Home Blog Page 278

யாழில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்!

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்திலும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப் பயணம் செய்வதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளதை கருத்திற்கொண்டு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்திலும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மக்கள் அதிகளவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளமையால், அவர்களுக்கான துரித சேவைகளை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிப்பது பொருத்தமானதென, 2025.01.31 அன்று கௌரவ ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மியான்மர் நில நடுக்கம் – 2700ஐ கடந்த உயிரிழப்பு!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மியான்மர் உருக்குலைந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 63 வயது மூதாட்டி ஒருவர் 72 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார். பலி எண்ணிக்கையும் 2,700 ஆக அதிகரித்துள்ளது.

நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 2,00-0க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு நாட்களை கடந்த நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது.

இந்நிலையில், மியான்மரின் நய்பிடாவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின்போது கட்டட இடிபாடுகளில் சிக்கி, 91 மணி நேரத்திற்கு பின், 63 வயதான மூதாட்டி ஒருவரை மீட்புக்குழு உயிருடன் மீட்டது. இதற்கிடையே, இடிபாடுகளில் இருந்து ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பலி எண்ணிக்கை 2,719 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவ உதவிகளும் மியான்மர் மக்களுக்கு உடனடி தேவையாக உள்ளது. போதிய குடிநீர் வசதியும் இல்லாததால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நுவரெலியாவில் ஆரம்பமான வசந்த விழா!

நுவரெலியா வசந்த விழா நேற்று (01) காலை அழகான கலாச்சார அம்சங்கள் மற்றும் பாடசாலை இசைக்குழுக்கள் உட்பட பல அம்சங்களுடன் தொடங்கியது.

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்னால் இந்த ஆரம்ப விழா நடைபெற்றது, இதில் மத்திய மாகாண பிரதம செயலாளர் ஜி.எச்.எம். அஜித் பிரேமசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நுவரெலியா மாநகர சபையால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் வசந்த விழா ஏப்ரல் மாதம் முழுவதும் நடைபெறும், இதில் குதிரைப் பந்தயம், மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம், மலர் கண்காட்சி, பட்டம் விடும் போட்டி உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறும்.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், நுவரெலியா மாநகர ஆணையாளர் எச்.எம். பண்டார உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 

அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ஓய்வு பற்றி மனம் திறந்த கிங் கோலி!

வரும் 2027 உலக கோப்பை தொடருக்குப் பின் கோலி ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்

இந்திய அணி ‘சீனியர்’ வீரர் கோலி 36. கடந்த 2024ல் உலக கோப்பை வென்ற பின், ‘டி-20’ அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். 2026ல் இந்தியா, இலங்கையில் நடக்கவுள்ள ‘டி-20’ உலக கோப்பை தொடரில் இவர் பங்கேற்க மாட்டார்.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில், அதிக சதம் அடித்த வீரரான கோலி (51), 302 போட்டியில் 14,181 ரன் எடுத்துள்ளார். 2013, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடருடன், ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவார் என நம்பப்பட்டது.

இதுகுறித்து கோலி கூறுகையில்,” தற்போதைக்கு ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை. அடுத்த இலக்கு என்ன என்றால், அதுவும் தெரியாது. ஒருவேளை மீண்டும் உலக கோப்பை வெல்ல முயற்சி செய்வேன்,” என்றார்.

இதனால், வரும் 2027ல் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்குப் பின் கோலி ஓய்வு பெறலாம். 2027ல் இந்தியா சாதித்தால், இருமுறை (2011, 2027) ஒருநாள் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் ஆகலாம். 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் கோலி தொடர்ந்து பங்கேற்க வாய்ப்புள்ளது.

14 ஆண்டுக்கு முன்…

கடந்த 2011, ஏப்ரல் 2ல் மும்பை, வான்கடே மைதானத்தில் ஒருநாள் உலக கோப்பை தொடர் பைனல் நடந்தது. இந்தியா, இலங்கை மோதின. இலங்கையின் (274/6) இலக்கை ‘சேஸ்’ செய்தது இந்தியா. சேவக் (0), சச்சின் (18) ஏமாற்ற, காம்பிர் (97) கைகொடுத்தார். கோலி 35 ரன் எடுத்தார். யுவராஜ் (21), தோனி (91) அசத்தினர். கடைசியில் குலசேகரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய தோனி, 1983க்குப் பின் இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தந்தார். தற்போது 14 ஆண்டு ஆன போதும் இந்தியா மீண்டும் சாதிக்க முடியவில்லை.

புத்தளத்தில் சிக்கிய சட்ட விரோத பொருட்கள்!

இலங்கை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்துநேற்று முன்தினம் (மார்ச் 30) புத்தளம் பகுதியில் மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையில் மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்று சோதனையிடப்பட்டது. அந்த வீட்டில் விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 21 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் மற்றும் வெளிநாட்டு சிகரட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

ரொனால்டோ ரசிகர்களுக்கு ஹெப்பி நியூஸ்!

FIFA கிளப் உலகக் கோப்பை என்பது FIFA ஆல் நடத்தப்படும் வருடாந்த சர்வதேச கால்பந்து போட்டியாகும்.

இது FIFAவின் ஆறு கண்ட கூட்டமைப்புகளிலிருந்தும் (ஐரோப்பாவில் UEFA மற்றும் தென் அமெரிக்காவில் CONMEBOL போன்றவை) சாம்பியன் கிளப்புகளை ஒன்றிணைத்து உலகின் சிறந்த கிளப் அணியின் பட்டத்திற்காக போட்டியிடுகிறது.

அந்த வகையில் ‘கிளப்’ கால்பந்து உலக கோப்பை தொடரில் உலகப்புகழ் கிரிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்க உள்ளார்.

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடுகிறார். இவரது அணி, கிளப் அணிகளுக்கான ‘பிபா’ உலக கோப்பை தொடரில் (அமெரிக்கா, 2025, ஜூன் 14-ஜூலை 13) பங்கேற்க தகுதி பெறவில்லை.

இது கிரிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

முன்னதாக மான்செஸ்டர் யுனைடெட் (2008), ரியல் மாட்ரிட் (2014, 2016, 2017) அணிக்காக என 4 முறை கிளப் உலக கோப்பை தொடரில் கோப்பை வென்று கொடுத்துள்ள கிரிஸ்டியானோ ரொனால்டோ இம்முறை கிளப் உலக கோப்பை தொடரில் மீண்டும் பங்கேற்க முடிவு செய்துள்ளமை அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கிளப் உலக தொடரில் பங்கேற்கும் 32 அணிகள், ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்களை தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளலாம்,’ என அறிவிக்க, ‘பிபா’ தயாராகி வருகிறது.

இதனால் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய, இன்டர் மிலன், ரியல் மாட்ரிட், அல் ஹிலால் (சவுதி அரேபியா) அணிகள் முயற்சி செய்து வருகின்றன. தவிர, மெஸ்சி விளையாடும் இன்டர் மயாமி அணியும், கிளப் உலக தொடருக்காக மட்டும், ரொனால்டோவை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுவதாக செய்தி வெளியாகி உள்ளன.

காசாவில் 10 நாட்களில் 322 குழந்தைகள் பலி!

பாலஸ்தீன காசாவில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டாலும் சமீபத்தில் குழந்தைகள் பலி அதிகரித்துள்ளதாக யூனிசெப் (United Nations International Children’s Emergency Fund) அமைப்பு பெரும் கவலை தெரிவித்துள்ளது.

தெற்கு காசாவில் அல்நாசர் மருத்துவமனையின் புள்ளி விவரப்படி இந்த யூனிசெப் அமைப்பின் சார்பில் வெளியான செய்தி தெரிவிக்கிறது. யூனிசெப் செயல் இயக்குநர் கேத்தரீன் ரூசெல் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் முடிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் மீண்டும் ஆங்காங்கே இரு தரப்பினரும் தாக்குதலை துவக்கி உள்ளனர்.

காசா பகுதியில் கடந்த 10 நாட்களில் 322 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 609 பேர் காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். பல குழந்தைகள் ஆதரவற்று தங்க இடமின்றி தவிப்பதாகவும், பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

கடந்த 18 மாதங்களில் 15 ஆயிரம் குழந்தைகள் பலியாகி உள்ளனர். 34 ஆயிரம் பேர் காயமுற்றுள்ளனர். தொடர்ந்து குழந்தைகள் பலி உயர்வு பெரும் கவலை அளிக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு, உணவு பற்றாக்குறை, சத்துகுறைபாடு, அடிப்படை தேவை கிடைப்பதில் சிரமம் ஆகியவற்றால் இன்னும் பல குழந்தைகள் உயிரிழக்க நேரிடும். இது நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகள் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்க முழு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தினர்.இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டாயமாக்கப்பட்ட டிண் இலக்கம்!

புதிய வாகனத்தைப் பதிவு செய்யும் போது மட்டுமே வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) தேவைப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் அறிவித்துள்ளார். 

முன்னர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வாகனங்களின் பதிவு மற்றும் கைமாற்றல்களுக்கு இந்த இலக்கம் கட்டாயம் என அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. 

எனினும், புதிதாக வாகனங்களைப் பதிவு செய்யும் போது மாத்திரமே இந்த எண் அவசியம் என தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலை நடத்துவதை நாளை (02) வரை தொடர்ந்து நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுக்களை பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல பிரதேச சபை நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, சுயாதீன குழுக்கள் உள்ளிட்ட தரப்பினரால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சுமார் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.