Tuesday, June 30, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 309

குவைத்தில் கட்டிட தீவிபத்தில் 41 பேர் பலி

0

குவைத்தில் கட்டுமான நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களில் இந்திய பிரஜைகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 160 ஊழியர்கள் அங்கு வசித்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டின் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய அடையாளமே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது!

0

தனித்துவ அடையாளங்களை விட தேசிய அடையாளமே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது!

ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தல்

தனித்துவ அடையாளங்களுடன் ஒதுங்கி இருப்பதை விட தேசிய அடையாளங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதே இந்நாட்டின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது என்று வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

குருநாகல் முஸ்லிம் வர்த்தக அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (12) குருநாகல் ப்ளூ ஸ்கை ஹோட்டலில் நடைபெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றும்போது ஆளுனர் கௌரவ நஸீர் அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவர்களாக மதிக்கப்படும் டீ.பி.ஜாயா, சேர் ராசிக் பரீத், பதியூதீன் மஹ்மூத், எம்.எச்.எம். அஷ்ரப் போன்றவர்கள் தேசிய அரசியலுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டதன் காரணமாகவே இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளைப் பெற்றுத் தந்தார்கள். அந்த வகையில் தனித்துவ அரசியலை விட தேசிய அடையாளங்களுடனான அரசியலே எமக்குப் பாதுகாப்பானது. பலன் தரக்கூடியது.

கடந்த காலங்களில் நாங்கள் ஏராளமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம். ஆனாலும் அவ்வாறான சந்தர்ப்பங்களிலும் குருநாகல் போன்ற இடங்களில் ஏனைய சமூகங்களுடனான நல்லுறவு காரணமாக பாதிப்புகள் குறைவாக இருந்தது. அதன் மூலம் நாங்கள் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள முடிந்துள்ளது.

என்னைப் பொறுத்தவரை நான் என்றைக்கும் இனரீதியான சிந்தனை, இனரீதியான செயற்பாடுகள் கிடையாது. என்னைச் சந்திக்க வரும் எந்தவொரு நபரின் இன, மத அடையாளங்களையும் நான் கவனிப்பது கிடையாது. என்னை நாடிவரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதை மட்டுமே என் கடமையாகக் கருதுகின்றேன்.

ஆகவே தேவையுள்ள எந்தவொரு நபரும் என்னை எந்தநேரத்திலும் தேடி வரலாம். அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதை என் சந்தோசமாக நான் கருதுகின்றேன்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை சுய திருப்தியை விட இறை திருப்தியை முன்னிட்டு செயற்பட வேண்டும். எண்ணங்கள் தூய்மையாக அமையும் போது எமது செயற்பாடுகள் அனைத்தும் இறை திருப்தியை முன்னிட்டதாக அமையும். நேர்மையான முறையில் மேற்கொள்ளப்படும்போது வர்த்தகமும் கூட ஒரு இறை திருப்தியைத் தரும் செயற்பாடாக அமையும்.

குருநாகல் மாவட்டத்தைப் பொறுத்தவரை எல்லா வளங்களும் நிரம்பிய ஒரு மாவட்டமாகும். அந்த வகையில் இந்த மாவட்டத்தில் சுற்றுலாத் துறை ஊடாக பல்வேறு அபிவிருத்தி முயற்சிகளை மேற்கொள்ள முடியும். சுற்றுலாத்துறை ஊடாக பல்வேறு புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்க முடியும். வடமேல் மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். இன்வெஸ்டிங் வயம்ப என்றொரு திட்டத்தை அதற்காக முன்மொழிந்துள்ளோம்.

குருநாகல் நகரை ஒரு ஹெல்த் சிட்டியாக மாற்றும் எண்ணக்கரு ஒன்றும் உள்ளது. அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளோம். குளியாப்பிட்டிய நகரை ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவாக மாற்றி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கான உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இவ்வாறாக வடமேல் மாகாணத்தை பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

இவற்றின் ஊடாக உரிய பயனைப் பெற்றுக்கொள்ளவேண்டியது இப்பிரதேச மக்களின் பொறுப்பாகும். புதிய முதலீட்டுத் திட்டங்களில் உரிய பங்களிப்பைச்செய்ய வேண்டியது இங்குள்ள வர்த்தகர்களின் பொறுப்பாகும். அதிலும் தனி வர்த்தக முயற்சிகளை விட காலமாற்றத்துக்கு இசைவாக கூட்டு வர்த்தக முயற்சிகளாக மாற்றி அமைக்கும் போது அதன் வெற்றியும், பலமும் அதிகமாக இருக்கும்

அதேபோன்று குருநாகல் மாவட்ட மக்கள் தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதிலும் கவனம் செலுத்தவேண்டும் . அதற்கான அரசியல் வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஏனைய விடயங்களால் சாதிக்க முடியாத பல விடயங்களை அரசியல் பிரதிநிதித்துவம் மூலமாக சாதித்துக் கொள்ள முடியும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குருநாகல் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸார்தீன், வடமேல் மாகாண அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமந்த அபேவிக்கிரம, குருநாகல் முஸ்லிம் வர்த்தக அமைப்பின் தலைவர் எம்.வை.எம். கியாஸ் ஜே.பி., செயலாளர் எம்.எல்.எம். மிதிலாஜ், பொருளாளர் ஏ.எம். இர்பான், அமைப்பின் போசகர் ரயீஸ் மீரா, பிரபல வர்த்தகர் நவாஸ் ஹாஜி, குருநாகல் சாஹிராக் கல்லூரி அதிபர் ஏ.எம். சித்தீக், சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் சபருல்லாஹ் ஹாஜியார், பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் ஷாபி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று!

0

உறுதிமொழிகளில் செயற்படுவோம், குழந்தைத் தொழிலாளர்களை முடிவிற்கு கொண்டு வருவோம்

நாட்டின் நாளைய தலைவர்களை இன்றே பாதுகாப்போம்!

குழந்தைத் தொழிலாளர்களாக 16 கோடி பேர்

கடந்த ஆண்டில் இலங்கையில் 181 குழந்தைத் தொழிலாளர்கள் அடையாளம்

நாட்டின் எதிர்காலத் தூண்களான குழந்தைகளை இளம் வயதில் வேலைக்கு அனுப்புவதைத் தடுத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருடந்தோறும் ஜூன்12ஆம் திகதி குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

“நமது உறுதிமொழிகளில் செயற்படுவோம், குழந்தைத் தொழிலாளர்களை முடிவிற்கு கொண்டு வருவோம்” என்பதே இந்த வருடத்திற்கான குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் கருப்பொருளாகும்.

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் குழந்தைகள் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுதல் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே.

குழந்தைத் தொழிலாளர்கள் என அடையாளப்படுத்தப்படும் வயது வித்தியாசம் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகின்றது.

ஐக்கிய நாடுகளின் குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி 16 வயது நிறைவடைவதற்கு முன்பாக குழந்தைகளை பணிக்கு அமர்த்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டில் சோமாலியா தவிர உலகிலுள்ள பிற நாடுகள் அனைத்தும் குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு குழந்தைத் தொழில் முறைக்கு எதிரான ஒரு இயக்கம் உருவெடுத்த நிலையில், அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

சோமாலியாவை வழிநடத்துவதற்கு முறையான அரசாங்கம் இன்மையினால் தாமதமாக 2002ஆம் ஆண்டு அந்த உடன்படிக்கையில் சோமாலியா கையெழுத்திட்டது.

இதனைத் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதற்கு முற்றிப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

குழந்தைத் தொழிலாளர் வரலாற்றில் இன்று 169 நாடுகள் இந்த உடன்படிக்கையை ஒப்புக் கொண்டதற்கு உலகளவில் நடந்த விழிப்புணர்வே மிகப் பெரிய காரணமாகும்.

இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்பன உலகளாவிய நிலைத்தன்மையை இலக்காகக் கொண்டு 2025ஆம் ஆண்டளவில் சிறுவர் தொழிலாளர்களை உலகில் இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன.

உலகெங்கிலுமுள்ள 10 குழந்தைகளில் ஒரு குழந்தை, தொழிலாளியாக வஞ்சிக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

அத்துடன் 16 கோடி பேர் குழந்தைத் தொழிலாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 6.3 கோடி பேர் பெண் குழந்தைத் தொழிலாளர்கள் என ஐக்கிய நாடுகள் சபையினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுதல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தினால் 1998ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது.

அத்துடன் மகளிர், சிறுவர்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டு சிறுவர்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் 1929 எனும் அவரச இலக்கத்திற்கு அறிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகுவதற்கு காரணம் அவர்களின் சூழ்நிலையா, பெற்றோரா என்பதை சிந்திக்க வேண்டியது அவசியம்.

கொரோனா பெருந்தொற்று காலம் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பின்னரே சிறுவர்களின் பாதுகாப்பு குறைவடைந்துள்ளதாகவும் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகளவில் உருவாகியுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரவிராஜ் எமது சூரியன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 181 குழந்தைத் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டாலும் குழந்தைகள் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுதல் இன்றும் ஓயவில்லை என்பது கவலைக்குரிய விடயமே.

ஒவ்வொரு நாட்டிலும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளி உருவாகும் நேரத்திலும் நாட்டின் எதிர்காலம் இருள்கின்றது என்பதை யாவரும் நினைவில் வைத்து செயற்பட வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்கள் முறைமையை ஒழிப்போம்! நாட்டின் நாளைய தலைவர்களை இன்றே பாதுகாப்போம்!

மக்களின் உணர்வுகளை வென்ற அலிசப்றி ரஹீம் எம்.பி

0

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கும் வடமேல் மாகாண ஆளுநர் அகமத் நசீர் அவர்களுக்குமான சந்திப்பு நேற்று (10) ஆளுநர் மாளிகையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், மக்களுக்கான அவசர நிவாரண உதவிகள் தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

மேலும் புத்தளம் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக முகம்கொடுததுவரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் பெற்றுக் கொடுத்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் புத்தளம் பிரதேசத்தின் பல கிராமங்களின் வீதிகள், பாலங்கள் என வீடுகளும் பாரிய அளவில் பாதிக்கட்ட விடயங்களை முன்வைத்த அலி சப்ரி ரஹீம், இவற்றை துரித கதியில் நிவர்த்திசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வடமேல் மாகாண ஆளுநர் அகமத் நசீர் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கும் வடமேல் மாகாண ஆளுநர் அகமத் நசீர் அவர்களுக்குமிடையான பலதரப்பட்ட சந்திப்பின் மூலம் மக்களின் பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாலிங்க தேடிய பைனாஸின் இல்லத்துக்கு ரிஷாட்

0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் முகநூல் காணொளியின் மூலம், நாடு முழுவதும் அறியப்பட்டு புகழ்பெற்ற அநுராதபுரம், ஹொரவபொத்தானை, பத்தாவ பிரதேசத்தின் இளம் கிரிக்கெட் வீரர் பைனாஸின் இல்லத்திற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கடந்த சனிக்கிழமை (8) விஜயம் மேற்கொண்டதுடன், பைனாஸின் திறமையை பாராட்டி, வாழ்த்தி, ஒரு தொகை பணத்தையும் வழங்கிவைத்தார்.

அத்துடன், பைனாசின் எதிர்கால கல்விச் செயற்பாடுகள் மற்றும் கிரிக்கெட்டில் அவருக்குள்ள ஈடுபாடு, அதீத திறமை குறித்து கேட்டறிந்துகொண்ட தலைவர் ரிஷாட், அவரின் எதிர்கால முன்னேற்றத்துக்கு தன்னால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இதன்போது, இளம் வீரர் பைனாஸின் பெற்றோர், உறவினர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர்மக்கள் என அனைவரும் அங்கு ஒன்றுகூடியிருந்ததுடன், தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு தங்களது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான ஹைருதீன், நிஸ்தார் மற்றும் இல்ஹாம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வெள்ளதை ஏற்படுத்தும் கட்டிடங்கள் உடைக்கப்படும்

0

கொழும்பின் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டுமானங்களையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்த அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கை இரண்டு வாரங்களுக்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தற்போதுள்ள ஈரநிலங்களை பாதுகாப்பதன் மூலம் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

கடமைகளை பொறுப்பேற்ற ஜெனரல் ஷவேந்திர சில்வா

0

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பின் பேரில் இந்த மீள்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2387/43 எனும் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு ஜூன் 01ஆம் திகதி முதல் 2024 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி தொடர்பான சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பதவிக் காலத்துக்கான நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 23ஆவது தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி பதவியை நிறைவு செய்ததையடுத்து, ​ 2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் முதல் தடவையாக இலவச ஹஜ் வாய்ப்பு

0

சவூதி அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை முஸ்லிம் முப்படை வீரர்களுக்கு இலவச ஹஜ் வாய்ப்புகளை வழங்கியுள்ளது

வரலாற்றில் முதல் தடவையாக, இந்த ஆண்டு (2024) ஹஜ் கடமைகளை மேற்கொள்ள இலங்கை முப்படையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களுக்கு சவூதி அரசாங்கம் வாய்ப்பு வழங்கியுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த அறிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.இராஜாங்க

 அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, சவூதி அரேபிய தூதுவர் சவூதி அரசாங்கத்திடம் இருந்து அனுசரணை மற்றும் சிறப்பு கோட்டாக்களை பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ததை தொடர்ந்து முதன்முறையாக முஸ்லிம் முப்படை வீரர்கள் ஐவருக்கு சிறப்பு கோட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இன்று (ஜூன் 07) சவூதி அரேபிய தூதுவர் அல்கஹ்தானியை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துடன், முப்படை முஸ்லிம் உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக சவூதி தூதுவருக்கும் விசேடமாக சவூதி அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தமைக்கு நன்றி தெரிவித்த சவூதி அரேபிய தூதுவர், எதிர்வரும் ஆண்டுகளில் பாதுகாப்புப் துறை பணியாளர்களுக்கான ஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பதில் தனது தனிப்பட்ட கவனத்தை செலுத்துவதாக தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் இலங்கை முஸ்லிம் பாதுகாப்புப் படையினருக்கும் ‘உம்ரா’ புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும் என்றும் சவூதி தூதுவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் உதவுவதற்கு சவூதி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், இது தொடர்பில் இந்நாட்டு அதிகாரிகளுடன் நெருக்கமாகச் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை ஹஜ் குழு உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமாகிய  மில்பர் கபூர் மற்றும் ஹஜ் யாத்திரை மேட்கொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இராஜாங்க அமைச்சருடன் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

பிக்குவின் சரமாறியான தாக்குதலில் வயோதிபர் உயிரிழப்பு

0

கிரியுல்ல – கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒருவர் காயமடைந்து வீடொன்றிற்குள் இருப்பதாக கிரியுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காயமடைந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், காயமடைந்தவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கொடவத்தை, மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான பிக்கு உயிரிழந்தவரின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் விகாரை ஒன்றில் வசிக்காமல் மாரவில பிரதேசத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது அவர் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 10,000/- ரூபா

0

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 10,000 கொடுப்பனவு வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

வீட்டைச் சுத்தம் செய்வதற்கு இந்தப் பணம் வழங்கப்படுவதாகவும், அனர்த்தம் காரணமாக பகுதி அளவில் அல்லது முழுமையாக சேதம் அடைந்த அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைத்த பின்னர், அடுத்த நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவை பிரதேச மக்களின் நலன்களைத் தேடியறியும் நோக்கில் நேற்று (07) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டபோதே சாகல ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைப் பார்வையிட்ட சாகல ரத்நாயக்க, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கொலன்னாவ ஸ்ரீ சம்புத்தராஜ புராண விகாரையில் நடைபெற்ற நடமாடும் மருத்துவ முகாமிற்கும் சென்று பணிகளை பார்வையிட்டார்.

அதன் பின்னர், கொலன்னாவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க கூறியதாவது,

பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் 10,000 ரூபா கொடுப்பனவு உடனடியாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், பகுதி அளவில் அல்லது முழுமையான சேதம் ஏற்பட்ட வீடுகளைக் கண்டறிந்து, அந்தக் குடும்பங்களுக்கு மேலும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

2019 சுற்றறிக்கையின்படி, வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால், இடைத்தங்கல் முகாமில் இருந்த மக்களுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் சுற்றறிக்கையை மாற்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, அந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று வீட்டை துப்புரவு செய்யும் பணிகளைத் தொடர முடியும்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் அனர்த்தத்தினால் முற்றாக சேதமடைந்த வீடுகள் அனைத்தும் இராணுவத்தின் பங்களிப்புடன் அரச செலவில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மருந்துகள் தேவைப்படும் மக்களுக்கு மருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பிறகு, மக்கள் பொதுவாக தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக சிறு குழந்தைகளையும் முதியோரையும் இதுபோன்ற நோய்களில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், டெங்கு நோய் பரவும் அபாயத்தில் உள்ளோம். அதை எதிர்கொள்ளும் திட்டத்தை தயாரித்துள்ளோம். கடற்படை, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்படாத அருகில் உள்ள மக்களையும் இணைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிணறுகளை மீண்டும் பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனர்த்தத்தினால் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க வைத்திய முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு மருத்துவக் குழுக்களும் வைத்திய முகாம்களை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. பிரதேச செயலகங்கள் ஊடாக பல மருத்துவ சிகிச்சை நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இராணுவ மருத்துவக் குழுக்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரதேச மக்கள் குறித்தும் ஜனாதிபதி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், இதுபோன்ற வெள்ளப்பெருக்கு மீண்டும் ஏற்படாமல் இருக்க தகுந்த திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அனுமதியற்ற நிர்மாணங்கள், காணிகளை நிரப்புதல் போன்ற காரணங்களால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனவே, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் காணி நிரப்புப் பணிகளை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறவும் எதிர்பார்க்கப்படுகிறது.

களனி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்காக புதிய நகரமொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக மருத்துவமனைகள், பாடசாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் IDH மருத்துவமனை, இ.போ.ச டிப்போ போன்ற அரச நிறுவனங்கள் உள்ளன. எனவே புதிய நகரை உருவாக்குவது குறித்து இப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி எதிர்கால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு அனைவரின் இணக்கப்பாட்டுடன் சரியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இத்திட்டம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.” என்று அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய மற்றும் கொலன்னாவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர்.