Home Blog Page 294

ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி அறிவிப்பு!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

செம்பியன்ஸ் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இந்த முடிவை அறிவித்துள்ளார். 

35 வயதான ஸ்டீவ் ஸ்மித் இதுவரை அவுஸ்திரேலிய அணிக்காக 170 போட்டிகளில் விளையாடியுள்ளார். 12 சதங்கள் மற்றும் 35 அரைசதங்களுடன் 5,800 ஓட்டங்களை குவித்துள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு 164 ஓட்டங்கள் குவித்தது இவரது அதிகபட்சமாகும். 

லெக்ஸ்பின்னராக கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி 90 பிடியெடுப்புக்களை எடுத்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தாலும், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை நிறைவேற்றம்!

குழந்தையை கொன்றதாக கைது செய்யப்பட்ட 33 வயது உ.பி., மாநில பெண்ணுக்கு, ஐக்கிய அரசு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த ஷாஸாதி கான், குழந்தையை கொலை செய்த வழக்கில் அபுதாபி நகரில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது பாதுகாப்பில் இருந்த ஆண் குழந்தையை கொலை செய்ததாக, பெற்றோர் அளித்த புகாரில் அவர் மீது வழக்கு பதிவாகியிருந்தது.

வழக்கை விசாரித்த அபுதாபி நீதிமன்றம், 2023ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. கடந்தாண்டு அவரது மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அவர் வாத்பா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை காப்பாற்றவும், நீதிமன்றத்தில் வழக்கு நடத்தவும் இந்திய துாதரகம் சார்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன.

எனினும், மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த அந்நாட்டு நீதிமன்றம், அவரது மரண தண்டனையை உறுதி செய்தது. அவரது மரண தண்டனை பிப்.,15ல் நிறைவேற்றப்பட்டு விட்டதாக, இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில், டில்லி உயர்நீதிமன்றத்தில் இந்த தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.அவரது குடும்பத்தினர், அமீரகம் சென்று இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5 மணி நேரம் வாக்குமூலம்!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளனர்.

இதன்போது, அவர்கள் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தை அவமானப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க இந்த பிரதிநிதிகள் முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.

அதன்படி, இந்தக் குழுவை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சைத் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2024) உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

குறித்த செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 08ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 75 செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. 

அதன்படி, எதிர்வரும் 07ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை செயன்முறைப் பரீட்சை முழுமையாக முடிவடையும் வரை, பரீட்சை விண்ணப்பதாரிகளுக்காக உதவி வகுப்புகளை நடத்துவது, ஒழுங்கமைப்பது மற்றும் வகுப்புகளை நடத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு விவசாயிகளுக்கு உலக வங்கி உதவி!

உலக வங்கியின் நிதியுதவியுடன் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மற்றும் முலைத்தீவு மாவட்ட விவசாயிகள் பலர் பொருளாதார, மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான நன்மைகளை பெற்றுள்ளனர்.

இன்று கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த திட்டத்தின் பிரதிப்பணிப்பாளர் A.G.C பாபு இவ்விடயத்தை தெரிவித்தார்.

மேலும், விவசாய அமைச்சின் கீழ் உலக வங்கியின் நிதியுதவியில் 2019ம் ஆண்டு குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், ஆறு மாகாணங்களை உள்ளடக்கி 11 மாவட்டங்களில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மண்டைக்கல்லாறு ஆற்றுப்படுக்கையை மையப்படுத்தியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பேராறு ஆற்றை மையப்படுத்தியும் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

காலநிலை பாதிப்பிலிருந்து விவசாயிகள் விரைவாக மீண்டெழுவதே இதன் நோக்கம் எனவும் 125 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி குறித்த திட்டத்திற்கு உலக வங்கியினால் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்;

இந்த ஆண்டு 29 குளங்கள் புனரமைப்பு செய்வதற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதே வேளை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ரீதியான ஆலோசணைகளும் உபகரணங்களும் வழங்கப்பட்டு விவசாயிகள் செலவீனங்களை குறைத்து தமது உற்பத்தியில் அதிக இலாபம் ஈட்டி வருகின்றனர். விதை நடுகை கருவி, சூரியகல நீர்விநியோக கட்டமைப்பு போன்ற பல்வேறு தொழில்நுட்ப ரீதியான விடயங்களையும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி விவசாயிகளை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

வேட்டுபுமனுக்கள் செலுத்த முடியாது!

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் இடம்பெறாது என தேர்தல்கள் தேர்வத்தாச்சியாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலுக்கு கட்சிகள் பல கட்டுப் பணங்களோ, வேட்டுபுமனுக்களோ செலுத்த முடியாது என கிளிநொச்சி மாவட்ட தேர்தல்கள் தேர்வத்தாச்சியும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய எஸ். முரளிதரன் இன்றைய ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

மேலும் வேட்புமனுக்கள் 2025 மார்ச் 17 முதல் 2025 மார்ச் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், வேட்பு மனுக்களை மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை மார்ச் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெறிவித்துள்ளது என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்

உலகின் சுதந்திரத்திற்கான பாத யாத்திரை!

உலகில் சுதந்திரம் அமைதி வேண்டி திஸ்ஸமகாராம (அம்பாந்தோட்டை) முதல் நாகதீபம் (நயினாதீவு) வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகளை சேர்ந்த பெளத்த தேரர்கள் பாத யாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 07ம் திகதி ஆரம்பமான பாத யாத்திரை இன்று கிளிநொச்சியை வந்தடைந்ததுடன், வருகை தந்த தேரர்களை யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் வரவேற்றனர்.

வீதியிலிருந்து பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சரசவி விகாரை வரை மாணவர்கள், விரிவுரையாளர்கள் அமோகமாக வரவேற்பளிக்கப்பட்டது.

தய்லாந்து, மியன்மார், இலங்கை, லாகோஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 50 வரையான தேரர்கள் குறித்த பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த பாத யாத்திரை நாளைய தினம் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

பாராளுமன்றில் அமளி துமளி!

மட்டக்களப்பில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஒலிவாங்கியை இடைநிறுத்தியதை அடுத்து சபையில் இன்று (04) அமைதியின்மை ஏற்பட்டது. 

கடந்த 20 ஆம் திகதி, மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது, ​​மர்மக் குழு ஒன்று வாள்களால் தாக்கியதில் இருவர் படுகாயமடைந்தனர். 

அதேபோல், நேற்று (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் நடந்த வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 

இதற்கிடையில், இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, ​​இந்த விவகாரம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கருத்து தெரிவிக்க முயன்ற போது, ​​சபாநாயகர் குறுக்கிட்டு, “இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல, எனவே சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இதனை கொண்டு வரலாம்” என்றார். 

அதேபோல், இது ஒரு தேசிய பிரச்சினை அல்ல என்று சபாநாயகர் கூறியதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. 

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் திருகோணமலை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் நோயாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் சபையில் கேள்வி எழுப்ப முற்பட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி மறுத்திருந்தார். 

இதனையடுத்து, சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் தலையிட்டு நிலையியல் கட்டளைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன மற்றும் அர்ச்சுனாவுக்கு ஒவ்வொரு நிமிடங்களை பெற்றுக் கொடுக்குமாறு கோரிய நிலையில் அவர்களுக்கான ஒரு நிமிடம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SLCL மாஸ்டர் லீக்கில் ஸ்கோபியோ லெஜண்ட் சம்பியன்!

ஸ்ரீலங்கன் கிரிக்கெட் லீக் நடத்திய SLCL மாஸ்டர்ஸ் லீக் சீசன்1 கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இருத்திப் போட்டியில் ஸ்கோபியோ லெஜண்ட் அணியினர் வெற்றிவாகை சூடிக்கொண்டனர்.

நேற்று இடம்பெற்ற SLCL மாஸ்டர்ஸ் லீக் சீசன்1 கிரிக்கெட் சுற்றுத் தொடரில் ரீபோன் லெஜண்ட் அணியினரை வீழ்த்தி வெற்றி மகுடம் சூடிக்கொண்டனர் ஸ்கோபியோ லெஜண்ட் அணியினர்.

நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற ஸ்கோபியோ லெஜண்ட் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 215 என்ற இமாலய ஓட்ட இலக்கை நிர்ணயித்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரீபோன் லெஜண்ட் அணியினர் 16.3 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்று படுதோல்வி அடைந்தனர்.

78 ஓட்ட வித்தியாசத்தில் ரீபோன் லெஜண்ட் அணியினரை ஸ்கோபியோ லெஜண்ட் அணியினர் வெற்றிபெற்றதன் மூலம், SLCL மாஸ்டர் T20 லீக் சீசன்1 கிரிக்கெட் சுற்றுத் தொடரின் சம்பியன் பட்டம் வென்றனர்.

இறுதிப்போட்டியின் சிறந்த வீரராகவும் சிறந்த பந்து வீச்சாளராகவும் தர்ஷன பீரிஸ் தெரிவுசெய்யப்பட்டதுடன், இறுதிப்போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக சுஜாத் விஜேசேகர தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் தொடரின் சிறந்த வீரராக JD மஹேஷ் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சிக்கிய பெறுமளவான கஞ்சா!

இலங்கை கடற்படையினரின் இன்றைய (2025 மார்ச் 03) விசேட அதிரடி நடவடிக்கையில், யாழ்ப்பாணம் அனலைத்தீவின் வடக்கு கடலில் நூற்று தொண்ணூற்றி ஏழு (197) கிலோகிராம்களுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், டிங்கி படகொன்றும் (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்துடன் கடற்படையின் விசேட கப்பல் படையணி குழுவொன்றும் இணைந்து யாழ்ப்பாணம் அனலைத்தீவு வடக்கடலில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது.

அங்கு, குறித்த டிங்கி படகில் இந் நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த எழுபத்தி எட்டு (78) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட சுமார் நூற்று தொண்ணூற்றி ஏழு (197) கிலோ நானூறு (400) கிராம் கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி எழுபத்தி எட்டு (78) மில்லியன் ரூபா என நம்பப்படுவதுடன், மேலும் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29 மற்றும் 43 வயதுடைய பேசாலை மற்றும் காரைநகரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் காரைநகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.