இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஜனவரி மாத இறுதியில் 6.06 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 0.9% வீழ்ச்சியாகும்.
கடந்த 2024 டிசம்பரில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (7) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இது அரச வருமான சேகரிப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஊக்குவிப்பதோடு, மிகவும் திறமையான மற்றும் குடிமக்களுக்கு ஏற்ற அரசு சேவை வழங்கலுக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.
இது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன கருத்து வௌியிடுகையில்,
“இந்தக் கட்டண வசதி தற்போது 16 அரச சேவைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 30 சேவைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென எதிர்பாரக்கிறோம். எதிர்காலத்தில், இந்த முறை மூலம் பணம் செலுத்துவதற்கான செலவை 15 ரூபாவினால் குறைக்கவும் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்.”
பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என்று அதிபர் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு பனாமா நாடு பணிந்தது என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிவித்தது. இந்த தகவலை பனாமா அரசு மறுத்துள்ளது.
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அமைந்துள்ளது பனாமா கால்வாய். கரீபியன் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் வகையில், 82 கி.மீ., துாரத்துக்கு அமைந்துள்ளது இந்த கால்வாய். உலகின் கடல்சார் வணிகத்தில், 5 சதவீதமும், அமெரிக்காவின் வர்த்தகத்தில், 50 சதவீதமும், இந்த கால்வாய் வழியாகவே நடக்கின்றன. உலகின் முக்கிய கடல்சார் வணிகத்துக்கான இணைப்பாக இந்த கால்வாய் உள்ளது. அமெரிக்காவால் வெட்டப்பட்ட இந்த கால்வாய், நீண்ட காலம் அமெரிக்காவால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த, 1977ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த கால்வாயை நிர்வகிக்கும் உரிமையை 1999ல் பனாமாவுக்கு அமெரிக்கா வழங்கியது. ஒவ்வொரு ஆண்டும் 14 ஆயிரம் கப்பல்கள் இந்த பனாமா கால்வாய் வழியாகச் செல்கின்றன. அமெரிக்காவின் கப்பல்களில் சுமார் 75 சதவீதம், பனாமா கால்வாய் வழியாகதான் சென்று வருகின்றன. இதற்காக பனாமா பெரும் கட்டணத்தை அமெரிக்காவிடம் வசூலிக்கிறது; அமெரிக்க கடற்படை கப்பல்கள் இடம் கூட கட்டணம் வசூலிக்கின்றனர் என்பது தான் டொனால்டு டிரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது.
அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டது இந்த கால்வாய் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் என்றும் அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, பனாமா சென்று அந்த நாட்டு அரசுடன் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, ‘இனி அமெரிக்க அரசு கப்பல்கள் அனைத்தும் கட்டணம் இன்றி, பனாமா கால்வாய் வழியாக செல்ல அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டது. இதனால் அமெரிக்காவிற்கு பல கோடி ரூபாய் செலவு மிஞ்சமாகும்’ என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிவித்தது.
ஆனால், கட்டணம் ரத்து செய்வதாக கூறவில்லை என பனாமா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறினோம் எனவும் தெரிவித்துள்ளது.
“வளமான நாடு – அழகான வாழ்வு” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள க்லீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் ஏற்பாட்டில் பேர ஏரியை மாற்றுவதற்கான பூர்வாங்க செயற்திட்டம் இன்று (2025 பெப்ரவரி 06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக கடற்படை படகுகள் மற்றும் உழைப்பையும் வழங்க கடற்படை ஏற்பாடு செய்தது.
அதன்படி, இரண்டு நாட்களாக பேர ஏரியை சுத்தப்படுத்தும் திட்டத்தில் இரானுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம், பேர ஏரியின் உயிரியல் பன்முகத்தன்மையைக் காப்பாற்றவும், அதன் அழகை அதிகரிக்கவும், கழிவுகளை முறையாக அகற்றுவதன் மூலம் சுற்றுலாவின் ஈர்பு தன்மையை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தேசிய பணிகளில் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவமான பங்களிப்பை வழங்க இலங்கை கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.
இலங்கைக்கு கிழக்கே திருகோணமலை ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவரை உடனடியாக வெளிநாட்டு கப்பலின் பங்களிப்புடன் தரையிறக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடற்டையினரால் 2025 பெப்ரவரி 06 அன்று அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் காயமடைந்துள்ளதாக கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு உடனடியாக பதிலளித்த கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், நோய்வாய்ப்பட்ட நோயாளியை தரையிறக்க உதவுவதற்காக கிழக்கு கடலில் பயணம் செய்து கொண்டிருந்த MV SSI Surprise கப்பலை எச்சரித்தது.
அதன்படி, ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை MV SSI Surprise என்ற கப்பலில் ஏற்றிச் சென்று, அடிப்படை முதலுதவி அளித்து, இன்று காலை (2025.06.02.) கரைக்கு அருகில் கொண்டு வரப்பட்ட பின்னர்,கடற்படையின் வேக தாக்குதல் கப்பல் மூலம் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.
புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர பயன்படுத்தியதாகக் கூறப்படும், சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட பிராடோ வாகனம், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் இன்று (06) காலை பகுதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தற்போது குறித்த பகுதியை விட்டு வெளியேறிவிட்டார், இதன் காரணமாக விசாரணை அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட வாகனம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெற முடியவில்லை.
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட லேண்ட் குரூசர் வகை பிராடோ காரைப் பயன்படுத்தியதாக முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்தது.
அதன்படி, பல நாட்களாக தொடர்புடைய தகவல்களை ஆராய்ந்த பின்னர், வாகனத்தை தங்களது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு விசாரணை அதிகாரிகள் குழு இன்று காலை புத்தளம் சென்றது.
அங்கு தொடர்புடைய வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் சோதனை செய்ததில், வாகன பாகங்கள் துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு இரண்டு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான புத்தளத்தில் உள்ள ஒரு தென்னந்தோட்டத்திலும், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
அதன்படி, வாகனத்தின் உடல் பாகங்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன, மேலும் இயந்திரம் உட்பட பல பாகங்கள் அவரது தென்னந்தோப்பில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டன.
முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணையில், சம்பந்தப்பட்ட வாகனம் ஏற்கனவே விவசாயத் திணைக்களத்தின் ஊடாக தற்போது பயன்படுத்தப்படும் பிராடோ வாகனத்தின் இயந்திர எண் மற்றும் Chassis எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய வாகனத்தில் தொடர்புடைய எண்கள் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துவரும் நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் வாகனத்தை பிரித்து மறைத்து வைத்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் நேற்று (05) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்த போதிலும், அவர் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் நெரிசலுக்கு மத்தியில், சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பில் நாட்டில் பேச்சு இடம்பெற்று வருகின்ற வேளையில், இது தொடர்பில் நாட்டுக்கு உண்மைகளை வெளிப்படுத்த துறைக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல துறைகளுக்கு மறைமுகமாக பாதிப்பு ஏற்படுவதால் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் இன்று (06) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தில் காணப்படும் கொள்கலன் சோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம், ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் ஈட்டும் எம்மைப் போன்ற நாட்டிற்கு நல்லதல்ல. இது தொடர்பில், பரிசோதிக்கப்படாமல் வெளியிடப்பட்ட ‘கட்டாயம் சோதனைக்குட்படுத்த வேண்டும் என சிவப்பு முத்திரை’ பொறிக்கப்பட்ட 323 கொள்கலன்களை விடுவித்தமையை யார் பொறுப்பேற்பது? ஏன் அவ்வாறு விடுவிக்கப்பட்டன என்றும் அரசாங்கத்திடம் அவர் கேள்வி எழுப்பினார்.
அவ்வாறே, கொழும்பு துறைமுகத்தில் நாளொன்றுக்கு பெறப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை, தற்போது காணப்படும் கொள்கலன் சோதனை ஆய்வு வசதிகளால் ஒரு நாளைக்கு சோதனை செய்யப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை, இந்த சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து பேணிச் செல்ல முடியுமா? இலங்கையில் கொள்கலன்களை விரைவாக சோதனை செய்து விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
அத்துடன், கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் விடுவிக்கப்படுவதில் ஏற்பட்ட பாரிய நெரிசல் மற்றும் காலதாமதத்தினால் திருப்பியனுப்பப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். இதன் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலைமைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த கொள்கலன்களில் உள்ள பொருட்கள் என்ன? அவற்றை சபைக்கு சமர்ப்பியுங்கள் என்றும், அவை சட்டவிரோதமானை அல்லது மனித நுகர்வுக்கு தகுதியற்றவை அல்ல என்று பரிசோதனை மேற்கொள்ளாமல் முடிவு செய்தவர்கள் மற்றும் அவற்றை இறக்குமதி செய்தவர்கள் யார் என்பதையும் சபைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பில் யார் முழுப்பொறுப்பெடுப்பது? என்றும் கேள்வி எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பினார்.
அத்துடன், இவை சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் அல்ல என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் கேள்வி எழுப்பினார்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி தொழில் வாய்ப்பு விளம்பரங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நாட்களில் பொதுமக்கள் மத்தியில் இவ்வாறான மோசடிகள் அதிகம் இடம்பெறுகின்றன.
அண்மையில், இலங்கை மத்திய வங்கி, தமது சின்னத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சின்னத்தைப் பயன்படுத்தியும் பல போலி விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
இவ்வாறான போலி விளம்பரங்கள் மூலம் பொதுமக்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை பெற்று அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.