அமான் அஷ்ரஃப் இயக்கத்தில் வெளியான “ஓட்டமாவடி” திரைப்படம், கடந்த புதன்கிழமை (10) கொழும்பு PVR இல் பிரமாண்டமாக வெளியிடப்பட்டிருந்தது.
இதில் இலங்கையின் முதல் பெண்மணி, பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் அரச பிரதிநிதிகள், இராஜதந்திர உறுப்பினர்கள், பெரும் நிறுவனங்களின் தலைவர்கள், இலங்கை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கொவிட்-19 தொற்றுநோயின் போது இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட போராட்டத்தின் சொல்லப்படாத ஒரு கடுமையான பயணத்தின் கதையை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்தியுள்ளதோடு, கொரோனா வைரஸ் காரணமாக இறந்த தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களின் கட்டாய தகனங்கள் மூலம் அவர்களுக்கு உண்டான சோதனையை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் எடுத்துக் கூறுகின்றது.
2019 இன் பிற்பகுதியில் ஏற்பட்ட கொவிட்-19 பெருந்தொற்று, இலங்கையில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, சுமார் 17,000 உயிர்களை அது காவு கொண்டது. நாடு முழுவதிலும் உள்ள குடும்பங்கள் தங்களது உறவினர்களின் இழப்புக்களுக்காக துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் மற்றுமொரு துன்பத்தை எதிர்கொண்டது. இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் மரபுகளுக்கு நேரடியாக முரண்பட்ட ஒரு நடைமுறையான, தங்களது இறந்த உறவினர்களின் உடல்களின் கட்டாய தகனமே அதற்கான காரணமாகும்.
Black Coffee Films தயாரிப்பில் வெளியிடப்பட்டுள்ள “ஓட்டமாவடி”, சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், அரசாங்க பிரதிநிதிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரின் ஆழமான நேர்காணல்கள் மூலம், குறித்த சர்ச்சைக்குரிய காலகட்டத்தை ஆழமாக ஆராய்ந்துள்ள ஆவணப்படமாகும்.
இந்தத் திரைப்படம் ஓட்டமாவடி எனும் தொலைதூர கிராமத்தின் பெயரைக் கொண்டதாக பெயரிடப்பட்டுள்ளது. அரசாங்கம் அதன் கட்டாய தகனக் கொள்கையை மாற்றிய பின், அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்ட இடமாக இது விளங்குகின்றது.
Black Coffee Productions நிறுவனத்தின் முதலாவது தயாரிப்பான, “ஓட்டமாவடி” திரைப்படம், இலங்கையின் ஆவணப்படத் துறையில் ஒரு முக்கிய பங்களிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சீர்குலைக்காமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான காலம் வந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு பூனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை இன்று (20) மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து பல்கலைக்கழகத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டதுடன், மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
இதன்போது, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் இலங்கையிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மேலும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வையொட்டி நினைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”1985 இல் ஹிஸ்புல்லாஹ்வை நான் முதன் முதலில் இளைஞர் சேவை மன்றத்தில் சந்தித்தேன். அவர் இன்று இந்த சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பித்துள்ளார். இந்த பல்கலைக்கழகம் நமது பிள்ளைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும். தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான அறிவைக்கொண்ட மக்களே நமது நாட்டிற்கு அவசியமாகும். அதனால் தான் இந்தப் பல்கலைக்கழகம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது.
நமது நாட்டின் பிள்ளைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மிகவும் நன்றி. இப்பல்கலைக்கழகத்துடன் தற்போது கிழக்கு மாகாணத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் அல்ல. இந்நிறுவனத்திற்கும் கிடைக்கும் நிதி சேமிக்கப்பட்டு, குறித்த நிதி இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கே பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகில் இலாபம் ஈட்டாத தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன.
ஹார்வர்ட், ஒக்ஸ்போட், கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களை இலாப நோக்கமற்ற பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கலாம். கொத்தலாவல பல்கலைக்கழகம், NSBM பசுமைப் பல்கலைக்கழகம், SLIIT நிறுவனம் போன்றவையும் இலாப நோக்கமற்றவை.
சிலர் இவற்றை பட்டங்களை விற்பனை செய்யும் கடைகள் என்று கூறினர். அப்படியானால், கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட், ஒக்ஸ்போட் பல்கலைகழகங்களும் பட்டங்களை விற்கும் கடைகளா? அந்த மனப்பான்மையால்தான் இந்நாட்டின் அரச பல்கலைக்கழகங்கள் வீழ்ச்சியுற்று வருகின்றன. எனினும், இவற்றை நாம் மேலும் மேம்படுத்த வேண்டும்.
அன்று இருந்தது போன்று இன்று பல்கலைக்கழகங்கள் இல்லை. இன்று பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள் ஒரு சர்வாதிகாரத்தைப் போல மாணவர்களைக் கையாளுகின்றன. இத்தகைய சூழலில் கற்பிக்கும் விரிவுரையாளர்களைப் பாராட்டுகிறேன்.
பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களை பட்டங்களை விற்கும் கடைகள் என்ற கேவலமான பேச்சுக்கு நாம் செவிசாய்க்கக் கூடாது. பிள்ளைகள் சுதந்திரமாக கல்வி கற்கும் வகையில் இந்நாட்டில் உள்ள பல்கலைக்கழக முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும். நாளை முதல் சமூக வலைதளங்களில் இதனைச் சொல்லி என்னைக் குறை கூறலாம். பல்கலைக்கழகத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
பல்கலைக்கழகக் கட்டமைப்பில் இருந்து அச்சுறுத்தும் அரசியலை அகற்ற வேண்டும். பல்கலைக்கழகத்திற்குள் தங்களுக்கு விருப்பமான கற்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நமது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சீர்குலையாமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற வேண்டும்.
இப்பல்கலைக்கழகம் அபிவிருத்தியடைந்தால் ஏனைய பல்கலைக்கழக கட்டமைப்புகளும் அபிவிருத்தியடையும் என்று எதிர்பார்க்கின்றேன். மேலும் இது போன்ற பல பல்கலைக்கழகங்கள் இன்னும் உருவாகும் என்று எதிர்பார்க்கின்றேன்.
இந்நாட்டில் உயர்கல்விக்காக விசேட பணியை ஆற்றிய லலித் அத்துலத்முதலி பெயரில் கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உட்பட நான்கு கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
”இந்த பல்கலைக்கழகத்தை திறந்து வைக்க வந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதனை நிர்மாணிக்க பல இடங்களை தேடினோம். இறுதியில் குறைந்த வருமானம் ஈட்டுவோர் அதிகளவில் வாழும் ஊவா, வட மத்திய, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க தீர்மானித்தோம். இந்த பல்கலைக்கழகம் மூன்று மாகாணங்களினதும் மக்களுக்கு பயனளிக்கும் என்று கருதுகிறேன்.
பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் 1,200 மாணவர்கள் தற்போதும் இங்கு கல்வி பயில்கின்றனர். இது ஒரு இனத்திற்காகவோ மதத்துக்காகவோ தனியாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்ல. அனைத்து இன, மத மாணவர்களுக்கும் இங்கு இடமுண்டு.
நாட்டில் நல்ல பிரஜைகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அன்று எமது நாடு நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்பியதால் நாம் இலங்கையர் என்று உலகத்திற்கு பெருமிதமாக சொல்லிக்கொள்ள முடிகிறது.” என்று தெரிவித்தார்.
சர்வமதத் தலைவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ல்ஸ், இராஜாங்க அமைச்சர்களான பிரமித்த பண்டார தென்னகோன், சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியூதீன், ரவூப் ஹக்கீம், அலி சாஹிர் மவூலானா, பைசால் காசிம், ஜகத் சமரவிக்ரம, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் லால் ரத்னசேகர, பிரதி உபவேந்தர் பேராசிரியர் கே.முபாரக், பதிவாளர் பீ.டீ.ஏ.ஹசன், விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹிராஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களுடன் சவூதி இராஜதந்திரிகளும், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெருந்திரளான பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சுபிட்டியில் அமைந்துள்ள மத்ரஸா கட்டிடம் ஒன்றை முறைகேடான முறையில் அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு வாடகைக்கு விடப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊர் மக்கள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களிடம் சென்று இதுகுறித்து முறையீடு செய்தனர்.
குறித்த முறைப்பாட்டை அடுத்து குறிஞ்சுபிட்டி பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், முறைகேடாக வாடகைக்கு விடப்பட்ட கட்டிடத்தை நிறுவனத்தின் பொருட்களுடன் ஊர் மக்களின் ஆலோசனையுடன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனை அடுத்தே அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக குறித்த அரச சார்பற்ற நிறுவனம் தன் மீது அவதூறான ஒரு வழக்கை பதிவுசெய்து தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.
மேலும் நேற்றைய தினம் கெளரவ பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் கெளரவ மேல்மாகாண ஆளுநர் நசீர் அஹமட் ஆகியோர் புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையால் நேற்றை வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை எனவும், அதனாலே நீதிமன்றினால் தனக்கு பிடியாணை பிரப்பிக்கப்பட்டதாகவும் எமது ஈ நியூஸ் பெஸ்டிற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
வடமேல் மாகாண பட்டதாரிகளுக்கான அரச நியமனங்கள் தொடர்பில் கலந்துரையாடல்
வடமேல் மாகாணத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் உள்ளிட்ட அரச தொழில் நியமனங்களை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி நியமனம்பெறத் தவறியவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இந்தச் சந்திப்பின்போது கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள், பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயது எல்லையை முப்பத்தி ஐந்தில் இருந்து நாற்பது வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் புதிய ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கு தான் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வடமேல் மாகாண பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொண்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் அனுமதியுடன் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தெரிவித்தார்
இந்தச் சந்திப்பில் புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் சிந்தக மாயாதுன்னே எம்.பி., வடமேல் மாகாண பிரதம அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நயனா காரியவசம், மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (28) கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெற்றது.
இதன்போது புத்தகத்தின் முதல் பிரதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதனையடுத்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு நினைவு பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தார்.
இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தை வெற்றிகொண்டது மாத்திரமன்றி, பல்வேறு அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்தவர் என்ற வகையில் எதிர்காலத்தில் நாட்டிற்கு பெரும் சேவையாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்தை சரத் பொன்சேகா மட்டுமே வகிக்கிறார். அவர் யுத்த சவால்களை வெற்றிக்கொண்ட அதேநேரம் அதற்கு வெளியில் அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்திருந்தார்.
யுத்த காலத்தில் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன ஊடாகவே இவரை நான் அறிந்துகொண்டேன். ஜெனரல் சிசில் வைத்தியரத்ன என்னோடு சமீபமாக பழகியவர். இந்த அதிகாரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்குமாறு சிசில் வைத்தியரத்ன கூறினார். யுத்தம் ஆரம்பித்த காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் அரசாங்கத்திலிருந்த நான் யுத்தத்தில் பங்கெடுத்திருந்த பெரும்பாலான அதிகாரிகளை அறிவேன். அப்போது பல்வேறு சிறந்த அதிகாரிகள் உருவானதோடு அவர்களின் வரிசையில் சரத் பொன்சேகாவுக்கு சிறந்த இடம் காணப்பட்டது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஜயசிக்குரு போராட்டம் தோல்வியை தழுவியதால் இராணுவம் கைப்பற்றிய பலவற்றை இழக்க நேரிட்டது. அந்த நேரத்தில் நான் பிரதமராக பதவி வகித்ததோடு, யாழ்ப்பாணத்தை யாரிடம் கையளிப்பது என்ற கேள்வி காணப்பட்டது. அப்போது பலர் இறந்து போயிருந்ததோடு, காயங்களுக்கும் உள்ளாகியிருந்ததால் படையினர் எண்ணிக்கை குறைந்திருந்தது. யாழ்ப்பாணத்துக்கான படைப்பிரிவொன்று அவசியமென சிலர் கூறினர். அப்போது நான் சரத் பொன்சேகாவிடம் யாழ்ப்பாணத்தை ஒப்படைப்போம் என இராணுவ தளபதியிடம் கூறினேன். அதன்படியே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அவர் வீழ்ந்த இடத்தில் எழுந்து யுத்த வெற்றியை நோக்கி நகர்ந்தார். அதற்காக கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. யுத்தம் என்பது கிரிக்கட் போட்டியை போன்றதல்ல. உயிரிழப்புக்கள் ஏற்படும். சொத்துக்கள் இழக்கப்படும். அதற்கு மத்தியிலும் யுத்தத்தை வழிநடத்திச் செல்லும் வல்லமை அவரிடம் இருந்தது.
உலகத்தில் மிக் மோசமான யுத்தமொன்றுக்கே நாம் முகம்கொடுத்தோம். மற்றைய நாடுகளில் இன்றும் அவ்வாறான யுத்தங்கள் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் யுத்தம் இலங்கைக்கு முன்னதாக ஆரம்பமானது. அந்த வகையில் சரத் பொன்சேகா தனது பொறுப்பை சரிவர செய்திருக்கிறார்.
அதேபோல் சிவில் வாழ்க்கையிலும் அவர் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். அதன்போது அவர் தனிமைப்பட்ட வேளைகளிலும், சிறையிடப்பட்ட வேளையிலும் வலுவான மனிதராக உருவாகினார். அதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடு கலந்துரையாடி சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்து வழங்கப்பட்டது. அதற்கு தகுதியானவர் என்ற வகையில் அவரும் ஏற்றுக்கொண்டார்.
அரசாங்கம் என்ற வகையில் சரத் பொன்சேகாவின் தெரிவை கொண்டு நாம் பயனடைந்தோம். அவர் போராட்ட குணம் கொண்டவர். யுத்த களத்திலும் அரசியல் களத்திலும் போராட்டத்தை கைவிடவில்லை. அவரால் நாட்டுக்கு இனியும் சேவையாற்ற முடியும். அவரின் சேவைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். “Old soldiers never die they fade away.In this instance he wont fade away either, so he is still there.” என்ற வகையில் எதிர்காலத்தில் அவரிடத்திலிருந்து பெறக்கூடிய சேவையை பெற்றுக்கொள்ள நாட்டுக்கு சந்தர்ப்பம் கிட்டுமென நான் நம்புகிறேன்.
தற்போது நாட்டுக்குள் யுத்தம் முடிந்துவிட்டது சமாதானத்துக்கான பணிகளை செய்வோம் என்று சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் வைத்து ஒரு முறை கூறினார். அதற்கு தேவையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றிச் செல்வோம் என்று கேட்டுக்கொள்கிறேன். எமது இராணுவம் அனுபவங்கள் நிறைந்து. நாட்டைக் கட்டியெழுப்பி சமாதானத்தை ஏற்படுத்த இவர்களால் முடியும்.” என்றும் தெரிவித்தார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,
“படையினரின் அர்ப்பணிப்பின் பலனாகவே யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். பெருமளவானவர்கள் அங்கவீனமடைந்தனர். அதற்கான கௌரவத்தை அனைத்து இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கும் தெரிவிக்கிறேன். நமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவே அவர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அதேபோல் நாட்டில் சமாதானத்தையும் ஏற்படுத்தினர்.
யுத்தத்தை நிறைவு செய்ய அரசியல் தீர்வை எட்ட வேண்டுமென பலரும் கூறினர். நான் இராணுவ தளபதியாக பொறுப்பேற்ற வேளையிலும் பாதுகாப்பு படை வீரர்கள் கவலையுடனேயே இருந்தனர். இருப்பினும் நாம் முப்பது வருட யுத்தத்தை வெற்றிகொண்டோம். இராணுவ வீரர்களின் இரத்தம், வியர்வை சிந்தப்படமால் அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்யப்படாதிருந்தால் யுத்தத்தை வெற்றிகொண்டிருக்க முடியாது. யுத்தத்தின் பின்னர் இந்நாட்டு மக்களும் ஆட்சியாளர்களும் இராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதையை வழங்கியிருந்தனரா என்பது கேள்விக்குரியாகும்.” என்றும் தெரிவித்தார்.
மகா சங்கத்தினர் தலைமையிலான ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும், தூதுவர்கள், முன்னாள் இராணுவ தளபதிகள், அனோமா பொன்சேகா உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜே.வி.பி கட்சியின் ஒரு பிரபல்யமான ஆயுதக் குழு எமது கட்சிக்கு ஆரம்பத்தில் ஆயுதம் வழங்கியவர்கள். பின்பு எங்களிடம் ஆயுதம் கேட்டவர்கள் மக்களை சுடுவதற்கு நான் கொடுக்கவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று (27) மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜே.வி.பி கட்சியில் தலைவர் கருத்து வெளியிட்ட போது ஒரு பிரபல்யமான ஆயுதக் குழு மக்களை அச்சுறுத்துவதாகச் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் வழங்கும் வகையில் இன்று (28) மட்டக்களப்பில் இடம்பெற்ற வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகக்கு தலை சரியில்லை. அவர்கள்தான் முதலில் எங்களுக்கு ஆயுதம் வழங்கியவர்கள். பின்பு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள் மக்களை சுடுவதற்கு நான் ஆயுதம் கொடுக்கவில்லை. அவர் மட்டக்களப்புக்கு வந்தால் பொறுப்புடன் கதைக்கப் பழகவேண்டும்.
அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் அதனை தேடிப் பார்க்கட்டும். அவர் மக்களை நான் அச்சுறுத்துவதாகச் சொன்னால் மட்டக்களப்பில் அதிக வாக்குகளை பெற்றவர் நான். ஜனநாயகத்தைப் பற்றி கதைப்பவர்கள் பொறுப்பாக யோசித்து கதைக்க வேண்டும்
நாட்டை தீக்குளிக்குள் தள்ளி பல்கலைக்கழக மாணவர்களை வன்முறைக்கு தூண்டிய ஒரு கட்சி தான் அவரின் கட்சி. நாட்டை அழிக்க செய்த ஒரு கட்சி, எமது மண்ணில் இவ்வாறு கதைப்பது வேதனைக்குரிய விடயம். என அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை இந்த ஊடக சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை சம்பந்தமாக முறைப்பாட்டை அமைச்சரிடம் முன்வைத்துள்ளேன். விரைவில் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத் தொகையை மக்களுக்கு கிடைக்கபெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சர் மனுஷ நாணயக்காரருடன் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இணைந்து பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளத்துடன், மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மனுஷ நாணயக்காரருடன் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனை சம்பந்தமாக முறைப்பாட்டை அமைச்சரிடம் முன்வைத்துள்ளேன்.
இது தொடர்பில் வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நீதிமன்றத்தில் தடை உத்தரவினை பெற முடியவில்லை. இதுவரையிலும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தல் அமுல்படுத்தப்படவில்லை என்பதோடு இது சம்பந்தமான முறைப்பாட்டை செய்துள்ளேன்.
விரைவில் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத் தொகையை மக்களுக்கு கிடைக்க பெறவேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.
தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.
அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை இலந்தையடி சிங்கள மகா வித்யாலயத்திற்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் W.K.L.S. தமேல் தலைமையில் நேற்று இடம்பெற்றது
புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் சொந்த நிதியில் இருந்து கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் பாடசாலையின் உள்ளக வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், புத்தளம் தொகுதிக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கடந்த காலங்களில் இல்லாததால் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பாகவும், விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மாவட்டத்திற்கு உள்ளேயே பிரிவினைகள் ஏற்பட்டது தொடர்பாகவும் அரசியல்வாதிகள் தமது சொந்த இலாபங்களுக்காக மக்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்தார்.
இழந்த அடி பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும், பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியன இணைந்து சிறந்த முறையில் வரவேற்பளிக்கப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்தி மூலம் பாடசாலையின் தேவைகள் பூரதி செய்யப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் எருக்கலம்பிட்டி அல் வஹ்தா நலன்புரி அமைப்பினரால் இம்முறையும் புத்தளம் எருக்கலம்பிட்டியில் கூட்டு குர்பானி விநியோகம் இடம்பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுப்பெருநாள் கூட்டு குர்பானி விநியோகம் புத்தளம் எருக்கலம்பிட்டியில் இடம்பெற்று வருகின்றது.
2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல் வஹ்தா நலன்புரி அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் குர்பான் கொடுப்பதற்காக மக்களை ஆர்வப்படுத்தி, நெறிப்படுத்தி சிறந்த வழிகாட்டல்கள் மூலம் குர்பானியை நிறைவேற்றச்செய்து அவைகளை சிறந்த முறையில் மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் ஓர் பாரிய சவாலான வேலைத்திட்டத்தை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக செய்து வரும் எருக்கலம்பிட்டி அல் வஹ்தா நலன்புரி அமைப்பின் சேவை அளப்பரியது.
அந்த வகையில் இம்முறையும் எருக்கலம்பிட்டி அல் வஹ்தா நலன்புரி அமைப்பினரால் கூட்டு குர்பானி விநியோகம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இம்முறையும் நாட்டின் நாளா பகுதிகளிலும் வாழும் எருக்கலம்பிட்டி மக்களிடமிருந்து கூட்டு குர்பானிக்கான பங்களிப்புகளை பெற்று, சுமார் 27 மாடுகளை கொள்வனவு செய்து, ஒரே தினத்தில் அறுத்து விநியோகம் செய்தமையானது பாரிய ஒரு வெற்றியாகும் என அல் வஹ்தா நலன்புரி அமைப்பின் தலைவர் ஜனாப் செய்னுலாப்தீன் அபுல் ஹைர் தெரிவித்தார்.
அர்ப்பணிப்புள்ள மிக உயர்ந்த சேவையினை தொடர்ச்சியாக செய்து வரும் அல் வஹ்தா நலன்புரி அமைப்பினருக்கு eNews1st நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.