Home Blog Page 297

நாடுபூராக தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

வைத்திய ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் மேலதிக சேவைகால கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை (27)  நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளின் முன்பாக தாதியர்கள் ஒரு மணி நேர கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தற்போதைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய வரவு–செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள போதும் வைத்திய ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் மேலதிக சேவைகால கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளதாக தாதியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளின் முன்பாக இன்றையதினம்  அரச தாதியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் தாதியர்கள் ஒன்றிணைந்து நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மதிய இடைவேளையின் போதே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்ததை தொடர்ந்து கடுமையான போராட்டங்களின் பின்னர் வைத்திய ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் அரசாங்கம் இவ்வருடத்துக்கான புதிய வரவு-செலவு திட்டத்தில் சம்பளத்தை அதிகரித்து கொடுப்பனவுகளை குறைத்து நியாயமற்ற முறையில் செயற்படுவதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அரச தாதியர் சங்கத்தின் துணைத் தலைவர் நாகல ஹெட்டியாராச்சி தொழிற்சங்க நடவடிக்கைத் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் புதிய வரவு-செலவுத்திட்டத்தில் சம்பள அதிகரிப்புக்கு இணையாக சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், தர உயர்வுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 5 வருடங்களின் பின்னர் வழங்கப்படும் தர உயர்வை 10 வருடங்களாக  அரசாங்கம் நீடித்துள்ளது. கடிதம் மூலம் எமது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ள போதும், அதற்கான எவ்வித பதில்களும் இதுவரை வழங்கப்படவில்லை.

எமக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறோம். புதிதாக எமக்கு எதுவும் தேவையில்லை. ஏற்கனவே இருந்த சலுகைகளையும் கொடுப்பனவுகளும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தாதியர்களின் கடமைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மதிய இடைவேளையில் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டது என்றார். 

கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கம் நடாத்தும் போட்டி!

கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கம் நடாத்தும் 2024ம் ஆண்டுக்கான எழுத்து தேர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி நடாத்தப்பட உள்ளது.

3000ற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவுள்ள குறித்த தேர்வு 45ற்கும் மேற்பட்ட நிலையங்களில் நடாத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்க வாழ்நாள் தலைவர் வே. இறைபிள்ளை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

மேலும் பாடசாலை மாணவர் ஒருவரை திருக்குறளின் மூலம் தாய் நாட்டிற்கும் தாய்மொழிக்கும் சமூகத்திற்கும் நல்ல பிரஜையாக உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும், குறித்த எழுத்து தேர்வானது. அ,ஆ,இ,ஈ,உ,ஊ என்ற பிரிவுகளில் தரம் 2 தொடக்கம் 13 வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

தினமும் நீர் விநியோகத்திற்கு தடை?

தற்போதைய நாட்களில் நீர் பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, விநியோக அமைப்பில் அவ்வப்போது குறைந்த அழுத்த நிலைகள் அல்லது அதிக உயரமான பகுதிகளுக்கான நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, ஒவ்வொரு நாளும் கணிசமான நேரத்திற்கு நீர் விநியோகம் தடைபடுகிறது, மேலும் சபையால் அடையாளம் காணப்பட்ட உயரமான பகுதிகளில் வசிக்கும் நுகர்வோருக்கு பவுசர்கள் மூலமாக நீரை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தற்போதைய நாட்களில் நீர் பாவனை அதிகரித்துள்ளதுடன், நீர் விநியோகம் குறைவாக இருப்பதால், வாகனங்களை கழுவுதல், தோட்டக்கலை போன்ற நடவடிக்கைகளுக்கு நீர் பயன்பாட்டைக் குறைத்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, பொதுமக்களிடம் கோரியுள்ளது. 

இதனூடாக, நீர் விநியோக அமைப்பில் நீர் அழுத்தத்தை உகந்த அளவில் பராமரிக்க முடியுமெனவும், அவசரநிலைகளைச் சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவாக இருந்தாலும், மக்களின் நீர் நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், நீர் உற்பத்தியில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை என்றும், சாதாரண அளவை விட சுமார் 102 மடங்கு அதிக அளவில் நீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உப்பு நீர் ஆற்று நீரில் கலப்பதைத் தடுக்க தற்காலிக தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இருப்பினும், இந்த வறட்சியான காலநிலை காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக தொடர்புடைய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

விசாரணைக்கு – 1939 மத்திய நிலையம்

பிரதமர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார். 

இன்று (27) நடைபெற்ற பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரதமர், ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார். 

மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை – 3,572 மில்லியன் ரூபா 

மைத்திரிபால சிறிசேன – 2015 முதல் 2019 வரை – 384 மில்லியன் ரூபா 

கோத்தபய ராஜபக்ஷ – 2020 முதல் 2022 வரை – 126 மில்லியன் ரூபா 

ரணில் விக்கிரமசிங்க – 2023 மற்றும் 2024 வரை – 533 மில்லியன் ரூபா 

அநுர குமார திசாநாயக்க – செப்டம்பர் 2024 முதல் பெப்ரவரி 2025 வரை – 1.8 மில்லியன் ரூபா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் 2013 ஆம் ஆண்டில் அதிகளவு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 1,144 மில்லியன் ரூபா என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றில் முழங்கிய ஹக்கீம்!

அரசாங்கம் பதவிக்கு வந்த பின் 70 க்கு மேல் மனிதப் படுகொலைகள்

சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம்

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து இதுவரை 70 க்கு மேற்பட்ட மனிதப் படுகொலைகள் நடந்துள்ளதாகவும் , சட்டமும் ஒழுங்கும் சீரழிந்து, நாட்டில் நீதியின் ஆதிபத்தியம் பாரிய சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட விவாத வாக்கெடுப்புக்கு முன்னர் , செவ்வாய்க்கிழமை (24) சில முக்கிய விடயங்கள் தொடர்பில் நீண்ட உரையொன்றை ஆற்றியபோது, படுகொலைச் சம்பவங்களையும் மையப்படுத்தி அவர் கூறியிருந்தார்.

தொறந்து உரையாற்றிய அவர்,

இந்த சபையில் நீதியமைச்சரும் இருப்பதன் காரணமாக, ஒரு முக்கிய விடயத்தைப் பற்றிக் கூற வேண்டும். இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டினார். தேசிய பாதுகாப்பு என்பதைவிட , பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து மனித படுகொலைகள் 70 க்கு மேல் நடந்துள்ளன. இது சம்பந்தமாக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன ?

கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்டு 48 மணி நேரத்துக்குள், கைது செய்யப்பட்ட இருவரை பொலீசார் கொன்றுள்ளனர். இது மிகவும் பாரதூரமான விடயமாகும். இதுபோன்ற விடயத்தில் ஜனாதிபதி அப்பொழுது எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியவை இப்பொழுது சமூக வலைத்தளங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை சுட்டு விட்ட பின்னர், சிறு பிள்ளைகள் சண்டையிடும் பொழுது மாற்றிக் கூறுவதைப் போலாவது சொல்லுங்களேன் என எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது அரசாங்கத்திற்குச் சொல்லிச் சிரித்தார். இப்பொழுது அவரது அரசாங்கத்திலேயே அது நடைபெறுகின்றது.

நேற்று, இலங்கை சட்டமன்றம் பதில் பொலிஸ்மா அதிபருக்கு வற்புறுத்தி கூறியுள்ள விடயம் என்னவென்பது நீதி அமைச்சருக்குத் தெரியுமா ?

அதாவது, கொலைகள் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்துவதற்கு சட்டத்துக்குப் புறம்பான இவ்வாறான கொலைகள் ஒரு தீர்வாக மாட்டாது என்றும், அரசாங்கம் சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே இவ்வாறான பாரிய குற்றச்செயல்களை முடிவுக்கு கொண்டு வரலாம் என்றும் இலங்கை சட்ட மன்றம், பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வலியுறுத்திக் கூறியுள்ளது. இந்த விடயத்தில் பாரபட்சமற்ற விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறும் இலங்கை சட்டமன்றம் பதில் பொலிஸ் மாஅதிபரைக் கேட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்படுபவர்களின் விடயத்தில் பொலிசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வழங்கி உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் அந்த ஆணை ஏன் பின்பற்றப்படுவதில்லை?

எவ்வளவு பாரதூரமான குற்றச் செயலைப் புரிந்தாலும், கண்டபடி இவ்வாறு எவரையும் சுட்டுக் கொல்ல முடியாது. தப்பியோட முற்படுபவரைச் சுட்டுவிட்டு, அல்லது பதுக்கி வைத்திருக்கும் போதை பொருளை காட்டுவதற்கு அல்லது ஒளித்து வைத்திருக்கும் ஆயுதத்தை கண்டுபிடிப்பதற்கு என்று கூட்டிக்கொண்டு போய், பின்னர் தங்களிடம் இருந்த ஆயுதத்தை பறிக்க முற்பட்டார் எனக் கூறி இவ்வாறு சுட்டுத் தள்ள முடியாது.

நீதியின் ஆதிபத்தியத்திற்கு பாரிய சவால் ஏற்பட்டிருப்பதை நினைவூட்டுகின்றேன். நேற்று பிரதமர் இந்த சபையில் பேசும் பொழுது பாதாள உலகத்தினரை ஒழித்து கட்டி விடலாம் என்று கூறினார். பாதாள உலகத்தினரின் கரங்களில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதாவது இவர்களுக்குத் தெரியுமா?

எத்தனையோ குழுக்கள் வன்செயல்களில் ஈடுபட்டன. அரசாங்கத்தில் இருப்பவர்களும் ஒரு காலத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தான். தேசப்பற்றாளர்களின் மக்கள் இயக்கம் என்று கூறிக்கொண்டு ஆயுதங்களை முன்னர் பறித்தெடுத்தவர்கள் இருக்கிறார்கள்; ஆயுதக் களஞ்சியங்களில் ஆயுதங்களை கொள்ளையடித்தவர்கள் இருக்கிறார்கள் .

சட்ட பூர்வமான ஆயுதங்களை விட, சட்ட விரோத ஆயுதங்களைக் கொண்டே படுகொலைச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அவற்றை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுங்கள் என்றார்.

இந்தியாவுக்கு பறக்கவுள்ள ரணில்!

உலகளாவிய நிகழ்வுகள் குறித்து விசேட உரை நிகழ்த்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) இந்தியா செல்லவுள்ளார்.

இந்தச் சொற்பொழிவு நாளை (28) புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாபர், முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தவுள்ளனர். 

தெற்காசியா குறித்த சொற்பொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளமை விசேட அம்சமாகும். 

மேற்படி, இந்திய விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. 

மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் குழுவுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். 

குறுகிய காலத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். 

முன்னாள் ஜனாதிபதி மார்ச் 2 ஆம் திகதி நாட்டுக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறக்கப்படாத ஆயுர்வேத வைத்தியசாலை!

பல வருட காலமாக திறக்கப்படாத ஆயுர்வேத வைத்தியசாலை

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையினரால் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஏழு வருடம் கடந்த நிலையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாது குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டிடம், கால்நடைகளின் தங்குமிடமாகவும், பட்டறை காடாகவும் காட்சியளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் வைத்தியசாலை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 16 கிராம மக்கள் பயன் தரக்கூடிய வகையில் நவீன ஆயுர்வேத வைத்தியசாலையாக நிர்மாணிக்கப்பட்ட போதிலும் இன்றுவரை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாத நிலையில் இருப்பதையிட்டு மக்கள் கவலை தெரிய்விக்கின்றனர்.

இதனை மிக விரைவில் மக்களினது பாவானைக்கு கையளிக்க வேண்டுமென இப்பகுதியில் வாழும் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் தற்பொழுது அதிகளவாக ஆயுர்வேத வைத்தியசாலையையே நாடி வருகின்றமையால் குறித்த பகுதியில் உள்ள மக்கள் புதுக் குடியிருப்பு, பரந்தன் ஆகிய பகுதிகளுக்கே பல சிரமங்களுக்கு மத்தியில் ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சொந்த இடத்தில் நவீன ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிடம் இருந்தும் வெளி பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்திய சாலையை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் குறித்த ஆயுர்வேத வைத்திய சாலையை எமது பயன்பாட்டுக்கு விரைவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

முல்லைத்தீவில் களைகட்டிய இல்ல விளையாட்டு போட்டி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விஸ்வநாதர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வளுனர் திறனாய்வுப் போட்டி பள்ளி முதல்வர் திரு யோகராசா அவர்களின் தலைமையில் நேற்று 25.02.2025 மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் ஒரு அங்கமாக வருடம்தோறும் பாடசாலைகளில் இல்ல மெய்வளுனர் திறனாய்வுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் விசுவமடு, விஸ்வநாதர் வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வளுனர் திறனாய்வுப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்கள் தமது விளையாட்டு திறமையை காண்பிக்கும்வண்ணம், போட்டிகளில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் 50 மீட்டர் 75 மீட்டர் ஓட்டங்கள் என பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கானி ஜெயகாந்த், ஆரம்ப உதவி கல்வி பணிப்பாளர் திருக்குமரன், மதகுருமார்கள், இராணுவத்தினர், அயல் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

தனியார் ஊழியர்களுக்கு விழுந்த இடி!

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும், அத்தகைய சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் தெரிவிக்கிறது. 

வணிகர்கள் திவாலான தங்கள் வணிகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க கால அவகாசம் தேவை என அதன் தலைவர் டானியா எஸ். அபேசுந்தர தெரிவித்தார். 

“நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது பட்ஜெட்டில் வைப்பதற்கான சில தரவுகள் அல்ல. சில செயல்படுத்தக்கூடிய திட்டங்கள். அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அது மிகவும் நல்ல விடயம். தனியார் துறையையும் அதையே செய்யச் சொல்லும்போது அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ரூ. 21,000 சம்பளத்தை ரூ. 27,000 ஆக உயர்த்தும்போது, ​​அங்கேயே ரூ. 6,000 வித்தியாசம் உள்ளது. 50 – 60 மணிநேரத்திற்கு OT செய்கிறார்கள். நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 210 செலுத்துகிறோம். அதற்கு மட்டும், நாங்கள் சுமார் ரூ. 10,000 செலுத்துகிறோம். அதனுடன் ETF, EPF மற்றும் சம்பள அதிகரிப்பு அனைத்தையும் கூட்டும்போது, ​​சுமார் ரூ. 15,000 அதிகரிக்கிறது. அது அடிப்படை சம்பளத்திலிருந்து அதிகரிக்கும்போது, ​​தொழில்முனைவோராகிய எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது.” என்று தெரிவித்தார்.

சட்டென்று மாறிய வானிலை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுளளது.

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் சற்று பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.