Home Blog Page 290

கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை!

ஒருவரை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைசெய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பொலன்னறுவை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

தனது நண்பரை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்ட குறித்த பிரதிவாதி ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அதன்படி, கொலைக் குற்றத்திற்காக பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக கூறிய மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதியை கண்டி பல்லேகலையில் உள்ள தும்பர சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில் அவர் இறக்கும் வரை தூக்கு மேடையில் தூக்கிலிட உத்தரவிடுவதாகக் தெரிவித்தார். 

2015 நவம்பர் 1 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தின் அதிகார பிரிவிற்கு உட்பட்ட கவுடுல்லவில் பி.ஜி. ரன்பண்டாவை மண்வெட்டியால் வெட்டிக் கொன்றதாகக் கூறி, இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 296 இன் கீழ், பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். 

பொலன்னறுவை, கவுடுல்ல பகுதியைச் சேர்ந்த காமினி ரணவீர என்ற நபருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

பிரதிவாதியான காமினி ரணவீர, உயிரிழந்தவரின் மனைவியுடன் கொண்டிருந்த கள்ளக்காதலின் விளைவாகவே இந்தக் கொலை நடந்ததாக நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

பா.உ சுகத் வசந்த த சில்வாவுக்கு கிடைத்த கெளரவம்!

இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தெரிவு

பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி முன்மொழிந்ததுடன், எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க அதனை வழிமொழிந்தார். கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் அண்மையில் (11) பாராளுமன்றத்தின் இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

அத்துடன், ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவராக எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த குமார முன்மொழிந்ததுடன், சட்டத்தரணி சுசந்த தொடாவத்த வழிமொழிந்தார். அத்துடன், மற்றுமொரு பிரதி இணைத் தலைவராக (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் முன்மொழிந்ததுடன், அஜித் பி.பெரேரா வழிமொழிந்தார்.

இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இந்த ஒன்றியம் ஸ்தாபிப்பது சமத்துவம், நீதி மற்றும் உள்ளடக்கிய தன்மை என்பன தொடர்பில் நாம் அனைவரும் இணைந்து எடுக்கும் ஒரு முக்கியமான படியாகும் என்று சுட்டிக்காட்டினார். இயலாமையுடைய நபர்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் திருப்தி அடைந்து சமமாக நடத்தப்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே தூரநோக்காக இருக்க வேண்டும் என்றும், அதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஏனைய சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்யும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் புதிய தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா, தன்னை ஒன்றியத்தின் தலைவராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்தார். பாராளுமன்றம் என்ற ரீதியில் இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் முழு நாடும் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை உணர்திறன் மிக்கதாகவும், நேர்மையானதாகவும் மாற்றுவதே ஒன்றியத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். இயலாமைய உடைய நபர்களுக்காகத் தற்பொழுது நடைமுறையில் உள்ள 28 வருடங்கள் பழமையான சட்டத்தை மறுசீரமைத்து தற்காாலத்திற்குப் பொருத்தமான சட்டமாக மாற்றுவது, தற்பொழுது காணப்படும் தேசிய கொள்கையை எதிர்காலத்திற்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஒன்றியம் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார். பொது நிறுவனங்களுக்கான அணுகல் வசதிகள் இயலாமையுடைய நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 14 வருடங்கள் கடந்துள்ளபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்த ஒன்றியத்தின் ஊடாகத் தேவையான தலையீடு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நாகவில்லு மாணவியை தேடிவந்த அதிஷ்டம்!

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறு புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலை மாணவியின் வாழ்வில் பெரும் அதிஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்த 2024 புலமைப்பரிசில் பரீட்சையில் புத்தளம் மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 138 என வெளியாகியிருந்த நிலையில், பர்சான் பாத்திமா சபிய்யா எனும் மாணவி 137 புள்ளிகளை பெற்று பரீட்சையில் சித்திபெற தவறியிருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவி, ஒரு புள்ளி வித்தியாசத்தில் சித்திபெற தவறியமையால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார்.

இறைவன் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையாலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் குறித்த பரீட்சை வினாத் தாள்களை மீள்திருத்த விண்ணப்பித்திருந்த மாணவிக்கு மகிழ்ச்சியான பெறுபேறு கிடைத்துள்ளது.

பரீட்சை வினாத் தாள் மீள்திருத்ததின் பின்னர் புத்தளம் நாகவில்லுவில் வசிக்கும் பர்சான் பாத்திமா சபிய்யா எனும் மாணவி 139 புள்ளிகளை பெற்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் மேலதிக ஒரு புள்ளியினால் சித்திபெற்றுள்ளார்.

இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தான் இறைவன் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற பரீட்சைகளில் சித்திபெற தவறும் மாணவர்கள் கண்டிப்பாக வினா தாள்களை மீள்திருத்தம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

கல்வியில் இவ்வாறு சாதிக்க துடிக்கும் பிள்ளைகளை ஊக்குவிக்கும் பொறுப்பு சமூக ஊடகங்களுக்கும் இருக்கின்றது என்பதை நினைவூட்டுகிறோம்.

வடக்கில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம்!

இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புது குடியிருப்பு வலயகல்வி பணிமனைக்குட்ப்பட்ட விசுவமடு பாரதி வித்யாலயத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் தினம் 12.03.2025 மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக திறந்துவைக்கப்பட்டது.

குறித்த ஆய்வு கூடத்தை பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்களினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது.

இதில் விஞ்ஞான ஆய்வு கூடம், மாணவர்களின் நவீன கல்வி செயற்பாட்டுக்காக கணினிமையம் மற்றும் நூலகம் அடங்கலாக நவீன புதிய கட்டிடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் முல்லைத்தீவு வளைய கல்வி பணிப்பாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

கிளிநொச்சியில் சுற்றுலா மையம்!

கிளிநொச்சி குளப் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்று ஆளுநர் அவர்களால் திறந்து வைப்பு!

கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு இன்று 12.03.2025 குறித்த சுற்றுலா மையம் திறந்துவைக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுற்றுலா மையத்தை சமய நிகழ்வுகளுடன் திறந்து வைத்தார்.

கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்புறமாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உருவாக்கப்பட்ட சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முகமாக, கிளிநொச்சி குளத்தினுள் விசைப் படகு, துடுப்பு படகு சவாரி ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாரம்பரிய உணவுகள், இயற்கை குளிர்பானங்கள் என்பனவும், சிறுவர்களுக்கு எற்ற விளையாட்டுகள் என இவ் சுற்றுலா மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இன் நிகழ்வில் வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன், வைத்தியர்கள், அரச அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

எஸ்.எச்.எம். நியாஸுக்கு புதிய பதவி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதி நிதியாக முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான எஸ்.எச்.எம்.நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான கடிதம் புத்தளம் மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினராக தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த எஸ்.எச்எம்.நியாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நீண்டகால உறுப்பினராகவும், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகவும் அரசியலில் தடம் பதித்துள்ளார்.

அதேவேளை பாராளுமன்றத் தேர்தல்களிலும் பல முறை வேட்பாளராக போட்டியிட்டுள்ள எஸ்.எச்.எம்.நியாஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார்.

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், மாவட்டத்தில் சகல சமூகத்தினருக்காகவும் செயலாற்றிவரும் ஒருவர் என்பதினால் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு நியமனம் செய்யப்பட்டமைக்கு கட்சியின் தலைமைத்துவத்திற்கும், பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் அவர்களுக்கும், கட்சியின் அங்கத்தவர்களும், கட்சியின் போராளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை விடுதியில் திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில்  பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுட்டிருந்தனர்.

இதனை அடுத்து சந்தேகநபர் இன்று புதன்கிழமை (12)  கல்னேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையை கண்டித்தும்  மற்றும்  சந்தேக நபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்பரிப்பில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு!

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தின் ஊடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார். 

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நேற்று (11) இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலுக்கே இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது. 

பாடசாலை மட்டத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் தற்போது இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் கபிலாசால் அண்மையில் புத்தாக்க போட்டிக்காக கண்டுபிடிக்கப்பட்டு தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்களிப்பு இயந்திரத்தை பயன்படுத்தி வாக்களிப்பு செயற்பாடு இடம்பெற்றிருந்தது. 

மாணவனினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் இலங்கையின் முதல் முறையாக ஒரு தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தமை இதுவே முதல் தடவையாகும். 

இலங்கை தேர்தல் முறையில் கடதாசி பாவனை இல்லாது இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கோடு குறித்த மாணவரினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொறிமுறை முதன் முறையாக மாணவர் பாராளுமன்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இந்த ஆரம்ப நிகழ்வில் வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ், வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் த. முகுந்தன், பாடசாலை அதிபர், அயல் பாடசாலை அதிபர்கள், கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் முன்னிலையில் வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு வாக்களிப்பும் இடம்பெற்றிருந்தது. 

இதன் பின்னர் குறுகிய நேரத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தமையும் விசேட அம்சமாகும். 

புத்தளம் பிரதேச சபை வேட்பாளராக லரீப் காசிம்!

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் புத்தளம் பொத்துவில்லு வட்டாரத்தின் புத்தளம் பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவுசெய்யும் விஷேட கூட்டம் கடந்த ஞாயிறு (09.03.2025) இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி வட்டாரக் கிளை தலைவர் திரு ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், வேட்பாளருக்காக சுமார் 8 பேர் வரை விண்ணப்பித்திருந்ததுடன், புத்தளம் பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவுசெய்யும் ஆலோசனை மிகவும் காரசாரமாக இடம்பெற்றது.

வேட்பாளருக்காக விண்ணப்பித்திருந்த 8 பேரில் 5 பேர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஜனாப் லரீப் காசிம், ஜனாப் தாஜுதீன் மற்றும் ஜனாப் ரஸ்மின் ஆகிய மூவருக்கிடையில் கடும் போட்டி நிலவியதுடன், இறுதி முடிவுகள் எட்டப்படாமல் எஞ்சியிருந்தனர்.

கூட்டத்திற்கு வருகை தந்திருந்த சபையோரின் அனுமதியுடன், எஞ்சியிருந்த மூன்று பேருக்குமான பொதுமக்கள் வாக்கெடுப்பு ஜனநாயக முறைப்படி நடைபெற்றது.

இதில் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் வாக்களித்ததுடன், அதிகப்படியான பொதுமக்களின் வாக்குகளினால் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஜனாப் லரீப் காசிம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை 2018ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தளம் பிரதேச சபை தேர்தலில் ஜனாப் லரீப் காசிம் தோல்வியடைந்திருந்ததுடன், அவரோடு போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஜனாப் சதக்கத்துல்லா ரிஜாஜ் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பா.உ Dr. அர்ச்சுனாவுக்கு உலமா சபை கண்டனம்!

2025.03.08 ஆம் தேதி, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Dr. ராமநாதன் அர்ச்சுனா தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பில் அறிவீனமாக கருத்து வெளியிட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாக கண்டிக்கின்றது.

மார்க்க விவகாரங்கள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள் குறித்து போதிய அறிவின்றி கருத்து வெளியிடுவது, சமூகங்களிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி, குறிப்பிட்ட நம்பிக்கைகளை பின்பற்றி வாழும் சமூகத்தின் மத உணர்வுகளை தூண்டும் நிலையை உருவாக்கக் கூடும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில், மார்க்க அடிப்படைகளுக்கு முரணில்லாத வகையில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறான மத சார்ந்த முக்கியமான விடயங்கள் தொடர்பாக பொது மன்றங்களில் கருத்து வெளியிடும் போது, மிகுந்த நாகரிகத்தோடும், தெளிவோடும், பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் நடந்து கொள்வதே மிகவும் சிறந்ததாகும்.

Dr. அர்ச்சுனா உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மதங்கள் பற்றிய முக்கியமான விடயங்களில் தேவைப்படுமாயின் அவற்றை பேசுமுன், அந்தந்த மதங்களின் உயர்பீடங்களிடம் தெளிவு பெற்ற பின்னரே கருத்து தெரிவிப்பது முறையாகும்.

அவ்வாறே இஸ்லாத்தை பற்றிய தெளிவுகள் தேவைப்படுமாயின், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் தொடர்பு கொண்டு, முறையாக தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.