Sunday, March 15, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 194

கோத்தபாய குறித்து உயர்நீதிமன்றின் அறிவிப்பு!

0

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் இன்று (18) தீர்ப்பளித்தது. 

இந்த அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக, அரசாங்கம் மனுதாரருக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக பேலியகொட சிறப்பு விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட, ஹேனகம, பொகுனுவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் காஞ்சனா பிரியதர்ஷனி மதுரப்பெரும என்ற பெண்ணொருவர் சமர்ப்பித்த அடிப்படை உரிமைகள் மனுவின் தீர்ப்பை வழங்கி, உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து!

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு பாரிய கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், நாவற்குழி மாதா கோவிலடியிலே குறித்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதியே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனத்தில் மூவர் இருந்ததுடன், அவர்கள் அனைவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கனடாவில் இருந்து வந்த பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் 5வயது மதிக்கத்தக்க பெண்  குழந்தை ஆகியோர் குறித்த காரில் பயணித்தபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்கு காரணம் நித்திரை கலக்கமே என விபத்தில் சிக்கியவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

Click here to join our whatsApp group

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்!

அரசாங்கத்தின் கன்னி வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் மருந்தாளர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையினர் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த வேலைநிறுத்தத்திற்கு துணை வைத்திய நிபுணர்களின் கூட்டு சபையைச் சேர்ந்த 7 தொழிற்சங்கங்களும் இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியைச் சேர்ந்த 11 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

நிதியமைச்சின் அதிகாரிகளுடன் தமது பிரச்சினை தொடர்பில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் இணை அழைப்பாளர்  உபுல் ரோஹன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

குர்ஆனை கையில் வைத்து பேசிய ஹிஸ்புல்லா எம்.பி!

0

நாட்டில் இருக்கும் அரபுக்கல்லூரிகள் அனைத்தும் பொதுவான பாடத்திட்டம் ஊடாக கொண்டுசெல்ல தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும் பரீட்சைகளை பரீட்சைகள் திணைக்களம் ஊடாக நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று (17) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

நாட்டில் 321 பதிவு செய்யப்பட்ட அரபுக் கல்லூரிகள் இருக்கின்றன. 132 பதிவு செய்யப்படாத அரபுக் கல்லூரிகள் இருக்கின்றன. 72 அரபுக்கல்லூரிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ளன. அந்த பதிவுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

அதேநேரம் இந்த அரபுக்கல்லூரிகள் அனைத்தும் பொதுவான பாடத்திட்டம் ஒன்றின் ஊடாக கொண்டுசெல்லப்பட வேண்டும். இது தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டுவந்த நிலையில், பொதுவான பாடத்திட்டம் அமைக்க குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. 

குறித்த குழு அது தொடர்பான பாடத்திட்டத்தையும் தயாரித்திருந்தது. பின்னர் இந்த பாடத்திட்டத்தை மீள் பார்வையிட 2022ஆம் ஆண்டும் நிபுணர்குழு அமைக்கப்பட்டபோது, அந்த நிபுணர்குழுவும் அதுதொடர்பில் ஆராய்ந்து குறித்த பாடத்திட்டத்துக்கு ஆதரவளித்திருந்தது. 

பின்னர் கல்வி அமைச்சுக்கு இது மாற்றப்பட்டபோது இந்த பாடத்திட்டத்தை மீள் பரிசீலனைசெய்ய மீண்டும் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவும் குறித்த பாடத்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கிறது. 

அதனால் அரசாங்கம் இந்த பாடத்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும் பரீட்சைகளை பரீட்சைகள் திணைக்களம் ஊடாக நடத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் பள்ளிவாசல்களில் கடமை புரியும் உலமாக்கள் மற்றும் முஅத்தீன்களுக்கு முறையான பயிற்சி திட்டம் ஒன்று முஸ்லிம் கலாசார திணைக்களம் ஊடாக நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் நிகழ்த்தப்படும் பிரசங்கங்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இதேவேளை, முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பிராந்தியம் ஒன்று மட்டக்களப்பில் இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்னர் இது அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது இன்னும் முறையாக இயங்காமல் இருக்கிறது. 

அதனால் அதற்கு ஒரு உதவி பணிப்பாளர் ஒருவரை நியமித்தும் தேவையான அதிகாரிகளை நியமித்தும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் இருந்து சிறிய தேவைக்கும் கொழும்புக்கு வந்துபோக தேவை ஏற்படாது. அத்துடன் இந்த பிராந்தியத்தை ஊவா மாகாண மக்களும் பயன்படுத்த முடியும். 

மேலும் அரபு மொழி புத்தங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவருவதற்கு இருக்கும் தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் ஒருவருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட பல ஆயிரம் அல்குர்ஆன் தமிழ்மொழி பெயர்ப்பு பிரதிகள் இன்னும் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதேபோன்று, சர்வதேச நாடுகளில் அமைந்துள்ளவாறு ‘பைத்துல்மால் நிதியம்’ அமைக்கப்படவேண்டும் என்றும் அதற்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும், மகர சிறைச்சாலை பள்ளிவாசல் பிரச்சினை மற்றும் நோர்வூட் பள்ளிவாசலுக்கு சொந்தமான வீட்டு பிரச்சினை போன்றவற்றை சுட்டி காட்டியதுடன் அவற்றை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.

அஸ்வெசும திட்டத்தில் மாற்றம்!

0

அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். 

அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டம் 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படுவதுடன், 2415/66 மற்றும் 2024.12.21 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இத்திட்டம் இறுதியாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் கீழ்வருமாறு திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. 

* அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தின் I ஆவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘நிலையற்றவர்கள்’ சமூகப் பிரிவினருக்கான உதவித்தொகை கிடைக்கின்ற காலப்பகுதியை 2025.04.30 வரை நீடித்தல். 

* குறித்த உதவி வழங்கும் திட்டத்தின் II ஆவது அட்டவணையின் உள்ளடக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகை மற்றும் சிறுநீரக நோய்க்கான உதவி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகையை 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரித்தல் மற்றும் முதியோருக்காக வழங்கப்படும் உதவுதொகையை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரித்தல் மற்றும் குறித்த தீர்மானங்களை 2025 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தல். 

* II ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவுதொகையைப் பெறுகின்ற இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான கொடுப்பனவு, சிறுநீரக கொடுப்பனவு மற்றும் முதியோருக்கான கொடுப்பனவு நோயாளர்களுக்கான மேற்குறிப்பிட்டுள்ள முன்மொழிவுகளுக்கமைய, கொடுப்பனவுக் காலப்பகுதியை 2025.12.31 வரை நீடித்தல். 

* 2025 ஏப்ரல் மாதத்தின் பின்னர் நிலையற்றவர்கள் சமூகப் பிரிவினருக்கான கொடுப்பனவு நிறுத்தப்பட்டாலும், குறித்த குடும்பங்களிலுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோருக்கு வழங்கப்படும் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுக்கான காலப்பகுதியை 2025.12.31 வரை நீடித்தல். 

* புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்களின் விண்ணப்பங்கள் உயர்ந்தபட்ச வரையறையின் கீழ், உள்வாங்கி தகுதி பெறுகின்றவர்களுக்கு குறித்த கொடுப்பனவை 2025.12.31 வரை வழங்கல்.

கண்டுபிடிக்கப்பட்ட 7 லட்சம் சிகரெட்டுகள்!

0

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட, 12 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சிகரெட் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து இந்த சிகரெட் தொகையை, சுங்க வருமான பணிக்குழு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது, சுமார் 713,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சிகரெட்டுகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து பாதுக்க பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு 124,019,554 ரூபாவாகும், இதனால் அரசாங்கத்திற்கு 107,985,621 ரூபா  இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் கூறியுள்ளது.

புத்தளத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து போட்டி!

0

புத்தளம் தொகுதியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் கையொப்பமிடும் நிகழ்வு நேற்று (16.03.2025) புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெற்றது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிப்புகள் யாவும் நிறைவுபெற்றுள்ளதாக புத்தளம் நகர சபை முன்னாள் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதி இணை அமைப்பாளருமான M.S.M. ரபீக் தெரிவித்துள்ளார்.

புத்தளம் தொகுதியின் உள்ளூராட்சி சபைகளான புத்தளம் மா நகர சபை, கல்பிட்டி பிரதேச சபை மற்றும் வனாதவில்லு பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதுடன் புத்தளம் பிரதேச சபையில் மாத்திரம் ஐக்கிய மக்கள் சக்தி தனித்து போட்டியிடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை புத்தளம் தொகுதியின் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் நாளைய தினம் புத்தளம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள உதவி தேர்தல்கள் ஆணையாளர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட தலைவரும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்ட்ர் அப்புகாமி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க சூறாவளியில் சிக்கி 36 பேர் பலி!

0

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கடுமையான சூறாவளி, காட்டுத் தீ என, அடுத்தடுத்து தொடர்ந்த இயற்கை சீற்றங்களில் சிக்கி, 36 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மிக்சிகன், மிசோரி மாகாணங்களில், கடந்த 17ம் தேதி இரவு, சூறாவளி வீசத் துவங்கியது. இது, சிறிது சிறிதாக நகர்ந்து, நேற்று முன்தினமும், நேற்றும் மிசிசிபி, ஜார்ஜியா, டெக்சாஸ் என வரிசையாக அடுத்தடுத்த மாகாணங்களை துவம்சம் செய்தது. அதன் தொடர்ச்சியாக, ஒக்லகோமா மாகாணத்தில் காட்டுத் தீ பரவியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

மணிக்கு 70 கி.மீ., வேகம் வரை வீசிய சூறாவளியால், வயனே கவுன்டி, பட்லர் கவுன்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. பள்ளி கட்டடங்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்தன. லாரிகள் போன்ற கனரக வாகனங்களைக் கூட சூறாவளி புரட்டிப் போட்டது. இடிபாடுகளில் சிக்கி வயனே கவுன்டியில் மட்டும், 15 பேர் உயிரிழந்தனர்.

சூறாவளியைத் தொடர்ந்து, புழுதி காற்றும் பலமாக வீசியதால், சாலைகளில் வாகனங்களை இயக்க முடியவில்லை. கன்சாஸ் நகர சாலையில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின. மிசிசிபியில் 10 பேர் பலியாகினர்.

சூறாவளி, புழுதிப்புயலைத் தொடர்ந்து ஓக்லகோமா மாகாணத்தில் பயங்கரமாக காட்டுத் தீ பரவியது. மாகாணம் முழுதும், 130 இடங்களில் தீப்பிடித்ததில், 689 சதுர கி.மீ., நிலங்கள் தீக்கிரையாகின.

இதற்கிடையே, மினசோட்டா, டகோட்டா ஆகிய இடங்களில் நேற்று பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அரை அடி அளவுக்கு பனிகட்டி குவியும் என்றும், சூறாவளியும் சேருவதால் வீடுகள் சேதமைடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. ‘மார்ச் மாதத்தில் இதுபோன்ற அடுத்தடுத்த இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது, இதுவரை காணாத நிகழ்வு’ என வானிலை வல்லுநர்கள் கூறினர்.

இயற்கையின் கோரத் தாண்டவத்தால், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில், 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 36 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சூறாவளி வலுவிழக்காமல் லுசியானா, மிசிசிபி, அலபாமா, ஜார்ஜியா, புளோரிடா மாகாணங்களை கடப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் சேதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

51 குடும்பங்களுக்கு நிலத்துடன் புதிய வீடுகள்!

0

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 51 குடும்பங்களுக்கு நிலத்துடன் கூடிய புதிய வீடுகள்

(ஹல்துமுல்ல நாயபெத்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 51 குடும்பங்களுக்கான புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா)

நிலச்சரிவு காரணமாக இருப்பிடங்களை இழந்து இரண்டு ஆண்டுகளாக பூனாகலை மஹாகந்த தேயிலைத் தொழிற்சாலையில் வசித்து வந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (16) ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவின் பூனாகலை கபரகலை பிரிவில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர், ஊவா மாகாண ஆளுநர், இராணுவத் தளபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹல்துமுல்ல நிலச்சரிவுக் காரணமாக பாதிக்கப்பட்ட இந்த 51 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா பத்து பேர்ச்சஸ் காணிப் பகுதிகளுடன் புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பத்து பேர்ச்சஸ் காணிப் பகுதியுடன் ரூ. 28 லட்சம் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு கட்டப்படவுள்ளதுடன், 51 வீடுகள் கட்டும் திட்டத்திற்கான நிதி செலவை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஏற்கவுள்ளதுடன், இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இது கட்டப்படவுள்ளது.

வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன,

“இந்த வீடுகள் கட்டுவதற்கான பணம் தன்னுடைய அல்லது வேறு யாருடைய தனிப்பட்ட பணம் அல்ல, பொதுமக்களின் வரிப்பணம் என்றும், அதனால் தனக்கும் தனது குழுவினருக்கும் போடப்பட்ட மாலைகள் தமக்கோ அல்லது தமது குழுவினருக்கோ போடப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார்.

புதிய அரசாங்கம் பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பதவிக்கு வந்துள்ளதால், மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகளில் தலையிடுவது அவசியம் என்றும், கடந்த காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் வேலை செய்யவில்லை என்று தான் கூறவில்லை என்றும், ஆனால் முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டியதை செய்யாததால் ஏற்பட்ட தவறுகளை எதிர்காலத்தில் சரிசெய்வோம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தமது அரசாங்கத்திற்கு வாய்ப்புக் கிடைத்தவுடன் அனாதைகள் முகாம்களில் இருந்து வெளியேற்றி புதிய வீடுகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், இதேபோல் 2014 ஆம் ஆண்டு முதல் சமசர நிலச்சரிவுக் காரணமாக அனாதைகள் முகாம்களில் உள்ள 22 குடும்பங்களுக்கும் விரைவில் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மக்களுக்கு அப்படி நேர்ந்தாலும் ஆட்சியாளர்களுக்கு அப்படி நடக்கவில்லை. வீடுகள் தீக்கிரையான பிறகு, மாதக்கணக்கில் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு பெற்றனர். இப்போது இந்த வீட்டுத் திட்டம் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சு இந்த வீடுகளுக்காக ரூ. 1800 லட்சம் ஒதுக்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வீடுகளுக்கு ஒரு வீட்டிற்கு சுமார் ரூ. 1300 லட்சம் செலவு செய்ததாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்”

இந்த நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தர லிங்க பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், பதுளை மாவட்ட மேலதிக செயலாளர், ஹல்துமுல்ல பிரதேச செயலாளர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் புதிய வீட்டு பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராம சேவையாளர்கள் போராட்டம்!

0

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம சேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக பெண் கிராம உத்தியோகத்தரான நாகேந்திரம் கார்த்திகா என்பவருக்கு கடந்த 2025.03.08 உலக மகளிர் தினத்தன்று அவரது அலுவலக நேரத்தில் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கோரி சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் நாட்டில் பாதுகாப்பு குறித்த பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் அவ்வப்போது இவ்வாறான மிலேச்சனமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்