நாளையிலிருந்து தற்போது நிலவும் மழை நிலைமை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை நாளையிலிருந்து (04) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாகையிலிருந்து இலங்கைக்கு சென்ற பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த கப்பலில் 17 ஊழியர்கள் உள்பட 95 பேர் பயணம் செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை வானிலை மாற்றம், சர்வதேச தொழில்நுட்ப அனுமதி உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக கடந்தாண்டு நவம்பர் 18ம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.
இதைதொடர்ந்து கடந்த மாதம் 22ம் திகதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமானது.
இருப்பினும் கடல் காற்று அதிகமாக வீசுவதால் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வானிலை மாற்றம் சீரடைந்ததும் மீண்டும் மார்ச் 1 முதல் நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு 78 பயணிகளுடன் புறப்பட்டது.
வேளாங்கண்ணிக்கு தென்கிழக்கே 15 மைல்கல் தொலைவில் கப்பல் சென்றபோது கடல் சீற்றம் அதிகமானது.
இதனால் கப்பல் கடலில் தத்தளிக்க ஆரம்பித்ததால் பயணிகள் அலறினர். வானிலை மோசமானதை தொடர்ந்து கப்பலை அவசர, அவசரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பலின் கெப்டன் திருப்பியுள்ளார்.
இதை தொடர்ந்து நேற்று(2) மற்றும் இன்று (3) கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கப்பல் நிர்வாகத்தின் அலட்சியமான போக்கால் இது போன்ற சம்பவம் நடந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றியே வெற்றி பெற்று, இன்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர் உடன்படிக்கையின்படி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய சதவீதத்தை ஒருதலைப்பட்சமாக மீறுவதால் மக்களும் வர்த்தகர்களும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு இந்த நெருக்கடி பாதீப்பை ஏற்படுத்தாது. ஆனால் சாதாரண மக்களே இவற்றுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இது இவ்வாறே போனால், பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவதுடன், அரச நிறுவனங்களுக்குக் கடனாக வழங்கப்பட்டு வரும் எரிபொருளும் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இவற்றைச் செய்ய முடியாத அரசாங்கமே நாட்டில் காணப்படுகின்றது. இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது. நாட்டை ஆளும் சரியான தொலைநோக்கு இவர்களிடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அநுராம்புரம், நொச்சியாகம சமனல ஹோட்டலில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இன்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. மனித – காட்டு யானை மோதலுக்கு புதிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. பயிர் சேதம் மற்றும் சொத்து சேதங்களுக்கான இழப்பீடுகள் இன்னும் வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சியில் இருந்த போது விவசாயிகளுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாக கூறினர், அது இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது அரசாங்கம் உத்தரவாத விலை 120 ரூபா என கூறி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாய இயந்திரங்களின் விலை அதிகரித்துள்ளன. உரங்கள், களைக்கொல்லிகள், கிருமி நாசினிகள் மற்றும் உரங்கள் சரியாக கிடைப்பதில்லை. இப்பிரச்சினைகளால் நெல்லுக்கு உத்தரவாத விலையும் வழங்காதிருக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
* விவசாயிக்கு ஏற்ற சிறந்த திட்டத்தை நாம் முன்வைத்திருந்தோம்.
விவசாயிகளுக்கு ஏற்ற சிறந்த திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்திருந்தது. அதை ஏற்றுக்கொள்ளாமல் ஆளுந்தரப்பினர்கள் கூறிய பொய்களை நம்பி தற்போது விவசாயிகள் ஏமாற்றமடைந்துபோயுள்ளனர். எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
* வேலையற்ற பட்டதாரிகள் வீதியில்.
தற்போது நாட்டில் சுமார் 40000 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். அவர்களுக்கு வேலை வழங்கப்படும் என அனுர குமார திஸாநாயக்க அன்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று அவர்களுக்கு வேலை கூட வழங்கப்படவில்லை. அதற்கான உரிய ஏற்பாடுகள் கூட இதுவரை முன்வைக்கப்படவில்லை. பட்டதாரிகளையும் இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
* அரச பணியாளர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
பொதுவாக, வரவு செலவுத் திட்டங்களில் சம்பள அதிகரிப்பு என்றால் சரளமாக தெளிவாக கூறப்படும். இம்முறை சம்பளம் அதிகரிப்பு குறித்து தெளிவின்மையான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து உரையையும், ஏனைய ஆவணங்களையும் ஆராய்ந்தே இந்த வரவு செலத்திட்டத்தில் சம்பள அதிகரிப்பு குறித்த விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளன. ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு தடவையிலும் 20,000 ரூபா அதிகரிப்பு வழங்கப்படும் என கூறினாலும், இன்று அது கிடைக்காது முழு அரச சேவையாளர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மக்களுக்கு சார்பான முறையில் மாற்றுவதாக கூறினர். ஆனால் எந்த மாற்றமும் இன்றி ரணில் விக்ரமசிங்கவின் உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியும் மக்களுக்கு சார்பான முறையில் மாற்றுவதாக கூறியது. எமக்கு அதிகாரம் கிடைத்திருப்பின் நாம் மாற்றியமைத்திருப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய தலைநகர் புது டெல்லியில் நடைபெற்று வரும் ‘NXT சர்வதேச மாநாட்டில்’ பங்கேற்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு நடைபெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்தார்.
இந்திய பயணத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடினார்.
பொலிவியாவில் இரண்டு பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒரு பஸ் டிரைவர் மது அருந்தியதாக பயணிகள் தெரிவித்து உள்ளனர்.
உயினி மற்றும் கொல்சஹ்னி இடையிலான சாலையில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. சாலையின் மறுபுறத்தில் வந்த பஸ் ஒன்று, பாதை மாறி வந்து மோதியது. அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 37 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 39 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
விபத்துக்கு உள்ளான பஸ் ஒன்று அந்நாட்டில் நடக்கும் கார்னிவெல் கொண்டாட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தது. பஸ்சை ஓட்டியவர் மது அருந்தியதாக, பயணிகள் சிலர் போலீசிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகின்றது
– கோப் குழு
2023 மே மாதம் முதல் 2024 ஜூன் வரை வயதில் குறைந்தவர்கள் 683 பேர் வீட்டு பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
வதிவிட பயிற்சி வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்கள் 28,186 பேர் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளதால் 631,177,650 ரூபாய் வருமானத்தை பணியகம் இழந்துள்ளமை புலப்பட்டுள்ளது
காலி சமநல பூங்கா வேலைத்திட்டத்திற்கு 170,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த வர்த்தகக் கூடம் யாழ்ப்பாண வேலைத்திட்டத்தில் 500,000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்தது
சுற்றுலா வீசாவில் வீட்டுப் பணிப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு பதிவுசெய்யப்பட்ட முகவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை புலப்பட்டுள்ளது
ஜயகமு ஸ்ரீலங்கா திட்டத்தின் மொத்த செலவு 1.2 பில்லியன் ரூபாய்
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பற்றிய விசாரணைகளுக்கு கோப் உப குழு
ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியது. இந்த நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும்போது இந்த விடயங்கள் தெளிவாவதாக கோப் குழு சுட்டிக்காட்டியது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீரவின் தலைமையில் கடந்த 27.02.2025 அன்று கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, வதிவிட பயிற்சி வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்கள் 28,186 பேர் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளதால் 631,177,650 ரூபாய் வருமானத்தை பணியகம் இழந்துள்ளமை புலப்பட்டுள்ளது. 22410 ரூபாய் கட்டணம் அறவிட்டு 28 நாட்கள் வதிவிடப் பயிற்சி வழங்கியிருக்க வேண்டி இருந்தாலும், இந்தப் பயிற்சி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது புலப்பட்டது.
அந்தப் பயிற்சிக்குப் பதிலாக மூன்று மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு ஒரு நாளைக்கு சுமார் 390 பேருக்கு நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது. இந்த நேர்முகப்பரீட்சையும் வீடியோ ஒன்றைப் பார்ப்பதன் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை புலப்பட்டதுடன், இதனால் 2023 மே மாதம் முதல் 2024 ஜூன் வரை வயதில் குறைந்தவர்கள் 683 பேர் வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்தது.
அத்துடன், காலி மாவட்டத்தில் இடம்பெற்ற 170,000 ரூபாய் அடிப்படையில் சமநல பூங்கா வேலைத்திட்டத்திற்கு 170,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த வர்த்தகக் கூடம் யாழ்ப்பாண வேலைத்திட்டத்தில் 500,000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளமை புலப்பட்டுள்ளது
அத்துடன், காலி மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கு 170,000 ரூபாய்க்கு 30 வர்த்தகக் கூடங்கள் வாடகைக்கு எடுத்துள்ளதுடன், அதே நிறுவனத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கு எடுத்த வர்த்தக கூடம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டது. இந்தத் தொகைக்கு 25 வர்த்தகக் கூடங்கள் எடுத்துள்ளமை கண்டறியப்பட்டதுடன், அமைச்சின் செயலாளரிடமிருந்து கிடைத்த பரிந்துரைக்கு அமைய இந்தக் கட்டணம் செலுத்தப்பட்டதாக வருகை தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், ஜயகமு ஸ்ரீலங்கா திட்டத்துக்கான மொத்த செலவு 1.2 பில்லியன் என இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், இதற்காக நிதி சரியான முறையைப் பயன்படுத்தி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த செலவு 500 மில்லியன் ரூபாவுக்கு அதிகம் என்பதால், அதற்காக அமைச்சரவையின் அனுமதி தேவை எனவும், அந்த அனுமதி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுவதானால் இது தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களத்தினால் கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.
அத்துடன், சுற்றுலா வீசாவில் வீட்டுப் பணிப்பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு பதிவுசெய்யப்பட்ட முகவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை இங்கு புலப்பட்டதுடன் இது நிறுவனத்தின் பொறுப்பை முற்றாகத் தட்டிக்கழிப்பதாகும் என கோப் குழு சுட்டிக்காட்டியது.
2023 மார்ச் 30 இல. 07/2023 கொண்ட தலைவரின் சுற்றுநிருபத்தின் ஊடாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமான் நாட்டுக்கு சுற்றுலா ஒப்பந்தம் இன்றி இந்தப் வீட்டுப் பணிப்பெண்கள் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களது பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பேற்றல் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றி அதிகாரிகளிடம் குழு வினவியது. இவ்வாறு சுற்றுலா வீசாவில் 4,942 பேர் வெளிநாடு சென்றுள்ளதுடன், அவற்றில் அதிகமானவர்களுக்கு தொழில் வழங்கப்பட்டுள்ளமை சம்பந்தமான ஆவணங்கள் தூதரகத்தின் கணினி தகவல் கட்டமைப்பில் சேர்க்கப்படவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது.
அத்துடன், வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட புலம்பெயர்ந்தோரை தற்காலிகமாகத் தடுத்து வைப்பதற்கான தடுப்பு மையங்களைப் பராமரிப்பது குறித்தும், இந்நிறுவனத்தில் நியமனங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பற்றிய விசாரணைகளுக்காக கோப் உப குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான என்.கே.எம்.அஸ்லம், சமன்மலி குணசிங்க, கோசல நுவன் ஜயவீர, சுஜீவ திசாநாயக்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பாவானந்தராஜா, ஜகத் மனுவர்ண, ருவன் மபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான, திலின சமரகோன், சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவவை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கைது செய்வதற்கான உத்தரவு (வரண்ட்) பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது, இதனால் அவர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W 15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக அவருக்கு கைது வரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வழக்கு எண் 6314/23 இன் கீழ், கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி அன்ஸ்லம் டி சில்வா உள்ளிட்ட 08 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்புடனான பதட்டமான மோதலுக்கு ஒரு நாள் கழித்து, ‘ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போராட்டத்தில் அமெரிக்கா அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி. டிரம்பின் ஆதரவு முக்கியமானது’ என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் டிரம்பின் உத்தரவு படி ஜெலன்ஸ்கி வெளியேற்றப் பட்டார். டிரம்பால் அவமதிக்கப்பட்டதாக கருதப்படும் ஜெலன்ஸ்கிக்கு ஆறுதலாக ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன. அமெரிக்காவின் துணை இல்லாமல் ரஷ்யாவுடன் நடக்கும் போரில் இந்த நாடுகள் எதுவும் செய்துவிட முடியாது என்ற எதார்த்தம் பலருக்கும் புரிகிறது.
ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போராட்டத்தில் அமெரிக்கா அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி. டிரம்பின் ஆதரவு முக்கியமானது. அவர் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார். ஆனால் நம்மை விட வேறு யாரும் அமைதியை விரும்பவில்லை. உக்ரைனில் இந்தப் போரில் வாழ்வது நாம் தான். இது நமது சுதந்திரத்திற்கான போராட்டம், நமது உயிர்வாழ்விற்கான போராட்டம்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருக்கிறேன். அமெரிக்கா அளித்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாத போர்நிறுத்தம் உக்ரைனுக்கு ஆபத்தானது. நாங்கள் 3 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அமெரிக்கா எங்கள் பக்கம் இருப்பதை உக்ரைன் மக்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.