Home Blog Page 279

இன்று முதல் 15 சதவீத வரி விதிப்பு!

வருடாந்திர வருமானம் 18 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், வைப்புத் தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி அல்லது தள்ளுபடிகளுக்கு விதிக்கப்படும் முன்பண வருமான வரி  சலுகையை கோரலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்த வரி சலுகையை கோர விரும்பும் நபர்கள், அதற்காக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சுய பிரகடனம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எந்தவொரு வைப்புத்தொகை உரிமையாளருக்கும் செலுத்தப்பட வேண்டிய வட்டி அல்லது தள்ளுபடி செலுத்துதல்களுக்கு 10 சதவீத விகிதத்தில் முன்பண வருமான வரியை குறைப்பது, இன்று (01) முதல் அமலுக்கு வருவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல், இலங்கையில் உள்ள எந்தவொரு நபருக்கு செலுத்தப்பட வேண்டிய வட்டி, தள்ளுபடி மற்றும் இஸ்லாமிய நிதி பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்ட வருமான செலுத்துதல்களுக்கு, முகவராக செயல்படும் எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனமும் 10 சதவீத விகிதத்தில் முன்பண வருமான வரியை குறைக்க வேண்டும்.

எவ்வாறாயினும், இந்த சுற்றறிக்கையின்படி, வட்டி வருமானம் 10 சதவீத விகிதத்தில் முன்பண வருமான வரிக்கு உட்பட்டாலும், மதிப்பீட்டு வருடத்திற்கான வருமானம் 18 இலட்சம் ரூபாயை தாண்டாத நபர்கள் வரி சலுகையை கோரலாம் என உள்நாட்டு வருமான திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.

அதன்படி, அந்த மதிப்பீட்டு வருடத்திற்கு அனைத்து வருமான மூலங்களிலிருந்து மதிப்பிடக்கூடிய வருமானம் தொடர்பாக சுய பிரகடனத்தை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சமர்ப்பித்து, அந்த வரி சலுகையை கோரலாம் என உள்நாட்டு வருமான திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

இதற்கிடையில், இன்று முதல் அமலுக்கு வரும் வகையில், தனிநபர் வருமான வரி விதிப்பையும் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை மாதாந்திர வருமானம் ஒரு இலட்சம் ரூபாய் பெறும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட தனிநபர் வருமான வரி, இன்று முதல் 150,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறைந்த வருமானம் பெறும் பலருக்கு வரி சலுகைகள் கிடைக்கும் என அரசு சுட்டிக்காட்டுகிறது.

இதற்கிடையில், உள்நாட்டு வருமான சட்டத்தின் திருத்தங்களுக்கு அமைய, வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் சேவைகளிலிருந்து பெறப்படும் வருமானங்களுக்கு 15 சதவீத வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அதற்கு மேலதிகமாக, ஒரு சொத்தை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதற்கான ஒப்பந்த பத்திரத்திற்கு தொடர்புடைய முத்திரை கட்டணமும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

1,000 ரூபாய் அல்லது அதன் ஒரு பகுதிக்கு இதுவரை 10 ரூபாய் முத்திரை கட்டணம் விதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அது 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நடுக்கடலில் தத்தளித்த சீன கப்பல்!

தென் கடலில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுக் கப்பலில் நோய்வாய்ப்பட்டிருந்த சீன நாட்டவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்குக் கொண்டு வருவதற்கு கடற்படையினர் உதவினர்.

இலங்கைக்கு தெற்கே, காலியில் இருந்து 63 கடல் மைல் (சுமார் 116 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த MV AE Neptune என்ற கப்பலின் பணிக் குழுவைச் சேர்ந்த சீன நபர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் விரைவாக கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு இன்று (2025 மார்ச் 30) கொண்டு வருவதற்கு கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தென் கடற்பகுதியில் பயணித்து கொண்டிருந்த MV AE Neptune கப்பலின் பணிக்குழுவில் இருந்த சீன நாட்டவர் ஒருவர் கப்பலின் இயந்திர அறையில் சரிந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அந்த சீன நபரை கரைக்கு கொண்டு வர கடற்படையினை உதவுமாறு, அந்த கப்பலில் இருந்து கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்புக்கு கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவினர் உடனடியாக பதிலளித்தனர். ஆபத்தான நோயாளியைக் கரைக்குக் கொண்டுவருவதற்கு மருத்துவக் குழுவுடன் கடற்படைக் கப்பலை அனுப்ப ஒருங்கிணைப்பு மையம் ஏற்பாடு செய்தது.

இதன்படி, ஆபத்தான நோயாளியை ஏற்றிச் சென்ற MV AE Neptune கப்பல் காலி துறைமுகத்திற்கருகில் வந்தடைந்த பின்னர், நோயாளி கப்பலில் இருந்து கடற்படைக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அடிப்படை முதலுதவிகளை வழங்கிய கடற்படையினர் இன்று (2025 மார்ச் 30) அவரை காலி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்தற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

மேலும், இலங்கையின் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்தில் உள்ள மீனவ மற்றும் கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் உள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய தலைவர்!

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தேர்தல் நேற்று தேர்தல் குழுவின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது, இதற்கு ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திருமதி மாலனி குணரத்ன தலைமை தாங்கினார், அவர் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கொழும்பு சினமன் கிராண்டில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட்டின் 64வது ஆண்டு பொதுக் கூட்டத்துடன் இந்தத் தேர்தல் நடைபெற்றது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 – 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலே மேற்படி நடைபெற்றது. 

அதற்கமைய, ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா தொடர்ந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • Honorary President: Mr. Shammi Silva
  • Honorary Vice President: Dr. Jayantha Dharmadasa
  • Honorary Vice President: Mr. Ravin Wickramaratne
  • Honorary Secretary: Mr. Bandula Dissanayake
  • Honorary Treasurer: Mr. Sujeewa Godaliyadda
  • Honorary Assistant Secretary: Mr. Chryshantha Kapuwatte
  • Honorary Assistant Treasurer: Mr. Lasantha Wickremasinghe

இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இன்று (01) முதல் அடுத்த சில நாட்களுக்கு மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் 

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். அதற்கமைய, மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Click here to join our whatsApp group

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மாநாடு!

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய நோய் எதிர்ப்புச் சக்தி மாநாடு கொழும்பில் நடைபெற்றது.

தற்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி அளவுகள் குறித்து மறுபரிசீலனை செய்து, தடுப்பூசி அளவுகளில் மாற்றங்கள் தேவைப்பட்டால், தொழில்நுட்ப மட்டத்தில் அது குறித்து விவாதித்து முடிவுகளை எடுப்பதுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் புதிய நோய் எதிர்ப்பு சக்தி தடுப்பூசிகளை எவ்வாறு, எந்த வகைகளில் அறிமுகப்படுத்துவது என்பது குறித்தும் விவாதித்து, எதிர்காலப் பரிந்துரைகள் மற்றும் திட்டங்களை தயாரிப்பது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

மாநாட்டில் இருந்து பெறப்படும் பரிந்துரைகள் மற்றும் திட்டங்கள் நாட்டில் செயல்படுத்தப்படும் தேசிய தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்துவதில் சுகாதார அமைச்சகம் எடுக்கும் முடிவுகள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சகம், தொற்றுநோயியல் பிரிவு மற்றும் உலக சுகாதார அமைப்பு, GAVI தடுப்பூசி கூட்டணி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (Unicef) ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு நடைபெற்றது

ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் கலைவிழா!

கிளிநொச்சிப் பிராந்திய ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் கலைவிழா இன்று நடைபெற்றது.

இளவயது திருமணம் தொடர்பாக சமூகம் சந்திக்கும் சவால்கள்” 2025 என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. குறித்த கலைவிழாவானது திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சிப் பிராந்தியம், ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் தலைவர்
திரு.கி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர்.சு.முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.கிருஸ்ணானந்தன் மாலினி, கிளிநொச்சி மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.செ.ராஜ்குமார், கரைச்சி பிரதேச கலாசார உத்தியோகத்தர் திரு.வே.தர்மபாலன், கரைச்சி கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சரணியா ராசுதன், சட்டத்தரணி மற்றும் சட்ட உதவி ஆணைக்குழுவின் உத்தியோகத்தர் (கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம்) திரு.க.சௌந்தரராஜா, இயக்குநர் பண்டிதர் பரந்தாமன், கவின்கை கல்லூரி அருட்தந்தை யோசுவா அடிகளார், இயக்குநர். காவேரி கலாமன்றம் திரு.வி.தேவகுமார், இசையமைப்பாளர் செயல்வீரன், தலைவர், கிளிநொச்சி மாவட்ட கலைஞர் சங்கம் கிராம அலுவலர், கிளிநகர் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர், கிளிநகர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி, என பலர் கலந்து கொண்டனர்.

நாளை நோன்புப்பெருநாள்!

முஸ்லிம்களின் புனித நோன்புப் பெருநாள் நாளைய தினம் (31) திங்கட்கிழமை கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. 

இதன்போது ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதை அடுத்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடலாமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

முஸ்லிம்கள் 29-30 நாட்கள் பகல் முழுதும் இறைவனுக்காக நோன்பிருந்து மாலையில் உணவு உட்கொண்டு இறைவனை சந்தோசப்படுத்தியமைக்காக இந்த நோன்புப்பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.

ஸ்டிக்கர் விவகாரம்-இளைஞனின் அதிர்ச்சி தகவல்!

செய்திக்குறிப்பு – காவல்துறை தலைமையகம்

22/03/2025 அன்று கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவிவருவதாக இலங்கை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும், மேலும் சமூகத்தில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பது இலங்கை காவல்துறையின் முக்கிய பொறுப்பாகும் எனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டியது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை காவல்துறை குறித்த இளைஞனை கைது செய்து விசாரணையைத் தொடங்கியது.

இத்துடன் தொடர்புபட்ட குறித்த இளைஞன் தொடர்பான விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியதைத் தாண்டி சில வலுவான கருத்துக்களைக் கொண்டவர் என்பது தெரியவந்ததுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட பிற முக்கிய தகவல்களின் அடிப்படையில், அவர் ஏதோ ஒரு வகையில் பயங்கரவாதச் செயலைச் செய்யக்கூடிய நபர் என்ற நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் இணையம் மற்றும் பிற முறைகளைப் பயன்படுத்துவதால் அவர் சில உளவியல் உந்துதல்களுக்கு ஆளாகியுள்ளார் என்பது கவனிக்கப்பட்டதால், அந்த மனநிலையின் அடிப்படையில் மத தீவிரவாத செயல்களைச் செய்வதற்கான அவரது உணர்திறன் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்களை இலங்கை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபருக்குச் சொந்தமான கணினி வன்பொருள், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் மொபைல் போன்கள் குறித்து தடயவியல் பரிசோதனை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுபோன்ற கைதுகள் தொடர்பாக தவறான கருத்துக்கள் பரப்பப்படுவது நாட்டின் அமைதிக்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தவறான பிரச்சாரங்களால் ஏமாறாமல் நாட்டின் அமைதியையும் பல்வேறு சமூகங்களுக்கிடையே நிலவும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரங்குளியிலிருந்து ஏற்றுமதியாகும் டின்மீன்!

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற்கடவையாக வெளிநாட்டு ஏற்றுமதிக்கு

மதுரங்குளி Ocean food தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ocean star jack mackerel டின் மீன்களை ஏற்றுமதிக்கான கொள்கலன்களில் ஏற்றும் பணி நேற்று (29) தொழிற்சாலை வளாகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதற்தடவையாகும். அதன்படி, இந்த டின் மீன்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், புதிய அரசாங்கத்தின் “ஒரு வளமான நாடு, ஒரு அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்த நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக 2025 மார்ச் மாதம் 29, அன்று டின் மீன் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நாளாந்த டின் மீன் நுகர்வு மூன்று இலட்சம் என்றும், ஒரு நாளைக்கு ஐந்து இலட்சம் டின் மீன்களை உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாகவும், அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் டின் மீன் ஏற்றுமதி மூலம் 8 மில்லியன் டொலர்கள் நாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த ஒரு கொள்கலனில் 48,000 கேன்கள் உள்ளன. இதனூடாக, 38,000 – 40,000 டொலர் வரை அந்நியச் செலாவணியை நாட்டிற்கு பெற்றுக் கொள்ள முடியும்.

மீனவர்களால் பிடிக்கப்படும் தரமான மீன்களை தொழிற்சாலைக்கு கொண்டு வருவதற்கான விசேட திட்டத்தை Ocean food நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, உள்நாட்டு, மீன்பிடி படகுகளில் பிடிக்கின்ற மீன்களை, Ocean food நிறுவனம், நேரடியாக சென்று இரண்டு நாட்களுக்குள், பெற்று குளிர்பதன கிடங்கில் சேமிக்கப்பட்டு, உடனடியாக தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே, மீன் அறுவடைக்குப் பின்னதான சேதங்கள் எதுவும் இல்லை. மீன் அறுவடைக்குப் பின்னதான இழப்புகளைக் குறைப்பது இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும்.

ஏற்றுமதிக்கு மிகவும் பொருத்தமான மீன்களை உற்பத்தி செய்வதற்கும் இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும். இதனூடாக மீனவர்கள் கடலில் அதிக விலையைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் விரைவாக மீண்டும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கின்றது.

இதன் விளைவாக மீன் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் குறைந்துள்ளதாகவும், மீனவர்களுக்கு சிறந்த விலை கிடைத்துள்ளதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நுகர்வோர் குறைந்த விலையில் தரமான டின் மீன்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதாகவும் Ocen food நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தற்போது 21 டின் மீன் தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும், மீன்பிடித் திணைக்களத்தின் தரவுகளில் படி பதிவு செய்யப்பட்ட இரண்டாவது தொழிற்சாலை Ocean food நிறுவனம் என்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

பற்றி எறிந்த ரஷ்ய ஜனாதிபதியின் வாகனம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ சொகுசு limousine வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. 

மொஸ்கோவிலுள்ள பெடரல் பாதுகாப்பு சேவை தலைமையகத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்த ரஷ்ய ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த மகிழுந்தின் மதிப்பு 3,55,796 டொலர் எனக் கூறப்படுகிறது. 

மகிழுந்தின் இயந்திரத்தில் முதலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பிறகு அது மெல்ல உட்புறம் வரை பரவியுள்ளது. 

இந்த மகிழுந்து ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் ஜனாதிபதி சொத்து முகாமைத் துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. 

மகிழுந்து திடீரென வெடித்துச் சிதறக் காரணம் என்ன, இதன் போது உள்ளே யாராவது இருந்தார்களா என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதேவேளை அண்மையில் ஐரோப்பிய ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது ரஷ்யா ஜனாதிபதி இறந்துவிடுவார் என யுக்ரேன் ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.