றது. அதற்கான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் என்பன முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது அதிகரித்துள்ளன. மேலும், வடக்கு மாகாணம் தற்போது புதிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. பாடசாலை இடைவிலகல்கள் அதிகரித்துள்ளன. சிறுவர் இல்லங்களுக்கு சிறுவர்களை சேர்க்கும் போக்கு அதிகரித்துச் செல்கின்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பொருளாதாரப் பாதிப்பால் ஏற்பட்ட வறுமை நிலைமை ஒரு காரணமாக உள்ளபோதும், பெற்றோர் மறுமணம் செய்வதால்தான் பெரியளவு பாதிப்பு ஏற்படுகின்றது. சிறுவர் இல்லங்களில் சிறுவர்களை இணைப்பதை ஊக்குவிக்கவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சிறுவர் இல்லங்களை நோக்கி வருபவர்களை இணைக்காமல்விட்டாலும், பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே இது எமக்கு சிக்கலான நிலைமையாக உள்ளது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டிக்காட்டினார்.

இதேவேளை, மனநல பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்களைப் பராமரிப்பதற்கான, தங்க வைப்பதற்கான அரச இல்லங்கள் இல்லை என்று வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் யுனிசெப்பின் சிறுவர் பாதுகாப்பு தலைமை அதிகாரி ரியோனா அஸ்லான்சிவிலுடன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

பிரதமர் அலுவலக மேலதிக செயலாளராக அஷ்ரப்!

0

பிரதமர் அலுவலகத்திற்கு மேலதிக செயலாளர் பதவிக்கு நியமித்தல்.

பிரதமர் அலுவலகத்திற்கு இலங்கை நிர்வாக சேவையின் 05 விசேட தர மேலதிக செயலாளர் பதவிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 03 பதவி வெற்றிடங்கள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான பசுமை காலநிலை நிதியத்தின் முகாமைத்துவ நிபுணராகப் பணிபுரிகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி ஏ.பீ.எம்.அஷ்ரப் அவர்களை வெற்றிடமாகவுள்ள மேலதிக செயலாளர் பதவிக்கு நிமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்!

0

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்திலும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப் பயணம் செய்வதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளதை கருத்திற்கொண்டு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்திலும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மக்கள் அதிகளவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளமையால், அவர்களுக்கான துரித சேவைகளை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிப்பது பொருத்தமானதென, 2025.01.31 அன்று கௌரவ ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மியான்மர் நில நடுக்கம் – 2700ஐ கடந்த உயிரிழப்பு!

0

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மியான்மர் உருக்குலைந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 63 வயது மூதாட்டி ஒருவர் 72 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார். பலி எண்ணிக்கையும் 2,700 ஆக அதிகரித்துள்ளது.

நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 2,00-0க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு நாட்களை கடந்த நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது.

இந்நிலையில், மியான்மரின் நய்பிடாவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின்போது கட்டட இடிபாடுகளில் சிக்கி, 91 மணி நேரத்திற்கு பின், 63 வயதான மூதாட்டி ஒருவரை மீட்புக்குழு உயிருடன் மீட்டது. இதற்கிடையே, இடிபாடுகளில் இருந்து ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பலி எண்ணிக்கை 2,719 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவ உதவிகளும் மியான்மர் மக்களுக்கு உடனடி தேவையாக உள்ளது. போதிய குடிநீர் வசதியும் இல்லாததால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.