இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக, திசைகாட்டி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார்.
தேசபந்து தென்னகோன் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொள்வது பாராளுமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தற்போது பிரச்சனை என்னவென்றால், முன்னாள் ஜனாதிபதி தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தது.
அந்த நியமனத்தை மேற்கொள்ளும்போது அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட்டதாக சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.
இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் மூலம் அவரது நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் அல்ல. நீதிமன்ற உத்தரவு இன்னும் அமுலில் உள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவு அமுலில் இருக்கும் அதே வேளையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் கையழுத்திட்டு தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு பிரேரணை சமர்ப்பித்துள்ளனர்.
2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், அத்தகைய பிரேரணையை அப்போது பதவியில் இருந்த பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
அதன்படி, உயர் நீதிமன்றத்தால் அவர் பொலிஸ்மா அதிபர் இல்லை என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது அரசியலமைப்புச் சட்டத்தின், 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க சிரேஸ்ட அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளுக்கு முற்றிலும் முரணானது.
அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்காக ஒரு குழுவை நியமிக்க வேண்டும், மேலும் அந்தக் குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இருக்க வேண்டும்.
எனவே உயர் நீதிமன்றம் அவர் பொலிஸ் மா அதிபர் இல்லை என்று இடைக்கால தடை விதித்துள்ளது.
மறுபுறம், பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்க விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எனவே, இது பாராளுமன்றத்தின் அதிகாரத்தை, குறிப்பாக சபாநாயகரால், கணிசமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும்.
ஏனென்றால் அவர்கள் செய்யப் போவது எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லாத ஒரு செயலாகும்….” என்றார்.
இது அரசியலமைப்புக்கு முரணானது!
ஆரம்பிச்சதே இப்போதான், அதுக்குள்ளேயேவா?
இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பெறப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வன்முறைச் செயல்கள் தொடர்பாக ஒரு முறைப்பாடும், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 179 முறைப்பாடுகளும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன.
பெறப்பட்ட 180 முறைப்பாடுகளில் இதுவரை 133 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் 47 முறைப்பாடுகளை தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மியன்மர் நிலநடுக்கம்-1600ஐ கடந்த உயிரிழப்பு!
மியான்மர் நாட்டில் நேற்று முன்தினம் (மார்ச்-28) இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின. இது, தாய்லாந்திலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.
பாங்காக் நகரில் சில வானுயர்ந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன. நில நடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1644 ஐ தாண்டியுள்ளது. 3,400 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே நேற்று ( மார்ச் 29) மாலை ரிக்டர் அளவில் 5.1 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து நய்பிடாவ், மண்டாலே உட்பட ஆறு பிராந்தியங்களில் அவசரநிலையை மியான்மர் ராணுவ அரசு அறிவித்தது. மண்டாலே நகரத்தின் அருகே இர்ரவாடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த, 90 ஆண்டுகள் பழமையான பாலம் உடைந்தது.
இந்த அதிர்வுகளால் கட்டடங்கள் சரிந்ததில், மியான்மரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644 ஐ தொட்டது. 3,400 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பெயரை மாற்றியமைக்காக கொதித்த சிறீதரன் எம்.பி!
ஆனையிறவு உப்பின் அடையாளப் பெயரை உறுதிசெய்க. : சிறீதரன் எம்.பி கோரிக்கை.
ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாணத்தின் கைத்தொழிற் பொருளாதார அடையாளங்களுள் ஒன்றான ஆனையிறவு உப்பளத்தை மீள ஆரம்பித்தமை காலத்தேவையான செயற்பாடாகும். 1937ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் 1938 ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஏறத்தாழ ஒன்பது தசாப்த பாரம்பரியம் மிக்க ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள் இன்றுமுதல் (29) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளித்தாலும், ‘ஆனையிறவு உப்பு’ என்ற அடையாளப் பெயர் ‘ரஜ லுணு’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
வடக்கு மாகாணத்தின் கைத்தொழிற் பேட்டைகளுள் முதன்மையானதும், முக்கியத்துவம் மிக்கதுமான ஆனையிறவு உப்பளம் என்பது எமது மக்களின் அடிப்படை வாழ்வியலோடு இணைந்த ஓர் அடையாளம் ஆகும். அத்தகையதோர் கைத்தொழிற் கட்டமைப்பை மீள ஆரம்பிக்கும் போது அதன் அடிப்படை அடையாளத்தை மாற்றம் செய்கின்றமை தங்கள் அரசாங்கத்தின் மீதான அபிமானத்தையும், இன நல்லிணக்கம் குறித்த தங்களின் சிந்தனைப் போக்கையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.
குறிப்பாக, கடந்த காலங்களில் இனத்துவ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அடையாளத் திணிப்புகளைப் போலவே, எமது மொழியியல் அடையாளத்தை சிதைத்து, பெரும்பான்மையினத்தின் தனித்துவத்தை வலிந்து புகுத்தும் இன மேலாதிக்கச் செயற்பாடாகவே இதனையும் கருத வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
கடந்த 2025.03.18 ஆம் திகதி, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22.7 இன் கீழ், ஆனையிறவு உப்பளம் குறித்து பாராளுமன்றில் நான் கேள்வி எழுப்பியபோது வலியுறுத்தியதற்கு அமைவாகவும், எமது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை ‘ஆனையிறவு உப்பு’ என்ற பாரம்பரிய பெயருடனேயே விற்பனை செய்வதை உறுதிசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.
சாலை விபத்தை தடுக்க விஷேட விழிப்புணர்வு!
சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி இன்று இடம்பெற்றது.
நாட்டில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு சாலை விபத்தில் ஒரு விலைமதிப்பற்ற மனித உயிர் இழக்கப்படுவதாகவும், அது இப்போது கட்டுப்படுத்த முடியாத சவாலாக மாறிவிட்டது என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வீதிப் பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) இன்று (29) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நடைபயணத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
சாலை விபத்துகளைத் தடுப்பதற்கான முறையான மற்றும் நிலையான வேலைத்திட்டம் இல்லாததால், சாலை விபத்துகளால் விலைமதிப்பற்ற உயிர்கள் அகால மரணம் அடைவது மிகவும் வருந்தத்தக்கது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் கல்வி, சுகாதாரம் மற்றும் சாலை அமைப்பு மிகவும் முன்னேறிய நிலையை எட்டியுள்ள இந்த நேரத்தில், சாலை விபத்துகள் மற்றும் சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து எந்த அறிவியல் விசாரணையும் நடத்தப்படவில்லை. மேலும் நாட்டில் இது தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களோ அல்லது ஆய்வுகளோ நடத்தப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.
“சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட இந்த நடைபயணம். இன்று (29) காலை கொழும்பு காலி முகத்திடலில் இருந்து தொடங்கி, லிபர்ட்டி சுற்றுவட்டம் வழியாக விஹாரமஹாதேவி பூங்காவை அடைந்த பின்னர், பொதுமக்கள் விழிப்புணர்வு விழாவுடன் நிறைவடைந்தது.
இந்த பேரணியை சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம், இலங்கை மருத்துவ சங்கம், சாலை போக்குவரத்து விபத்து தடுப்பு தொடர்பான SLMA நிபுணர் குழு பாதுகாப்புப் படைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
கடந்த ஆண்டு சாலை விபத்துகளால் கிட்டத்தட்ட 2,200 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, வாகன விபத்துகளின் செலவு, சுகாதார சேவையில் ஏற்படும் சிரமம் மற்றும் பிரச்சினைகள் போன்ற இந்த அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, நாட்டின் செலவினங்களில் சுமார் 3.7 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது.
இது சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பெறப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்பட்டது.
இந்த பேரணிக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், சிறப்பு மருத்துவர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டாக்டர் அசேல குணவர்தன. இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சிறப்பு மருத்துவர் சுரந்த பெரேரா, செயலாளர் ஆசிரி ஹேவமவகே. இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த ரொட்ரிக் உலக சுகாதார அமைப்பின் நாட்டு பிரதிநிதி டாக்டர் அழகா சிங் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர், மூத்த பேராசிரியர் கபில் சி. ஆகியோர் தலைமை தாங்கினர்
கே. பெரேரா, மூத்த கிரிக்கெட் வீரர்கள் சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா, மோட்டார் பந்தய சாம்பியன் டிலந்த மலகமுவ பொது பிரதிநிதிகள், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகம் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சகங்கள் முப்படைகள் மற்றும் காவல்துறை, அரசு சாரா நிறுவனங்கள், சமூக அடிப்படையிவான அமைப்புகள், தனியார் துறை மற்றும் வணிக சமூகம், கலைஞர்கள் மற்றும் பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

ஆனையிறவில் உப்புத் தொழிற்சாலை!
தேசிய உப்புக் கம்பனியுடன் இணைந்த ஆனையிறவு உப்புத் தொழிற்சாலை இன்று மக்கள் பாவனைக்கு.
தேசிய உப்புக் கம்பெனியின் கீழ் இயங்கும் ஆனையிறவு உப்பளத்தின் தேசிய உப்புத் தொழிற்சாலையை தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி இன்று (29) முதல் மக்கள் பாவனைக்கு திறந்துவைத்தார்.
“ரஜ லுணு” எனும் பெயரில் சமையல் உப்பு வர்த்தக பேருடன் அறிமுகப்படுத்தப்படுவதுடன் அந்த தொழிற்சாலை ஊடாக மிகவும் சாதாரண விலையில் சமையல் உப்பு சந்தைக்கு வழங்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தொழிற்சாலையின் தலைவர் கயான் வெள்ளால தெரிவித்தார்.
தொழிற்சாலை ஊடாக இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதற்கும் எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
குறித்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சுகாதார அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
நாட்டில் ஆண்டுதோறும் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% தொற்றா நோய்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார தரவுகளுக்கு அமைய, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அவர்களில் உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியாமல் இருப்பதால், ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் பக்கவாதத்திற்கு ஆளாகின்றனர். இதில் சுமார் 4,000 பேர் ஆண்டுதோறும் உயிரிழப்பதாகவோ அல்லது ஊனமுற்ற நிலைக்கு ஆளாவதாகவோ சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அதேபோல், நாட்டின் சிரேஷ்ட பிரஜைகள் மக்கள்தொகையில் 20% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 41% பேர் சிகிச்சை பெறுவதில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் முதன்மை சுகாதார சேவை முறைமையின் தரம் மற்றும் அணுகலை மேம்படுத்துவதற்காக உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள “முதன்மை சுகாதார சேவை முறைமை அபிவிருத்தி திட்டத்தை” அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
தலைமன்னாரில் சிக்கிய 46 கஞ்சா பொதிகள்!
தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்று (28) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த பெருமளவான கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
சுமார் 124 கிலோ 392 கிராம் ஈரமான எடையுடன் மீட்கப்பட்டுள்ளது.
தலைமன்னார், மணல் திட்டு 1 மற்றும் 2 இற்கு இடையிலான கடல் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு கப்பல் ரோந்து குழுவை நிலைநிறுத்தி விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் போது குறித்த கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 46 சந்தேகத்திற்கிடமான பொதிகளை அவதானித்து சோதனை செய்தபோது, அந்தப் பொதிகளில் பொதிச் செய்யப்பட்டிருந்த சுமார் 124 கிலோ 392 கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கையினால் கரைக்கு கொண்டு வர முடியாததால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படகின்றதுடன், இதன் மதிப்பு 49 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நிலநடுக்கத்தினால் ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு!
மியான்மரில் நேற்று ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரையில் 1,002 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும், குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி 2,300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன.
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

மரத்திலிருந்த விழுந்தவனை மாடு குத்தியதா போச்சு!
ஏ 35 பிரதான வீதியா புளியம்பொக்கனை பகுதியில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு
கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் கிராம அலுவலர் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம், அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்கச் சங்கிலியை அறுத்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
குறித்த பெண் அணிந்திருந்த மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி அபகரித்து தப்பிச் சென்றுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விரைவாக செயல்பட்ட தர்மபுர போலீசார் சந்தேக நபரை துரத்திச் சென்று இராமநாதபுரம் பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து குறித்த பெண்ணிடம் அபகரிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை மீட்டதுடன், அவர்களிடமிருந்து 2.25 மில்லிகிராம் ஹெராயின், 20 கிராம் கேரளா கஞ்சா மற்றும் திருட்டில் ஈடுபடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தடையப் பொருட்கள் மற்றும் சந்தேக நபரை இன்றைய தினம் 28.03.2025 கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது மேலதிக விசாரணைகளுக்காக இரண்டு சந்தேக நபர்களையும் மீண்டும் தர்மபுரம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்












