Home Blog Page 301

கிளிநொச்சியில் நடந்த பாரிய ஆர்ப்பாட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் ஆரம்பித்த போராட்டம் இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து ஒன்பதாவது ஆண்டு தொடர்கின்ற நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலய முன்றல் நோக்கி தீச்சட்டி ஏந்தியவாறு பேரணியாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி யோ.கனகரஞ்சினி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை எம்மிடம் ஒப்படையுங்கள் என கோரியும் அல்லது அவர்கள் எங்கே என சிங்கள பேரினவாத அரசிடம் பலமுறை கேட்டும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. எனவே நாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி 2017-பெப்ரவரி 20 ம் திகதி கிளிநெச்சி கந்தசுவாமி ஆலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டமானது வடகிழக்கு என விரிவுபடுத்தப்பட்டது

2017 பெப்பரவரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டு வருடமாக அதாவது இன்றுடன் 2920 நாட்களைக் கடந்து தொடர்கின்றது. 2009 மே 18 ல் முள்ளிவாய்க்காலில் போர் மொளனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகின்றன.

இன்றும் இனப் படுகொலை தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஆனால் இலங்கையில் ஜனாதிபதிகளும் ஆட்சியாளர்களும் மாறினாலும் இனப் படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி இதுவரை கிட்டவில்லை.

நேரடியாக படையினர்களிடம் சாட்சியங்களுடன் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான நீதி இது வரை கிடைக்கவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினராகிய நாம் 2017 தொடக்கம் இன்று வரையும் உள் நாட்டில் பல போராட்டங்களை நடத்தினோம். இலங்கை அரசின் நீதித் துறையில் நம்பிக்கையில்லை என்ற ஒரு காரணத்தினால் நாம் சர்வதேச நீதி விசாரணை வேன்டும் என பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றோம்.

சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு மகஜர்களையும் அனுப்பினோம். நேரடியாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக் குழுவிலும் நேரடியாக சென்று ஆவனங்களை ஆதாரத்துடன் கையளித்தோம். ஆனால் இது வரை எமக்கான நீதி கிடைக்கவில்லை. 2015 ஆட்சியில் இருந்த நல்லாட்சி காலம் என சொல்லப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2019 ல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ, 2022 இல் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வரையான சகல அரசாங்கங்களும் எம்மை ஏமாற்றி உள்ளன.

தேசிய மக்கள் சக்தி மூலம் தற்போதய புதிய ஜனாதிபதியாக கடந்த 2024 செப்ரெம்பர் பதவியேற்ற அனுர குமார திசநாயக்க 2024 நவம்பர் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு நல்லென்னமும் அவர்களின் செயலில் தென்படவில்லை. மாறாக புலனாய்வாளர்களை ஏவி விட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரை கண்காணிப்பதுடன் அவர்களை சுதந்திரமாக தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்களில் கலந்து கொள்ள விடாமல் நீதிமன்ற தடை உத்தரவுகளை கொடுத்து ஐனநாயக வழிப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி தடுக்கும் அடாவடிச் செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறியுள்ளன செயல்கள் மாறவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய பெற்றோர்கள் இதுவரை 300க்கும் மேற்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையறியாது வேதனையுடன் உயிர் இழந்த பரிதாபங்கள் வடகிழக்கில் நடந்துள்ளன. எங்கள் வேதனைகளையும் வலிகளையும் உண்மைகளையும் இலங்கை அரசு புரியவில்லை. அதேபோல் சர்வதேசமும் புரிய வில்லை என்பதையே கடந்த எட்டு வருங்களாக நாங்கள் கண்ட உண்மை.

அரசுகள் மாறும் போது எல்லா சர்வதேச இராஜதந்திரிகளும் நாடுகளின் தலைவர்களும் ஏன் ஐநா சபைகளும் கூட இலங்கை அரசை காப்பாற்றும் ஒரு செயலாக கால அவகாசங்களை வழங்கி, கால நீடிப்பை செய்து வருவதை நாம் எட்டு வருடங்களாக அவதானித்து வந்துள்ளோம் என்ற உண்மையை கவலையுடனும் கண்ணீருடனும் மனவேதனையடனும் இந்த எட்டு ஆண்டு நிறைவில் பதிவு செய்கின்றோம்” என சங்க தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்தார்.

எனவே இந்த உண்மைகளை உணர்ந்து இனியும் எம்மை ஏமாற்றாமல் எங்கள் உணர்வுகளை மதித்து சர்வதேச நீதி கிடைக்க ஆவன செய்யுமாறும் சர்வதேசத்திடம் வேண்டுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்திகளுக்காக ஊடகவியலாளர் ஆனந்தன்

மின்சாரம் தாக்கி முதியவர் மரணம்!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மணியம்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெல் வயலுக்கு போடப்பட்ட மின்குமிழ் வயர் அறுந்த நிலையில் குறித்த மின்சாரம் முதியவரை தாக்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் சுமார் 86 வயதுடைய முதியவர் எனவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட செய்தியாளர் ஆனந்தன்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருடன் ஹக்கீம் சந்திப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்புக்கமைய, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் பஹீம்-உல்-அஸீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் கடந்த (18) பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, லாஹூர் பிராந்திய கௌரவ கொன்ஸல் ஜெனரல் யாஸின் ஜோயிஆ தலைமையில் தற்போது இலங்கை வந்துள்ள வர்த்தகத் தூது குழுவினர் வருகை தந்து, வர்த்தக துறையில் இங்கு முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடினர்.

குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் உல்லாசப் பயணத்துறை தொழிலாண்மை என்பவற்றை மையப்படுத்தியதாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் பங்கேற்றனர்.

நீதிமன்ற கொலையாளி குறித்து வெளியான செய்தி!

கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் இராணுவ கமாண்டோ சிப்பாயோ அல்லது புலனாய்வு அதிகாரியோ அல்ல என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் அடிப்படைப் பயிற்சியை முடித்துவிட்டு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும், அவர் ஒரு கமாண்டோ சிப்பாயோ அல்லது உளவுத்துறை அதிகாரியோ அல்ல என்றும் கூறப்படுகிறது. 

இராணுவப் பயிற்சியின் போது தப்பிச் சென்ற குறித்த சிப்பாய், பின்னர் பொது மன்னிப்புக் காலத்தின் கீழ் சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அன்றிலிருந்து அவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது. 

சந்தேக நபர் சுமார் 6 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், தெஹிவளை, வட்டரப்பலவில் நடந்த இரட்டைக் கொலையிலும் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் எண் நீதவான் நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், தற்போது சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபர் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர். 

அதன்படி, நீதிமன்றிற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் நேற்று (19) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல உண்மைகளை பொலிஸாரால் வெளிக்கொணர முடிந்துள்ளது. 

இது தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த நபர் பல பெயர்களில் தோன்றியவர் என்று தெரிவித்தார். 

அவரிடம் பல அடையாள அட்டைகள் இருப்பதாகவும், அதில் ஒன்றில் சட்டத்தரணியாக பணிபுரிவதைக் குறிக்க தயாரிக்கப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டையும் அடங்குவதாகவும் அவர் கூறினார். 

அவர் முதலில் மொஹமட் அஸ்மன் ஷெரிப்தீன் என்ற பெயரில் தோன்றியதாகும், பின்னர் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தனராச்சி என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

கொடிகாரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என்ற பெயரைக் கொண்ட போலியான சட்டத்தரணி அடையாள அட்டையையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

அதன்படி, எதிர்கால விசாரணைகளில், இந்த சந்தேக நபர் மற்றும் கனேமுல்ல சஞ்சீவவின் கொலையில் அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த அனைவரையும் பற்றிய உண்மையான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரியும், அவருக்கு உதவிய பெண்ணும் நீதிமன்றில் இருந்து தப்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வௌியாகியுள்ளன.

நாட்டை உளுக்கிய கொலை சம்பவம்!

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புத்தளம் – பாலாவி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் ஒன்றில் தப்பிச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், முன்னாள் இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.

சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்துக்குச் சென்ற துப்பாக்கிதாரி கல்கிஸ்ஸை வட்டரப்பெல பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 07 ஆம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் ஆவார். 

துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் பெண்ணும் சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் சென்றுள்ளார். 

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’  வழக்கு விசாரணைக்காக சுமார் 12 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பின் கீழ் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் அழைத்துவரப்பட்டிருந்தார். 

நீதிமன்றத்திற்குள் சட்டத்தரணிகள் அதிகளவில் சோதனைக்குட்படுத்தப்படாததை அறிந்திருந்த சந்தேக நபர்கள் சட்டத்தரணி வேடத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் நீதிமன்றதிற்கு சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தேசிய பாதுகாப்பு குறித்து நாமல் கேள்வி!

நாட்டின் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிற்குக் குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் எங்கும் சுதந்திரமாகப் பயணிக்க முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்தது.

இவ்வாறு அரசாங்கம் குறிப்பிட்டு ஓரிரு நாட்களில் கொலைச் சம்பவங்களே அரங்கேறியுள்ளன என நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்தை சுட்டிக்காட்டி நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியிருந்தார்.

மேலும் இன்றைய தினம் நீதிமன்றத்திற்குள் நீதிபதியின் முன்பே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

உயிரிழந்தவரின் நடத்தை எவ்வாறு இருப்பினும் நீதிமன்றத்திற்குள் இவ்வாறான அசம்பாவிதங்கள் அரங்கேறுவது பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடு என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேபோல் அண்மையில் மன்னார் நீதிமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையும் நினைவுபடுத்தியிருந்தார்.

இவ்வாறான சூழலில் எவ்வாறு நாட்டிற்கு முதலீட்டாளர்களை அரசாங்கம் அழைக்க முடியும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டிலே முதலீடுகளை முன்னெடுத்த முதலீட்டாளர்களும் இடைநடுவே திட்டங்களைக் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் நாமல் எம்.பி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான கொலைச் சம்பவங்கள் அரங்கேறுவது நாட்டின் சுற்றுலாத்துறையையும் பாதிக்கும் எனக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அச்சாறு போன்று உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் எனவே பாதீட்டில் முன்வைத்த விடயங்களையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

ஆபத்தான காலநிலை மாற்றம்!

இன்று (19) பிற்பகல் 3 மணி முதல் 24 மணி நேரம் வரை வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தி வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

குறிப்பிட்ட காலப்பகுதியில், நாட்டின் 6 மாகாணங்களிலும் பல பகுதிகளிலும் வெப்பநிலை, மனித உடலால் உணரப்படும் “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான அளவு நீரை குடிக்குமாறும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், கடுமையான செயல்பாடுகளை மட்டுப்படுத்துமாறும், முடிந்தளவு வெள்ளை அல்லது வெளிர் நிற, இலகுரக ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Click here to join our whatsApp group

முதலிடத்தை பிடித்த மகேஷ் தீக்ஷன!

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷன முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

சமீபத்தில் முடிவடைந்த அவஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மகேஷ் தீக்ஷன சிறப்பாக பந்து வீச்சை மேற்கொண்டதன் காரணமாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். 

மகேஷ் தீக்ஷன முதலாம் இடத்திற்கு முன்னேறியதன் காரணமாக  தரவரிசையில் முன்னிலை வகித்த ஆப்கானிஸ்தானின் வீரர் ரஷீத்கான் இரண்டாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

மகேஷ் தீக்ஷன ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை எட்டுவது இதுவே முதன் முறையாகும்.

நீதிமன்றத்துக்குள்ளே கொலை!

கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்வதற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி மற்றும் பெண் சட்டத்தரணி போன்று வேடமணிந்த இரண்டு பேர் நீதிமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார். 

சட்டத்தரணி போல் வேடமணிந்த நபர் நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து, பின்னர் குறித்த பெண்ணிடமிருந்து துப்பாக்கியைப் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கனேமுல்ல சஞ்சீவ பிரதிவாதி கூண்டிலிருந்து இறங்கத் தயாரான போது, குறித்த நபர் சுட்டுக் கொன்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

கனேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இது தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு உட்பட 5 விசேட குழுக்களின் கீழ் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Click here to join our whatsApp group

இந்திய மீனவர்களுக்கு அதிரடி தீர்ப்பு!

கடந்த 09-02-2025 மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்ற நீதவான் இஸ்மத் ஜெமீல் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஒரு படகில் இருந்த 11 மீனவர்கள் மீது ஐந்து முக்கிய குற்றங்கள் முன்வைக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

  1. அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 11மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

2. இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.

3. இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 11 மீனவர்களுக்கும் 50,000 ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டதுடன், இதனை செலுத்த தவறின் 06 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

4. குறித்த 11மீனவர்களில் ஒருவர் உரிமையாளராகவும் படகு ஓட்டியாகவும் காணப்படுவதால், படகு ஓட்டிக்கு 6 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவற்றை செலுத்த செலுத்த தவறும் பட்சத்தில் 06 மாத சிறைத்தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

5. படகு உள்ளிட்ட மீனவர்களின் தொலைபேசி பணம் தவிர்ந்த அனைத்தும் அரசுடமையாக்கப்படுவதாகவும் நீதிமன்ற நீதவான் இஸ்மத் ஜெமீல் அறிவித்தார்.

இதேவேளை மற்றோரு படகில் இருந்த 03 மீனவர்கள் மீதும் மூன்று குற்றங்கள் முன்வைக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

  1. அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 03 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
  2. இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
  3. இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப்பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமை இதற்காக 03 மீனவர்களுக்கும் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், இதனை செலுத்த தவறும்பட்சத்தில் 06 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

    குறித்த மூன்று இந்திய மீனவர்களில் ஒருவர் 2024ம் ஆண்டு மாச் மாதம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் 5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த காலப்பகுதியில் மீண்டும் ஒரு குற்றத்தை செய்தமையால் 18 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி நிருபர் ஆனந்தன்