Sunday, November 9, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 186

முன்னாள் எம்.பிக்களுக்கு அடிக்கு மேல் அடி!

0

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்திரைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தல் சகல அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால், அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட முடியாது.6 கட்சிகளுக்கு தடை!

0

செயலாளர் பதவியில் பிரச்சினைகள் உள்ள 6 அரசியல் கட்சிகள் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளன.

இதன்படி 77 அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நவம்பர் 14-ம் திகதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடக்கூடிய அரசியல் கட்சிகள் மற்றும் அதற்கென ஒதுக்கப்பட்ட சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய லங்கா மகாசபா கட்சி, ஐக்கிய லங்கா பொதுஜன கட்சி, லங்கா மக்கள் கட்சி, இலங்கை முற்போக்கு முன்னணி மற்றும் ஈழவர் சனநாயக முன்னணி  ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் எடுத்த அதிரடி முடிவு!

0

கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணையப்போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று (06) மன்னார், மாந்தை பிரதேசத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிண்ணியாவைச் சேர்ந்த கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் இவ்வாறு பலர் உங்களது கட்சியிலிருந்து விலகிச் செல்வதற்கு காரணம் என்ன? எனவும் மற்றும் தனித்தா அல்லது இணைந்தா போட்டியிடுவது? எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த தலைவர் ரிஷாட் தெரிவித்ததாவது,

“தவறு செய்தமைக்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சிலர், இன்று தாமாகவே கட்சியிலிருந்து வௌியேறியதாகக் கூறித் திரிகின்றனர். தவறு செய்தவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவர். இவ்வாறு தவறு செய்த மூன்று எம்.பிக்களை எமது கட்சி நீக்கியுள்ளது.

இதுபோலவே, கிண்ணியாவைச் சேர்ந்த ஒருவரையும் நாம் நீக்கியுள்ளோம். இன்று அவர் ரணிலுடன் இணைந்துள்ளார். மட்டுமல்ல கட்சியிலிருந்து அவர்தான், வௌியேறியதாக ஊடகங்களுக்கு கூறுகிறார். மக்கள் ஆணையை மீறியவர்களுக்கு மக்களே பாடம்புகட்டுவர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது கட்சி அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் போட்டியிடும். சில மாவட்டங்களில் தனித்தும் இன்னும் சில மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் போட்டியிடும். எம்மால் நீக்கப்பட்டவர்களைச் சேர்த்து உருவாக்கப்படும் கூட்டணியில் நாம் சேரமாட்டோம்.

இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்து, ஜனாஸாக்களை எரிப்பதற்கு உதவியவர்கள் உள்ள கூட்டணியிலும் எமது கட்சி இணையாது. அம்பாறை மாவட்டத்தில், இவ்விடயம்தான் இழுபறியில் உள்ளது. இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ள அணியில், நாம் இணையப்போவதில்லை.

இவர்களைச் சேர்த்தால் அம்பாறையில் தனித்தே மயில் சின்னத்தில் போட்டியிடுவோம். புத்தளம் மாவட்டத்திலும் இந்த நியதியே பின்பற்றப்படும். இது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்குமாறு கட்சியின் புத்தளம் மாவட்ட உயர்பீடத்துக்கு அறிவித்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் குறித்து வெளியான போலி செய்தி!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை விரைவில் தீர்மானிக்கப்பட்டு நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை ஸ்தாபிப்பதற்கு தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முட்டை உற்பத்தி தொழிலை கைவிடும் அபாயம்!

0

தற்போதுள்ள மூலப்பொருட்களின் விலையின்படி, ஒரு முட்டையின் விலை 36 முதல் 37 ரூபாய் வரை பராமரிக்கப்படாவிட்டால், அத்தொழில் துறை நலிவடையும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அமைச்சின் செயலாளர் எம்.பி.நிஷாந்த விக்கிரமசிங்க  இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கோழி தீவன விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த செலவுகள் குறைக்கப்பட்டவுடன் முட்டை ஒன்றை 29 முதல் 30 ரூபாய் வரையிலான விலையில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எப்படியும் ஒரு முட்டை உற்பத்தி செய்ய சுமார் 32 முதல் 33 ரூபாய் வரை செலவாகும். இந்த செலவில் பெரும்பாலானவை கோழி தீவனம் ஆகும். 80% மக்காச்சோளத்தின் விலையைப் பொறுத்தது.

மக்காச்சோளத்தின் விலையை நிர்ணயிப்பதில் சில சிக்கல் நிலைகள் உள்ளன. அதனைத் தீர்க்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். 

எவ்வாறாயினும், சந்தையில் ஒரு முட்டைக்கு 36 முதல் 37 ரூபாய் வரை விலை கிடைக்காமல் போனால், இது கோழிப்பண்ணை தொழிலை பாதிக்கும்.

எதிர்காலத்தில், கோழித் தீவனத்துக்கான உற்பத்திச் செலவு, குறிப்பாக சோளத்தின் விலை சுமார் 165 ஆக உள்ளது. அதனை 140 ஆக குறைக்கலாம்.

அதைச் செய்த பிறகு, நாட்டில் முட்டை விலை 29 முதல் 30 ரூபாய் வரையில் இருக்கும்” என்றார்.

ரணிலுக்கு ஆதரவளித்தவர்களின் நிலை?

0

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் குழுக்களும் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், இன்று (26) கலந்துரையாடல்கள் சில இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இது தொடர்பில் இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் மற்றும் சின்னம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதோடு, கூட்டணி அமையுமாயின் அதற்கு தேவையான அடிப்படை செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருக்கும் இடையில் இன்று மாலை 4.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை

0

ஜனாதிபதியின் கன்னி உரை

0

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக இலங்கை தேர்தல்

0

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்களிப்பு நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

பல முக்கிய சர்வதேச ஊடகங்களின் பிரதான தலைப்புச் செய்திகளாக இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் மாறியுள்ளது.

BBC, REUTERS, CNN மற்றும் NDTV போன்ற ஊடங்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

இலங்கையில் கோட்டா கோ மக்களின் போராட்டத்தின் பின்னர் புதிய தலைவரை தெரிவு செய்யும் நோக்கில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

BBC செய்தி சேவை அதன் தலைப்பில், “மக்கள் எதிர்ப்புகளால் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் தேர்தலில் வாக்களிப்பு” என குறிப்பிட்டுள்ளது.

போராட்டங்கள் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்டதன் பின்னர் இலங்கை தனது முதலாவது ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் மக்கள் எதிர்ப்புக்களில் ஜனாாதிபதி வெளியேற்றப்பட்ட பின்னர் முதல் தேர்தலில் புதிய ஜனாதிபதிக்கு வாக்களிக்க உள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை ஒரு பரந்த அரசியல் சூழ்நிலையாக, போராட்டத்திற்குப் பிறகு நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் பொருளாதார சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பாக பிபிசி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

ஆனால், வரி அதிகரிப்பு, மானியங்கள் மற்றும் நலன்புரி குறைப்புக்களால் பலர் இன்னும் வாழ்க்கையை நடத்த முடியாமல் திணறி வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள்

நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், REUTERS செய்திச் சேவை தனது தலைப்புச் செய்தியில், “நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலில் மக்கள் வாக்களிக்கின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

0

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.