Friday, March 13, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 248

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் வரலாறு தெரியுமா?

0

இலங்கையின் 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று (14) நடைபெற்று வருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (14) காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. 

இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கலாக 690 குழுக்கள் போட்டியிடுகின்றன. 

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் மொத்தம் 8, 361 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

அவர்களில் 5,006 வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 

இந்தமுறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 7, 140, 354 பேர் தகுதி பெற்றுள்ளனர். 

பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் நாடளாவிய ரீதியில் 13, 421 வாக்கெடுப்பு நிலையங்களில் இடம்பெற்று வருகின்றது. 

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் 196 உறுப்பினர்கள் வாக்கெடுப்பினூடாக தெரிவு செய்யப்படுவார்கள்.

அத்துடன் 2024 வாக்காளர் பட்டியலுக்கு அமைய, சில மாவட்டங்களில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபட்டுள்ளது. 

இதற்கமைய, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா ஒரு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்படவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒன்றால் குறைவடைந்துள்ளது. 

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 18 உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். 

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 19 உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். 

அதேநேரம் களுத்துறை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. 

எனினும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 6ஆக குறைவடைந்துள்ளது. 

00000000000 

இதேவேளை இதுவரை நடைபெற்ற 16 நாடாளுமன்றத் தேர்தல்களின் படி, 

இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தல் 1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 20ஆம் திகதி வரை 19 நாட்கள் நடைபெற்றது.

இது நாட்டின் வரலாற்றிலேயே நீண்ட தேர்தலாகும். 

அப்பொழுது இலங்கை இங்கிலாந்து ஆட்சியில் இருந்தது. 

9 அரசியல் கட்சிகளின் சார்பாக 179 பேரும், 182 சுயேட்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 361 பேர் போட்டியிட்டனர். 

இந்தத் தேர்தலின் போது முதல் முறையாக வாக்காளர்கள் தங்கள் விருப்பமான வேட்பாளர்களுக்கு, விருப்பு வாக்குகளை செலுத்தலாம் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 98 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, அதில் 42 பேர் வெற்றி பெற்றனர். 

1947ஆம் ஆண்டு தேர்தலில் ஏனை கட்சிகளான, லங்கா சமசமாஜக் கட்சி 10 இடங்கள், போல்ஷெவிக்-லெனினியக் கட்சி 5 இடங்கள், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 7 இடங்கள், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்கள், இலங்கை இந்தியக் காங்கிரஸ் 6 இடங்கள் மற்றும் தொழிற் கட்சி 1 இடத்தை பெற்றது. 

மொத்தம் 21 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 

1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி அன்று இலங்கை சுதந்திரம் பெற்றபோது, ஐக்கிய தேசியக் கட்சி முதல் அரசாங்கத்தை அமைத்து டி.எஸ். சேனநாயக்க முதலாவது பிரதமரானார். 

இதன் பின்னர் முதல் நாடாளுமன்ற அமர்வு 1947ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி அன்று நடைபெற்றது. 

இதேவேளை இலங்கையின் 2ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1952ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரை நடைபெற்றது. 

இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவதற்கு இத்தேர்தல் நடத்தப்பட்டது.

இலங்கையின் மலையகத் தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டமையினால் அவர்களின் ஒரேயொரு அரசியல் கட்சியான இலங்கை இந்தியக் காங்கிரஸ் இத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை. 

லங்கா சமசமாஜக் கட்சியினர் இத்தேர்தலில் 9 இடங்களையே பெற்றுத் தோல்வியுற்றனர். 

ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையிடங்களை அதாவது 54 இடங்களை கைப்பற்றியது. 

அடுத்து, இலங்கையின் 3ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல் ஏப்ரல் 10ஆம் திகதி வரை நடைபெற்றது. 

இலங்கை நாடாளுமன்றத்திற்கு 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. 

நீண்ட காலமாக இலங்கையை ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இத்தேர்தல் ஒரு பெரும் சவாலாகக் காணப்பட்டது. 

முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆளும் கட்சியில் இருந்து பிரிந்து இலங்கை சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தார். 

இந்த தேர்தலில் மகாஜன எக்சத் பெரமுன கட்சி 51 இடங்களைக் கைப்பற்றது. 

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்ததுடன், பண்டாரநாயக்கா பிரதமர் ஆனார். 

1956 ஏப்ரல் 12 இல் பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்றது. 

இதேவேளை இலங்கையின் 4ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1960ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி நடைபெற்றது. 

இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவதற்காக இத்தேர்தல் நடத்தப்பட்டது.

1960ஆம் ஆண்டளவில், இலங்கையின் ஆளும் மகாஜன எக்சத் பெரமுன கூட்டணி பிளவடையும் நிலையில் இருந்தது. 

இந்த தேர்தலின் போது டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. 

ஆனாலும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் நிலையான ஆட்சியை அமைக்க முடியவில்லை. 

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து இலங்கையின் 5ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1960ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் திகதி நடைபெற்றது. 

இலங்கை நாடாளுமன்றத்திற்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இத்தேர்தல் நடத்தப்பட்டது. 

மார்ச் 1960ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சியும், அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறாமையால் அதே ஆண்டில் இரண்டாம் தடவையாகத் தேர்தல் நடத்தப்பட்டது. 

இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்ட பின்னர் அக்கட்சி பிளவடைந்திருந்தது. 

ஆனாலும் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்கா கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஓரளவிற்கு கட்சி தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டது. 

இதன்படி, இலங்கை சுதந்திரக் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது.

திருமதி பண்டாரநாயக்கா இலங்கைப் பிரதமரானார். 

பின்னர் இலங்கையின் 6ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1965ஆம் ஆண்டு மார்ச் 22 இல் நடைபெற்றது. 

151 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இத்தேர்தல் நடத்தப்பட்டது. 

1964ஆம் ஆண்டு டிசம்பரில் லேக்ஹவுஸ் பத்திரிகைகள் தேசியமயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து சில உறுப்பினர்கள் வெளியேறியதை அடுத்து சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பலம் இழந்தது. 

இதனையடுத்து எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. 

இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 68 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. 

ஆனாலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார். 

இதனையடுத்து இலங்கையின் 7ஆது நாடாளுமன்றத் தேர்தல் 1970ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி நடைபெற்றது. 

புதிய நாடாளுமன்றத்திற்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. 

இந்த தேர்தலில் ஐக்கிய முன்னணி பெரும் வெற்றி பெற்றது. 

மொத்தம் 151 இடங்களில் ஐக்கிய முன்னணி 116 இடங்களைக் கைப்பற்றியது. 

தமிழ் பேசும் பகுதிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. 

தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்களும் பின்னர் ஐக்கிய முன்னணியில் இணைந்தனர். 

சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இடம்பெற்ற தேர்தல்களில் 1970 தேர்தல்களே கடைசித் தேர்தல்களாகும். 

பின்னர் மீண்டும் இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1977ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் திகதி நடைபெற்றது.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு 168 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. 

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாது மக்களிடையே செல்வாக்கை இழந்திருந்தது. 

இலங்கையின் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. 

அதேவேளையில், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில், முதற் தடவையாக தமிழர் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டாவது அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றி நடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக வந்தது. 

1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஒரேயொரு பொதுத் தேர்தல் இதுவேயாகும். 

இவ்வாறிருக்க இலங்கையின் 9ஆ வது நாடாளுமன்றத் தேர்தல் 1989ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெற்றது. 

இலங்கை நாடாளுமன்றத்திற்காக 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. 

1983 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்தல் 1982 தேசிய வாக்கெடுப்பு மூலம் இரத்துச் செய்யப்பட்டது. 

இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 125 இடங்களைப் பெற்றிருந்தது. அடுத்து 10ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி நடைபெற்றது. 

225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. 

இந்த தேர்தலின் போது 17 ஆண்டுகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 

முன்னைய ஆட்சியாளர்களான ஜே. ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாசா ஆகியோரின் ஆட்சியில் இலங்கையின் மக்களாட்சி பெரிதும் வீழ்ச்சியைக் கண்டது. 

இந்த தேர்தலின் போது மக்கள் கூட்டணி 105 இடங்களைக் கைப்பற்றியிருந்ததுடன், ஆட்சி அமைக்கத் தேவையான 113 இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை, ஆனாலும் சில சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைத்தது. 

அடுத்து 2000ஆண்டு இலங்கையின் 11ஆவது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக ஒக்டோபர் 8ஆம் திகதி தேர்தல் இடம்பெற்றது. 

அப்போது ஜனாதிபதியாக இருந்து சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 10ஆவது நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார். 

இந்த தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆளும் கூட்டணி வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டது. 

ஆனாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 2001 இல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. 

இந்த தேர்தலில் மக்கள் கூட்டணி அரசாங்கத்திலிருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியதை அடுத்து மக்கள் கூட்டணி அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது. 

ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மக்கள் விடுதலை முன்னணியைக் கூட்டணியில் சேர்வதற்கு முயன்றார்.

இதனை விரும்பாத 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்தனர். 

அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயன்றன. 

இதனைத் தவிர்க்கும் முகமாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா அரசாங்கத்தை கலைத்து புதிய தேர்தலுக்கான திகதியை அறிவித்தார். 

இந்த தேர்தல் காலத்தில் மொத்தம் 1,300 தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் பதிவாகியிருந்ததுடன்,தேர்தல் வன்முறைகளில் 60 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆளும் மக்கள் கூட்டணி தேர்தலில் தோல்வியடைந்தது. 

எதிர்க்கட்சிக் கூட்டணி ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். 

அடுத்து இலங்கையின் 13ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 2004, ஏப்ரல் 4 இல் இடம்பெற்றது. 

12ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று மூன்றாண்டுகளுக்குள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார். 

225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 82 இடங்களை மட்டும் கைப்பற்றி தேர்தலில் தோல்வியடைந்திருந்தது. 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 105 இடங்களை வென்றது. 

அறுதிப் பெரும்பான்மைக்கு 8 இடங்கள் போதாமல் இருந்தும் அக்கட்சி ஆட்சியமைத்தது. 

இதன்போதே மகிந்த ராசபக்ச பிரதமரானார். 

2010ஆம் ஆண்டு 14ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்றது. 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டியது.

நாடாளுமன்றத்துக்கான மொத்தம் 225 இடங்களில் அக்கட்சிக்கு 144 இடங்கள் கிடைத்தன. 

இது 2004 தேர்தலிலும் பார்க்க 39 இடங்கள் கூடுதல் ஆகும். மீண்டும் 2015ஆம் ஆண்டு இலங்கையின் 15ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்றது. 

ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 106 இடங்களைக் கைப்பற்றியது.

ஆனாலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும் கைப்பற்றின. 

மீதியான எட்டு இடங்களையும் மக்கள் விடுதலை முன்னணி (6), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (1) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (1) ஆகியன கைப்பற்றின. 

இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசு அமைக்க ஒப்புக் கொண்டது. 

ரணில் விக்கிரமசிங்க 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21 அன்று இலங்கையின் 22வது பிரதமராகப் பொறுப்பேற்றார். 

இறுதியாக 2020ஆம் ஆண்டு இலங்கையின் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்றது. 

16,263,885 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இவர்களில் 31.95% பேர் இளம் வாக்காளர்கள் ஆவர். 

ஆளும் இலங்கை பொதுசன முன்னணி 145 இடங்களைக் கைப்பற்றி மிகப் பெரும்பான்மையைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.

எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 இடங்களையும் கைப்பற்றின. 

முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் மிகப்பெரும் தோல்வியைக் கண்டது. 

இது ஒரேயொரு இடத்தை மட்டுமே கைப்பற்றியது. நாட்டில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்தல்கள் இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டு, இறுதியில் 2020 ஓகஸ்ட் 5ஆம் திகதி நடத்தப்பட்டது. 

இத்தேர்தலில் 75% மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் 17ஆவது நாடாளுமன்ற தேர்தல் தற்போது இடம்பெற்று வருகின்றது.

றிசாட் – மஸ்தான் அணிகளுக்கிடையே மோதல்

0

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் றிசாட் பதியூதீன் பயணித்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகாக நேற்று இரவு  8 மணியளவில் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது. 

இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச் சென்றிருந்தனர்.

சற்றுநேரத்தில் குறித்த மோட்டார் சைக்கிள்களுக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள், கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தது.

இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில்  குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் சற்றுநேரத்தில் அது கலவரமாகியது.

கலவரத்தில் றிசாட் பதியூதீனின் வாகனத் தொடரணி அடித்து நொறுக்கப்பட்டது. அவர் வாகனத்திற்குள் இருந்த நிலையில் அவரது வாகனம் முற்றுமுழுதாக அடித்து நொறுக்கப்பட்டதுடன் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது.  குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத்தொடரணி அந்த பகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது. 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர்.  சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை இவ்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்த புலவு பகுதியில் இடம்பெற்ற மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கலவர நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் பிரச்சாரக்கூட்டம் பொலிசாரின் பாதுகாப்புடன் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.

பொதுத் தேர்தல் வாக்குகள் இவ்வாறுதான் எண்ணப்படும்!

0

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற பொதுத் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், தேர்தல் தொகுதி முடிவுகள் மற்றும் மாவட்ட முடிவுகள் தேர்தல் செயலகத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்றும், எனவே உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த தலைவர்,

“தபால் வாக்குகளை எண்ணும் பணி 4.15 மணிக்கு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும்,   அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் 14ஆம் திகதி மாலை சுமார் 7.15 மணியளவில் வழக்கமான வாக்கு எண்ணிக்கையை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுவரை அதிகாரபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்”

அதேபோல், வாக்கு எண்ணிக்கை குறித்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை 3 கட்டங்களாக நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் அதிக வாக்குகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவர்.

“மூன்று கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.முதலில் ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
இரண்டாவது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ஒவ்வொன்றும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இறுதியில், ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களின் எண்ணிக்கை வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணக்கிடப்படும்.

அதன்பிறகு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் அவர்கள் பெற்ற அதிக வாக்குகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.” என்றார்.

அறுகம்பே நிலவரத்தை ரணில் கையாண்டது இப்படித்தான்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது தான் அறுகம்பே சம்பவம் தொடர்பில் முதன்முதலில் வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு, மல் வீதியில் உள்ள தனது பிரச்சார அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர்களான டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“அந்த தாக்குதல் பற்றிய முதல் தகவல் எங்கள் காலத்தில் வந்தது. நானும் அறுகம்பே சென்றேன். அதிக கவனம் செலுத்தவே நானாக சென்றேன். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தோம். தூதரகங்களுக்கு தகவல் தெரிவித்தோம்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் செய்தது அமெரிக்காவின் எச்சரிக்கையைக் கண்டவுடன் பொலிஸாரையும் இராணுவத்தையும் அறுகம்பேக்கு அனுப்பியது. இதைக் கண்டு ஏனைய நாடுகள் அச்சமடைந்தன. அந்த பகுதிகளுக்கு நாம் STF ஐ அனுப்பியது போதைப்பொருள் கடத்தலை தடுக்க என்று வேறுபட்ட உத்தியை கையாண்டாகும்.. அதை வைத்தே ஆபத்து குறித்த தகவல்களை சேகரித்தேன்’’ என்றார்.

ஈஸ்டர் விஷேட அறிக்கை வெளியிட்டார் மு.ஜனாதிபதி ரணில்

0

ஈஸ்டர் அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமக்கு கிடைத்ததாகவும், ஆனால் ஈஸ்டர் தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதிலிருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான அறிக்கை பின்வருமாறு..

“இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கைகளை அவரிடம் கையளித்தேன்.

அதன் பின்னர், கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பல தெளிவுபடுத்தல்களை முன்வைத்திருந்ததுடன், எனக்கு அனுப்பப்பட்ட அனைத்து விளக்கங்களையும் சட்டமா அதிபருக்கு அனுப்பி, அது தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆயர்கள் பேரவையுடன் பரிமாறிக் கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டது.

செனல் 4வில் ஒளிபரப்பப்பட்ட வௌிப்படுத்தல்களை ஆராயுமாறு என்னிடம் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

அதன்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம், முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி மற்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹர்ஷ ஷோசா ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்தேன்.

இதற்கு மேலதிகமாக, ஏ.எம்.ஜே. டி அல்விஸ், டபிள்யூ.எம்.ஏ.என்.நிஷான் மற்றும் கே.என்.கே. சோமரத்ன  ஆகியோர் அடங்கிய மற்றுமொரு மூன்று பேர் கொண்ட குழுவையும் நியமித்தேன்.

இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் யாரும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் அல்ல.

இந்த குழுக்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் பற்றி ஆராய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டமைக்கான ஒரு காரணமாகும். 

மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இருந்ததா? என்று விசாரிப்பது இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்ட மற்றொரு பொறுப்பாகும்.

வவுணத்தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை  கொலை செய்தது விடுதலைப் புலிகளே என அரச புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் நான்கு மாதங்களாக அறிவித்தது ஏன்?

அப்போது அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் குழு கேட்டறிந்தது.

அல்விஸ் குழு அறிக்கையானது அப்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை பழிவாங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையல்ல.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அப்துல் லதீப், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அறிக்கை மேலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அப்போதைய முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, இது ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிரான இட்டுக்கட்டப்பட்ட அறிக்கை என்ற விளக்கம் அடிப்படையற்றது என்பது மிகவும் தெளிவாகும்.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வவுணதீவுப் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டமை தொடர்பிலான அவதானிப்புகளும் மிக முக்கியமானதாகும்.

அந்தச் சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பே  கொலைகளை செய்ததாக முதலாவதாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து தம்பிராச குமார் மற்றும் இராசநாயகம் சர்வானந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அறிக்கையின் இணைப்புகளை ஆய்வு செய்யும் போது, ​​பல முரண்பாடான விடயங்கள் வெளிவருகின்றன.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அப்போது சிறையில் இருந்த பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் இருந்ததாக புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுணதீவில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் கணேஷுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணொருவரின் கணவரால் இந்த கொலைகள் இடம்பெற்றதாக இது தொடர்பான மற்றுமொரு புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தௌஹித் ஜமாத்தின் (NTJ) செயற்பாடுகளை புலனாய்வு அமைப்புக்கள் கண்டுபிடிக்க நான்கு மாதங்கள் ஆனதற்கு தேசிய புலனாய்வு அமைப்புகளிடம் தகவல்களைப் பெறுவதற்கான முறையான வலையமைப்பு இல்லாததே காரணம் என இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் (DMI) தெரிவித்துள்ளார்.

“Regarding the gap of four months until discovery of the NTJ, the DMI’s explanation was that it was attributable to the lack of network they had at the time to elicit the intelligence. “

REPORT OF THE COMMITTEE OF INQUIRY INTO INTELLIGENCE COORDINATION AND INVESTIGATIVE PROCESSES RELATED TO THE EASTER SUNDAY BOMBINGS OF 21ST APRIL 2019 (Page No 12)

வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவாக இருந்த இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் இந்த பகுதியில் பலமான தகவல் வலையமைப்பைக் கொண்டிருந்தாலும், அதே பகுதியில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாட்டில் கடும் வீழ்ச்சி காணப்படுவதைக் காணமுடிகிறது. பலமான புலனாய்வு வலையமைப்பு நம்மிடம் இல்லை என்பது ஒரு பயங்கரமான நிலையாகும்.

ஏனெனில் இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த விடயத்தில் எனது கவனம் செலுத்தப்பட்டது.

ஆயர்கள் பேரவையின் பதிலைப் பெற்று, சட்டமா அதிபரின் அறிக்கையுடன் புலனாய்வு பிரிவின் வீழ்ச்சி மற்றும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதே எனது நோக்கமாக இருந்தது.

ஏனெனில் இவ்வாறு தேசிய புலனாய்வு சேவையின் வீழ்ச்சி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து அதன் அறிக்கையை சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய மூவர் கொண்ட குழுவின் ஊடாக புலனாய்வு அமைப்புகளை முழுமையாக மறுசீரமைக்க முன்மொழிவதற்கும் நான் உத்தேசித்திருந்தேன்.

ஈஸ்டர் ஆணைக்குழு அறிக்கையில் தேசிய புலனாய்வு பிரிவின் கடுமையான வீழ்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எனது கைக்கு வந்த போதிலும் ஈஸ்டர் தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதால் அந்த அறிக்கைகளை நான் பகிரங்கப்படுத்தவில்லை.

இது தொடர்பில் அறிக்கை கோர வேண்டிய தேவை இருந்தமையால் மேற்படி நடைமுறையை நான் பின்பற்றியதாகவும் குறிப்பிடுகின்றேன்.

என்னைப் பற்றி பேராயர் கூறிய அனைத்து கருத்துக்களும் ஆதாரமற்றவை.

ஈஸ்டர் அறிக்கைகள் குறித்து ஆயர்கள் பேரவை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்.

மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஈஸ்டர் அறிக்கையை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க
எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பரபரப்பு தகவல்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் இன்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கைகளை வெளியிடுவதற்காக ஜனாதிபதிக்கு இன்று காலை 10.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக கம்மன்பில முன்னதாக தெரிவித்திருந்தார்.

இதன்படி இரண்டு அறிக்கைகளில் ஒன்றை இன்றும் மற்றைய அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமையும் வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதாக உதய கம்மன்பில மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவ்வாறு செய்தமைக்காக ஜனாதிபதி உடனடியாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் அவைகளை பகிரங்கப்படுத்துவதற்கு ஜனாதிபதி வேண்டுமென்றே தயங்குகின்றமை தொடர்பில் நான் பேசுகின்றேன்.

முதல் அறிக்கை, ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ஐ. இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2024 ஜூன் 25 அன்று அப்போதைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ் அல்லது புலனாய்வுப் பிரிவினரால் ஏதேனும் விடுபட்டதா அல்லது தவறிழைக்கப்பட்டதா என ஆராய்வதே இரண்டாவது அறிக்கையின் நோக்கமாகும். 

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.ஜே. டி அல்விஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி, அதாவது தற்போதைய ஜனாதிபதி நியமிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இந்த அறிக்கைகளை ஏன் மறைக்கின்றது?அது இந்த அறிக்கையில் உள்ளது. 

இந்த அறிக்கையின் 43வது பக்கத்தில், அரச புலனாய்வுப் பணிப்பாளரால் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி, மொஹமட் சஹாரான் உள்ளிட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள், கத்தோலிக்க தேவாலயங்கள், பிரபல உணவகங்கள் உட்பட பல இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவுள்ளதாக, வௌிநாட்டு புலனாய்வு பிரிவுகள் அறிவுறுத்தியுள்ளதாக குற்றப்புலானய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி சேனவிரத்னவே ஆவார்.

இந்த கடிதத்தில் தாக்குதலை நடத்தவுள்ள பயங்கரவாதிகளின் பெயர்கள், தேசிய அடையாள அட்டை எண்கள், தொலைபேசி எண்கள், முகவரிகள், பொதுவாக செல்லும் இடங்கள், பழகுபவர்கள், சிலர் இரவோடு இரவாக செல்வது, அவர்கள் வந்து செல்லும் நேரங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் ரவி சேனவிரத்ன மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், அவரைக் கைது செய்ய பொலிஸார் முயற்சிப்பதாகவும், அவ்வாறு செய்யக்கூடாது எனவும்  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கான 241/2024ஐ ஆய்வு செய்துள்ளேன் நான் ஆராய்ந்துள்ளேன்.

ஏப்ரல் 09 ஆம் திகதி இந்தக் கடிதம் வந்தபோது ரவி செனவிரத்ன வெளிநாடு சென்றிருந்தார். ரவி செனவிரத்ன பின்னர்  16ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வந்த போது அந்தக் கடிதத்தைப் பார்த்ததாகக் கூறுகிறார்.

அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்லும்போது, ​​தங்கள் பணிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும்.

அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாகஹமுல்ல இந்தப் பணியை உள்ளடக்கியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்படியானால், நாகஹமுல்லவின் கைகளுக்கு ஒருவாரம் எட்டாமல் இந்தக் கடிதம் ரவி செனவிரத்னவின் மேசையில் எப்படி இருந்தது என்ற கேள்வி எழுகிறது.

இந்த கேள்வியை அப்படியே சிரஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணிக்குழாமிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இரகசியமான கடிதங்களைத் திறக்க வேண்டாம் என்றும், அவற்றை யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்றும், அவற்றை உடைக்கும் வரை அவற்றை மேசையில் வைக்குமாறு ரவி செனவிரத்ன அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பதில் வழங்கப்பட்டுள்ளது.

உள்வரும் கடிதங்களைப் பார்க்க உரிமை இல்லை என்றால், பணியைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரி தனது கடமையைச் செய்ய முடியாது.

ரகசியமாக கருதப்படும் கடிதங்களுக்கு உடனடி நடவடிக்கை தேவை.

எனவே ரவி செனவிரத்னவின் சட்ட விரோதமான ஆலோசனையால் இந்தக் கடிதம் மேசையில் உள்ளது.

அதாவது சஹாரான் குழுவினர், அப்பகுதியில் வெடிகுண்டுகளை தயாரிக்கும் போதும், இந்த தாக்குதலை நாங்கள் செய்கிறோம் என காணொளி பதிவு செய்யும் போதும், கொழும்புக்கு குண்டுகளை கொண்டுசென்ற அனைத்து தகவல்களும் ரவி செனவிரத்னவின் மேசையில் இருந்த கடிதத்தில் இருந்துள்ளது.

ரவி செனவிரத்ன இந்தக் கடிதத்தை 16ஆம் திகதி பார்வையிட்டு, மே 01ஆம் திகதிக்குள் விசாரணை நடத்தி முன்னேற்றம் குறித்து தெரிவிக்குமாறு பதிவொன்று உள்ளது.

ஆனால் அது 19ஆம் திகதி சிஐடிக்கு பொறுப்பான நாகஹமுல்லவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் மர்மமான முறையில் ஏப்ரல் 21-ம் திகதி வெடிகுண்டுகள் வெடிக்கும் வரை இந்தக் கடிதம் டிஐஜி நாகஹமுல்லாவுக்குச் சென்றடையவில்லை.

அதாவது ஏப்ரல் 22ஆம் திகதி வெடிகுண்டு வெடித்த மறுநாளே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடிதம்  ரவி செனவிரத்னவின் பொறுப்பில் 12 நாட்களாக இருந்துள்ளது.

19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 20 ஆம் திகதி சனிக்கிழமை விடுமுறை மற்றும் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு.

எனவே, பெரும்பாலும், இந்த கடிதம் குண்டு வெடிக்கும் வரை ரவி சேனவிரத்னவின் மேசையில் இருந்து, வெடிகுண்டு வெடித்த பிறகு அத்தகைய கடிதத்தை அனுப்பியதாக புலனாய்வு பிரிவு கூறும்போது, ​​​​22 ஆம் திகதி காலையில் வந்து இதனை பார்த்து 16ஆம் திகதி என குறிப்பெழுதி 19ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அனுப்பியதாக கூறும் போது யாருக்கும் நியாயமான சந்தேகம் எழலாம். 

இந்த கடிதத்தை உண்மையில் படித்தால் ரவி செனவிரத்ன அவர்களுக்கு சஹாரான் யார் என்பது நினைவுக்கு வரும்.

ஏனெனில், பயங்கரவாத விசாரணைப் பிரிவு 2014ஆம் ஆண்டு முதல், சஹாரானின் குழுவான தௌஹித் ஜமாத் மற்றும் அவரைப் பற்றி தேடி அவர்கள் தொடர்பான அறிக்கைகளை ரவி செனவிரத்தனவிற்கே கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், சஹாரான் தொடர்பான 13 புலனாய்வு அறிக்கைகள் 2019 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 20 வரை மிகக் குறுகிய காலத்தில் ரவி செனவிரத்னவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின்படி, 2017 காத்தான்குடி மத மோதல், 2018 இல் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொலை, 2018 இல் மாவனெல்ல புத்தர் சிலைகள் உடைப்பு, 2019 இல் வனாத்தவில்லுவில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட அனைத்து விசாரணைகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.இது ரவி செனவிரத்னவின் மேற்பார்வையில் உள்ளது.

எனவே வெடிபொருட்களை சேகரித்து வெடிகுண்டுகளை சோதனை செய்த சஹாரான் கும்பல் தற்கொலை தாக்குதலுக்கு செல்கிறோம் என்று கூறிய போது மற்றவர்களுக்கு இது புரியவில்லை என்றாலும் இதனை நன்றாக புரிந்து கொண்ட ரவி செனவிரத்ன உடனடியாக செயற்பட்டிருக்கலாம்.

ரவி செனவிரத்ன இந்தக் கடிதத்தை உண்மையாகப் படித்திருந்தால், தேடுதல் நடிவடிக்கையை முன்னெடுத்து அவர்களை கைது செய்திருக்க முடியும்.

குறைந்தது ஏப்ரல் 18ம் திகதியாவது தேடுதல் நடத்தியிருந்தால் சஹாரானை கைது செய்திருக்க முடியும்.

ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி தாக்குதலுக்காக கொழும்பு வருவதற்கு முன்னர் குருநாகலில் உள்ள தனது மனைவியின் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டுவிட்டு வந்துள்ளான்.

தமது மேசையில் ஒருவாரம் கிடந்த அதி இரகசியம் என குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தை பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சாதாரணமாக அனுப்புவதை விட பிரதி பொலிஸ்மா அதிபரை உடனடியாக அழைத்து இது மிகவும் முக்கியமான விடயம், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருக்கலாம்.

ஆனால் இதை ஒருவாரம் மேசையில் வைத்து, இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க மே 1ம் திகதி வரை காலவகாசம் வழஙகப்படுகிறது. இது எதைக் காட்டுகிறது?

ரவி செனவிரத்ன இந்தக் கடிதத்தைப் படிக்காமல், அதன் தீவிரம் புரியாமல் பதிவிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் 41வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. ரவி செனவிரத்ன மீது குற்றவியல் அலட்சியத்திற்காக வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அப்படியானால்,  உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரே ரவி செனவிரத்ன.

அவரது மேற்பார்வையில், தாக்குதல் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்தப்பட்டால், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? காவல்துறையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்குமா? இது திருடனின் தாயிடம் கேட்பதை விட திருடனையே கேட்பது போல் உள்ளது.

இந்த அறிக்கை எமக்கு கிடைக்க முன்னர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி சேனவிரத்ன நியமிக்கப்பட்ட போது இதில் உள்ள தவறை சுட்டிக்காட்டினோம்.

அத்துடன், அல்விஸ் அறிக்கையின் பக்கம் 14 இல், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் தமது கடமைகளை சரியாகச் செய்யாதமைக்காக குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையில் 17 அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன, அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்.

இந்த அறிக்கையை ஏன் ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் நசுக்க முயற்சித்தார்கள்? காரணம் ஜனாதிபதியின் கையாலாகாத்தனம் காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளை நாம் இன்று வெளியிடவில்லை என்றால், இவர்களை வழக்கு தாக்கல் செய்யாமல் காப்பாற்ற ஜனாதிபதியால் முடியும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று தெரிந்தும், ரவி செனவிரத்னவை அழைத்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை ஒப்படைத்து அவரது மேற்பார்வையில் உயிர்த்த ஞாயறு தாக்கதல் விசாரணையை நடத்த தீர்மானித்தது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை கூட நம்பும் தேசிய மக்கள் சக்தியினர், அக்கட்சியின் தேசிய பட்டியலில் உள்ள மொஹமட் இப்ராஹிமை காப்பாற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான தகவல்களை திரித்து நாட்டையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி உள்நோக்கத்திற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதா? என்ற நியாயமான சந்தேகம் எழுவதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

கற்பிட்டியில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை!

0

கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் 18 வயதையுடைய இளம் யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
கற்பிட்டி முஹமதிய்யாபுரத்தில் வசிக்கும் குறித்த இளம் யுவதி வீட்டின் முன்புறத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இன்று (16) காலை அளவில் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது தனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் உடனடியாக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்களின் உதவியுடன் அறிவித்ததாக தந்தை தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு வருகை தந்த கற்பிட்டி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் கற்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம் நாசிம் வரவழைக்கப்பட்டு சடலத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைக்காக சடலம் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கற்பிட்டி திகழி பாடசாலை ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

0

கற்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்யாலய ஆசிரியர்கள் இன்று (16) பணிப்பகிஷ்கரிப்பில்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

திகழி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் சித்திரப் பாட ஆசிரியர் ஒருவர் மீது திகழியைச் சேர்ந்த இளைஞர் கடந்த 10.10. 2024 அன்று தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார். இதில் தலையிட்ட அதிபர் உட்பட ஏனைய சில ஆசிரியர்களுக்கும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மிக மோசமாக குறித்த இளைஞர் நடந்து கொண்டுள்ளார்.

இதற்கு எதிராகவும் ஆசிரியர்களின் பணிக்கு பாதுகாப்பு வேண்டியும் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போதும் ஊர் மக்களாலும் பொலிசாரினாலும் இதுவரை சரியான தீர்வு கிடைக்கவில்லை.

ஆசிரியர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலை இல்லாமல் செய்து சுதந்திரமான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறும், பாடசாலை உள்விகாரங்களில் தலையீடு செய்யும் நபர்களின் அராஜகங்களை தடுத்து நிறுத்துமாறு கோரியும் இன்று ( 16) முதல் திகழி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் சகல ஆசிரியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்

வேட்புமனுவே இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை!

0

இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக இதுவரை சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்களாக 33 குழுக்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யதுள்ளன.

நேற்றைய (08) தினம் வரை 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளில் நேற்று வரை எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நிறைவடையவுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நேற்று நள்ளிரவுடன் முடிவடைய இருந்தது.

வாகன இறக்குமதி குறித்து இப்படி ஒரு ஏமாற்றமா?

0

ஒக்டோபர் மாதத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்த போதிலும் அது தொடர்பில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் பேருந்துகள் மற்றும் பாரவூர்திகள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என வதந்திகள் பரவி வருவதாகவும், ஆனால் அவ்வாறான சுற்றறிக்கையோ அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணமோ எந்தவொரு அரசாங்க நிறுவனத்தினாலும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் அல்லது வங்கிகளுக்கு அனுப்பப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்பதை தமது சங்கத்தினால் அறிய முடிந்தது என்றார்.

2020 ஆம் ஆண்டு வாகனங்கள் முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட அதே விலையில் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நம்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்தாலும் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்படாது என்றார்.
கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபாயுடன் ஒப்பிடுகையில் டொலரின் மதிப்பு 80 வீதத்தால் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.