Home Blog Page 291

கிளிநொச்சியில் கடையடைப்பு!

கிளிநொச்சி சேவை சந்தையினர் இன்றைய தினம் 11.03.2025 கடையடைப்பு செய்து கவனயீர்ப்பு போராட்டம் ஒண்றினை முன்னெடுத்துள்ளனர்.

நீண்டகாலமாக தற்காலிக தகரக் கொட்டகைகளில் வர்த்தகத்தில் ஈடுபடும் புடைவை, அழகுசாதன மற்றும் ஏனைய வாணிப வர்த்தகர்களுக்கு நிரந்தரக் கட்டடத்தை கட்டித் தருவதாக பலதரப்பினராலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதிலும் இதுவரை காலமும் அவை நிறைவேற்றப்படாமல் இருப்பதையிட்டு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தற்போது உலக வங்கியின் அனுசரணையில் 40 மில்லியன் நிதியில் மேற்படி வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கரைச்சி பிரதேச சபையால் திட்டமிடப்பட்டு 08 கடைகள் அமைக்கப் பெற்று தற்போது வர்த்தகர்களுக்கு எதுவித பயனும் இன்றி கேள்வி கோரல் மூலம் (டென்டர்) கடைகளை வழங்க பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளமையானது வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் செயலாகும் என கிளிநொச்சி சேவை சந்தையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கிளிநொச்சி சேவை சந்தையினர் தமக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது;

  1. 04.06.2024 அன்று வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் வர்த்தகர் அபிவிருத்திச் சங்க மற்றும் உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட்ட தற்காலிக கடைகளை A9 வீதியையும், கனகபுர வீதியையும் பார்க்கக் கூடியவாறு வழங்குதல் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  2. ஏற்கனவே அரச திணைக்களத்தால் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் கிளி சேவைச்சந்தை வர்த்தகர்களுக்கு கட்டடங்களைக் கட்டி வாழ்வாதார கடைகளாக வழங்குவதாகவே உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்ததும் இவ்விடயத்தில் வர்த்தகர்களாகிய நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
  3. பொதுவாக கிளிநொச்சி சேவைச்சந்தையின் பிரதான மரக்கறி வாணிபம், மீன் வாணிபம், புலால் வாணிபம், பழ வாணிபம் போன்றவற்றுக்கு இடையூறாக சேவைச்சந்தையினை அண்மித்த பகுதிகளில் மேற்படி வியாபாரங்களை மேற்கொள்ள கரைச்சி பிரதேச சபை அனுமதித்துள்ளமையால் சேவைச்சந்தை வர்த்தகர்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர்.
  4. அம்பாள்குளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் மொத்த வியாபாரம் எனப் பெயரிடப்பட்டு தற்போது அங்கு காலை 5.00 மணி தொடக்கம் மாலை 10.00 மணி வரை சில்லறை வியாபாரம் நடைபெற்று வருதலும் அங்கு வரிநடைமுறை பின்பற்றப்படாமையால் சேவைச்சந்தைக்கு உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் வருகை தரும் வீதம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.
  5. கிளிநொச்சி சேவைச்சந்தையின் மரக்கறி, வெற்றிலை. மீன். பழ வாணிபம் அனைத்து வாணிபங்களுக்கும் 4% சதவீத வரி அறவீட்டால் உற்பத்தியாளர்களின் வருகையும், சந்தைப்படுத்தும் வாய்ப்பும் குறைந்துள்ளது.
  6. கிளிநொச்சி சேவைச்சந்தையை அண்மித்த பகுதியில் நடைபெறும் நடைபாதை வியாபாரங்களால் சேவைச்சந்தை முற்றுமுழுதாக செயல் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
  7. கரைச்சி பிரதேச சபையால் நிரந்தர கட்டடங்களுக்கான முறையற்ற திட்டமிட்ட இடவாடகை அதிகரிப்பும் சேவைச்சந்தை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
  8. சேவைச்சந்தையின் வர்த்தகர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய நேரம் முழு வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தவர்கள் கவனையீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் இன்றைய தினம்11.03.2025 இதற்கான உரிய தீர்வு வழங்கப்பபடாவிட்டால் தொடர் போராட்டத்தை சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், தமக்கான உரிய தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து தமக்கான தீர்வினை பெற்று தர வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளனர்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விஷேட கூட்டம்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் விசேட கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இன்று(10) ஒலுவிலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். உதுமாலெப்பை, பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீ.சமால்தீன், உயர் பீட உறுப்பினர்கள், மத்திய குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

வடக்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

தேர்தல் காலங்களில் மாத்திரம் கூட்டாக இல்லாமல் தொடர்ந்து பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்தும் கூட்டணியாக செயற்பட தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி, ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை இன்று (10-03-2025) கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியபின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பொருட்டு சமத்துவ கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் இன்று பகல் ஒரு மணிக்கு மூன்று சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ஏழு கட்சிகள் அங்கம் வகிப்பதுடன், தமிழ் மக்கள் ஒற்றுமை பற்றியும், தமிழ் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அவர்களது அபிலாசைகளின் அடிப்படையில் இது ஒரு தேர்தல் கூட்டாக அல்லாமல் தொடர்ந்தும் பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக இருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

இரண்டு நாட்களில் 1000 பேர் பலி!

சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபா் பஷாா் அல்-அஸாதின் ஆதரவாளா்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில் ரஷியா மற்றும் ஈரான் உதவியுடன், நாட்டின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளை அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் மீட்டது.

பின்னா், கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சண்டை நீண்ட காலமாக தேக்கமடைந்திருந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் அரசுப் படைகளுக்கு எதிராக ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) படையின் தலைமையில், திடீரென கிளா்ச்சிப் படையினா் தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் தலைநகா் டமாஸ்கஸை கைப்பற்றினா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியை இழந்த அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றாா்.

இதையடுத்து ஹெச்டிஎஸ் கிளா்ச்சிப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா, அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டாா்.இந்நிலையில், அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும், புதிய அரசின் படையினருக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது.

இந்த மோதல் தொடா்பாக அந்த நாட்டுப் போா் விவகாரங்களைக் கண்காணித்துவரும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்ததாவது:

சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபா் அல்-அஸாதின் ஆதரவாளா்களுக்கு இடையே நடைபெற்ற மோதல், பழிக்குப் பழியாக நடைபெற்ற கொலைகளால் 2 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்ற இந்த சம்பவங்களில் பொதுமக்கள் 745 போ், அரசுப் பாதுகாப்புப் படையினா் 125 போ், அஸாதுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களைச் சோ்ந்த 148 போ் கொல்லப்பட்டனா்.

சிரியா உள்நாட்டு மோதலில் நடைபெற்ற மிகப் பெரிய படுகொலைகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அகமது அல்-ஷரா அரசுக்கு ஆதரவான சன்னி முஸ்லிம் துப்பாக்கி ஏந்திய ஆயுதக் குழுவினா், அலவைட் சிறுபான்மையினரை சுட்டுக் கொன்றனா். அப்போதுமுதல் அங்கு பழிக்குப் பழியாகக் கொலை சம்பவங்கள் நிகழ்ந்தன.

அலவைட் சிறுபான்மையினா் சுட்டுக் கொலை: அஸாதுக்கு பல்லாண்டுகளாக அலவைட் மத சிறுபான்மையினா் ஆதரவு அளித்து வந்தனா். அஸாத் அரசில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு முகமைகளில் அலவைட் பிரிவைச் சோ்ந்தவா்கள் உயா் பொறுப்புகளை வகித்தனா்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அகமது அல்-ஷரா அரசுக்கு ஆதரவான சன்னி முஸ்லிம் துப்பாக்கி ஏந்திய ஆயுதக் குழுவினா், அலவைட் சிறுபான்மையினரை சுட்டுக் கொன்றனா்.

அப்போதுமுதல் அங்கு பழிக்குப் பழியாகக் கொலை சம்பவங்கள் நிகழ்ந்தன.இதுகுறித்து அந்தச் சிறுபான்மையினா் வசிக்கும் கிராமங்கள் மற்றும் நகா்ப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கூறுகையில்,

‘தங்கள் வீட்டு வாசல் அல்லது வீதிகளில் அலவைட் மக்களை துப்பாக்கி ஏந்திய ஆயுதக் குழுவினா் சுட்டுக் கொன்றனா். அவா்களில் பெரும்பாலானோா் ஆண்கள். பல வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. பல வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள மலைகளில் தஞ்சமடைந்துள்ளனா்’ என்று தெரிவித்தனா்.

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி!

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும்,கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னியின் வெற்றிபெற்றதாக அறிவித்தார்.

லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ட்ரூடோவுக்குப் பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் பதவியேற்கவிருக்கிறார்.

யார் இந்த மார்க் கார்னி?மார்க் கார்னி 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராகப் பணியாற்றியுள்ளார்.

2011 முதல் 2018 ஆம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தலைமைப் பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவிகித வாக்குகளாகும்.

அவரை எதிர்த்து போட்டிட்டவர்களான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் 11,134 வாக்குகளையும், கரினா கோல்ட் 4,785 வாக்குகளையும், பிராங்க் பேலிஸ் 4,038 வாக்குகளையும் பெற்றிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

வடக்கில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றது.

சுதந்திரப் பறவைகளின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வு, கூட்டுறவு மண்டபத்தில் 08.03.2025 இன்று காலை 10.00 மணியளவில் சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் தலைவி திருமதி முராளினி தினேஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பங்குபற்றியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சி.வி.கே சிவஞானம் ஆகியோர்கள் பிரதமர அதிதிகளாக கலந்து கொண்டு பன்னாட்டு மகளிர் தினத்தை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

ஹஷீஷ் போதைப்பொருள் நாட்டுக்குள்!

பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் வருகைதந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண் நேற்று (09) இரவு விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய கனேடிய இளங்கலை பட்டம் பெறவிருக்கும் மாணவி என்பதோடு, இவர் இலங்கைக்கு வருகைதரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

அவர் கனடாவின் டொராண்டோவிலிருந்து இந்த போதைப்பொருட்களை அபுதாபிக்கு கொண்டுவந்திருந்தார். அங்கிருந்து, இரவு 8.35 மணிக்கு எதிஹாட் எயார்வேஸ் விமானம் EY-396 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 

அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 3 போர்வைகளில் சுற்றப்பட்ட 17 கிலோகிராம் 573 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

இளம் பெண்ணும் அவர் கொண்டு வந்த போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தேசபந்துவின் சொத்துக்கள் பறிமுதல்?

தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். 

இன்று (09) முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

புணர்வாழ்வு வைத்தியசாலையில் தற்கொலை!

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள புணர்வாழ்வு வைத்தியசாலையில் தூக்கிட்டு தன்னை தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.

போதை பழக்கத்திற்கு உட்பட்டவர் என சந்தேகிக்கப்படும் குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து புனர்வாழ்வு பெறுவதற்காக நேற்றைய தினம் (08.03.2025) தர்மபுரம் புணர்வாழ்வு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமா இனம்காணப்பட்ட குறித்த நபர் கருவா கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். லக்சன் என்பவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்கள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நிருபர் ஆனந்தன்

வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சோதனை முயற்சியாக நேற்று செலுத்திய ‘ஸ்டார்ஷிப் பிளைட் டெஸ்ட் 8’ எனும் ராக்கெட் என்ஜின் கோளாறு காரணமாக நேற்று வெடித்துச் சிதறியது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், செயற்கைக்கோள் ஏவும் செலவை குறைக்கும் முயற்சியாக ஸ்டார்ஷிப் ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் செயற்கைக்கோளை விண்ணில் ஏவிவிட்டு கடலில் விழாமல், மீண்டும் பூமிக்கும் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ல் இருந்து இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டை டெஸ்ட் பிளைட் என்ற பெயரில் வரிசையாக சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். அதில் நேற்று எட்டாவது ஸ்டார்ஷிப் சோதனை ராக்கெட், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் புறப்பட்ட இரண்டரை நிமிடங்களில் அதில் உள்ள பூஸ்டர் எனப்படும் உந்துசக்தி சாதனம் வெற்றிகரமாக மீண்டும் ஏவுதள கோபுரத்திற்கு திரும்பியது.

இதற்கிடையில், ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்கள் முழுமையாக மேலோக்கி செல்லும் முன்பாக இயக்கத்தை நிறுத்தின.

இதனால் விண்ணில் ஏவப்பட்ட 17 நிமிடங்களில், இரண்டாம் கட்ட இன்ஜின் பழுதடைந்து ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து வளிமண்டலத்திற்குள் நுழைந்து டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளின் மேல் வெடித்துச் சிதறியது. இதே இடத்தில்தான் கடந்த ஜனவரியில் ஏவப்பட்ட, ஸ்டார்ஷிப்பின் ஏழாவது ராக்கெட் வெடித்தது.

சேவை பாதிப்பு

இதுவரை ஏவப்பட்ட எட்டு ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளில் நான்கு வெற்றியடைந்துள்ளன. நான்கு தோல்வியில் முடிவடைந்துள்ளன.

நேற்று முன்தினம் வானில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பாகங்களால், மியாமி, போர்ட் லாடர்டேல், பாம் பீச் மற்றும் ஆர்லாண்டோ விமான நிலையங்களுக்குச் செல்லும் விமானங்கள் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டன. அதன்பின் விமானப் போக்குவரத்து சீரடைந்தது.