Home Blog Page 298

சஞ்சீவ படுகொலையின் திக் திக் நொடிகள்!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பான மரண விசாரணை இன்று (24) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த விசாரணை தொடர்பான சாட்சியங்கள் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன.

இதன்போது, கொழும்பு குற்றப்பிரிவின் பொலிஸ் சார்ஜென்ட் பண்டாரவின் வழிகாட்டுதலின் கீழ், துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் நீதிமன்ற அறையில் பணியில் இருந்த கெசல்வத்த பொலிஸை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஹேவாபதிரணகே தரங்க சாட்சி வழங்கிய நிலையில்,  சம்பவம் நடந்த அன்று நீதிமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 அல்லது 9.35 மணியளவில் ஆரம்பித்ததாக தெரிவித்தார்.

“அன்று ஸ்கைப் தொழில்நுட்பத்தின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை நீட்டிக்கும் செயற்பாடு இடம்பெறவிருந்தது. காலை 9:40 மணியளவில் நீதிமன்ற அறையின் மூடப்பட்டிருந்த கதவைத் திறந்து, இரண்டு சிறை அதிகாரிகள் சந்தேக நபர் ஒருவரை திறந்த நீதிமன்றத்திற்குள் அழைத்து வந்தனர். ஒரு சிறை அதிகாரி என்னிடம் வந்து, ‘கணேமுல்ல சஞ்சீவவை அழைத்து வந்துள்ளோம்’ என்று கூறினார். நான் சந்தேக நபரை சிறைக் கூண்டிற்குள் வைக்கச் சொன்னேன்.

அப்போது சிறை அதிகாரி, ‘இந்த சந்தேக நபருக்கு பகைவர்கள் இருப்பதால், கூண்டிற்குள் வைக்க முடியாது’ என்று கூறினார். பின்னர் அவரை பெஞ்சில் உட்கார வைக்கச் சொன்னேன்.  நீதவான் கேட்டால், நீங்களே காரணங்களை விளக்குங்கள் என்று நான் சிறை அதிகாரியிடம் கூறினேன்.
பின்னர் இந்த சந்தேக நபரை பெஞ்சில் உட்கார வைத்தார்கள். ஏறக்குறைய முப்பது வழக்குகள் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்பட்ட பிறகு, ஸ்கைப் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் கணேமுல்ல சஞ்சீவவின் வழக்கு அழைக்கப்பட்டது. பிரதிவாதி சாட்சிக் கூண்டிற்கு முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அப்போது நீதவான், சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவவிடம், வழக்குக்கு பிணை இருந்ததா என்று விசாரித்தார். அப்போது கணேமுல்ல சஞ்சீவ, ‘பிணை இல்லை’ என்று கூறினார். அந்த சந்தர்ப்பத்தில் நீதவான், சிறை அதிகாரியிடம், ‘நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இந்த சந்தேக நபரை ஏன் அழைத்து வந்தீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்க சிறை அதிகாரி முன்னால் வந்தார். அவரால் ‘ஒன்பது’ என்ற வார்த்தையை மட்டுமே சொல்ல முடிந்தது. திடீரென மூன்று அல்லது நான்கு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன.

உள்ளே இருந்தவர்கள் கத்த ஆரம்பித்தனர். சட்டத்தரணி உடையணிந்த ஒரு நபர் சாட்சிக் கூண்டு பக்கம் திரும்பி ஏதோ செய்வதைப் பார்த்தேன். அதனுடன் தான் துப்பாக்கிச் சத்தங்கள் வந்தன. அந்த நபரின் முகத்தை நான் பார்க்கவில்லை. அவர் நீல நிற டையை அணிந்திருந்தார். பின்னர் அந்த நபர் கதவைத் திறந்து வெளியே தப்பி ஓடினார். அவர் கையில் எதுவும் இருக்கவில்லை. பின்னர் நான் நீதவான் இருக்கை பக்கம் பார்த்தேன். அங்கு நீதவான் இருக்கவில்லை. பின்னர் நாங்கள் தேடி பார்த்தோம். நீதவான் பெஞ்சுக்கு அடியில் மறைந்து இருந்தார்.

பின்னர் நாங்கள் அவரை பாதுகாப்பாக அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றோம். நீதவான் அதிர்ச்சியடைந்திருந்தார். பின்னர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவ சாட்சிக் கூண்டிற்குள் மேலே தலை தூக்கியவாறு விழுந்து கிடந்தார்.” என்று சாட்சி வழங்கினார்.

புதுகுடியிருப்பு பகுதியில் கோர விபத்து!

தர்மபுரம், புது குடியிருப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம், புது குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த ஹையஸ் ரக வேன் ஒன்று, பரந்தன் பகுதியில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவ நபர் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்காக தருமபுரம் வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலை மாற்றப்பட்ட நிலையில், அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹையஸ் வேனில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி நிருபர் ஆனந்தன்.

கிளிநொச்சியில் சிக்கிய அதிகளவான கஞ்சா!

கிளிநொச்சி பகுதியில் முதல் தடவையாக அதிகளவான கஞ்சா கன்டுபிடிக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

400 கிலோவுக்கு அதிகளவான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, கிளிநொச்சி பொலிசார் இன்று 24.02.2025 நடத்திய சுற்றிவளைப்பில் மாங்குளம் மற்றும் கிளிநொச்சி போலீஸ் பிரிவுகளை சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் 400 கிலோவுக்கு அதிகளவான கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டனர்

ஆணையிரவு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி கூலர் வண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட சுமார் 400 kg கேரள கஞ்சாவுடன் மாங்குளம் போலீஸ் பிரிவை சேர்ந்த ஒருவரும், கிளிநொச்சி போலீஸ் பிரிவை சேர்ந்த மற்றைய சந்தேக நபரும் மேற்படி கைதுசெய்யப்பட்டதுடன், கூலர் வாகனமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கத்து.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஆனந்தன்

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே நேற்று நடைபெற்ற அவசர மீனவ ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. 

மன்னார் கடற்பரப்பில் நேற்று அதிகாலை 32 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 

நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதைத் தடுத்து படகுகளை மீட்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அனைவரையும் கைது செய்யுங்கள்-பகீர் தகவல்!

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அனைத்து வீரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்பு செயலாளர் இதனை உறுதிப்படுத்தினார். 

பெரும்பாலான குற்றங்களுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்புப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பாதுகாப்பு அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு இவ்வாறுதான்!

சம்பள அதிகரிப்பு அரச சேவையில் கனிஷ்ட மட்டத்தில் ஆகக் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அண்மையில் (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;
தற்போது அரசாங்க சேவையில் கொடுப்பனவுகள் இரண்டு வழங்கப்படுகின்றன. ஒன்று வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 17,800 ரூபாவும் மேலும் கொடுப்பனவுகள் இரண்டு கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்ட 7,500 ரூபாவும் காணப்படுகிறது. அது 5,000 ரூபா மற்றும் 2,500 ரூபாய்கள் ஆகும். இந்த 7500 ரூபாய் என்பது 15,750 ரூபாயினுள் சம்பள அதிகரிப்பிற்கு அதிகரிக்கப்படும். அடிப்படைச் சம்பளம் 15,750 ரூபாவினால் அதிகரிக்கும் போது அங்கு காணப்படும் 7,500 ரூபாய் புதிதாக மீதப்படும் பகுதியாகும். ஹர்ஷதி செல்வா குறிப்பிட்ட பி எல் (PL) இந்த சம்பளம் மாத்திரம் ஏனைய சம்பளம் பற்றி கதைக்கவில்லை. 

அதனால் இந்த வருடத்தில் 5000 ரூபாவில்  மீதப்படும் 3,250 ரூபா வின் 975 ரூபாவும் அதிகரிக்கப்படும். அதன்போது அரசாங்க சேவையில் பி எல் (PL)1 தரத்தின் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிக்கும். 

அதேபோல் அரசாங்க சேவையில் ஒவ்வொருவருக்கும் வருடாந்த சம்பள அதிகரிப்பு 80% வீதத்தினால் உயரும். குறைந்தது 250 ரூபாய் வருடாந்த சம்பள உயர்வு 450 ரூபாய் வரை 80% வீதத்தினால் அதிகரிக்கும்.

இதன்போது பிரதி அமைச்சர் அபிவிருத்தி உத்தியோத்தர், ஆசிரியர் சேவை, அதிபர் ஆகிய சேவைகள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் MN I உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்புத் தொடர்பாகவும் தெளிவு படுத்தினார்.

கிராம உத்தியோகத்தர் சேவையின் தற்போதைய சம்பளம் GN-1- 28,940 மூன்று ஆண்டுகளுக்குள் 56,630 ஆக அதிகரிக்கும். அதுபோல் மறக்க வேண்டாம் 40,000 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு 17,500 எனப்படும் வாழ்க்கைச் செலவுப்படி அதே விதத்திலேயே சேர்க்கப்படும். அத்துடன் அவர்களின் மொத்த அதிகரிப்பு 21,690 ரூபாய் அதிலிருந்து 17,500 ரூபாய்களை கழித்தால் அவர்களது நிகர சம்பள அதிகரிப்பு 14,190 ரூபாவாகும். அதாவது இன்றைய நாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் சம்பளம் 9,257 ரூபாவினால் அதிகரிக்கும். 

தற்போது மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களின் (MO) சம்பளம் 54,250 ரூபாய். அது 91,750 ரூபாய் வரை அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிக்கப்படும். அதன்போது அவர்களது மொத்த சம்பள அதிகரிப்பு 37,460 ரூபாவில் 7,500 ரூபாய்களை கழித்தால் 29,960 ரூபாவின் 30% சதவீதம் வழங்கப்படும். மொத்த அதிகரிப்பில் 7,500 ரூபாவை கழித்தால் மீதமாகும் 30% சதவீதம் இந்த வருடத்தில் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து சகல அரச ஊழியர்களுக்கும் கிடைக்கும். அதன்போது வைத்தியர் ஒருவரின் சம்பளம் 13,988 ரூபாவினால் அதிகரிக்கும். 

தற்போது மணித்தியாலத்திற்கு 687 ரூபாய் வழங்கப்படுகின்றது. இந்த புதிய சம்பள அதிகரிப்பினால் புதிதாக இணைந்து கொள்ளும் மருத்துவ உத்தியோகத்தர் ஒருவருக்கு  மேலதிக நேரக் கொடுப்பனவு 764 ரூபாவாகும் என்றும் பிரதி அமைச்சர் விபரித்தார்.

சவூதி அரசின் முக்கிய நிகழ்வில் சஜித்!

சவூதி அரசின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி கொண்டாடப்படும் சவூதி அரேபிய ஸ்தாபக தின நிகழ்வும், இலங்கை-சவூதி அரேபிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர நட்புறவு ஆரம்பமாகி 50 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்ட விருந்துபசார நிகழ்வும் நேற்று (22) மாலை கொழும்பில் மிக விமர்சியாக இடம்பெற்றது.

இவ்வரலாற்று சிறப்புமிக்க கொண்டாட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வானது சவூதி அரேபியாவின் வரலாற்று பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை நினைவுகூருவதுடன், இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்து காணப்படுகின்றது.

கிளிநொச்சியில் தூய இலங்கை வேலைத்திட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றது.

தூய்மையான இலங்கை (Clean Srilanka) வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 11 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் குறித்த நிகழ்ச்சித்திட்டம் இன்று (23) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.S.முரளிதரன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவின் விநாசியோடை கெளதாரிமுனை பிரதான கடற்கரையில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமானது.

”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக சுத்தமாகப் பேணுவதற்கும் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

இதன்போது அதிகளவான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், கண்ணாடியிலான கழிவுப் பொருட்கள், இலகுவில் அழிந்து போகக்ககூடிய கழிவுப் பொருட்கள் என ஏராளமான கழிவுகள் உரிய முறையில் அகற்றப்பட்டுள்ளதோடு, தொடர்ந்துவரும் காலங்களிலும் நிலைபேறான தூய்மையாக்கலை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணியின் ஆரம்ப நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கெளரவ N.வேதநாயகன் அவர்களும்; கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கெளரவ இ.சந்திரசேகர் அவர்களும் அதிதிகளாக கலந்துகொண்டு செயல்திட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டனர்.

இவர்களுடன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிஸ், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் பணியினை முன்னெடுத்தனர்.

மேலும் இதனுடன் இணைந்ததாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய 11 இடங்களிலும் சம நேரத்தில் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று காலை செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதிகரித்துள்ள துப்பாக்கி சூடு கலாச்சாரம்!

அம்பாறை – தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள தனியார் பண்ணையொன்றில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தெஹியத்தகண்டிய, முவபெட்டிகேவல, ஹுலங்பந்தனாகல பகுதியில் நேற்று சனிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் வீரகெட்டிய, எதரம்தெனிய, கிராவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என  தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தெஹியத்தகண்டிய பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக வெப்பம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்தும் மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், நிழலான இடங்களில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகளை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், முடிந்த வரையில் வெள்ளை அல்லது வெளிர் நிற, இலகுரக ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக மேலதிக தகவலைப் பெற்றுக்கொள்ள 011-7446491 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.