Home Blog Page 299

பிரதமர் வெளியிட்ட மிக முக்கிய செய்தி!

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுடன் தொடர்புடைய குழுவினருடனான சந்திப்பொன்று நேற்று (22) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளை கவனத்திற்கொண்டு விசேட தேவைகள் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மொழிவை அவர்கள் முன்வைத்தனர்.

விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை வலுப்படுத்துதல், விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் அவர்களுக்கான உயர்கல்வி நிலைகளை அறிமுகம் செய்தல் போன்ற பல விடயங்கள் குறித்து இந்த முன்மொழிவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மதியிருக்கம் (ஓட்டிசம்) நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வியை உயர்த்தவும், அநாதை பிள்ளைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தற்போதைய அரசு 2025 வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை அவர்கள் பாராட்டினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்,

விசேட தேவையுடையவர்கள் பொதுச் சமூகத்தில் இயல்பான வாழ்க்கையை முன்னெடுக்க தேவையான சமூக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். Clean sri lanka திட்டத்தினூடாகவும் நாம் அதனை செய்ய எதிர்பார்க்கின்றோம்.

எமது நாட்டில் பல கொள்கைகள் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான் பிரச்சனை. நாம் பார்ப்பது போல், கொள்கைகளை செயற்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது இங்கு மிகவும் முக்கிய விடயம். அதுதான் 2025 வரவுசெலவுத்திட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு குறிப்பாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்வியை ஒரு தலைப்பாக மாற்றுவதற்கு எதிர்பார்க்கிறோம். அதற்கு தேவையானவர்களை நியமித்துள்ளோம்.

கல்வியில் ஒரு பாரிய மாற்றத்திற்கு நாம் இப்போது தயாராகி வருகிறோம். 2025-ம் ஆண்டு இது தொடர்பான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு, 2026-ல் இதை நடைமுறைப்படுத்தத் தொடங்குவோம். இது முழு முறைமையையும் மாற்றும் நீண்ட காலத் திட்டம். நிச்சயமாக, விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் கல்வி முறைக்கு விசேட கவனம் செலுத்தப்படும்.

அனைத்து பாடசாலைகளிலும் விசேட தேவையுடைய பிள்ளைகள் வழமை போன்று கல்வியில் ஈடுபடுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம். ஆனால் இது ஒரு பெரிய செயல்முறை. ஒரேயடியாக அதைச் செய்ய முடியாது, படிப்படியாக அந்த இலக்குகளை அடைவோம் என்று நம்புகிறோம். முதற்கட்ட நடவடிக்கையாக, ஒரு கல்வி நிர்வாக வலயத்தில் குறைந்தபட்சம் ஒரு பாடசாலையிலாவது இந்த பிள்ளைகளை கல்வி கற்க தகுதியுடையவர்களாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று பிரதமர் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டி.டி.டி.எல்.தனபால உள்ளிட்ட அங்கவீனமுற்ற சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சிறுவர் நிலையங்களுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு!

இலங்கை முழுவதிலுமுள்ள 379 சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு இந்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போதே கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதனை தெரிவித்தார்.

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள ஒரு குழந்தைக்கு ஒதுக்கப்படும் ஏறத்தாழ 30 ஆயிரம் ரூபா அந்தக் குழந்தைகளுக்குச் சென்றடைகின்றதா என்பதைக் கணக்காய்வு செய்வதற்கு உரிய கட்டமைப்பு இல்லை என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள சட்டங்கள் போதுமானவை, ஆனால் சட்டத்தை அமுலாக்கும் கட்டமைப்பில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு ஒதுக்கப்படும் சகல நிதிகளும் சமூக நலனுக்காகவும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும் திறன்படப் பயன்படுத்தப்படுவது அனைவரினதும் பொறுப்பு என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இலங்கை முழுவதிலும் 379 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்குவதாகவும், இவற்றில் 47 நிலையங்கள் அரசாங்கத்திற்குரியது என்றும் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். ஏனைய அனைத்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் அரசுசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் அனுசரணையுடன் பராமரிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதிலும் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் திறன்களை மேம்படுத்தவும் அவற்றின் பௌதீக வள, மனிதவள மேம்பாட்டிற்கும் இந்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள், திணைக்களத்தின் ஊடாக பல்வேறு வழிகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகளைக் கருத்தில் கொள்ளும்போது ஒரு சிறுவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும் இந்த நிதி அந்தச் சிறுவர்களுக்கு உரிய முறையில் சென்றடைகின்றதா என்பதைக் கணக்காய்வு செய்வதற்கு முறையான கட்டமைப்பு எதுவும் இல்லையென்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நன்னடைத்தை அதிகாரிகளின் சுற்றிவளைப்புக்களில் சில சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இதுவரை மூடப்பட்டிருப்பதாகவும், அந்தச் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்கான நடைமுறையொன்று தயாரிக்கப்படும் என கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதிலளித்தார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு பணமீட்டும் அமைச்சு அல்ல என்றும், மாறாக கிராமப்புற மற்றும் பொருளாதார அடிப்படையில் சமூக நலனை மேம்படுத்துவதற்கு முதன்மையாக பங்களிக்கும் அமைச்சு என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே, மக்களுக்கு நன்மை செய்வதே முக்கியப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும், அதற்காக ஒதுக்கப்படும் அனைத்து நிதி மற்றும் ஏனைய ஒதுக்கீடுகளை சமூக நலனுக்காக சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய அடையாள அட்டை தயாரிப்பதில் உள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலையால் பௌத்த பிக்குனிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான வழிமுறையை வகுப்பது குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், சூப்பர் மார்க்கட்டுகளுக்கு அருகில் யாசகம் மற்றும் பல்வேறு வியாபார நடவடிக்கைகளில் பாடசாலை சிறுவர்களை ஈடுபடுத்துவது குறித்தும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினர். இதனைத் தடுப்பதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டம் போதுமானதாக இருந்தாலும் அவற்றைச் செயற்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக குழுவில் ஆஜராகியிருந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதியமைச்சர் (வைத்தியர்) நாமல் சுதர்ஷன, கௌரவ நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார, கௌரவ புத்தசாசன, மத மற்றும் காலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி, கௌரவ கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ்!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொவிட் 19 தொற்றினை போன்றே இந்த புதிய தொற்றும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் அபாயம் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த புதிய வகை கொரோனா வைரஸ் ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படுகிறது.

இந்த வைரஸ் தொற்றும் மனிதர்களின் சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் தன்மை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெளியாகிய அதிவிசேட வர்த்தமானி!

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு தடைசெய்யப்பட்ட அமைப்புகள், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மீண்டும் மீண்டும் நிதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. 

அதன்படி, அந்த அமைப்புகளின் நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்கள் முடக்கப்பட்டுள்ளன. 

மேலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 222 நபர்களின் பட்டியலும் இந்த அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 

தடைசெய்யப்பட்ட 15 பயங்கரவாத அமைப்புகள் பின்வருமாறு.. 

1 தமிழீழ விடுதலைப் புலிகள் 
2 தமிழர் புனர்வாழ்வு அமைப்பு 
3 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு 
4 உலக தமிழர் இயக்கம் 
5 நாடு கடந்த தமிழீழ அரசு 
6 உலக தமிழர் நிவாரண நிதியம் 
7 தலைமையகக் குழு 
8 தேசிய தௌஹீத் ஜமாஅத் 
9 ஜமாதே மிலாதே ஈப்ராஹிம் 
10 விலாயத் அஸ் செய்லானி 
11 கனேடிய தமிழர் தேசிய அவை 
12 தமிழ் இளைஞர் அமைப்பு 
13 டருல் ஆதர் அத்தபவியா 
14 இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் 
15 சேவ் த பேர்ள்ஸ்

ரஷ்யா நினைத்தாள் இதனை ஈஸியா செய்துவிடும்!

ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

ரஷ்யா தொடர்ந்த போரில் உக்ரைனுக்கு முந்தைய அமெரிக்க அரசு ஆதரவாக இருந்தது. ஆனால் அமெரிக்காவில் ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறிவிட்டன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், உக்ரைனை ஒதுக்குகிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சர்வதிகாரி என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி பங்கேற்க வேண்டும் என அவசியம் இல்லை. அவருக்கு அங்கு வேலையே இல்லை. ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும்.

ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்கள் செய்வதை தடுத்து நிறுத்துகிறார். புடினை நல்லவராகவோ அல்லது சிறந்தவராகவோ மாற்ற முயற்சிக்கவில்லை. போர் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

கோப் குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

🔸 ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசைநிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட ரூ.188 மில்லியனுக்கான காசோலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் கோப் குழுவில் ஆஜர்

🔸 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை தெளிவாகின்றது – கோப் குழு

🔸 இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரின் தனிப்பட்ட செயலாளருக்கு அப்பதவிக்கான நியமனத்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதி இல்லையென்பதும் உறுதியானது

🔸 முன்னாள் ஜனாதிபதியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு நிதி மோசடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது – குழு உறுப்பினர்கள்

🔸 முன்னாள் நிதிப் பணிப்பாளர் தனது கடமையை மேற்கொண்ட விதம் குறித்து திருப்தியடைய முடியாது – கோப் குழு

🔸 அரசாங்க அதிகாரிகள் தமது கடமையைச் சரியாகச் செய்வதன் மூலம் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் – கோப் குழுவின் தலைவர் அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு கோப் உப குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, தற்போதைய செயலாற்றுகை மற்றும் 2021 நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுவில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் நேற்றைய முன்தினம் (20) கூடியபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த 18ஆம் திகதி இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கோப் குழு கூடியதுடன், இதில் பல்வேறு முறைபாடுகள் பற்றிய விபரங்கள் வெளிப்பட்டிருந்தன. இதற்கு அமைய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர்களைக் கோப் குழு முன்நிலையில் அழைத்து விசாரணைகளைத் தொடர்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் தேவையான அதிகாரிகளை் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடியான செயற்பாடுகள் பல வெளிப்பட்டதுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக கோப் உபகுழுவொன்றை நியமிக்க குழுவின் தலைவர் தீர்மானித்தார். இதற்கு அமைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சியின் தலைமையில் கௌரவ உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, ஜகத் மனுவர்ன, சுனில் ராஜபக்ஷ, அசித நிரோஷன எகொட விதான மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரைக் கொண்டதாக கோப் உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த உபகுழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு அதன் அறிக்கை கோப் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசைநிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட ரூ.188 மில்லியனுக்கான காசோலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரினால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்டமை தொடர்பில் முதல்நாள் உறுதிப்படுத்தப்பட்ட விடயம் குறித்து சம்பந்தப்பட்ட முன்னாள் தலைவர் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தமையால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்ச்சிகளுக்காக இந்தக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தான் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறும் விடயம் பற்றி ஆச்சரியமடைவதாகவும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட தினத்தில் பி.ப 2 மணி முதல் பி.ப 5 மணிவரையான காலப்பகுதிக்குள் இந்தக் காசோலையை உறுதிப்படுத்தித் தருமான முன்னாள் தலைவர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கமைய முன்னாள் தலைவர் அழுத்தத்தைப் பிரயோகித்திருப்பது தெளிவாகப் புலப்படுவதாக குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரின் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவருக்கு ஆகக் குறைந்த அடிப்படைத் தகுதியும் இல்லையென்பதும் குழுவில் புலப்பட்டது. குறித்த பதவிக்கான நியமனத்தைப் பெற பட்டம் பெற்றிருப்பது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும், குறித்த தனிப்பட்ட செயலாளரிடம் தகுதியை உறுதிப்படுத்துமாறு கோரியபோதும் அதனை அவர் உறுதிப்படுத்தவில்லையென்றும், அதனால் குறித்த பதவியை அவர் இராஜினாமாச் செய்தார் என்பதும் குழுவின் விசாரணைகளில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர் குழுவில் ஆஜராகியிருந்ததுடன், அவரிடம் குழு விசாரணைகளை நடத்தியது. அப்போது தான் பட்டக்கல்வியைப் பயின்று வந்ததால் பட்டத்தைப் பூர்த்திசெய்திருக்கவில்லையென்றும் பதிலளித்தார். அத்துடன், அவர் அந்தப் பதவியிலிருந்து விலகி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபையில் பணியாற்றியதாகவும் இங்கு தெரியவந்தது. இந்த நபர் பல்வேறு விடயங்களில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளைஞர் சேவைகள் மன்றத்தினால ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்மார்ட் யூத் புத்தாண்டு விழா தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. சரியான நடைமுறையைப் பின்பற்றாது இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டமை இங்கு தெரியவந்ததுடன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவருடைய தேவைக்காக இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாவதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அதேநேரம், விநியோகஸ்தர்களை இணைத்துக்கொண்டமை குறித்து குழு வினவியதுடன், இதற்குப் பதிலளித்த முன்னாள் தலைவர் தனக்கு ஏராளமான கடிதங்கள் கிடைப்பதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆற்றுப்படுத்தியதாகவும் கூறினார். இந்த நிகழ்வுக்காக ஜனாதிபதி செயலகத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இருப்பினும், இந்த செயல்முறை ஒழுங்கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெளிவாகிறது என்று கோப் குழு சுட்டிக்காட்டியது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னாள் ஜனாதிபதியின் பிரசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டமை புலனாவதாக கோப் குழு, இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரிடம் சுட்டிக்காட்டியது. எனினும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதுவரை முன்னெடுக்கப்பட்ட சகல திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து விளையாட்டை மாத்திரம் நோக்காகக் கொண்டு ஸ்மார்ட் ஃபியஸ்டா திட்டம் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். எனினும், பெயர் மாற்றம் செய்யப்பட்டு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த ஸ்மார்ட் ஃபியஸ்டா நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட இசைநிகழ்ச்சித் தயாரிப்புக்காக 43 இலட்சம் ரூபா செலவுசெய்யப்பட்டபோதும் தயாரிப்பின் வீடியோ இளைஞர் சேவைகள் மன்றத்திற்குக் கிடைக்கவில்லையென்பதும் குழுவில் தெரியவந்தது. எனினும், இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு குறித்த வீடியோ கிடைத்ததாக முன்னாள் தலைவர் தெரிவித்தார். இது பற்றி ஆராயுமாறு குழு அறிவுறுத்தியது.

மேலும், தேசிய இளைஞர் பொசன் வலயம் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறையில் இளைஞர் சந்திப்பு நிகழ்வை நடத்தியமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இந்த நிகழ்ச்சிகளுக்காக டபிள்யூ.டி.வீரசிங்க அறக்கட்டளையின் தொடர்பு குறித்து குழு ஆராய்ந்தது. அத்துடன், பெல்வுட் நுண்கலைக் கல்லூரியை புனரமைத்தல் மற்றும் புதிய கட்டடம் அமைப்பது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு கூடிய கோப் குழு அளித்த பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயங்கள் குறித்து நீண்ட நேரம் குழு கலந்துரையாடியதுடன், முன்னாள் நிதிப் பணிப்பாளர் தனது பதவியில் நடந்துகொண்ட விதம் குறித்து திருப்தியடையவில்லையெனக் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், அரசாங்க அதிகாரிகள் தமது கடமைகளைச் சரியாகச் செய்வதன் மூலம் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதை உறுதிசெய்துகொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம். அஸ்லம், சமன்மாலி குணசிங்க, கோசல நுவன் ஜெயவீர, சுஜீவ திசாநாயக்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ஜகத் மனுவர்ன, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷ எகொட விதான, திலின சமரக்கோன், சந்திமா ஹெட்டியாராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் பங்கேற்றனர்.

சிறிய,நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு விழிப்புணர்வு!

தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (SAFTA) பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் தயாரிப்புகளை அதிகமாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் வழிவகைகள் பற்றிய குழுவின் கவனத்திற்கு.

வர்த்தகர்களை பதிவு செய்யும் போது வெளிநாட்டுச் சந்தை தொடர்பில் அறிவுறுத்துவதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது

ஏற்றுமதி தொடர்பாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு அறிவூட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தை குழு சுட்டிக்காட்டியது

தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (SAFTA) பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் தயாரிப்புகளை அதிகமாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இங்கு தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களால் பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பது குறித்து பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டது. ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள அனைத்து வர்த்தகர்களும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு வருவதால், தேவையான விழிப்புணர்வு ஏற்கனவே அங்கு வழங்கப்பட்டு வருவதாக கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அதற்கு அப்பாலும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியம் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

வர்த்தகங்களைப் பதிவு செய்யும் போதே இது தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்று குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார். அதற்கு அரச அதிகாரிகள் பாரம்பரிய முறைகளுக்கு அப்பால் பணியாற்ற வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், இதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஏற்றுமதியை ஊக்குவிப்பது தொடர்பில் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தை குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். விசேடமாக தேவையான அளவு அந்நியச் செலாவணியை அடைவதற்கு இந்த விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது என்றும் அதிகாரிகளுக்குக் குழு தெரிவித்தது. அத்துடன், கிராமப்புற மட்டத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான எரங்க வீரரத்ன மற்றும் (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அர்கம் இல்யாஸ், சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, விஜேசிரி பஸ்நாயக்க, சுனில் பியன்வில, ருவன் மாபலகம, திலிண சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், நிதி, திட்டமிடல், மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

திரிபோலி ஆயுதப் படை செய்த கொலைகள்!

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டமானது பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்த 20 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் குழு உறுப்பினர் என்ற வகையில் கலந்து கொண்ட சாணக்கியன் மட்டக்களப்பில் உள்ள பல பிரச்சனைகள் தொடர்பாக முன்வைத்த கோரிக்கைகளை அன்றைய தினமும் புதிய அரசிடம் எடுத்துரைத்திருந்தார்.

அதன் அடிப்படையில்,

மட்டக்களப்பில் உள்ள கையகப்படுத்தப்பட்ட இராணுவ முகாங்களான முறக்கொட்டான் சேனை, பாலையடி வட்டை, குருக்கள் மடம், காயங்கேணி, மற்றும் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட புதூர் மக்களுக்கு சொந்தமான நிலம், தாண்டியடி துயிலும் இல்லம், அதனுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம், மக்களுக்கு வழங்கப்படவேண்டிய மற்றும் மக்களுக்கு சொந்தமான வாகரை பிரதேச அரச காணிகளில் அநேகமானவை இரானுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகின்றது.

இவை உட்பட்ட பல பொது மக்களுக்கு சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அதற்கான குழு ஒன்றினை நியமிப்பது தொடர்பில் ஆராய்வதாக உறுதி அளித்தார்.

அதனுடன் கடந்தகாலத்தில் திரிபோலி ஆயுத படைப்பிரிவினால் Tripoli Platoon இனால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் தொடர்பான சாட்சிகளை விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்திருந்தேன் அதனையும் உடனடியாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.

இக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகங்கள் இடையிலான இந்திய, இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்று மீண்டும் ஆரம்பமானது. 

இதன்படி இன்று (22) காலை நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது. 

83 பயணிகள் குறித்த கப்பலில் இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்ததுள்ளதுடன், 83 பேர் இலங்கையிலிருந்து அங்கு செல்லவுள்ளனர். 

பிற்பகல் 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் போக்குவரத்து கப்பல் நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது. 

இந்த பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது செவ்வாய்க் கிழமை தவிர்ந்து வாரத்தின் 6 நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் வெளியிட்ட பகீர் தகவல்!

ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அத்தகைய நபர்களைக் கைது செய்ய சிறிது காலத்திற்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். 

ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யும் திறன் இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் இருப்பதாக அவர் மேலும் கூறினார். 

இதற்கிடையில், இந்த ஊடக சந்திப்பின் போது, ​​சேவையில் உள்ள இராணுவ வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், பொருளாதார நெருக்கடி மற்றும் போதைப்பொருள் பழக்கம் காரணமாக இராணுவ வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறினார். 

அதன்படி, எதிர்காலத்தில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.