Thursday, March 26, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 43

நுரைச்சோலை அனல் மின்நிலைய 2 மின்பிறப்பாக்கிகள் செயலிழப்பு!

0

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்தப்பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு 600 மெகாவாட் மின் கொள்ளளவு தற்போது இழக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

லக்விஜய மின்நிலையத்தின் ஒரு மின் உற்பத்தி இயந்திரம் மாத்திரமே தற்போது இயங்கி வருவதுடன், அதன் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்பிற்கு இணைக்கப்படுகிறது. 

வழமையான பராமரிப்புப் பணி காரணமாக கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஒரு இயந்திரம் நிறுத்தப்பட்டிருந்தது. 

கடந்த 20ஆம் திகதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மற்றுமொரு இயந்திரத்தையும் செயலிழக்கச் செய்ய வேண்டியேற்பட்டதாக மின்சார சபை சுட்டிக்காட்டியது. 

தற்போது அந்த இரண்டு இயந்திரங்களினதும் திருத்தப்பணிகள் இடம்பெற்று வருவதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் வாரத்திற்குள் அவற்றை மீண்டும் மின் உற்பத்திக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், நீர் மின் உற்பத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால் அன்றாட மின் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

ஆனமடுவையில் இறந்த கோழிகளை விற்பனை செய்த கும்பல் பிடிபட்டது!

0

ஜூட் சமந்த

ஆனமடுவை – பல்லமா சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள், இறந்த கோழிகளை மனித நுகர்வுக்காக விற்பனை செய்துவந்த மோசடிகாரர்களை கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 28 ஆம் தேதி மாலை, ஆனமடுவ-சிலாபம் வீதியில் உள்ள ஆன்டிகம-சேருகேலே பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் சுமார் 120 கிலோகிராம் கோழி இறைச்சியை கொண்டு சென்ற ஒருவரை பொது சுகாதார ஆய்வாளர்கள் கைது செய்தனர். சந்தேக நபர் ஜா-எலவில் உள்ள தாதுகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்ததுள்ளது.

ஆண்டிகம, சேருகேலயில் வசிக்கும் ஒருவர், வெள்ளத்தில் மூழ்கி கோழி இறந்த கோழிகளை சுத்தம் செய்து, பாலிதீன் பைகளில் அடைத்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்தபோது, ​​கோழி இறைச்சியை சேமிக்கப் குளிர்சாதனப்பெட்டி அந்த நபரின் படுக்கையறையில் அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரைக் கைது செய்ய பொது சுகாதார ஆய்வாளர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் மற்றும் கைப்பற்றிய கோழி இறைச்சியையும் பொது சுகாதார ஆய்வாளர்கள் நேற்று 29 ஆம் தேதி ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இரண்டு சந்தேக நபர்களுக்கும் ரூ.76,000 அபராதம் விதித்த ஆனமடுவ நீதவான், கோழி இறைச்சியை அழிக்க உத்தரவிட்டார்.

வெள்ளம் காரணமாக இறந்த கோழிகளை, சுத்தம் செய்து, பல நாட்கள் குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்து பின்னர் விற்றதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனமடுவ, நவகத்தேகம, கல்கமுவ போன்ற பகுதிகளுக்கு இவ்வாறான கோழியை எடுத்துச் சென்று, உணவகங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு உணவு தயாரிக்கும் வணிகர்களுக்கு குறைந்த விலையில் விற்றுள்ளதாக சோதனை நடத்திய பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆனமடுவ பிரதேச சபைக்கு சொந்தமான குப்பை கிடங்கில் 29 ஆம் தேதி மாலை கோழி இறைச்சி அழிக்கப்பட்டது.

பல்லம சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் பி.டி.ஏ.ஆர். அவர்களால் இந்த சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சவூதியின் கொன்சலேட் ஜெனரலாக முஸ்லிம் அல்லாத ஒருவரா?

0

வரலாற்றில் முதற் தடவையாக முஸ்லிம் அல்லாத ஒருவரை சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரலாக நியமிக்க வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுல்லா அமைச்சர் விஜித ஹேரத் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

இதற்கமைய, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பீ. சேனாநாயக்கவினை ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரலாக நியமிக்க அமைச்சர் விஜித ஹேரத் நடகடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றமையினால் அவரை குறித்த பதவியிலிருந்து நீக்கும் நோக்கிலேயே ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புனித மக்கா, மதீனா மற்றும் அதனுடன் தொடர்புடைய நகரங்களை நிர்வகிக்கும் நோக்கிலும், புனித ஹஜ் கடமையினை நேரடியாக கண்காணிக்கும் வகையிலுமே ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரல் நியமிக்கப்படுவது வழமையாகும்.

புனித மக்கா நகரிற்குள் முஸ்லிம் அல்லாத ஒருவர் நுழைய முடியாது என்பதனால் அனைத்து நாடுகளும் இப்பதவிக்கு முஸ்லிம் ஒருவரை நியமிப்பதே வழமையாகும்.

எனினும், அமைச்சர் விஜித ஹேரத் இந்த சம்பிரதாயத்தினை மீறி முஸ்லிம் அல்லாத ஒருவரை ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரலாக நியமித்துள்ளமை முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சவூதிக்கான இலங்கைத் தூதுவராக வீ. கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டு பின்னர் அந்நாட்டின் கடுமையான அழுத்தம் காரணமாக ஆறு மாதங்களின் பின்னர் அவர் திருப்பி அழைக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

ஜின் ஓயாவில் மூழ்கிய இளம் பெண் நைனமடம கரையில் சடலமாக மீட்பு!

0

ஜூட் சமந்த

ஜின் ஓயாவில் குதித்து காணாமல் போன இளம் பெண்ணின் சடலம் நைனமடம பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீண்டு வருவாய் என கண்கள் பூக்கக் காத்திருந்தவர்களுக்கு, நைனமடம கரை ஒதுக்கியது ஒரு உடலை மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் அத்தனை கனவுகளையும் தான்.

ஜா எல – போபிட்டியவை நிரந்தரமாக வசிக்கும் உதயங்கனா சத்சரணி (வயது 17) என்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார். அவர் கொச்சிக்கடை பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்தார். அவரை காப்பாற்ற ஜின் ஓயாவில் குதித்த ரமேஷ் லக்ஷனை (வயது 18) அப்பகுதி மக்கள் மீட்டு, மாரவில ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த இளம் பெண் இறந்தவரின் காதலன் என்று கூறப்படுகிறது.

நேற்று 28 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நைனமடமவில் உள்ள ஜின் ஓயா பாலத்திற்கு அருகில் வந்த இளம் பெண், தனது காதலனை அழைத்து தன்னை அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் அந்த இளம் பெண் ஜின் ஓயாவில் குதித்தார், மேலும் அந்த இளைஞனும் அவளை காப்பாற்ற ஜின் ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்த யுவதியின் தாய் தற்போது இரண்டாவது கணவருடன் வசித்து வருகிறார், மேலும் அவரது குடும்பத்தில் உள் பிரச்சினைகள் சில இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

ஜின் ஓயாவில் குதித்து காணாமல் போன யுவதியின் உடல், இன்று 29 ஆம் தேதி மதியம் பாலத்தின் அருகே மிதப்பது உள்ளூர்வாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்த சிறுமியின் பிரேத பரிசோதனை மாரவில ஆதார மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

கம்பளை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய எருக்கலம்பிட்டி மக்கள்!

சமீபத்தில் கம்பளை நகரில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள், வாழ்வாதாரம், இயல்பு வாழ்க்கை அனைத்தும் பெரிதும் சீர்குழைந்தன. இந்த நேரத்தில், நாடு முழுவதிலும் இருந்து மனமுள்ள நல்ல உள்ளங்கள் வந்து, பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதிலும், நிவாரணப் பொதிகளை எங்கள் மையத்திற்குக் கொண்டு வந்து வழங்குவதிலும் காட்டிய அக்கறைக்கும், தாராள மனப்பான்மைக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்த்துக் கொள்வதாக கம்பளை முஸ்லீம் கவுன்சில் தெரிவித்துளளது.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் எருக்கலம்பிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் எருக்கலம்பிட்டியில் (நாகவில்லு) பகுதியில் தற்போது வசித்து வருகின்ற மக்களால், சமீபத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தின்போது வழங்கப்பட்ட உதவிகளுக்கும், தன்னலமற்ற பங்களிப்புகளுக்கும் தமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கம்பளை முஸ்லீம் கவுன்சில் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்வின் வலியையும், துன்பங்களையும் நேரடியாக அனுபவித்த எருக்கலம்பிட்டி மக்கள், அதை மறந்துவிடாமல், தனது இன்னொரு சமூகத்தின் வேதனையை உணர்ந்து, உடனடியாக உதவிக்கரம் நீட்டியமை மிகுந்த மனிதாபிமானத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் ஊர் மக்களின் பங்களிப்பாக கிடைக்கப்பெற்ற சுமார் 10 லட்சத்து 62ஆயிரத்து 220 ரூபாய்கள், மற்றும் ஊக்கவார்த்தைகள் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் அமைந்தன என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உதவிகள் எப்போதும் எமது நினைவுகளில் நன்றியுடன் நிலைத்திருக்கும் எனவும்
உங்கள் அனைவருக்கும் நல்ல உடல் நலம், அமைதி மற்றும் வளமான எதிர்காலம் அமைய இறைவனை வேண்டி, மீண்டும் ஒருமுறை எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிதித் தொகையினை கையளிக்க, புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆகியோர் நேரில் சென்றிருந்தமை விஷேட அம்சமாகும்.

விமான நிலையத்தில் 20 கோடி பெறுமதியான ‘குஷ்’ பிடிபட்டது!

0

சுமார் 20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான “குஷ்” (Kush) ரக போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக கடத்திச் செல்ல முயன்ற நான்கு இலங்கை பயணிகள் இன்று (29) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, இந்தியாவின் மும்பை நகருக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து இண்டிகோ (IndiGo) விமான சேவைக்குச் சொந்தமான 6E-1185 என்ற விமானம் மூலம் இன்று காலை 07.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

 இவர்களில் இருவர் பெண்கள், இருவர் ஆண்கள் ஆவர்.

குறித்த பெண்கள்  பொரளை மற்றும் ஒருகொடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அதே நேரம் குறித்த ஆண்கள் தெமட்டகொட மற்றும் ஒருகொடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் 20 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் 684 கிராம் “குஷ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நான்கு பயணிகளும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் இன்று (29) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்!

0

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களில் நோயாளர்களைப் பராமரித்தல், அனுமதித்தல், பாதுகாத்தல், உணவளித்தல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 

நோயாளர் காவு வண்டி சேவைகள், பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்துக்கான பொது போக்குவரத்து சேவைகள், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புடன் தொடர்புடைய அனைத்து சேவைகள். 

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான சேவைகள், அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் களமட்ட அதிகாரிகளால் ஆற்றப்பட வேண்டிய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 

இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் நீர் வழங்கல், மின்சாரம், கழிவுநீர் அகற்றும் முறைமை, தீயணைப்பு, கழிவு சுத்திகரிப்பு மற்றும் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மெக்சிகோவில் ரயில் கவிழ்ந்து விபத்து : 13 பேர் உயிரிழப்பு!

0

தெற்கு மெக்சிகோவின் ஓக்ஸாக்காவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்ஸாக்கா வழியாக 241 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த இன்டர்ஓசியானிக் ரயில் நிஸாண்டா நகரம் அருகே தடம்புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது. விபத்தில் சிக்கிய 193 பேரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். மேலும் 98 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 36 பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

0

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றின் தரம், உணர்திறன் மிக்க குழுக்களுக்கு (sensitive groups) ஆரோக்கியமற்ற மட்டத்தை எட்டியுள்ளது. 

எனவே சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிலாபம்-கொழும்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

0

ஜூட் சமந்த

ஒரு மாதமாக நிறுத்தப்பட்டிருந்த சிலாபம்-கொழும்பு ரயில் சேவை, நேற்று 29 ஆம் தேதி முதல் மீண்டும் சேவையை தொடங்கியது.

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடுப்பிட்டியோயா நிரம்பி வழிந்ததால், நெலும் பொக்குண மற்றும் குடவேவா ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்தது. இதன் காரணமாக, கொழும்பு-சிலாபம் ரயில் சேவை நவம்பர் 27 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

ரயில்வே ஊழியர்கள் கடந்த ஒரு மாதமாக சேதமடைந்த ரயில் பாதையை சரிசெய்து வந்தனர்.

இந்த நிலையில் சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு செல்லும் முதல் ரயில் 29 ஆம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது.

இதற்கிடையில், சிலாபம்-புத்தளம் ரயில் பாதையில் பத்துலுஓயா பாலத்திற்கு அருகில் ரயில் பாதை சேதமடைந்துள்ளது.

அந்த இடத்தில் இன்னும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமையால், சிலாபம் மற்றும் புத்தளம் இடையேயான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.