Home Blog Page 293

வடக்கிற்கு அடிக்கடி செல்லும் அரசாங்கம்!

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிகளுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வடக்குக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ள கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி, கிளிநொச்சிக்கும் விஜயம் மேற்கொண்டு ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார்.

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு முதலில் சென்ற அமைச்சர், உப்பு உற்பத்தியின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், நவீன இயந்திரங்கள் கொண்டு அடுத்த மாதத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ள உப்பு உற்பத்தி செயற்பாட்டின் முன்னேற்றத்தினையும் பார்வையிட்டார்.

மேலும் உப்பு உற்பத்தி செய்யும் ஏனைய இடங்களையும் பார்வையிட்டார்.

அமைச்சருடன் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.சிறீபவாணந்தராஜா ஆகியோரும் தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர், கண்டாவளை பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலை பகுதிக்கு சென்ற அமைச்சர் மற்றும் குழாமினர் தொழிற்ச்சாலையின் மீள் இயக்கம் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

மின்சார சபையின் இலாபம் 99% வீழ்ச்சி!

கடந்த 2024 டிசம்பர் 31 உடன் நிறைவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபையின் நிகர இலாபம் 99% வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதானமாக மின்சார சபையின் வருமானம் குறைதல் மற்றும் விற்பனை செலவு உயர்வே இந்த நிலைமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

2024 டிசம்பர் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் மின்சார சபையின் வருமானம் 111.80 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 156.25 பில்லியனில் இருந்து 28% குறைவாகும்.

இதற்கிடையில், மின்சார சபையின் விற்பனை செலவுகள் 78.03 பில்லியனாக இருந்து, இந்த காலாண்டில் இது 49% வீத அதிகரிப்புடன் 116.29 பில்லியனாக அதிகரித்துள்ளது.

இதன் பின்னணியில் கடந்த 2023 டிசம்பர் காலாண்டில் 78.22 பில்லியன் ரூபாவாக பதிவான மின்சார சபையின் மொத்த இலாபம், கடந்த காலாண்டில் 4.49 பில்லியன் வரையில் 106% வீதத்தால் குறைவடைந்துள்ளது.

மின்சார சபையானது 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் 3.04 பில்லியன் இயக்க இழப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. 2023 டிசம்பர் காலாண்டில், 91.97 பில்லியன் செயல்பாட்டு இலாபத்தை பதிவு செய்ய முடிந்துள்ளமை விசேட அம்சமாகும். இருப்பினும், 2024 டிசம்பர் காலாண்டின் நிதி வருமானம் மற்றும் செலவுகளை சரிசெய்த பிறகு, மின்சார சபையின் நிகர இலாபம் 603 மில்லியனாக ரூபாவாக பதிவாகியுள்ளது.

இது 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டின் நிகர இலாபத்துடன் ஒப்பிடும் போது, 99% சதவீத குறைவு எனவும் தெரியவந்துள்ளது.

ராஜிதவுக்கும் ரோஹிதவுக்கும் இடையில் மோதல்!

கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணவும், புதிய முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை செப்டெம்பர் 30ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இந்த மனு இன்று (06) நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், களுத்துறை தெரிவத்தாட்சி அதிகாரி, களுத்துறை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர். 

கடந்த பொதுத்தேர்தலின் போது களுத்துறை மாவட்டத்தில் விருப்பு வாக்குகளை எண்ணுவதில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியாமல் போனதாக மனுதாரர் தெரிவித்தார். 

தனக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான விருப்பு வாக்குகளில் உள்ள வித்தியாசம் 119 வாக்குகள் மட்டுமே என்றும், வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், கடந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியில் களுத்துறை மாவட்டத்திற்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை மீண்டும் கணக்கிட்டு புதிய முடிவுகளை வெளியிடுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். 

மனுதாரர் சார்பாக சட்டத்தரணி கீர்த்தி திலகரத்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ​பைஸ் முஸ்தபா ஆகியோர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு, ஐவர் பலி!

பாகிஸ்தானில் குண்டு வெடித்து, 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

கடந்த மார்ச் 4ம் தேதி, பாகிஸ்தானில் ராணுவ முகாமின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகினர்; 16 பேர் காயமடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு, ‘தெஹ்ரீக் – இ – தலிபான் பாகிஸ்தான்’ என்ற பயங்கரவாதக் குழுவின் துணை அமைப்பான ‘ஜெய்ஷ் – அல் – புர்சான்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில், மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் ஐ.இ.டி., வகை குண்டு வெடித்து, 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்ப்ராஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பயங்கரவாதம் அனைத்தும் அழிக்கப்படும். அமைதிக்கு விரோதமாக செயல்படுவர்களின் தீய நோக்கங்கள் தோல்வி அடையும். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

19 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை 19 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, இவற்றில் 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். 

ஏனைய 7 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இருப்பினும், மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, 68 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்ட 6 T56 ரக துப்பாக்கிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏனைய வகையான 5 கைத்துப்பாக்கிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக புத்திக மனதுங்க தெரிவித்தார். 

குறித்த குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 8 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்கள், ஒரு வேன் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

காணாமல்போன தேசபந்து தென்னகோன்!

கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார். 

முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பல பொலிஸ் குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், அவர் தற்போது சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் தலைமறைவாக உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். 

நீதிமன்ற உத்தரவை மீறி தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே நடைமுறையின் கீழ், முன்னாள் பொலிஸ்மா அதிபரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், யாராவது அவர் தலைமறைவாக இருப்பதற்காக உதவி புரிவார்களானால், அவர்களுக்கு எதிராகவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்வதற்கான முயற்சிகள் வழக்கத்தை விட அதிக முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல்!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி, நாட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல், கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

சோமாலிய மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்காக, Dhanusha Marine நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல், உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஒரு விசேட திருப்புமுனையைக் குறிக்கிறது.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

2028 இல் நாட்டின் நிலை இதுதான்!

மேடைக்கு மேடை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிப் பத்திரத்தை கிழித்தெறிந்த ஜனாதிபதியும் அரசாங்கமுமே தற்போது நாட்டை ஆண்டு வருகின்றது. 2022 இல் நாம் சந்தித்த தேசியப் பேரவலமாக அமைந்த நாட்டின் வங்குரோத்து நிலை ஏற்படும் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை.

அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய நாட்டிலேயே பெரும்பான்மையினர் மிதந்து கொண்டிருக்கின்றனர். 2028 ஆம் ஆண்டே நாடு எதிர்கொள்ளும் மிகக் கடினமான காலமாக அமையும். 2028 இல் நாம் கடனை செலுத்த வேண்டி இருக்கிறது. இதற்குத் தேவையான பணம் நாட்டில் கையிருப்பில் இருந்தாக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

களனி தேர்தல் தொகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

கடனை செலுத்துவதற்கான பணம் அரசாங்கத்தின் வருமானம் மூலம் ஈட்டப்பட வேண்டும். உற்பத்திப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் இருந்து ஈட்டப்பட வேண்டும். கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும், இங்கு எம்மால் செய்ய முடியாத விடயங்களுக்கு இணக்கப்பாடுகளை தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக கூறி வந்தது. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மக்கள் சார்பான ஒன்றாக மாற்றியமைப்போம் என நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

* நாட்டை சிக்கலுக்குள் ஆழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கில்லை. 

நமது நாட்டை சிக்கலில் தள்ளி, மக்களின் வாழ்க்கையை சீரழித்து, உயர் பதவிகளுக்கு வர நாம் ஒருபோதும் தயார் இல்லை. அசாதாரணமான, கடினமான இலக்குகளுடனான உடன்பாடுகளை ஏற்படுத்தியதன் காரணமாக ஒரு நாடாக நாம் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு கண்டுள்ள இந்த நிபந்தனைகளைத் திருத்தி, மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சுமையை குறைக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தானும் திசைகாட்டியும் இந்த இணக்கப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான எதிர்பார்ப்புகளை மக்களுக்கு வழங்கினோம். ஆட்சிக்கு வந்த திசைகாட்டியானது ஏலவே இருந்த சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை எந்த மாற்றமுமின்றி முன்னெடுத்து வருகின்றது. இதன் ஊடாக இந்த அரசாங்கமானது மக்களின் நம்பிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் துரோகமிழைத்துள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையைப் பார்க்கும் போது எந்த அபிமானமும் கொள்ள முடியாது. இன்று சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியாகும் வரையில் அரச ஊழியர்களால் சம்பள அதிகரிப்பை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

* 6 மாதங்களுக்கு ஒரு தடவை சம்பள அதிகரிப்பு என்பது கனவாகவே காணப்படுகின்றது. 

ஒவ்வோரு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதாக கூறிய ஜே.வி.பி அதைச் செய்யாமல், இந்த தருணத்திலும் மக்களை ஏமாற்றி வருகிறது. ஒரு நாடாக நாம் 2 ஆபத்தான நிபந்தனைகளில் கையெழுத்திட்டுள்ளோம். அதாவது, முதன்மை செலவினத்தை 2.3 சதவீதமாகக் கட்டுப்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதன்மைச் செலவினத்தை 13 சதவீதமாக பேணவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இலகுபடுத்திச் சொல்வதானால், மக்களுக்காக அரசாங்கம் செலவிடக்கூடிய தொகையை மிகவும் சுருக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். 

அரசாங்கம் முன்வைத்த தமது சொந்த கொள்கைப் பிரகடனத்தை துண்டு துண்டாக கிழித்து, முன்னாள் ஜனாதிபதியின் அடிச்சுவடுகளை பின்பற்றிச் செல்ல தீர்மானித்துள்ளதுடன், வழங்கிய வாக்குறுதிகளையும் மீறிக் கொண்டு, போதா குறைக்கு பொய்களையும் உரைத்துக் கொண்டு வருகின்றது. இதனால் மக்களே பெருமளவில் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

காலை கைது, மாலை பிணை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டெய்சி ஆச்சி என்ற யோசித்த ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபாரஸ்ட் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி, அவர் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இன்று (05) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தம்?

‘தமிழன் பத்திரிகையின் செவ்வாய்க்கிழமை (04) ஆசிரியர் தலையங்கம் 

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இந்த அறிக்கைகள் அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவ புலனாய்வு ஆகிய இரண்டிற்கும் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் தெரிவித்துள்ளார்..

சில மத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்களை அவதானிக்கும்போது, ​​குறிப்பாக சிறுவர்கள் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு ஆளாக நேரிடும் என்று கூறும் அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த தீவிரவாத சித்தாந்தங்கள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானவை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

“இதுபோன்ற பெரும்பாலான நடவடிக்கைகள் கல்முனைப் பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன, மேலும் அரச புலனாய்வுத்துறை மற்றும் இராணுவப் புலனாய்வு இரண்டும் இந்த நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளன. நாட்டில் மீண்டும் தீவிரவாதமும் இனவெறியும் பரவ அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் ஆனந்த விஜேபால.

இதற்கிடையில், கடந்த ஆண்டு அக்டோபரில் அறுகம்பே விரிகுடா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்கள் தொடர்பான அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியைத் ஏற்படுத்தியுள்ளது. கண்ணியமிக்க புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியிருக்கும் தறுவாயில் அரசாங்கத்தின் மேற்படி கருத்து வெளியாகியுள்ளது அந்த மக்கள் மத்தியில் பெரும் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் இஸ்லாமிய மக்கள் கணிசமான ஆதரவை இந்த ஆட்சியாளர்களுக்கு வழங்கியிருந்ததை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூரவேண்டியுள்ளது. அப்படியாக ஆதரவை வழங்கினாலும் தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரவையில் இஸ்லாமியர் ஒருவர் இல்லை என்ற ஆதங்கம் இருக்கின்றபோதிலும் அது இன ரீதியாக பார்க்கப்படக் கூடாது என்று அமைதிகாத்த இஸ்லாமிய சமூகத்தின் மீது இப்போது அபாண்டம் சுமத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் மீது இப்போது அமைதியான அடக்குமுறையொன்று அரங்கேறிக்கொண்டிருக்கிறது. தரமான இஸ்லாமிய நூல்களையும் சுங்கத் திணைகளத்தில் தீவிர பரிசோதனைக்குட்படுத்தியே அனுப்புகின்றனர். கிழக்கில் அவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் இப்போது தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புகிறார்கள்  என்ற தகவலை அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாமியர்கள் மத்தியில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதாக கூறப்படும் தகவல்கள் குறித்து புலனாய்வுத்துறை அறிக்கை கிடைக்குமாயின் அது தொடர்பில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுடன் பேசுவதற்கு அரசு ஆவண செய்யவேண்டும். அதைவிடுத்து இதை பகிரங்கமாக கூறுவது, தென்னிலங்கையில் இஸ்லாமியர்கள் தொடர்பில்  மாற்றுச் சிந்தனைக்கு வழிவகுக்கும். ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்  சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அந்த நிலைமையிலிருந்து மீண்டெழும் முஸ்லிம் சமூகம் மீது  இப்படியான குத்துமதிப்பு கதைகள் கூறப்படுவது நியாயமானதல்ல.”இஸ்லாத்தின் பெயரால்” நடந்த பயங்கரவாதத்தில் மரணித்தவர்களின்  ஜனாஸாக்களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் தொடர்பில் நியாயப்படுத்தலில் கூட அவர்கள் ஈடுபடவில்லை என்பதுதான் உண்மை.

இஸ்லாமியர்கள் மத்தியில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதாக கூறப்படும் தகவல்கள் குறித்து அரசுக்கு அறிக்கை கொடுக்கும் இதே புலனாய்வுத்துறைதான், கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் பலவற்றின் பின்னணியில் இருந்ததாகவும் விமர்சனங்கள் உள்ளன.

அதுமட்டுமல்ல பல சம்பவங்கள் தொடர்பில்  அவர்கள் சரியான தகவல்களை ஆட்சியாளர்களுக்கு வழங்கவில்லையென்ற சாடல்களும் உள்ளன. அதனால் இப்போது இந்த தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதான செய்தி குறித்தும் அதன் உண்மைத்தன்மை குறித்து அரசு உடனடியாக ஆராயவேண்டும்.

குறிப்பாக இந்த நோன்பு காலத்தில் விசேட பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இடம்பெறும் சூழ்நிலை இருக்கிறது. அதேபோல அதையொட்டிய நிகழ்வுகளும் நாடாளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.

அப்படியான நிலையில் இஸ்லாமியர்கள் மீது புதிய லேபல் ஒன்றை இடாமல் பொறுப்புடன் செயற்படவேண்டியது அரசின் பொறுப்பும் கடமையாகிறது. அப்படியே சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இருப்பதாக அரசாங்கம் கருதுமானால் மார்க்க அறிஞர்கள், அந்த சமூகத்தின் புத்திஜீவிகள், அரசியல்வாதிகளை அழைத்துப்பேசி இந்த விடயத்தினை ஆராயும் பொறுப்பை அவர்களிடம் விடவேண்டும். எடுத்த எடுப்பில் ஒரு தீர்மானத்திற்கு வந்து ஒட்டுமொத்த சமூகத்தையும் சந்தேகக் கண்கொண்டு நோக்க  வைத்துவிடக்கூடாது.