Friday, March 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 238

கற்றல் உபகரணங்களுக்காக 6000/- கொடுப்பனவு!

0

பொருளாதார நெருக்கடியின் பாதகமான முடிவுகளால் பிள்ளைகளின்  கல்வியில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் நிகழ்த்திய “Household Survey on Impact of Economic Crisis – 2023″ தரவுக் கணக்கெடுப்பின் பிரகாரம் தெளிவாகிறது.

அதன் பிரகாரம், பாடசாலை செல்லும் பிள்ளைகளில் 55 சதவீதமானோர்  கல்வியில் பாதகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் இச் சதவீதம் அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் 53.2 சதவீதமானோர் பாடசாலை  எழுதுவினைப் பொருட்களை  கொள்வனவு செய்வதை குறைத்து அல்லது நிறுத்தியுள்ளதுடன், 26.1 சதவீதமானோர் முன்னர் பயன்படுத்திய பாடசாலை எழுதுவினைப் பொருட்களை மீளப் பயன்படுத்துவதிற்கும்  எண்ணியுள்ளனர். 

இவ்வாறு பாதிக்கப்பட்ட  பாடசாலை பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கங்களை குறைக்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு  எழுதுவினைப்   பொருட்கள் கொள்வனவிற்காக   பாடசாலை பிள்ளைகளிற்கு கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இங்கு, பாடசாலைக் கல்வி பெறுகின்ற அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களின் பிள்ளைகளிற்காக ஒரு பிள்ளைக்கு ரூ. 6,000.00 எழுது கருவிப் பொருட்கள் கொள்வனவுக்கான கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு வேறாக்கப்பட்டுள்ளதுடன்  அதனை 27.12.2024 இற்குள் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் செலுத்துவதற்கு  திறைசேரி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், ஏனைய தகுந்த பாடசாலைப் பிள்ளைகளிற்கு 2025  ஆம் ஆண்டிற்கு  ஒரு பிள்ளைக்கு தலா 6000 ரூபா பெறுமதியான எழுத்துக்கருவிப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கொடுப்பனவிற்கான நிதி ஒதுக்கீடு கல்வி உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது  

இதனூடாக பாடசாலைக் கல்விற்காக பெற்றோரினால் சுமக்கப்படும் செலவுகளிற்கு நிவாரணமளித்து அதனூடாக பாடசாலைப் பிள்ளைகளின் கல்வியைத்  தொடர்ச்சியாக மேற்கொள்வதினூடாக   அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது அரசின் நம்பிக்கையாகும்.

2024இல் உலகில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்!

0

ஜனவரி

7: வங்கதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் ஷேக் ஹசீனா 5-ஆவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தார்.

9: பிரான்ஸின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டலை அதிபர் இமானுவல் மேக்ரான் நியமித்தார்.

11: காஸா போரில் ஹமாஸூக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவரும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிகக்கா முதல்முறையாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

பிப்ரவரி

9: பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், தடை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி ஆதரவு வேட்பாளர்கள் 95 இடங்களைக் கைப்பற்றி முதலிடம் பிடித்தனர். ஆனால், 64 தொகுதிகளில் மட்டுமே வென்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் இணைந்து புதிய அரசை அமைத்தது.

16: ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை கடுமையாக எதிர்த்து வந்த முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி, சிறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மார்ச்

7: நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் ஸ்வீடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக நேட்டோவில் இணைய ஸ்வீடன் விண்ணப்பத்திருந்தது.

19: புவியின் வெப்பநிலையைப் பதிவு செய்யத் தொடங்கிய 174 ஆண்டுகளில் 2024-ஆம் ஆண்டுதான் மிக அதிக உஷ்ணமான ஆண்டு என்று உலக வானிலை அமைப்பு அறிவித்தது.

ஏப்ரல்

14: இஸ்ரேல் மீது ஈரான் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது அந்த நாடு நேரடியாக தாக்குதல் நடத்தியது அதுவே முதல்முறை.

மே

7: ரஷிய அதிபராக விளாதிமீர் புதின் ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்றார்.

20: ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்

31: தேர்தல் நேரத்தில் தன்னைப் பற்றிய ரகசியத்தைப் பாதுகாப்பதற்காக நடிகைக்கு முறைகேடாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதிபராக இருந்த ஒருவர் மீது குற்றவியல் வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது அமெரிக்க வரலாற்றில் அதுவே முதல்முறை.

ஜூன்

3: மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

5: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம் மற்றும் மற்றொரு நாசா விஞ்ஞானியுடன் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றது. இருந்தாலும், அந்த விண்கலத்தில் பழுது ஏற்பட்டதால் அவர்கள் திரும்ப பூமிக்கு வரமுடியாமல் அங்கேயே தங்கியுள்ளனர். ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் மூலம் வரும் மார்ச் மாதம் அவர்களை திரும்ப அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.

19: சவூதி அரேபியாவில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 80 இந்தியர்கள் உள்பட 922 பேர் அதீத வெயில் காரணமாக உயிரிழந்தனர்.

24: அமெரிக்க அரசுடன் மேற்கொண்ட சட்ட ஒப்பந்தத்தின் கீழ், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்திலும், பின்னர் சிறையிலும் பல ஆண்டுகளாக அடைபட்டிருந்த விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விடுவிக்கப்பட்டார்.

ஜூலை

01: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

11: ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அளித்து வந்த நேட்டோ நாடுகள், அந்த நாட்டு அதிநவீன எஃப்-16 விமானங்களை அனுப்பத் தொடங்கியதாக அறிவித்தன.

14: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த படுகொலை முயற்சியிலிருந்து குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் நூலிழையில் தப்பினார். அவரை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று அவரின் காதை லேசாக உரசிச் சென்றது.

21: வயது மூப்பு காரணமாக, அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அதிபர் ஜே பைடன் அறிவித்தார். அவருக்குப் பதிலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் கட்சி வேட்பாளராக பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

26: ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சின் பாரிஸ் நகரில் தொடங்கியது. ஜூலை 26 தொடக்கம் ஆகஸ்ட் 11 வரை இடம்பெற்றது.

29:வெனிசூலாவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மடூரோ மீண்டும் வெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், இந்தத் தேர்தலில் தாங்கள்தான் வெற்றியடைந்ததாக கூறிய எதிர்க்கட்சிகள், தேர்தல் முடிவை புறக்கணித்தன.

ஆகஸ்ட்

5: வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திவந்த போராட்டத்தில் பிரதமர் இல்லத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். அதற்கு முன்னர் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

8: வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக, நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலரும் தொழிலதிபருமான முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.

செப்டம்பர்

17: லெபனானின் ஹிஸ்புல்லா படையினரைக் குறிவைத்து பேஜர்களில் முன்கூட்டியே பொருத்திவைத்திருந்த சிறிய வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் புதிய உச்சத்தை அடைந்தது.

23: இலங்கையின் 10வது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவாகினார்.

24: ஸ்ரீமாவோ பண்டாரநாயகவுக்கு அடுத்தபடியாக இலங்கையின் பெண் பிரதமராக ஹரிணி அமர சூரியா பதவியேற்றார்.

அக்டோபர்

17: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்.

26: தங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

நவம்பர்

5: அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். 78 வயதாகும் டிரம்ப், அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக அதிக வயதுடையவர் ஆவார்.

19: அணு ஆயுத நாடுகளின் உதவியுடன் அணு ஆயுதமற்ற நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினாலும், அந்த நாட்டின் மீது அணு குண்டு வீச வகை செய்யும் கொள்கை மாற்றத்தை ரஷிய அதிபர் விளாதமீர் புதின் அறிவித்தார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளைக் கொண்டு தங்கள் நிலப்பரப்பில் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அந்த நாடு அனுமதி அளித்ததற்குப் பதிலடியாக இந்த அறிவிப்பை புதின் வெளியிட்டார்.

டிசம்பர்

8: சிரியாவில் 13 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த உள்நாட்டுப் போரில் எதிர்பாராத திருப்பமாக, தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றினர். அல் அஸாத் குடும்பத்தின் 50 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.

14: அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை நாடாளுமன்றம் பதவிநீக்கம் செய்தது.

26: இந்தியாவின் 13வது பிரதமர் மன்மோகன் சிங் தனது 92வது வயதில் காலமானார்!

30: அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் தனது 100ஆவது வயதில் காலமானார்.

2024இல் உலகில் அதிக கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள்!

0

அமெரிக்காவில் சூரிய கிரகணம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ப்ளூமிங்டனில் ஏப்ரல் 8ஆம் தேதி முழு சூரிய கிரகணத்தின் ஊடாக ஒரு விமானம் பறந்தது. முழு சூரிய கிரகணத்தின் ஊடாகப் பறக்கும் போது, விமானத்தின் வெளிப்புற அமைப்பு சூரியனின் (கொரோனா) பிரகாசமான வெளிப்புற விளிம்புக்கு இணையாக இருண்ட கோடுகளாகத் தெரியும்.

நிச்சயமாக, ஒரு விமானம், சந்திரன், சூரியன் மற்றும் பூமிக்கு குறுக்காகச் செல்வது இது முதல் முறை அல்ல.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடக்கத்தில் டியோனிசியோ

கலையின் வரலாற்றை அறிந்துகொள்வது உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் தவிர்க்கும். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தால் எழுந்த சர்ச்சையில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் அதுவும் ஒன்று.

1635ஆம் ஆண்டு ஜான் வான் பிஜ்லெர்ட்டின் ஓவியமான “தி ஃபீஸ்ட் ஆஃப் தி காட்ஸ்” (“The Feast of the Gods”) என்ற கிரேக்கக் கடவுளான டியோனிசஸை நினைவுபடுத்துவதற்காக அமைக்கப்பட்டது

தெற்கு சூடானின் போக்குவரத்து மையம்

பிப்ரவரியில் தெற்கு சூடானின் ரெங்க் பகுதியில் உள்ள போக்குவரத்து மையத்தில் நெரிசலான வரிசையில் சூடான் அகதிகள் உதவிக்காகக் காத்திருந்தார்கள்.

சூடானிய ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையிலான சண்டையில், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தெற்கு சூடானில் கடுமையான நெருக்கடியை உருவாக்கியது. பலருக்கு அவசர உதவி மற்றும் ஆதாரங்கள் தேவைப்பட்டன.

இந்தோனீசிய எரிமலை

இந்தோனீசிய எரிமலையான மவுண்ட் ருவாங், ஏப்ரலில் பலமுறை வெடித்து, சூடான எரிமலைக் குழம்புகளையும், சாம்பலையும் உமிழ்ந்தது. இது அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் பார்வையாளர்களையும் ஈர்ப்பதாக அமைந்தது.

டிரம்ப் மீதான தாக்குதல்

ஜூலை மாதம், அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தில், தனது வலது காதில் தோட்டா துளைத்ததைத் தொடர்ந்து, ரத்தக்கறை படிந்த முகத்துடன் தனது கரத்தை உயர்த்தியபடி தோன்றும் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் பதிவுசெய்யப்பட்டது.

அந்த நேரத்தில் அவருக்குப் பின்னால் இருந்த கொடி, அவர் தேர்தலில் வெற்றி பெற்ற தருணமோ என்று பலரையும் வியக்க வைத்தது.

காஸாவில் உள்ள பாலத்தீன அகதிகள் முகாம்

பிப்ரவரி 29 அன்று தெற்கு காஸாவில் நெரிசலான அகதிகளின் கூடாரங்களை அலங்கரிக்கும் விதமாக இரண்டு பாலத்தீன சிறுமிகள், ரமலான் பண்டிகைக்குத் தயாராகி, விளக்குகளை ஏற்றினர்.

அந்த விளக்குகளின் பிரகாசம், தொலைதூரத்தில் மறையும் சூரியனின் அமைதியற்ற இருளுக்கு எதிராக நின்றது.

டஹிடி தீவில் ஒலிம்பிக் சர்ஃபிங்

ஜூலை 29 அன்று பிரெஞ்சு பாலினேசியாவில் உள்ள டஹிடி தீவில் பிரேசிலியன் கேப்ரியல் மதீனா என்பவர் ஒரு பெரிய அலையில் சர்ஃபிங் செய்த பிறகு உயர எழும்பி வானத்தில் மிதப்பது போன்று செய்தார். அப்போது எடுக்கப்பட்ட படம் உடனடியாக வைரலானது.

சர்ஃபிங் செய்யும் போது கேப்ரியல் மதீனா சிரமமின்றி காற்றில் மிதப்பது போன்று செய்தது மேற்கத்திய கலை வரலாற்றின் முக்கியமான பல மத கலைப் படைப்புகளை நினைவுபடுத்துகிறது. ஜியோட்டோ, ரெம்ப்ராண்ட், இல் கரோஃபாலோ மற்றும் சால்வடார் டாலி போன்ற கலைஞர்களின் படைப்புகள் இதில் அடங்கும்.

ஸ்பெயினைத் தாக்கிய டானா புயல்

அக்டோபர் 30ஆம் தேதியன்று கடுமையான மழை காரணமாக வலென்சியா நகரம் கடுமையான வெள்ளத்தைச் சந்தித்தது. ஒரு பெண் தனது பால்கனியில் இருந்து கீழே தெரிந்த காட்சியைப் பார்த்தார். அங்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கிடந்தன. தெருக்களில் காணப்படும் காளைகளின் நெரிசலைப் போன்று அக்காட்சி தோற்றமளித்தது.

பில்லி எலிஷின் தோற்றம், நியூயார்க்

நியூயார்க்கில் இந்த ஆண்டின் மே மாதத்தில், தனது புதிய ஆல்பமான “ஹிட் மீ ஹார்ட் அண்ட் சாஃப்ட்” ஆல்பத்தை பில்லி எலிஷ் வெளியிட்டார். அந்த விழாவில், எடுக்கப்பட்ட பில்லி எலிஷின் புகைப்படம், ஒளி மற்றும் புகையால் சூழப்பட்டு, கனவில் கரைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அவரது உடல் மங்கலாகி, ஏறக்குறைய, கண்ணுக்குத் தெரியாத நிழற்படத்தை உருவாக்கியது.

சிரியாவில் நடந்த சிலை உடைப்புச் சம்பவம்

டிசம்பர் 9 2024 அன்று, முன்னாள் அதிபர் ஹஃபீஸ் அல்-அசத்தின் இடிக்கப்பட்ட சிலையை காலால் உதைத்து ஒரு பிரிவினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சிரியாவில் பஷார் அல்-அசத் குடும்பம் நாட்டைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்த பஷர் அல்-அசத்தின் தந்தையான ஹஃபீஸ் அல்-அசத்தின் சிலைகள் வீழ்த்தப்பட்டன.

டான்சர்ஸ் மீட்டிங், நியூயார்க்

நியூயார்க்கில் ஏப்ரல் மாதம் 350க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஒன்றுகூடி, ஒரே நேரத்தில் போஸ் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

பங்கேற்பாளர்களில் பலர் போட்டிக்கு ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டிருக்கும் புகைப்படம் அந்த முக்கியமான சந்தர்ப்பத்தின் நேர்த்தியையும் ஆற்றலையும் படம் பிடித்தது.

சியோல் தேசிய சட்டமன்றத்தில் காவலர்களை எதிர்கொண்ட பெண்

தென் கொரிய பெண்ணான 35 வயது, அஹ்ன் க்வி-ரியோங், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்.

அஹ்ன் க்வி-ரியோங், சுடுவதற்குத் தயார் நிலையில் இருந்த ஒரு வீரரின் துப்பாக்கியை தைரியமாகப் பிடித்தார். அதிபர் யூன் சுக் யோல் ராணுவ சட்டத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்தச் சம்பவம் நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வருவதைத் தடுக்குமாறு வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதுகுறித்து அஹ்ன் க்வி-ரியோங் அவர்களுடன் சண்டையிடுவதைக் காண முடிந்தது.

கறுவா உற்பத்தியில் இவ்வளவு இலாபமா?

0

நாட்டின் பிரதான  ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கறுவா உற்பத்தி வருடத்திற்கு 25,000 மெற்றிக தொன் வரை என்பதுடன் அதில் 19,000 மெற்றிக் தொன் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கையிலிருந்து இலத்தீன் அமெரிக்க வலய நாடுகளுக்கு அதிகமாகக் கறுவா ஏற்றுமதி செய்யப்படுவதுடன் அவை 60% ஆனவை ஆகும். இவற்றில் மெக்சிகோ முன்னணி வகிக்கிறது.

கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர குறிப்பிடுகையில்; தற்போது கறுவா ஏற்றுமதியினால் இலங்கைக்கு வருடத்திற்கு 250மில்லியன் டொலர் வெளிநாட்டு செலாவணி கிடைக்கிறது.

அது தவிர இலங்கையின் பிரதான பெருந்தோட்டப் பயிராக கறுவா உற்பத்தியை முன்னேற்றுவதற்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி இதுவரை கிடைக்கப்பெற்ற வருமானத்தை இரு மடங்குகளாக அதிகரிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

திடீரென மாறிய காலநிலை. அடுத்த சில நாட்களில்?

0

நாளையிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

புத்தளம் பகுதியில் மின்சாரம் தாக்கி மூவர் பலி!

0

கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த சமயம் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் இன்று மாலை புத்தளம் மாம்புரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கட்டிட நிர்மாணப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே குறித்த இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக புத்தளம் தல வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் எமது ஊடகத்திற்கு தெரிவித்தார்.

மின்சாரம் தாக்கப்பட்டு புத்தளம் தல வைத்தியசாலைக்கு கொண்டுவரும் முன்னரே மின்சார தாக்கத்திற்கு உள்ளான மூவரும் உயிரிழந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த விபத்தில் 29,22 மற்றும் 19 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாகவும், மின்சார தாக்கத்திற்கு உள்ளான மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் புத்தளம் தல வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

குறித்த விபத்தில் புத்தளம் சோல்ட்டன் பகுதியை சேர்ந்த இருவரும், புத்தளம் மதீனா நகரைச் சேர்ந்த ஒருவருமே மேற்படி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் புத்தளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாகவில்லுக்கு விஜயம் செய்த ரிஷாட் எம்.பி!

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் புத்தளம், நாகவில்லு பிரதேத்தில் பு/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்தில் 07 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுவரும் 3 மாடிக் கட்டிடத்திற்கான வேலைத்திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் இன்று (29) நேரில் சென்று பார்வையிட்டார்.

தனது முயற்சியின் பயனாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த வகுப்பறைக் கட்டிட வேலைகளை துரித்தப்படுத்த தேவையான ஆலோசனைகளையும் வழங்கியதுடன், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலைக்கு தேவையான இலத்திரனியல் உபகரணங்களையும் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.ரீ.எம். தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ரிஜாஜ், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் நாசர் , பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் உள்ளிட்டவர்களுடன் பாடசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாகாவில்லு கிளை முக்கியஸ்தர்களும் இதன் போது கலந்துகொண்டனர்.

தென் கொரியாவில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்து!

0

தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 85 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.

ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஒரு பறவை மோதியதால் விமானத்தில் லேண்டிங் கியர் செயலிழந்தது என யோன்ஹாப் கூறுகிறது.

இறந்த 85 பேரில் 46 பெண்கள் பேர் பெண்கள் என்றும், 39 பேர் ஆண்கள் என்றும் அந்நாட்டின் தேசிய தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது.

ஒரு விமானப் பணியாளர் மற்றும் ஒரு பயணி மீட்கப்பட்டுள்ளதாகக் கூறும் தீயணைப்புத்துறை, 80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.

ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

உப்பை பதுக்க ஆரம்பித்த மக்கள்!

0

தேவைக்கு அதிகமாக உப்பினை சேகரிப்பதை தவிர்க்குமாறு ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி. நந்தன திலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நாட்களில் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் அச்சமடைந்து மொத்தமாக உப்பை வீடுகளுக்கு கொண்டு சென்று சேமித்து வைத்துக்கொள்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவராக நேற்று (28) அவர் பதவியேற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 400 கிராம் உப்பு தூள் மற்றும் 1 கிலோ கல் உப்பு 2 பக்கட்டுக்கள் போதுமானது. எனினும், உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் தேவையற்ற அச்சம் காரணமாக உப்பினை சேகரிப்பதை தவிர்க்குமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்திடம் தற்போது 6,000 மெற்றிக் தொன் உப்பு இருப்பதாகவும், அது ஜனவரி மாதம் வரை போதுமானது என்றும் அவர் கூறினார்.

உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற சந்தேகம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உறுதிமொழி எடுக்கவுள்ள அரச ஊழியர்கள்!

0

எதிர்வரும் 2025ம் ஆண்டின் புதுவருட தினத்தில் அரச ஊழியர்கள் வித்தியாசமான முறையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவுள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் பொது சேவை உறுதிமொழியை வழங்கும்போது , ​​அதில் ‘தூய்மையான
இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உள்ளடக்கத்தையும் வழங்குவார்கள் என சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனவரி முதலாம் திகதி அரச ஊழியர்களின் புத்தாண்டு தின உறுதிமொழி நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளது.

அதன் பிரகாரம், புதிய ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் போது அரச பணியாளர்கள் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொள்ளவுள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

முறையான சுகாதார சூழலை உருவாக்குதல், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட புதுமையான திட்டங்களுடன் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) என்ற கருத்துரு பல வழிகளில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முதற்கட்டமாக ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.