அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் வகையில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளும் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து தினசரி சிகிச்சை சேவைகளும் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சுகாதார அதிகாரிகள் நியாயமான தீர்வினை வழங்கினால், வேலைநிறுத்தம் குறித்து மீளப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை வேலை நிறுத்தம்!
அரச வைத்திய அதிகாரிகள் அரசுக்கு 1,277 மில்லியன் கடன்!
சேவையை விட்டு விலகிய அரச வைத்திய அதிகாரிகளிடமிருந்து, அரசாங்கத்துக்கு ரூபாய் 1,277 மில்லியனுக்கும் அதிகமான பணம் நிலுவையில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பதவிகளை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு அரசினால் அறவிடப்பட வேண்டிய பிணை முறி, தண்டப் பணம் மற்றும் கடன் முன்பண நிலுவைகள் ஆகியவற்றின் மொத்தத் தொகை ரூபாய் 1,277 மில்லியன் ஆகும் என்று அந்தக் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சேவையை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய நிலுவைகள் மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற விசேட வைத்திய அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தற்போது, முதுகலை பட்டப்படிப்புப் பயிற்சிக்காகவும், வெளிநாடுகளில் வேலை செய்வதற்காகவும், மற்றும் ஏனைய காரணங்களுக்காகவும் வெளிநாடு செல்லும் வைத்திய அதிகாரிகள் சேவையை விட்டு விலகுவது மற்றும் சேவையை கைவிடுவது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டுவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த அதிகாரிகள் பிணை முறி மற்றும் தண்டப் பணத்தை செலுத்தாமல் இருக்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், அவற்றை அறவிடுவதற்கான நடவடிக்கைகளில் பல பலவீனங்கள் இருப்பதாகவும் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை மொத்தம் 705 வைத்தியர்கள் ஒப்பந்தத்தை மீறியுள்ளதும் இந்த கணக்காய்வின்போது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை மீட்ட இலங்கை காவல்படை!
மிரிஸ்ஸ கடலில் நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மீட்ட இலங்கை காவல்படையின் உயிர்காக்கும் குழு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
மாத்தறை, மிரிஸ்ஸ கடல் பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு (04) வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கடலோரப் பகுதியில் உயிர்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர காவல்படையின் உயிர்காப்பாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, கடற்கரையில் பணியில் இருந்த உயிர்காப்பாளர்கள் நான்கு பேர் நீரில் மூழ்குவதைக் கவனித்து, உடனடியாக அவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், மீட்கப்பட்ட வெளிநாட்டினர் 13 முதல் 55 வயதுக்குட்பட்ட இரண்டு ரஷ்ய பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ரணில்,மகிந்தவை கொண்டுவருவது தங்கள் சுகபோக வாழ்க்கைக்கு!
பண்முகப்படுத்தப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இரணைமடு குளத்தில் நன்னீர் மின்பிடியில் ஈடுபடும் இரண்டு மீனவ சங்கங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வழங்கியிருந்தார்.
மக்களுடைய வரிப்பணத்தில் திறைசேரிக்கு செல்லும் நிதி மூலமே மக்களுக்கான வாழ்வாதாரம் வழங்கியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் செழிப்பான ஆண்டாக மாற்றுவோம் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து முதலமைச்சர் வேட்பாளரை நியமிப்பதற்கான முயற்சி தொடர்பாகவும் இதன்போது கருத்து தெரிவித்தார்.
இவர்களின் நோக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது அல்ல, திரும்பவும் ரணில் மகிந்தவை கொண்டு வந்து தாங்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதற்கு என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கற்பிட்டி மற்றும் ஜெர்மன் பிரதேச சபைகளுக்கிடையில் ஒப்பந்தம்!
கற்பிட்டி பிரதேச சபை மற்றும் ஜெர்மனியின் பெர்லின் பிரதேச சபை ஒப்பந்தம் கைச்சாத்து
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச சபை மற்றும் ஜெர்மனியின் பெர்லின் பிரதேச சபை என்பவற்றுக்கிடையிலான நான்கு (2025-2029) வருட கால அபிவிருத்தி திட்டத்திற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கற்பிட்டி பிரதேசத்தை நிலைத்துறை வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் பசுமை சுற்றுலா மேம்பாடு ஆகிய துறைகளில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எஸ்.எம் றிகாஸ், உப தலைவர் சமன் குமார் ஹேரத் மற்றும் பெர்லின் பிரதேச சபையின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஒப்பந்த ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
இது கற்பிட்டி மக்களின் எதிர்காலத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கமாகும் என கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



வடக்கில் இனி GovPay ஊடாக போக்குவரத்து அபராதம்!
வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பிக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் பொது சேவை வழங்கலில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப் பட்டது.
இந்த முயற்சியின் மூலம், GovPay ஊடாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதியை செயல்படுத்தும் இலங்கையின் மூன்றாவது மாகாணமாக வட மாகாணம் திகழ்கின்றது
இவ் உத்தியோகபூர்வ நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
பொலீஸ் அத்தியட்சகர் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலீஸ்மா அதிபர் (DIG) திலக் சி ஏ தனபால, வன்னிப்பிரிவுக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ இந்திக்க ஹப்புகொட, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் ஜே.ஏ சந்திரசேன, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கான பிரதி பொலீஸ்மா அதிபர் ஜி.எச் மாரப்பன, வவுனியா பிரிவு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் [SSP) டபிள்யூ.ஏ சோமரத்ன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
வட மாகாணத்தில் உள்ள 6 போக்குவரத்து பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பொலீஸ் உத்தியோகஸ்தர்களுக்கான தொடர் விழிப்புணர்வு அமர்வுகளும் நடைபெற்றுவருகின்றது. அதன்படி அக்டோபர் 26 அன்று வவுனியாவிலும், அக்டோபர் 27 அன்று கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திலும் நடத்தப்பட்டன. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay உடன் இணைந்து இலங்கை காவல்துறை ஏற்பாடு செய்த இந்த அமர்வுகளில் சுமார் 400 போக்குவரத்து பொலீஸ் உத்தியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.
இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வட மாகாணத்தில் உள்ள வாகன சாரதிகள் தற்போது GovPay உடன் இணைக்கப்பட்ட எந்தவொரு இணையத்தள அல்லது மொபைல் வங்கி செயலி அல்லது டிஜிட்டல் கட்டண செயலி மூலமாக, குறித்த இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களை வசதியாகவும், பாதுகாப்பாகவும், உடனடியாகவும் செலுத்த முடியும்.
தற்போது, 14 வங்கிகளின் இணையவழி மற்றும் மொபைல் வங்கி தளங்கள் மற்றும் 6 FinTech செயலிகள் மூலம் போக்குவரத்து அபராதத்தை செலுத்தலாம். இதில் BOC FLEX செயலி, சம்பத் விஸ்வா, HNB டிஜிட்டல் வங்கி மற்றும் SOLO, NSB Pay. Peoples’ Pay, ComBank Digital, DFCC , Nations Direct வங்கி NDB Neos இணையத்தள வங்கி, NSB இணையவழி வங்கி, பான் ஏசியா இணையவழி வங்கி, SDB இணையவழி வங்கி Seylan இணையவழி வங்கி, LB Finance CIM, WEBXPAY, FriMi, Genie, Helakuru L iPay மூலம் போக்குவரத்து அபராதத்தை செலுத்தலாம்.
ஏப்ரல் 2025 இல் ஸ்தலத்திலான போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து, GovPay வழியாக 23,539 ஸ்தல அபராதங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, இது ரூ.31 மில்லியனுக்கும் அதிகமானதாகும்.
பெப்ரவரி 2025 இல் தொடங்கப்பட்ட GovPay என்பது இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay இன் ஒரு கூட்டு முயற்சியாகும். இது டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. GOVPAY போக்குவரத்து அபராதத் திட்டம் போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள டிஜிட்டல் பணிக்குழுவால் முன்னெடுக்கப்படுகிறது. பொதுமக்களை அரச சேவைகளுக்கான பணத்தினை
ஒன்லைனில் மிகவும் இலகுவாகவும் பாதுகாப்பகவும் உரிய நேரத்தில் செலுத்த ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்க சேவை வழங்கும் திறனை மேம்படுத்துவதே இந்த தளத்தின் நோக்கமாகும்.
GovPay மூலம் இன்றுவரை, 2,700 அரச சேவைகளில் ரூ. 407 மில்லியனுக்கும் அதிகமான சுமார் 35,000 டிஜிட்டல் கொடுப்பனவுகள் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் கொடுப்பனவுகளை மேற்கொள்ள பொது மக்களை ஊக்கப்படுத்தி, நாட்டின் டிஜிட்டல் மாற்ற பயணத்திற்கு வலுசேர்த்து, அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் GovPay தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.

குர்ஆன் மதரஸாக்கள் தொடர்பில் புத்தளத்தில் விஷேட கருத்தரங்கு!
குர்ஆன் மதரஸா வகுப்புக்களை மேற்கொள்ளும் முஅல்லிம் மற்றும் முஅல்லிமாக்களுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரத் துறையினால் (DMRCA) இன்று நடத்தப்பட்டது.
பதிவுசெய்யப்பட்ட குர்ஆன் மதரஸாக்களின் முஅல்லிம் மற்றும் முஅல்லிமாக்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கு இன்று (29) புத்தளம் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தல் வெற்றிகரமாக நடைபெற்றது.
முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனாப் எம்.எஸ்.எம். நவாஸின் வழிகாட்டுதலின் கீழ், உதவிப் பணிப்பாளர் ஜனாப் என். நிலோஃபர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
குர்ஆன் மத்ரஸாக்கள் தற்போது உயிரோட்டம் குறைந்து காணப்படுவதற்கான காரணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், மார்க்கக்கல்வியில் குர்ஆன் மத்ரஸாக்களின் முக்கியத்துவம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
செயலமர்வில் கலந்துகொண்ட உலமாக்கள், தாம் கடமையாற்றும் குர்ஆன் மதரஸாக்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டினார்.
மேலும் குர்ஆன் மத்ரஸாக்களின் பலவீனத்திற்கு உலகக்கல்விக்கு கொடுக்கும் முக்கியம் தொடர்பிலும் உற்றுநோக்கப்பட்டது.
மேலும் குறித்த அமர்வு மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தப்பட்டு நடைபெற்றது.
- தரமான குர்ஆன் மதரஸா அமைப்பை நோக்கி
- குர்ஆன் ஆசிரியர்களின் பங்கு மற்றும் பொறுப்பைப் புரிந்துகொள்வது
- குர்ஆன் மற்றும் மாணவர்களுடன் ஆன்மீக தொடர்பை உருவாக்குதல்
இந்த வளமான கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இலங்கையில் இஸ்லாமிய கல்வியின் வளர்ச்சிக்கான இந்த முக்கியமான முயற்சியின் வெற்றிக்கு அனைவரினதும் பங்களிப்புகள் தொடர்பில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார திணைக்களத்தின் அதிகாரிகள், புத்தளம் பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்கள் கலந்துகொண்டனர்.



ஜனாதிபதி நிதியத்தினால் வடமேல் மாகாண மாணவர்கள் கெளரவிப்பு!
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வடமேல் மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கௌரவிப்பு!
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் 2023/2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்கும் வடமேல் மாகாண நிகழ்ச்சித் திட்டம் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன ஆகியோரின் தலைமையில் அண்மையில் (26) வடமேல் மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில், 6 பாடத் துறைகளின் கீழ் 1 முதல் 10 வரையான இடங்களைப் பெற்ற 240 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா ஊக்கத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியம் 24 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே வரவேற்புரையில் நோக்கங்களை தெளிவுபடுத்தினார்.
இங்கு மாணவர்களிடையே உரையாற்றிய பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, நாட்டிற்குத் தேவையான ஆளுமைமிக்க தலைமையை கட்டியெழுப்புவதில் மாணவர்களை கௌரவிப்பது மிகவும் முக்கியமான பணியாகும் என்றும், அதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித் திட்டத்தை மிகவும் பாராட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக வாழத் தகுந்த நாட்டை உருவாக்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இந்த சவால்களை வெற்றி கொள்வதற்காக நாட்டு மக்களை ஒன்றிணைத்து பாரிய தேசிய செயற்றிட்டமொன்று எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எந்தவொரு பிள்ளையையும் கைவிடாது ஒவ்வொரு பிள்ளையின் சமூகப் பாதுகாப்புக்காகவும் அரசாங்கம் செயற்படும் என்றும், அதி-பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 17,000 இற்கும் அதிகமான பிள்ளைகள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உட்பட அனைத்து மட்டங்களிலுமுள்ள பிள்ளைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.
அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் நந்தன அபேரத்னவும் இங்கு மாணவர்களிடையே உரையாற்றினார். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மப்பிரிய திசாநாயக்க, விஜேசிங்ஹ பஸ்நாயக்க, ஜகத் குணவர்தன ஆகியோரும், வடமேல் மாகாண பிரதம செயலாளர், குருநாகல் மாவட்ட செயலாளர், மாகாண கல்விச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


நுரைச்சோலையில் இடம்பெற்ற சோகம்!
கடலில் மிதந்த பாட்டிலில் இருந்து திரவத்தை குடித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக நுரச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சந்தேகத்திற்கிடமான திரவத்தை குடித்த ஒருவர் 28 ஆம் தேதி இரவும், மற்றொருவர் 29 ஆம் தேதி அதிகாலையிலும் உயிரிழந்துள்ளனர்.
கல்பிட்டி, நரக்கல்லிய பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய இரு மீனவர்களே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நுரச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமத்தில் நான்கு மீனவர்கள் கொண்ட குழு மது அருந்திக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில், கடலில் மிதந்த ஒரு பாட்டிலை எடுத்து உள்ளே இருந்த திரவத்தை அவர்கள் குடித்தனர்.
நுரச்சோலை பொலிஸார் கூறுகையில், திரவத்தை குடித்த இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
கூரை சீட்டுகளுக்குள் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு!
ஜூட் சமந்த
கூரை சீட்டுகள் (ஆஸ்பெஸ்டாஸ்) ஏற்றிச்சென்ற லாரியில் இளைஞர் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று 28.10.2025 இடம்பெற்ற குறித்த விபத்தில் உடப்பு – 5வது ஒழுங்கையில் வசிக்கும் கந்தன் ஸ்ரீதரன் (17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆரச்சிகட்டுவ பகுதியில் உள்ள கூரை சீட்டுகள் (ஆஸ்பெஸ்டாஸ்) உற்பத்தி தொழிற்சாலையில் உயிரிழந்த இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார்.
கூரை சீட்டுகள் ஏற்றப்பட்ட லாரியின் பின்புறத்தில் அமர்ந்திருந்தவேளை தொழிற்சாலை வளாகத்தில் வைத்தே கூரை சீட்டுகலுக்குள் சிக்கி படுகாயமடைந்தார்.
பின்னர், இளைஞர் மற்ற ஊழியர்களால் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஆரச்சிகட்டுவ போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

