Home Blog Page 296

ரமழானில் இஸ்ரேல் செய்த காரியம்!

ரமழான் மற்றும் யூதர்களின் பாஸ்ஓவர் பண்டிகை காலங்களை முன்னிட்டு, தற்போது அமுலில் உள்ள போர்நிறுத்தத்தை, ஆறு வாரங்களுக்கு தற்காலிகமாக நீடிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

முன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. 

நிறைவடைந்த சிறிது நேரத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்பின் விசேட பிரதிநிதியினால் சமர்ப்பிக்கப்பட்ட போர் நிறுத்த திட்டத்தின் கீழ், காசாவில் ஹமாசினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயகைதிகளில் 50 சத வீதமானவர்கள் முதல் நாளிலேயே விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது 

இருப்பினும், நிரந்தர போர் நிறுத்தம் குறித்து ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டால் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அண்மைய காலத்தில், இஸ்ரேலிய நடவடிக்கைகள் குறித்து ஹமாஸ் பகிரங்கமாக எந்த கருத்தினையும் தெரிவிப்பதில்லை. 

பிரதமர் நெத்தன்யாகுவினால் அழைப்பு விடுக்கப்பட்டு நான்கு மணி நேரம் நடந்த கூட்டத்தின் பின்னரே, இஸ்ரேலிய அரசாங்கம் போர் நிறுத்த நீடிப்பை ஆதரித்தது. 

எனினும் அமெரிக்க விசேட பிரதிநிதியினால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

ஹமாஸ் தனது நிலைப்பாட்டை மாற்றினால் இஸ்ரேல் உடனடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன அதிகார சபை உட்பட ஏனைய பாலஸ்தீனிய நிர்வாக கட்டமைப்புக்களை கையளிக்க தயாராகவுள்ள போதிலும், காசாவில் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக இருப்பதில் ஹமாஸ் உறுதியாக உள்ளதாக கருதப்படுகிறது.

நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளில் நரிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இலங்கை நரிகள் ( SriLankan Jackal) அல்லது தென்னிந்திய குள்ள நரிகள் என இவை அழைக்கப்படுகின்றன.

நெல் அறுவடை முடிந்து செப்பு நிறத்தில் காணப்பட்ட வயற்பகுதிக்குள் நரிகளின் நடமாட்டம் தென்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

வயலின் அடிக்கட்டை எது? நரி எது? என்று தெரியாத உருமறைப்புடன் அப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றது. 

இவ்வாறான நரிகள் ஒரு சூழற்றொகுதியின் சமனிலைக்கு மிக முக்கியமானது. 

நரிகள் மயில்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தியும் மற்றைய சிறு வேட்டையாடிகளின் குடித்தொகைகளை சமனிலைப்படுத்தியும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நன்மைகள் பயக்கின்றன என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பிரிவுத் தலைவருமான ஏ.எம்.றியாஸ் அகமட் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில் வேலைவாய்ப்பு!

ஜப்பானில் சிறப்புத் திறன் கொண்ட பணியாளர் (SSW) திட்டத்தின் கீழ், தாதியர் பராமரிப்புத் துறையில் இலங்கையர்களுக்காக பல வேலை வாய்ப்புக்கள் காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 

அந்த வேலைகளுக்குத் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பணியாளர்கள், விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக பணியகம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் IM Japan இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்புகளை இலவசமாகப் பெற முடியும். 

இந்த வேலைகள் 5 வருட காலத்திற்கு கிடைக்கும் என்றும், குறைந்தபட்ச சம்பளம் 400,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், ஜப்பான் நாட்டவருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களுக்கும் இந்த வேலை வாய்ப்பினை பெறுபவர்களுக்கும் கிடைக்கும் என்பது இந்த வேலைப் பிரிவின் முக்கிய அம்சமாகும். 

வேலைக்கு விண்ணப்பிக்கும் போது ஜப்பானிய மொழி அறிவு கட்டாயமாகும். 

JFT அல்லது JLPT N4 நிலை மற்றும் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இதற்காக விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பதாரிகள் உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருக்க வேண்டும் என்பது கட்டாயம் 

உடலில் பச்சை குத்திக்கொள்ளாமல் இருப்பது கட்டாயத் தேவை என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. 

மேற்கண்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் பணியகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.slbfe.lk/si/ வழியாக பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஜப்பானில் தாதியர் பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட ஒரு குழு நாளை (2) ஜப்பானுக்கு புறப்படவுள்ளது.

கிழி கிழியென கிழித்த சாணக்கியன் எம்.பி!

இந்த நாட்டில் இன்னும் பொறுப்புக்கூறல் குறித்து கடுமையான கேள்விகள் உள்ளன. எனது இந்த உரையின் போது மேதகு ஜனாதிபதி அவர்களும் சபையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் எவ்வித முன்னேற்றகரமான கருத்துக்களும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பில் உள்நாட்டு செயல்முறையை கடைப்பிடிக்கப் போகின்றீர்களா? அல்லது சர்வதேச செயல்முறையை நாடுகின்றீர்களா? என்பன பாரிய கேள்விக்குறியாக உள்ளன. இதனை உங்களது உரையில் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். 

அதற்கு மேலதிகமாக, இந்த ட்ரிப்பலி ப்ளடுன் ஊடாக முன்னெடுக்கப்பட்ட கொலைகள் தொடர்பில் கடந்த காலங்களாக நான் தொடர்ச்சியாக பல விசேட அறிவித்தல்களை வழங்கியுள்ளேன். ஆனால் இதுவரை அது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. இவற்றுடன் அரச புலனாய்வுத்துறையினர் தொடர்புபட்டு செயற்பட்டு இருந்ததாக நாம் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். அண்மையில் இடம்பெற்ற கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையை அடுத்து சாட்சியாளர்கள் எமக்கு பாரிய அழுத்தம் ஏற்படுத்தி வருகின்றனர். சாட்சியங்களை உங்களுக்கு வழங்கி நீங்கள் பாராளுமன்றத்திலும் இதனை வெளிப்படுத்திய நிலையில் நமக்கும் இந்த நிலைதான் நேருமா என்று கேள்வி எழுப்புகின்றனர். 

நான் வேண்டுமாயின் மற்றுமாரு விடயத்தை குறிப்பிடுகின்றேன். 2009 யுத்தத்தின் பின்னர் மெனிக்ஃபாமில் இருந்த 27 இளைஞர்கள் காத்தான்குடிக்கு அழைத்து வரப்பட்டு, காத்தான்குடியில் வைத்து கொலை செய்யப்பட்டு கடலில் போடப்பட்டதாக அதனுடன் தொடர்புடைய புலனாய்வுத்துறையின் அப்போதிருந்த வான் சாரதி ஒருவர் வழங்கி சாட்சியம் தற்போதும் எனது தொலைபேசியில் உள்ளது. இவை தொடர்பில் விசாரணை செய்யப்படாவிடின், இந்த அரசாங்கத்தினர் கடந்த காலத்தில் இருந்த சதிகாரர்களுக்கு பயந்து போயுள்ளனரா? இந்த அரசாங்கம் இவற்றை மூடி மறைக்க முயல்கின்றதா? என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஒருபுறம் கூறப்படுகிறது. அந்த விசாரணைகள் சரியாக முன்னெமுடுக்கப்படுமாயின் அது எமக்கு மகிழ்ச்சி. ஆனால் இது தொடர்பில் ஒரு நபரிடமேனும் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவில்லை என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். 

அந்தவகையில் பொறுப்புகூறல் விடயத்தில் பாரிய பிரச்சினை காணப்படுகிறது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை கொண்டு வரப்போகின்றீர்களா? இன்றேல் நாட்டில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஏதேனும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்களா? இல்லை என்றால் கொலைகள் தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை முன்னெடுக்கின்றீர்களா? எதுவும் இல்லை. வடக்கு மக்கள் ஜனாதிபதிக்கு விசேட ஆணை ஒன்றை வழங்கினர். மட்டக்களப்பு மக்கள் என்றால் எனக்கு தான் ஆணை வழங்கினர். இவை பற்றி தேடிப் பார்ப்பதற்காகவே வடக்கு மக்கள் அந்த ஆணையை வழங்கினர். 

அதேபோன்றுதான் இம்முறை பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவு திட்ட தொகையை பார்த்தால் பாரிய சிக்கல் நிலவுகிறது. இந்த வருடத்தில் 135 பில்லியன் தொகை உணவு மற்றும் சீருடைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 70 பில்லியன், 2024ஆம் ஆண்டு 101 பில்லியன். 2025 இல் 135 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 33 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த காலத்தில் நீங்களும் எதிர்க்கட்சியில் இருந்த காலப்பகுதியில் இந்த சவேந்திர சில்வா பிரான்சிலிருந்து சீருடை தைக்க கொண்டு வந்தார் என தெரிவித்தோம். அவ்வாறாயின் உண்மையான நிலை என்ன என்பதை தற்போது எங்களுக்கு தெரிவியுங்கள். இல்லை என்றால் பாதுகாப்பு துறை தொடர்பில் நாட்டு மக்களுக்கு சொல்லும் கதைகள் உண்மையா, பொய்யா என்பதை தெளிவுபடுத்துங்கள். 

அதேபோன்று தான் இலங்கை போன்றதொரு சிறிய நாட்டுக்குள் பாதுகாப்பு துறையில் உள்ள செலவுகளை குறைக்காமல் எமது பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது. இதனை நாங்கள் கடந்த காலங்களிலும் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். கடந்த கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் நாங்கள் கண்டோம் இராணுவத்தினரை கொண்டு கட்டிடங்களை கட்டுகின்றனர். பிற வேலைகளை செய்கின்றனர். இந்த அரசாங்கத்திலும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 1000 பாடசாலைகளை அமைப்பதற்கு கதிரை மேசைகளை அமைப்பதற்கு இராணுவத்தினரை பயன்படுத்துகின்றனர். அப்படி என்றால் கதிரை மேசை அமைப்பதற்கு இராணுவத்தினரை பயன்படுத்துவதா? 

இராணுவத்தை முறையானதாக மாற்றியமைப்போம் என உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இன்றும் இவர்களை கதிரை மேசை அமைப்பதற்கு பயன்படுத்துகின்றீர்கள். அதேபோன்று தான் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள், கடற்படை முகாம்கள், விமானப்படை முகாம்கள், மக்களின் பாடசாலைகள், பொது சந்தைகள் போன்றன இன்னும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் பொறுப்பில் காணப்படுகின்றன. இவற்றை விடுவிப்பதாக குறிப்பிட்டிருந்த போதிலும், நீங்கள் விடுவிப்பதாக கூறிய 7 ஏக்கர் நிலப்பரப்பும் இன்னும் விடுவிக்கப்படவில்லை என உறுப்பினர் கஜன் பொன்னம்பலம் குறிப்பிட்டார். எனவே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை பயன்படுத்தி நீங்கள் எமக்கு நியாயமான ஒரு தீர்வை பெற்றுத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். 

அதேபோன்று தான் தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 172ஆவது பக்கத்தில் உடனடியாக புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு நிறைவேற்று முறையை இல்லாதொழிப்பதாக, அது மட்டுமின்றி புதிய அரசியலமைப்பை உடனடியாக கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பில் எதுவும் காணக்கூடியதாக இல்லை. 

அரசாங்கத்தினதும், உங்களதும் பிரபல்யம் காணப்படும் போதே இவற்றை செய்ய வேண்டும். இவற்றை காலம் தாமதித்து காலம் தாமதித்து செய்ய கூடியவை அல்ல. புதிய அரசியலமைப்பு குறித்து எமக்கு அறியக் கிடைத்த ஒரே விடயம் சபாநாயகர் கூறியது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பெயரை நிரந்தர எதிர்க்கட்சி தலைவர் என குறிப்பிடுவது மாத்திரமே. வேறு எதுவும் எமக்கு தெரியாது. எனது மேதகு ஜனாதிபதி அவர்களே இது தொடர்பில் உங்களிடமிருந்து பொறுப்புமிக்க பதிலொன்றை எதிர்பார்க்கின்றோம். 

இதற்கு மேலதிகமாக கடந்த காலங்களில் புலனாய்வு துறையின் கேர்னல் மட்டத்தின் மேலுள்ள அனைவரையும் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது புலனாய்வுத்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை செயற்படுத்துவது தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு உதவிய புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என தகவல் பரவிவருகிறது. எனவே இது தொடர்பிலும் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவே பதில் கூற முடியாது என்றாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது போன்ற பதில்களை கேட்டு கேட்டு நாம் பழகிவிட்டோம். 

எனக்கு சில வேளைகளில் ஜனாதிபதி அவர்கள் குறித்து கவலையும் ஏற்படுகிறது. ஜனாதிபதி அவர்கள் நாடு முழுவதும் சென்று பாடுபட்டு பாரிய முயற்சி எடுத்து இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்தார். ஆனால் இந்த பாராளுமன்றத்திலுள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டை பார்க்கும் போது ஜனாதிபதி குறித்தும் கவலை ஏற்படுகிறது. 

தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட விடயங்களையும், தற்போது நிகழும் விடயங்களையும் பார்க்கும் போது, உகண்டாவிலிருந்து ஒழித்துவைக்கப்பட்ட பணத்தை கொண்டுவருவதாக கூறப்பட்டது. வீ.எஃப்.எஸ். கொடுக்கல்வாங்கல் என ஏதேனும் செயற்பாட்டை இதுவரை முன்னெடுத்துள்ளீர்களா? சீனி வரி ஊழல் தொடர்பில் நீங்கள் தான் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். அது தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? தேங்காய் எண்ணெய் ஊழல் குறித்து ஏதேனும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா? அவன்கார்ட் தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளீர்களா? அவன்கார்ட் தொடர்பிலும் நிறைய விடயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது தொடர்பில் பின்னர் குறிப்பிடுகின்றோம். 

இந்த திருடர்களை பிடிப்பதற்காகவே ஆணை வழங்கப்பட்டது. ஆனால் திருடர்களை பிடிக்கின்றார்களா இல்லையா என்பது தொடர்பிலேயே எமக்கு பாரிய பிரச்சினை காணப்படுகிறது. ஏனென்றால் அரச வழக்கறிஞர்கள் அலுவலகம் அமைப்பதாக நாட்டின் நீதி அமைச்சர் கூறுகின்றார். ஆனால் வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவிற்கு சென்று அது தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசுகின்றார் இல்லை. அதற்கு அடுத்ததாக பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று மாத்திரமல்ல பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றாக எதுவும் கொண்டு வர நாம் இடமளிக்க மாட்டோம் என கூறப்பட்டது. ஆனால் தற்போது பயங்கரவாத தடை சட்டத்திற்கு புதிய சட்டமூலத்தை கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிடுகின்றார். எனவே தேர்தல் மேடைகளில் குறிப்பிடப்பட்டவையும் தற்போது நிகழ்பவையும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே காணப்படுகின்றன. 

இது தொடர்பில் நான் தொடர்ந்து குறிப்பிட்டு வந்துள்ளேன். கடந்த காலங்களில் 966 பில்லியன் வரி நிவாரணம் வழங்கப்பட்டது. அதனை இந்த அரசாங்கம் ஏன் மீளப் பெறவில்லை. 2025ஆம் ஆண்டிலும் அந்த 966 பில்லியன் வரி நிவாரணம் வழங்கப்படுகிறது. கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு இந்த அரசாங்கத்திலும் 966 வரி நிவாரணம் வழங்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கு மேலும் வரி விதிக்கப்படுகிறது. அதனால், கௌரவ ஜனாதிபதி அவர்களே உங்கள் மீது மக்கள் இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இழுத்து மூடப்பட்ட யால தேசிய பூங்கா!

தற்போதைய மழை நிலைமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார். 

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும், பூங்காவிற்குள் உள்ள சில ஏரிகளின் கரைகள் உடைந்து சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதன் காரணமாக, வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று (மார்ச் 1) முதல் மழை நிலைமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, யால வலய இலக்கம் 01 -ஐ சேர்ந்த கடகமுவ மற்றும் பலடுபான நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக எமது ஆய்வில், யால தேசிய பூங்காவின் நுழைவு வீதியான நிமலவ பகுதியில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதை காண முடிந்தது. 

இது தொடர்பில் யால சஃபாரி ஜீப் வாகன சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தால், முன்பணம் செலுத்திய சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.

ஓட்டமாவடி மையவாடி குறித்து ஹக்கீம் காட்டம்!

ஓட்டமாவடி, மஜ்மா நகர் மையவாடிக்கு காணி கொடுத்தவர்களுக்காக நாடாளுமன்றில் குரல் கொடுத்த ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி.

பாராளுமன்றத்தில் கடந்த (27/02/2025) வாய்மூல கேள்விக்கான நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சரிடம் கொவிட் உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட பிரதேசம், மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பில் பல கேள்விகளைக் தொடுத்தார்.

கொவிட் பெருந்தொற்றால் மரணித்த 3000 க்கு மேற்பட்டவர்களின் உடல்கள் இந்த ஓட்டமாவடி, மஜ்மா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்ததாக குறிப்பிட்டார்.

அவருக்கு தெரியும் நான் அவ்வப்போது சுகாதார அமைச்சரிடம் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றேன், அறிவியல் சாராத முறையில் நிலக்கீழ் நீர் மிகவும் ஆழமாக இருக்கின்றதான பிரதேசங்களில் இந்த நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்கின்ற கருத்தின் காரணமாக இவ்வாறான அழுத்தங்களுக்கு பெருமளவிலான மக்கள் முகம் கொடுத்தார்கள்.

அவர்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்கும் இறுதி மரியாதை செலுத்துவதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் தூரப்பிரவேசங்களுக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

நான் கேட்பது இந்த மஜ்மா நகர் என்கின்ற பிரதேசம் ஓட்டமாவடி பிரதேச செயலக ஆளுகை பிரதேசத்திற்குள் வரும் மிகவும் கஷ்டமான, அதேபோல் ஏழ்மை நிலையில் இருக்கின்றதான சுமார் 300 குடும்பங்கள் வாழ்கின்ற பிரதேசம். அந்தப் பிரதேசத்தில் அவர்கள் பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்ததற்கான உரிமங்கள் உடைய காணிகளைக் கொண்டிருப்பவர்களுக்கு அநீதி ஏற்பட்டிருக்கின்றது.

இதை கையகப்படுத்திய காரணத்தினால் இதில் பத்து பேர் மேல் முறையீடு செய்திருக்கின்றார்கள் அல்லது விண்ணப்பித்திருக்கின்றார்கள் தங்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று. ஆகவே, பிரதேச செயலக அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் இது கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.

தயவுசெய்து இது சம்பந்தமாக அவசரமாக நடவடிக்கை மேற்கொண்டு அரச காணிகள் அன்மித்த பிரதேசத்தில் இருக்குமாயின் அத்தகைய காணிகளைப் பெற்று இழந்த காணிகளுக்கு உண்மையில் உரிமைதாரர்கள் இருக்கின்றார்கள், அவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என்றவாறு தனது வினாவை ரவூப் ஹக்கீம் தொடுத்தார்.

குறித்த வினாவுக்கு பதிலளித்த அமைச்சர், இது அரச காணியாகத்தான் இருந்தது, ஆனாலும் தனியார் துறையினர் மேட்டு நில பயிர்ச்செய்கைக்காக இதை ஈடுபடுத்தி இருக்கின்றார்கள். அந்த காணி தான் இப்பொழுது மயானமாக பயன்படுத்துவதற்காக கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

கௌரவ உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறியது போல மாற்று காணிகளை வழங்குவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று குறிப்பிட விரும்புகின்றேன். என்று குறித்த அமைச்சர் பதிலளித்தார்.

இத்தாலி இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டத்திற்கு இத்தாலி ஆதரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டெமியானோ (Damiano Francovigh) பிரான்கோவிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் திட்டத்திற்கு இத்தாலிய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று தூதுவர் டெமியானோ பிராங்கோவிக் தெரிவித்தார்.

இலங்கையின் சுற்றுலா, துறைமுகங்கள் மற்றும் முதலீட்டுத் துறைகளுக்கு இத்தாலிய அரசாங்கம் வழங்கக் கூடிய ஆதரவு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இத்தாலியில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இலங்கை இளைஞர்களின் விசா பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க எதிர்பார்த்திருப்பதாகவும் இத்தாலிய தூதுவர் தெரிவித்தார்.

இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்களுக்கும், இத்தாலியில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கும் சட்டப்பூர்வமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேயும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-02-27

மக்களிடம் நல்லதொரு எண்ணம் இல்லை!

அரசாங்க அலுவலகங்கள் அனைத்தையும் அரசாங்க கட்டிடங்களுக்கு கொண்டுவர நடவடிக்கை

வரையறுக்கப்பட்ட நிதிக் கட்டமைப்புக்குள் இருந்தாலும் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதால், அந்த நிதியை வினைத்திறனாகவும், பயனுள்ள மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்துவது அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அதன்படி செலவு முகாமைத்துவத்தின் போது அரசாங்க அதிகாரிகள் உரிய பொறுப்புடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அரசாங்க சேவைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு எண்ணம் காணப்படவில்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரச சேவைக்குள் காணப்படும் வினைத்திறன் இன்மையே அதற்கு காரணமெனவும் சுட்டிக்காட்டினார். அதேபோல் அரச ஊழியர்களிடையே காணப்படும் திருப்தியின்மையே வினைத்திறன் இல்லாமைக்கு காரணமாக அமைந்துள்ளதெனவும், அந்த பிரச்சினைகளை தீர்த்து அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசியல் அதிகார தரப்பும் செலவுகளை குறைத்திருக்கும் நிலையில், அரச நிறுவனங்களின் நிர்வாகச் செலவை குறைத்தல் மற்றும் விரயத்தை குறைத்தல் என்பன அரச சேவையின் பொறுப்பாகும் என்றும் கூறினார்.

யுக்ரைனை பந்தாடும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்!

உக்ரைன் நாட்டின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யும் வகையில் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா் நிலையில் இருப்பதாக அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நேற்று (பிப். 26) தெரிவித்தாா்.

இந்த நிலையில், உக்ரைனின் கனிம வளங்களைத் தோண்டியெடுக்க பிரான்ஸ் நாட்டின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

பேச்சுவார்த்தை குறித்து உறுதிப்படுத்திய ஸெலென்ஸ்கி, “பிரான்ஸின் தேவைகளுக்காக இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தார். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை உறுதிசெய்த அவர் அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்கும் முன்னர் இதனைத் தெரிவித்தார்.

பிரான்ஸ் – உக்ரைன் பேச்சுவார்த்தை இருநாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களால் கடந்தாண்டு அக்டோபர் முதல் நடைபெற்று வருகின்றது.

”நாங்கள் செய்த உதவிக்கு கைமாறாக கனிம வளங்களைக் கேட்கவில்லை. 30 முதல் 40 ஆண்டுகளில் எங்களுடைய ராணுவ ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட அளவு மூலப்பொருள்களைக் கேட்கிறோம்” என பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகார்னு தெரிவித்தார்.

மேலும், போர் நிறுத்தம் ஏற்பட்டால் கனிம வளங்களை விற்பதாக ஸெலென்ஸ்கியே தெரிவித்தார் என்றும் இதற்கு அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

புத்தளத்தில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

புத்தளம் கல்லடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் நேற்று புதன்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சம்பவத்தன்று, யுவதி தனது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ள நிலையில், அவரது பெற்றோர்கள் அவரை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது யுவதியை சோதனையிட்டு பார்த்த வைத்தியர்கள், யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

யுவதியின் உடற்பாகங்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.