Thursday, March 12, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 240

புகையிரத போக்குவரத்துக்கு புதிய முகாமையாளர்!

0

புதிய புகையிரதப் பொது முகாமையாளராக ஜே.ஐ.டி. ஜயசுந்தர இன்று (26) மருதானை புகையிரதப் பொது முகாமையாளர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாகக் (தொழில்நுட்பம்) இதற்கு முன்னர் கடமையாற்றிய ஜே. ஐ. டி. ஜயசுந்தர , புகையிரதப் பொது முகாமையாளர் பதவியில் பணியாற்றுவதற்காக தற்போது நியமிக்கப்பட்டார்.

இன்று காலை சமய அனுஷ்டானங்களுடன் தனது பதவிக்கான கடமைகளை ஆரம்பித்த புதிய பொது முகாமையாளர், உரையாற்றுகையில்;

புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க புகையிரதத் திணைக்களம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நிறுவனம் என்பதுடன், இதனை முன்னிலைக்கு கொண்டு வருவதற்கு செயற்படுவதாகவும், அதற்காக அனைவரின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் (போக்குவரத்து பிரிவு) மேலதிக பொது முகாமையாளர் எல்.எச். திலகரத்ன, துறை சார் அமைச்சின் உயர் அதிகாரிகள், புகையிரத திணைக்களத்தின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் கம்பி திருட்டு!

0

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மின் கம்பிகளை வெட்டுதல் தொடர்பாக அமைச்சுக்கு கிடைக்க பெற்றுள்ள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை (STF) சுற்றுலா ரோந்து சேவையின் அடிப்படையில் ஈடுபடுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அதிவேக நெடுஞ்சாலையின் மின்கம்பிகளை வெட்டிச் செல்லும் சந்தர்ப்பங்களில் அந்த திருடர்களுக்கு தண்டனை வழங்கினாலும் எவ்வளவு புதுப்பித்தாலும் மீண்டும் மீண்டும் இந்த செயற்பாடு இடம்பெறுவதுடன், இரவு காலங்களில் இடம்பெறும் இந்த திருட்டினால் வீதியைப் பயன்படுத்தும் நபர்களும் மக்கள் பயப்படுவதாக தெரிய வருகின்றது.

இதற்கான இந்த யோசனை இரவு நேரங்களில் சுற்றுலா ரோந்து சேவையை முறையாக மேற்கொள்வது தீர்வாக அமையும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வாறே இந்த வீதியில் இடம்பெறும் விபத்துகளின் போதும் அவற்றை உடனடியாக நீக்குவதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் இந்த அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு!

0

35,000க்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26) 20 வருடங்கள் நிறைவடைகிறது.

இதற்கமைய நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் இன்று “தேசிய பாதுகாப்பு தினம்” அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு சுனாமியில் 35,000 க்கும் அதிகமானோர் பலியானதுடன் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.

அதன்படி, 2005ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இவ்வருடம் “தேசிய பாதுகாப்பு தினத்தை” மாவட்ட மட்டத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான நிகழ்வு காலி “பெரலிய சுனாமி நினைவுத் தூபிக்கு” ​​முன்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 2004 இல் நாட்டை பாதித்த சுனாமியுடன், சுனாமி எச்சரிக்கைகளைக் கண்டறிய நாட்டின் 14 மாவட்டங்களில் 77 சுனாமி கோபுரங்கள் நிறுவப்பட்டன.

எவ்வாறாயினும், 77 சுனாமி கோபுரங்களில் 5க்கும் குறைவானவையே தற்போது செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுனாமி கோபுரங்களை நிறுவுவதற்கான தொழில்நுட்ப ஆதரவை அமெரிக்க நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளதுடன், கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் பல தடவைகள் அவற்றை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், குறித்த நிறுவனம் உற்பத்தியை இடைநிறுத்தியதன் காரணமாக, செயலிழந்த கோபுரங்களை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மாவட்ட மட்டத்தில், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் கோபுரங்களுக்கு பொறுப்பாக இருந்ததுடன் அவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுகளால் கண்காணிக்கப்பட்டன.

சுனாமி அனர்த்தம் தொடர்பில் சர்வதேச மட்டத்திலிருந்து வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு கிடைக்கும் தகவலையடுத்து, வளிமண்டலவியல் திணைக்களம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்த பின்னர் இந்த கோபுரங்களை செயற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சுனாமி கோபுரங்களின் தொழில்நுட்ப செயல்திறன் குறித்து நிபுணர் குழு மூலம் பரிந்துரைகளை பெற்று எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த திட்டங்களை தயாரித்து வருவதாக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதுவரை 14 கடலோர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 70,000 பேரின் தொலைபேசிகளுக்கு சுனாமி எச்சரிக்கை பற்றிய சமிக்ஞைகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், தொலைத்தொடர்பு ஆணைக்குழு, இந்நாட்டில் தொடர்பாடலை வழங்கும் தொலைபேசி வலையமைப்புகள் என்பனவற்றுடன் இணைந்து சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறுந்தகவல் மூலம் மக்களுக்கு அறிவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய தொழில்நுட்பம் காரணமாக இலங்கை சுனாமி போன்ற அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நன்கு தயாராக உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவி விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கான ஒத்திகைகளை நடத்துவது மிகவும் முக்கியமானது என பேராசிரியர் அதுல சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

உடப்பு மீன்பிடி சங்கத்திற்கு மீன்பிடி வலைகள்!

0

முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பன்முகப் படுத்தப்பட்ட நிதியின் மூலம் உடப்பு ராக்குர்ஷி அம்மன் ஆற்று மீன்பிடி சங்கத்திற்கு ரூ. 500,000.00 பெறுமதியான மீன்பிடி வலைகள் அன்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய குறித்த மீன்பிடி வலைகள் வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை உடப்பு ராகுர்ஷி அம்மன் மீன்பிடி மற்றும் மகளிர் சங்கத்திற்கான ஒரு தொகை கதிரைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களினால் மக்களுக்கு செய்யப்பட சமத்துவமான சேவைகள் குறித்தும் பயனாளர்களினால் நினைவுகூரப்பட்டது.

முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களின் உடப்பு இணைப்பாளர் திரு. செல்வநாயகம் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் BCMH நிறுவன செயற்திட்ட அதிகாரி எம்.எம். நௌபர் அதிதியாக கலந்து கொண்டு மீன்பிடி வலைகளை சங்க அங்கத்தவர்களுக்கு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

0

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நேற்று (25) மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது  சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஒலிபரப்பு நிலையம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்!

0

மாகாணக் கல்வித் திணைக்களத்தின் நிர்வாகம் மிகவும் பலவீனமடைந்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் தமது தமக்குரிய சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் சிரமப்பட்டு வருவதுடன், புதிய மாகாணக் கல்விப் பணிப்பாளர் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட ஐ.ம.ச பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,

“சில கடிதங்களுக்கு ஒப்பமிட உரிய உத்தியோகத்தர்கள் இல்லை என்ற காரணம் காட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பரீட்சைக் கடமை முடிந்து வந்த பின்னர் தான் ஒப்பம் பெற முடியும் என விடயத்திற்குப் பொறுப்பானவர்கள் கூறுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பரீட்சை ஒரு மாதமாக நடக்கின்றது. இதிலிருந்து தாமதத்தின் அளவைக் கணக்கிட்டுக் கொள்ள முடியும்.

எனவே, நிர்வாகத்திற்குப் பொறுப்பானவருக்கு பரீட்சைக் கடமைகள் வழங்கக் கூடாது அல்லது அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாகாணக் கல்விப் பணிப்பாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் கும்புறுபிட்டியில் அமைந்துள்ள உப ஒலிபரப்பு நிலையம் முன்னர் ஜேர்மன் வானொலிக்கு சொந்தமாக இருந்தது. தற்போது அது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உப நிலையமாக செயற்படுகின்றது.

தற்போது இந்த வானொலி உப ஒலிபரப்பு நிலையத்தினூடாக உள்ளுர் நிகழ்ச்சிகள் எதுவும் ஒலிபரப்பப் படுவதில்லை. வெளிநாட்டு ஒலிபரப்பு ஒன்றுக்காக மட்டும் இந்த நிலையம் பயன்படுத்தப்படுகின்றது. அதுவும் மாலை வேளையில் மட்டும் இந்த ஒலிபரப்பு இடம்பெறுகின்றது. இதற்காக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் வாடகை பெறப்படுகின்றது. ஏனைய நேரங்களில் இந்த நிலையம் எவ்வித செயற்பாடும் இன்றி இருக்கின்றது.

இம்மாவட்டத்தில் உள்ள பெறுமதி மிக்க வளம் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது கவலைக்குரியது.

எனவே, இந்த ஒலிபரப்பு நிலையம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இப்பகுதி கலை பண்பாட்டு நிகழ்வுகளை ஒலிபரப்ப முக்கியத்துவம் கொடுக்கப்படலாம். உள்ளுர் செய்திகள் ஒலிபரப்ப வாய்ப்புகள் வழங்கப்படலாம். அறிவு சார்ந்த நிகழ்வுகள், மாணவர் நிகழ்வுகள் எனப் பல்வேறு நிகழ்வுகளுக்கு முக்கியத்தவம் கொடுக்கப்படலாம். இதன் மூலம் மக்கள் மத்தியில் இந்த ஒலிபரப்பு நிலையம் பிரபலமடைந்து விளம்பரங்கள் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். குறிப்பிட்டளவு வேலைவாய்ப்பையும் உருவாக்கலாம்.

எனவே, இப்பகுதி முக்கியஸ்தர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றை நியமித்து பரிந்துரைகளைப் பெற்று இதனை அபிவிருத்தி செய்ய வேண்டும். இது தொடர்பான கோரிக்கையை நமது இந்த அபிவிருத்திக்குழு ஊடகத்துறை அமைச்சருக்கு முன் வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர், கிண்ணியா நகரசபைப் பகுதியின் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஈச்சந்தீவாகும். விவசாயக் குடும்பங்களே இங்கு அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. தென்னை போன்ற வான் பயிர்களை யானைகள் சேதப்படுத்தகின்றன. யானைகளால் வீடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. இதனால் இம்மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இந்த விடயம் கிண்ணியா பிரதேச செயலாளருக்கு நன்கு தெரியும்.

எனவே, காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த இப்பகுதியில் யானை வேலி அமைக்கப்பட வேண்டும். சுமார் 2 கிலோமீற்றர் நீளமுள்ள யானை வேலி போதுமானதென இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இது குறித்து கவனம் செலுத்தி ஈச்சந்தீவுக் கிராமத்தில் யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலாவது அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு மரண அச்சுறுத்தல்!

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய கமகே, டிசம்பர் 23 முதல், ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மீதமுள்ள இராணுவ அதிகாரிகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் திரும்பப் பெற்றது.

பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.டி.யால் ஜனாதிபதி பாதுகாப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி.  2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான அச்சுறுத்தல்களை முன்னிலைப்படுத்தி, உளவுத்துறை அறிக்கைகள் ISIS ஆல் ஆளில்லா விமானத்தை அடிப்படையாகக் கொண்ட குண்டுத் தாக்குதலுக்கான திட்டங்களையும் சுட்டிக்காட்டுகின்றன என்று கூறினார்.

விடுதலைப் புலிகள் மற்றும் பாதாள உலகக் குழுக்களிடமிருந்து முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு மேலும் அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அனுபவம் வாய்ந்த மற்றும் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களுக்குப் பதிலாக ராஜபக்சேவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கும் நடவடிக்கையை கமகே விமர்சித்தார்,

அச்சுறுத்தல்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இது போதுமானதாக இல்லை என்றும் கூறினார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட 62 மின்சார சபை பணியாளர்கள்!

0

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபையின் 62 பணியாளர்களும் மீண்டும் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் விசேட பணிப்புரைக்கமைய அவர்கள் மீண்டும் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம், இலங்கை மின்சார சபையைத் தனியார் மயமாக்குவதற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.

அதன்போது, மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நுகர்வோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக, குறித்த 62 பேரும் அப்போதைய மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பணிப்புரைக்கமைய இடைநிறுத்தப்பட்டனர்.

“Peace Ark” மருத்துவமனை கப்பலை பிரதமர் பார்வையிட்டார்!

0

இலங்கையை வந்தடைந்த சீன “Peace Ark” மருத்துவமனை கப்பலை பிரதமர் பார்வையிட்டார்.

சீன அரசாங்கத்தின் Mission Harmony-2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான “Peace Ark” என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.

“Peace Ark” என்ற இந்த கப்பல் டிசம்பர் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், 2024 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 வரை இலங்கை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகளைகளை வழங்கும்.

இந்த சமாதானக் கப்பல் திட்டத்தின் மனிதாபிமான முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கை மக்களுக்கு இந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதற்காக சீன அரசாங்கத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கும் பொது சுகாதாரத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும் இத்தகைய முயற்சிகளின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்த கப்பலின் பணியின் முக்கியத்துவத்தை சீனத் தூதுவர் வலியுறுத்தினார். கப்பலில் உள்ள நவீன வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து கப்பலின் மருத்துவக் குழுவினர் விளக்கமளித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கொமடோர் மேஜர் ஜெனரல் ஹீ யோங்மிங், கொமடோர் மேஜர் ஜெனரல் யிங் ஹொங்போ, கப்டன் டெங் கியாங் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு.

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி!

0

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர்.

துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை. அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாகத் தான் தேவதூதர்கள் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டு வந்தார்கள். எனவே, நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம், வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும். நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தமான அமைதியின் பின்னணியில் இருந்து இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடி வருவதை உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிடுவதாக தனது வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சகல மக்களும் ஒன்றாக ஒரே நோக்கத்துடன் கூட்டுப் பொறுப்பாகக் கருதி நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்த ஒரு காலகட்டத்தை நாம் அடைந்துள்ளோம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தினால் பிணைந்து பூமியில் ஒரு புதிய விடியலின் அரவணைப்பை நாங்கள் அனுபவித்து வருகிறோம். அந்த பிரகாசமே இயேசு நமக்குக் கொண்டுவந்த அன்பின் விடியலாகும் என தெரிவித்துள்ளார்.

பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மனித சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் யேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார். அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளதாக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கைக்குத் தேவையான சமூக மாற்றம் என்பது பாரியதொரு சமூக மாற்றமாகும். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சில துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட முழு சமூக மாற்றமாகும். இது ஒரு மறுமலர்ச்சியாகும். அந்தத் தேசிய மறுமலர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதானம், அடங்காத துணிச்சல், இடையறாத முயற்சியுடன் பணியாற்றும் நமது அரசைச் சுற்றி திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடைய விடாது அவர்கள் எதிர்பார்க்கும் “வளமான நாடு-அழகான வாழ்க்கையை” உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன்,மென்மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை புனித நத்தார் தினத்தில் மீண்டும் வலியுறுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுயநலம் மற்றும் தீங்கான போட்டியை சமூக கட்டமைப்பு தள்ளப்பட்டுள்ள போதும் , கிறிஸ்மஸில் வெளிப்படுத்தப்படும் மனித பண்புகளை வளர்த்து, சமத்துவத்தை மதித்து, மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம், சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மதிப்பதன் மூலம், அந்த சமூக கட்டமைப்பை நல்வழிப்படுத்தி மகிழ்ச்சிகரமான சமூகமொன்றுக்காக பிரஜைகள் என்ற வகையில் நாம் அனைவரும் கைகோர்க்க உறுதி பூணுவோம்.

வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான உண்மையான அரசியல் கலாச்சாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள் என தனது நத்தார் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.