நாடு முழுவதும் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இளைஞன் ஒருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (25) இந்த விபத்துகள் கட்டுபொத்த, அவிசாவளை மற்றும் அத்திமலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.
அத்திமலை, கொட்டியாகல 05 ஆம் தூண் கிளை வீதியின் வத்தேகம பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அத்திமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கொட்டியாகல பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கட்டுபொத்த, பொத்துஹெர, தம்பிடிய கிளை வீதியில் தம்பிடிய சந்திக்கு அருகில், வீதியை கடக்கும் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 79 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், அவிசாவளை பொலிஸ் பிரிவின் கொழும்பு-ஹட்டன் வீதியின் தல்துவ பகுதியில், வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி மீது பேருந்து ஒன்று மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த பாதசாரி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் தல்துவ பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அரசாங்கம் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளது. இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் தமது பூரண ஆதரவை வழங்கும். கடந்த அரசாங்கத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தி தான் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தது. அன்று அரசியலமைப்பு பேரவையில் அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியே வாக்களித்தது.
அரசியலமைப்பை மீறியே தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். இந்த அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதியைப் போலவே சபாநாயகரும் பொறுப்புக் கூற வேண்டும். அரசியலமைப்பு பேரவையில் நடந்தவற்றை முற்றிலுமாகத் திரிவுபடுத்தி, மீயுயர் சட்டத்தை அப்பட்டமாக மீறிய வகையிலயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அன்று தேசபந்து தென்னகோனை அரசியலமைப்பை மீறி, உயரிய சட்டத்தை காலில் போட்டு மிதித்து, சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட போது, இன்று கூச்சல் போடுபவர்கள் அன்று மௌனம் காத்தனர். இவ்வாறு தாமதமாகவேனும் இந்த அரசாங்கம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு பூரண ஆதரவை வழங்குவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர்களுடன் இன்று (25) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
பாதுகாப்பு பிரதியமைச்சரின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான டியுஷன் எங்கே?
தேசிய பாதுகாப்பு தொடர்பில் டியுஷன் வகுப்புகளை நடத்த மேசையையும் கதிரையையும் கொண்டு வருமாறு பாதுகாப்பு பிரதியமைச்சர் தேர்தலின் போது குறிப்பிட்டார். ஜனவரியில் இருந்து ஏராளமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. 22 க்கும் மேற்பட்ட இறப்புகள் நடந்துள்ளன.
தேசிய பாதுகாப்புக்கு இது பிரச்சினையாக காணப்படுகிறது. பொதுமக்களின் வாழ்க்கை தேசிய பாதுகாப்போடு நேரடியாக தொடர்பு படுகின்றன. இன்று நாட்டில் சட்டம் அமுலில் இல்லை.
குண்டர்களும், குற்றவாளிகளும், கொலைகாரர்களும் இன்று சமூகத்தை ஆட்கொண்டுள்ளனர். இவற்றுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கனடா நாட்டின் புதிய பிரதமராக மார்க் கார்னி சமீபத்தில் தான் பதவியேற்றிருந்தார். இதற்கிடையே கனடாவுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக டிரம்ப் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மார்க் கார்னி, இந்த இக்கட்டான சூழலில் வழிநடத்த யார் தகுதியானவர் என்பதைக் கனடா மக்கள் தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், அங்கு வரும் ஏப்ரல் 28ம் தேதி தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
கனடா நாட்டில் இத்தனை காலம் பிரதமராக இருந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அவருக்கான அழுத்தம் அதிகரித்தது. இதனால் வேறு வழியின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக மார்க் கார்னி அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார்.
அங்கு கடைசியாக 2021ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அந்நாட்டின் சட்டப்படி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி இந்தாண்டு அங்குத் தேர்தல் நடத்த வேண்டி இருந்தது. அங்குப் பிரதமர் பதவியும் கைமாறிய நிலையில், விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விரைவில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி வெளியிட்டுள்ளார். அதன்படி அங்கு வரும் ஏப்ரல் 28ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடாவுக்கு எதிராக இறக்குமதி வரிகளை அறிவித்துள்ள நிலையில், அதைக் குறிப்பிட்டு இதுபோன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழிநடத்த வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
கனடாவைப் பொறுத்தவரை ஆளும் லிபரல் கட்சிக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி. அங்கு ட்ரூடோ இருந்தவரை கன்சர்வேடிவ் கட்சிக்கான ஆதரவே அதிகமாக இருந்தது. ஆனால், கார்னி பதவியேற்றவுடன் நிலைமை மாறியுள்ளது. தற்போதைய சர்வேக்களில் கன்சர்வேடிவ் கட்சியைக் காட்டிலும் லிபரல் கட்சிக்கான ஆதரவு சற்று அதிகமாக இருக்கிறது. இருப்பினும், தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.
மோசடி குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வங்கதேச கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி., ஷகிப் அல் ஹசன். அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். கடந்த ஆண்டு மாணவர் தலைமையிலான கிளர்ச்சியின் போது, கனடாவில் இருந்தவர், மீண்டும் வங்கதேசம் செல்லவில்லை.
இதற்கிடையே, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஐ.ஐ.எப்.சி., வங்கியின் சார்பாக ஷகிப் அல் ஹசன் உள்பட 4 பேரின் மீது ரூ.3 கோடி அளவிலான செக் மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாததினால் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது.
தற்போது அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடது கை ஆல்ரவுண்டரான இவர் வங்கதேச அணிக்காக 71 டெஸ்ட், 247 ஒருநாள் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ஆடி, மொத்தம் 712 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டிக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது.
ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் பாராளுமன்ற பிலியட் மண்டபத்தில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது.
விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் தலைமையின் கீழ் பாராளுமன்ற படைக்கல சேவிதர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் போட்டிங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஏழு உள்ளக விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற போட்டிகளில் ஸ்நூகர் இறுதிப் போட்டி பிரதமர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான டி.வி.சானக்க மற்றும் ரோஹன பண்டார பங்குபற்றிய இப்போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க வெற்றிபெற்றார்.
இங்கு நடைபெற்ற கலப்பு இரட்டையர் மேசைப்பந்துப் போட்டியில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் எதிர்த்திசையில் பாராளுமன்ற உறுப்பினர்களான வருண லியனகே மற்றும் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே ஆகியோர் போட்டியிட்டனர்.
தாம் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம்.தர்மசேன அவர்கள் வெற்றிபெற்றார். இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆரியவன்ச அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மேசைப்பந்து (ஆண்கள்) போட்டியில் பராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே அவர்கள் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடி பெற்றுக்கொண்டார்.
உள்ளக விளையாட்டுப் போட்டியின் தனிநபர்களுக்கான மேசைப்பந்து (பெண்கள்) போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி அவர்கள் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே பெற்றுக்கொண்டார்.
சதுரங்கப் போட்டியில் (செஸ்) பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் பெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார வெற்றிகொண்டார்.
அத்துடன், கரம் விளையாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் ஓய்வுபெற்ற பிரகீத் மதுரங்க வெற்றிபெற்றதுடன், இப்போட்டியில் இரண்டாவது இடத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பெற்றுக்கொண்டார்.
பூல் (pool) விளையாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார வெற்றிகொண்டதுடன், இரண்டாவது இடத்தை பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க பெற்றுக்கொண்டார்.
இதில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி உரைநிகழ்த்திய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, மிகவும் வேலைப்பழு மிக்க காலத்தில் மனதை இலகுவாக வைத்திருக்கவும், உறுப்பினர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதற்கு விளையாட்டுக்கள் உறுதுணையாக இருப்பதாகக் கூறினார். அத்துடன், இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தமைக்காக விளையாட்டுப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் பாராளுமன்ற நளின் பண்டார ஆகியோருக்கும் பிரதமர் நன்றியைத் தெரிவித்தார்.
இந்த விளையாட்டுப் போட்டிகளின் நடுவர்களாகப் பாராளுமன்ற பணியாளர்களான தரங்க அபேசிங்கே மற்றும் சமீர சஞ்சீவ ஆகியோர் பங்களித்தனர்.
கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்னாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
அந்த பிரதேச சபைகளுக்குச் சொந்தமான உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வது நாளை (26) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி இன்று செலுத்தியது.
கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தினார்.
மேலும் ஜனநாயக தமிழ்த்தேசி கூட்டணி (DTNA) பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் செலுத்தியது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
அதன்படி, இன்று (25) முதல் 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஒவ்வொரு மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று தேர்தல் ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை ஒன்றில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
அதன்படி, அவரை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் குறித்த பிரேரணை இன்று (25) பிற்பகல் 12.15 மணியளவில் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சூட்சுமமான முறையில் கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீட்டின் குளியல் அறை பகுதியில் சூட்சகமான முறையில் நிலத்தில் தோண்டி யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குளியல் அறை பகுதியில் கோடா பரல் வைக்கப்பட்டு தண்ணீர் குடத்தில் குழாய்கள் பொருத்தப்பட்டு கேஸ் (gas) அடுப்பு மூலம் தீ மூட்டப்பட்டு இவ் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
கசிப்பு உற்பத்தி முற்றுகையின் போது 380 லீட்டர் கோடாவும் 20 லீட்டர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்கான பொருட்களும் கசிப்பு உற்பத்தியை மேற்கொண்ட 20 வயது இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சஜித் மஹிந்த ரணில் இணையவுள்ளதாக பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது மாத்திரமல்லாது அவ்வாறு செய்தி வெளியிட்டு தொலைகாட்சி அலைவரிசைகளில் காலையில் பத்திரிகை முக்கிய செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில் தலைப்புச் செய்திகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இது அப்பட்டமான பொய்யாகும். ஐக்கிய மக்கள் சக்திக்கு யாருடனும் சேர வேண்டிய தேவை இல்லை. இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும் வெற்றியடைவதை தடுக்க, வங்குரோத்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று (23) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் செய்ததையே மீண்டும் செய்வது முறைமை மாற்றமல்ல. மக்களை ஏமாற்ற ஐக்கிய மக்கள் சக்தி அச்சப்படுகின்றது. பொய்யை நம்ப வைப்பதற்கும், மக்களை அரசியல் ரீதியாக ஏமாறுவதற்கும் நாம் பயப்படுகிறோம். ஐக்கிய மக்கள் சக்தியானது முடிவுகளை எடுக்கும் விடயத்தில் சரியான முடிவுகளையே எடுத்து வருகின்றது. இன்று அரசாங்கமானது பல்வேறு தலைப்புச் செய்திகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தி பல்வேறு கட்சிகளுடன் கூட்டு சேர முயற்சிக்கின்றது என போலியான செய்திகளை கட்டமைத்து வருகிறது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அத்தகையதொரு தீர்மானத்துக்கு வராது. நாம் இவர்களோடு இணையோம். ஐக்கிய மக்கள் சக்தி முதன்முறையாக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாலயே இவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.