Home Blog Page 43

தேசமே ஒன்றிணைவோம்’ ஆபரேஷனில் சிக்கிய 2 லட்சம்பேர்!

இலங்கையை உலுக்கிக் கொண்டிருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் அட்டகாசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் மனிதாபிமான வேட்டை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

‘தேசமே ஒன்றிணைவோம்’ (The Nation Together) என்ற மகுட வாசகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய நடவடிக்கை, தற்பொழுது குற்றவாளிகளின் சிம்மசொப்பனமாக மாறியுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அதிரடி ஆபரேஷன், நேற்று முன்தினம் (ஜூன் 25) வரை தங்குதடையின்றி தொடர்ந்துவரும் நிலையில், இக்காலப்பகுதிக்குள் மாத்திரம் முப்படையினரின் ஒத்துழைப்புடன் நாடு தழுவிய ரீதியில் 215,526 பிரம்மாண்ட சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திடுக்கிடும் திருப்பமாக, இந்த சுற்றிவளைப்புகளின் போது இதுவரை 214,333 சந்தேகநபர்கள் கூண்டோடு தூக்கப்பட்டு உள்ளார்கள்.

கைதானவர்களில் சாதாரண குற்றவாளிகள் மட்டுமன்றி, சர்வதேச போதைப்பொருள் வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய பெரும் புள்ளிகளும் அடங்குவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மிக முக்கியமாக, 3,112 பேருக்கு எதிராக தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவு (Detention Orders) பெறப்பட்டு, இரகசிய இடங்களில் வைத்து வலைப்பின்னல்கள் குறித்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக, குற்றவாளிகளின் முதுகெலும்பை உடைக்கும் வகையில், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 360 நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், இந்த கொடிய போதைப் பயன்பாட்டினால் சீரழிந்து போன 2,188 போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகப் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பும் மனிதாபிமான நடவடிக்கைகளும் இணையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனின் அதிரவைக்கும் பின்னணி என்னவென்றால், பொலிஸார் கைப்பற்றியுள்ள போதைப்பொருட்களின் மலைக்கவைக்கும் அளவுகள் தான். நாட்டின் எதிர்காலத் தலைமுறையையே அழிக்கவிருந்த பின்வரும் போதைப்பொருட்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன:

ஹெரோயின்:1,963 கிலோகிராம் 863 கிராம் ஐஸ் (Meth):2,119 கிலோகிராம் 629 கிராம் கொக்கையின்:288 கிலோகிராம் 864 கிராம் கஞ்சா:5,817 கிலோகிராம் 714 கிராம் (மேலும் 12,899,201 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன)

குஷ் (Kush):479 கிலோகிராம் 246 கிராம் ஹாஷிஷ் (Hashish): 312 கிலோகிராம் 291 கிராம்.

இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மிக உக்கிரமான போராக இது பார்க்கப்படுகிறது. இந்த சுற்றிவளைப்புகள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை எனவும், நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள போதைப்பொருள் வலையமைப்புகள் வேரறுக்கப்படும் வரையில் ஆபரேஷன் தொடரும் எனவும் பொலிஸ் உயர்மட்ட வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

நீதித்துறைக்குள் கை வைக்கிறதா அரசாங்கம்? பொங்கி எழுந்த ரவூப் ஹக்கீம்!

அரசியலமைப்பு மீறல்கள் மற்றும் நீதித்துறைச் சுதந்திரம்: பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

பாராளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை(24) இடம்பெற்ற விவாதத்தின் போது, அரசாங்கம் சமர்ப்பித்துள்ள ‘தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம்’ மற்றும் நாட்டின் நீதித்துறை நியமனங்களில் நிலவும் சீர்கேட்டை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடுமையாக விமர்சித்தார். அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை மீறும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நீதித்துறையின் மூப்பு உரிமையை அலட்சியப்படுத்தும் விதம் குறித்து அவர் தெளிவான கருத்துக்களை முன்வைத்தார்.

‘தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம்’ அரசியலமைப்பின் 154-G பிரிவை அப்பட்டமாக மீறுவதாக ரவூப் ஹக்கீம் அங்கு சுட்டிக்காட்டினார். மாகாண சபைகள் இயங்காத தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, முறையான ஆலோசனைகளைத் தவிர்த்து, வலுக்கட்டாயமாக இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் எத்தனிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார். இது மாகாணங்களின் அதிகாரத்தை மத்திய மயப்படுத்தும் ஒரு திட்டமிட்ட முயற்சி என்றும், ‘திவி நெகும’ போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது கையாளப்பட்ட அதே ஜனநாயக விரோத முறையே இப்போதும் பின்பற்றப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சட்டமூலத்திற்குச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கம் முன்வைக்கும் வாதத்தை அவர் முற்றாக நிராகரித்தார். சட்டமா அதிபர் திணைக்களம் கூறுவது மட்டுமே இறுதி உண்மை என்று கருத முடியாது என்பதையும் அவர் வலியுறுத்தினார். நிதி பரிவர்த்தனை ஒழுங்குமுறைகள் மற்றும் நிதி மோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான விவாதங்களின் போது, மத்திய வங்கி ஆளுநர் தனது பொறுப்பிலிருந்து விலகியிருந்த சந்தர்ப்பத்தில், சட்டத்தின் பிரிவுகளின்படி அவர்கள் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயம் இருப்பதை தான் சுட்டிக்காட்டியதாக அவர் நினைவுபடுத்தினார். அந்தச் சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளால் விளக்கம் அளிக்க முடியாமல் மௌனம் காத்தது, அவர்களது சட்ட ஆலோசனைகள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீதித்துறை தொடர்பான விடயங்களில் அரசாங்கத்தின் தலையீடுகள் மிகவும் ஆபத்தானவை என எச்சரித்த ஹக்கீம், நீதிபதிகளின் நியமனங்களில் ‘மூப்பு நிலை’ (Seniority) திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் கவலை வெளியிட்டார். உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்துவது, நீதிபதிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்கப்படுகிறது. மூத்த நீதிபதிகளை அமர்வுகளுக்கு நியமிக்கும் மரபு கைவிடப்பட்டுள்ளதாகவும், தகுதியான நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி கடமைப்பட்டிருந்தும் அதனைத் தவிர்ப்பது, நீதிபதிகளுக்கு ஒருவித அழுத்தத்தை-லஞ்சம் கொடுக்கும் செயலாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீதித்துறை நியமனங்களில் மூப்பு நிலையின் முக்கியத்துவம் பற்றி விளக்க, இந்திய உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளை ரவூப் ஹக்கீம் சிறந்ததோர் உதாரணமாக எடுத்துக் காட்டினார். இந்தியாவில் பதவி உயர்வு வழங்குவதில் அரசியல் தலையீடு இல்லை என்றும், மூப்பு நிலை மிகத் துல்லியமாகப் பின்பற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.

“தற்போதைய இந்திய தலைமை நீதியரசர் சூர்ய காந்த், 27ஆம் திகதி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்கிறார். அவரைத் தொடர்ந்து நீதியரசர் விக்ரம் நாத் பிப்ரவரி 27 முதல் செப்டம்பர் 27 வரை பதவியில் இருப்பார். அதன்பிறகு பெண் நீதியரசர் பி.வி. நாகர்த்ன தலைமை நீதியரசராக வருவார். அவர் 36 நாட்கள் மட்டுமே தலைமை நீதியரசராக இருப்பார். இவ்வளவு துல்லியமாக மூப்பு நிலைக்கு மதிப்பளிக்கும் ஜனநாயக முறை அங்கு உண்டு,” என்றார்.

இத்தகைய வெளிப்படைத்தன்மை கொண்ட நியமன முறையே ஜனநாயகத்தின் பலம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எத்தகைய சட்டமூலத்தையும் அல்லது அரசியலமைப்பு விதிகளுக்கு முரணான நடவடிக்கைகளையும் தமது கட்சி ஆதரிக்காது என்று மு.கா. தலைவர் ஹக்கீம் திட்டவட்டமாகத் தெரிவித்ததோடு, நாட்டின் நீதி நிர்வாகத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் இத்தகைய முறைகேடான தலையீடுகள் எதிர்காலத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.

மேலும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களைக் கட்டிக் காக்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

(விருட்ச வேந்தன்)

ஹரக் கட்டா 120 மில்லியன் ‘டீல்’: அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்கள்!

  • பிரபல பாதாள உலகத் தலைவர் ‘ஹரக் கட்டா’வை தப்பவைக்க, முன்னாள் நீதி அமைச்சரின் மகன், சஜித்தின் உதவியாளர் உட்பட மூவர் அதிரடியாகக் கைது.
  • ஹரக் கட்டாவின் மனைவியிடம் துபாயில் வைத்து 500 மில்லியன் ரூபா கோரப்பட்டு, பின்னர் 120 மில்லியன் ரூபா முன்பணமாக கைமாறியுள்ள அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது.
  • கைது செய்யப்பட்ட விவிஐபிக்கள் ‘ஸ்லீப் அப்னியா’, இருதய நோய் போன்ற மருத்துவ காரணங்களை காட்டி பிணை கோரியபோதும் நீதிமன்றம் அதனை அதிரடியாக மறுத்துள்ளது.

கொழும்பு: இலங்கை அரசியல் மற்றும் பாதாள உலக வட்டாரங்களை ஒரே நேரத்தில் உலுக்கியுள்ள மெகா லஞ்ச ஊழல் விவகாரம் ஒன்று தற்போது கொழும்பில் அம்பலமாகியுள்ளது. பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனான நதுன் சிந்தக எனப்படும் ‘ஹரக் கட்டா’வை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பிடியிலிருந்து சொகுசாக மாற்றிக் கொடுப்பதற்காக, இலங்கையின் விவிஐபிக்கள் (VVIPs) சிலர் நடத்திய 120 மில்லியன் ரூபா ‘மெகா டீல்’ அம்பலமாகியதை அடுத்து, அவர்கள் தற்போது கம்பி எண்ணும் நிலை உருவாகியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைகளின்படி, இந்த ஆபத்தான விளையாட்டின் பின்னணியில் இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். முன்னாள் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நெருங்கிய உதவியாளரும் எஸ்.ஜே.பி (SJB) கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளருமான சரித் அபேசிங்க மற்றும் விமான நிலைய நிறுவனத்தின் (AASL) முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சதுரங்க ஆகிய மூவருமே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) இவ்வாறு வளைக்கப்பட்டுள்ளனர்.

துபாயில் நடந்த ‘டீல்’ & பில்லியன் கணக்கான லஞ்சப் பின்னணி

இந்தத் திரைமறைவு நாடகம் 2023 ஆம் ஆண்டிலேயே துபாயில் அரங்கேறியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சிஐடி காவலில் இருந்த ஹரக் கட்டாவை, அங்கிருந்து சாதாரண கைதியாக மாற்றுவதற்கும், அதிஉயர் பாதுகாப்புடைய பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து சாதாரண சிறைக்கு மாற்றி சொகுசு வசதிகளை செய்து தருவதற்கும், மேலும் பொலிஸாரால் அவர் சுட்டுக்கொல்லப்படுவதைத் தடுப்பதற்கும் இந்த விவிஐபிக்கள் டீல் செய்துள்ளனர்.

முதலில் ஹரக் கட்டாவின் மனைவி மிர்துஷிகா மதுவந்தியிடம் துபாயில் வைத்து 500 மில்லியன் ரூபா (50 கோடி) கோரப்பட்டுள்ளது. பின்னர், நீண்ட பேரம்பேசுதலுக்குப் பின் அது 200 மில்லியனாகக் குறைக்கப்பட்டு, முதற்கட்டமாக 120 மில்லியன் ரூபா (12 கோடி) முன்பணமாகப் பெறப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.

நீதிமன்றில் அரங்கேறிய ‘மருத்துவ’ நாடகம்!

கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கூண்டில் நின்ற விவிஐபிக்கள் தப்பிக்கப் போட்ட திட்டங்கள் நீதிமன்றையே அதிரவைத்தன. எப்படியாவது பிணையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களது ஜாம்பவான் சட்டத்தரணிகள் இங்கிலாந்து பாணி மருத்துவக் காரணங்களை அடுக்கத் தொடங்கினர்.

SJB அமைப்பாளர் சரித் அபேசிங்கவிற்கு ஏற்கனவே இதயத்தில் 3 ஸ்டெண்டுகள் (Stents) பொருத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 பொருத்த வேண்டியுள்ளதால் சிறையில் சிகிச்சை பெற முடியாது என வாதிடப்பட்டது. அதேநேரம், முன்னாள் அமைச்சரின் மகன் ரகித ராஜபக்ஷ, தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் ‘ஸ்லீப் அப்னியா’ (Sleep Apnea) என்ற தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மூத்த சட்டத்தரணி அனில் சில்வா வாதிட்டார். ஆனால், இந்த “விவிஐபி நோய்களை”க் கண்டு மசியாத லஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றத்தின் பாரதூரமான தன்மையைக் கூறி பிணையை கடுமையாக எதிர்த்தது. இறுதியில் நீதவான் பிணையை மறுத்து, ஜூலை 03 ஆம் திகதி வரை மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

திடீர் ட்விஸ்ட்: ஐஜிபியிடம் மாட்டிய துபாய் டீல்!

இந்த வழக்கின் ஆகப்பின்னணியில் உள்ள புதிய அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், வாங்கிய 120 மில்லியன் ரூபா முன்பணத்தை, இடையில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் மூலமாக ஹரக் கட்டாவின் மனைவிக்கே திருப்பித் கொடுக்க இந்த விவிஐபி டீலர்கள் முயன்றுள்ளனர்.

பணம் கைமாறியது மற்றும் மிரட்டல்கள் காரணமாக ஆத்திரமடைந்த ஹரக் கட்டாவின் மனைவி, நேரடியாகவே பொலிஸ் மா அதிபரிடம் (IGP) புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே சிஐடியும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் ரகசிய விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையே, சிறையில் இருக்கும் ஹரக் கட்டாவிடமும் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். தன்னிடம் தடுத்து வைப்பு உத்தரவை நீக்க இவ்வாறு பெருந்தொகை பணம் கோரப்பட்டதை அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அரசியல் களத்தில் நிலநடுக்கம் – தப்புமா விவிஐபி தலைகள்?

மகன் கைதான செய்தி கேட்டு பதறியடித்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, உடனடியாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். மறுபுறம், தேர்தல் களம் சூடாக இருக்கும் நிலையில், இந்த ஊழல் கறை தங்கள் மீது படிந்துவிடக் கூடாது என்பதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தீவிரமாகச் செயற்பட்டுள்ளது. கைதான சில மணித்தியாலங்களிலேயே சரித் அபேசிங்கவை கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும், உறுப்பினர் தகுதியிலிருந்தும் நீக்குவதாக நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதேவேளை, “அரசியல் பின்னணி இருந்தால் தப்பித்துவிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம்” என தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் அதிரடி காட்டியுள்ளது. குற்றவாளிகள் எவ்வளவு பெரிய அரசியல் பின்புலம் கொண்டவர்களாக இருந்தாலும், சட்டம் தன் கடமையை பாரபட்சமின்றி செய்யும் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளன. ஜூலை 03 ஆம் திகதி லஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பிக்கவுள்ள மேலதிக விசாரணை அறிக்கையில், மேலும் பல அரசியல் தலைகளின் பெயர்கள் சிக்கும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளன.

போன் பண்ணா எடுக்க மாட்டாராம் ஜனாதிபதி! தயாசிறி போட்ட வெடி!

போன் பண்ணா எடுக்க மாட்டாராம் ஜனாதிபதி! நாடாளுமன்றத்தில் தயாசிறி போட்ட வெடி: ‘அவங்க அப்படி இல்லை’ என ஆதங்கம்!

இலங்கை அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக் (Hot Topic) இதுதான். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஒன்று இணையவாசிகள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.

ரிங் போய்க்கொண்டே இருக்கு… ஆனா எடுக்க மாட்டாங்க!

பொதுவாகவே அரசியல்வாதிகள் என்றாலே எப்போதும் போனும் கையுமாக, விசுவாசிகளுடனும் அதிகாரிகளுடனும் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்பதுதான் நம் எல்லோருடைய நினைப்பும். ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பாணி முற்றிலும் வேறாக இருக்கிறதாம். “அவருக்கு போன் பண்ணா எடுக்கவே மாட்டார்” என்று நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி எம்பி தயாசிறி ஜயசேகர நேரடியாகவே ஒரு போடைப் போட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து பேச அழைக்கும் போது, ஜனாதிபதி தரப்பில் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் (Response) கிடைப்பதில்லை என்பதுதான் இப்போதைய பிரதான குற்றச்சாட்டு.

‘அவங்க அப்படி இல்லைப்பா…’ – முன்னாள் தலைவர்களை இழுத்த தயாசிறி!

ஜனாதிபதி அநுரவின் இந்த அணுகுமுறையை விமர்சித்த தயாசிறி ஜயசேகர, முன்னாள் ஜனாதிபதிகளின் “போன் கலாச்சாரத்தை” நாடாளுமன்றத்தில் நினைவுபடுத்தி ஒப்பிட்டுப் பேசியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் எம்பீக்கள் எப்போது போன் பண்ணினாலும், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் மிஸ் பண்ணாமல் பேசுவார்கள் என்றும், ஒருவேளை எடுக்காவிட்டாலும் பிறகு ‘கோல் பேக்’ (Call back) பண்ணுவார்கள் என்றும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.

அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், மக்கள் பிரதிநிதிகளின் அழைப்புகளுக்கு மதிப்பளிப்பது முன்னைய தலைவர்களின் வழக்கமாக இருந்தது என்பதை அவர் இங்கே கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இது ‘புதிய அரசியல் கலாச்சாரமா’ அல்லது ‘தொடர்பாடல் இடைவெளியா’?

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, வீண் ஆடம்பரங்கள் அற்ற, பழைய அரசியல் மரபுகளை உடைக்கும் ஒரு “புதிய கலாச்சாரத்தை” பின்பற்றி வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், எம்பீக்களின் போன்களை அவர் தவிர்ப்பது, தேவையற்ற அரசியல் டீலிங்குகளை (Deals) தவிர்ப்பதற்கான ஒரு உத்தியா? அல்லது மக்கள் பிரதிநிதிகளை புறக்கணிக்கும் செயலா? என்ற விவாதம் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

நாட்டின் மிக முக்கியமான தலைவர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள முடியாமல் போனால், அது நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த போன் கால் விவகாரத்திற்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்.. முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார்.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் உறுதிமொழி ஏற்றார். ‘நான் போதைப்பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். ‘போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை தருவேன்’, ‘தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை வேரறுக்க துணை நிற்பேன்’ என முதல்வர் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை முதல்வர் விஜய் உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, நிகழ்ச்சி மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விழிப்புணர்வு வாசகம் எழுதி முதல்வர் விஜய் கையொப்பமிட்டார். போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய் விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கிவைத்து மக்களோடு மக்களாக முதல்வர் விஜய் பங்கேற்றுள்ளார்

இதேவேளை சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, “போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்” 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிநிறமை குறிப்பிடத்தக்கது.

நூற்றுக்குப் பின் ஓர் ஊற்று: வெள்ளி விழா காணும் மக்கொனை அஹதிய்யா!

களுத்துறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்விப் பாரம்பரியத்தில் மற்றுமொரு மகுடம் சூடும் தருணம் கனிந்திருக்கிறது. “நூற்றுக்குப் பின் ஓர் ஊற்று” எனும் கம்பீரமான மகுட வாசகத்துடன், மக்கொனை அஹதிய்யா அறநெறிப் பாடசாலை தனது 25 வருட காலப் பயணத்தை நிறைவு செய்து, வரலாற்றுப் பதிவாக “வெள்ளி விழா” காணத் தயாராகிவிட்டது.

இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக மற்றும் அறநெறிக் கல்வியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ள இப்பாடசாலையின் இந்த உத்தியோகபூர்வ வெள்ளி விழா நிகழ்வுகள், எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, மக்கொனை அல்ஹஸனியா மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மிகவும் பிரம்மாண்டமான முறையில் அரங்கேறவுள்ளது.

விருதுகளால் நனையப் போகும் சாதனையாளர்கள்!

ஒரு பாடசாலையின் இருப்புக்கு பின்னால் இருக்கும் உழைப்பைக் கௌரவிப்பதே இந்த விழாவின் பிரதான நோக்காக மாறியிருக்கிறது. அந்தவகையில், தற்போது அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வரும் 25 ஆசிரியர்கள் மற்றும் கடந்த 2024-2025 காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய 10 ஆசிரியர்கள் என மொத்தம் 35 ஆசிரியப் பெருந்தகைகள் இதன்போது விசேட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இவர்களுடன் தோளோடு தோள் நின்று உழைத்த அஹதிய்யா அபிவிருத்திச் சங்கத்தின் 15 உறுப்பினர்களுக்கும் விசேட விருதுகள் வழங்கப்படவுள்ளதோடு, பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்த 19 மாணவக் கண்மணிகளும் இதன்போது மேடையில் ஏறிப் பரிசில்களைத் தட்டிச் செல்லவுள்ளனர்.

விழா மேடையை அலங்கரிக்கும் முக்கிய பிரமுகர்கள்

மக்கோனை அஹதிய்யா பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் ஜ.எம்.எம் உவைஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், நாட்டின் மிக முக்கிய ஆன்மீக, கல்விப் பிரமுகர்கள் ஒன்றுகூடவுள்ளனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக பேருவளை ஜாமியா நளீமியாக் கலாபீட முதல்வர் அஷ்-ஷேக் ஏ.சீ. அகார் முஹம்மட் கலந்துகொள்ளவுள்ளதுடன், கௌரவ அதிதிகளாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூராமித் மற்றும் ஹாசிம் உமர் பவுண்டேசனின் தலைவர், கொடைவள்ளல் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோரும் சிறப்பிக்கவுள்ளனர்.

இவர்களுடன் விசேட அதிதிகளாக பிரதமரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரிப்லான் ஹஸன், களுத்துறை வலயக் கல்விப் பணிப்பாளர், அகில இலங்கை அஹதிய்யா மத்திய சம்மேளனம் மற்றும் களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

வெளியாகிறது “ரிஹ்லத் அன் நூர்” நினைவு மலர்!

இந்த வெள்ளி விழாவின் வரலாற்று மைல்கல்லாக, மக்கொனை அஹதிய்யா அறநெறிப் பாடசாலையின் கால் நூற்றாண்டு காலப் பயணத்தையும், அதன் சாதனைகளையும் தாங்கி, “ரிஹ்லத் அன் நூர்” (ஒளியின் பயணம்) எனும் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நினைவு மலர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

அறநெறிக் கல்வியூடாக ஒழுக்கமுள்ளதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப மக்கொனை மண்ணில் உதித்த இந்த “ஊற்று”, வெள்ளி விழாவைக் கடந்து இன்னும் பல்லாண்டு காலம் சமூகத்திற்கு ஒளியூட்ட ஊர் மக்கள், நலன்புரிவோர், பழைய மாணவர்கள் என அனைவரையும் இந்த வரலாற்று நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு மக்கொனை அஹதிய்யா பாடசலையின் செயலாளர் ஜிப்ரியா இப்றாஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

விமான நிலையத்தில் வசமாக மாட்டிய “மாட்டியா”

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதன் பின்னர், நேற்றிரவு (25) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

42 வயதான குறித்த சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து, ‘பஸ்பொட்டா’ எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அங்கு நின்றிருந்த மேலும் பலரைச் சுட்டுக் காயப்படுத்தியமை ஆகியவை இவர் மீதான பிரதான குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் நெஞ்சை உலுக்கும் துயரம்: 15 மாத சிசுவுடன் உயிரிழந்த யானை!

நிருபர்: அசாருதீன்

  • புத்தளம், செல்லக்கண்டல் வனப்பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றின் சடலம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க இந்த யானையின் பிரேதப் பரிசோதனையில், அதன் வயிற்றில் நன்கு வளர்ச்சியடைந்த 15 மாத குட்டியொன்றும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • சுமார் 8 அடி உயரமான இந்த யானை, பல மாதங்களாக இப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் காலில் காயங்களுக்காக சிகிச்சை பெற்றுள்ளது.

புத்தளம், செல்லக்கண்டல் வனப்பகுதியில் இயற்கை ஆர்வலர்களை மட்டுமன்றி, மனிதநேயம் கொண்ட அனைவரையும் கண் கலங்க வைக்கும் ஒரு துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. காட்டின் கம்பீரமாக வலம்வந்த தாய் யானை ஒன்று, அநாதரவாக உயிரற்ற சடலமாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இந்த யானையின் மரணம் வெறும் இயற்கையான ஒன்றல்ல; இதன் பிரேதப் பரிசோதனையின் போது வெளிவந்த தகவல் காண்போரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மீட்கப்பட்ட இந்த யானைக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கலாம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். சுமார் 8 அடி உயரமான இந்த கம்பீரமான உயிரினத்தின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே அந்த நெஞ்சை உலுக்கும் தகவல் வெளிவந்தது. ஆம், அந்த தாய் யானையின் வயிற்றில் 15 மாதங்களான, நன்கு வளர்ச்சியடைந்த குட்டி யானையொன்றின் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமிக்கு வரக் காத்திருந்த ஒரு சிசுவும் தாயோடு சேர்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

உண்மையில் இந்த யானை அதிகாரிகளுக்குப் புதியதல்ல. இந்த தாய் யானை கடந்த பல மாதங்களாக இதே பகுதியிலேயே சுற்றித்திரிந்துள்ளது. அதுமட்டுமன்றி, பல சந்தர்ப்பங்களில் இந்த யானையின் கால்களில் ஏற்பட்டிருந்த காயங்களை அவதானித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், அதற்குப் பல தடவைகள் சிகிச்சைகளும் அளித்துள்ளனர். இவ்வளவு கண்காணிப்பில் இருந்த யானைக்கு திடீரென என்ன நடந்தது? அதன் மரணத்துக்கான உண்மையான காரணம் என்ன என்ற கேள்வி தற்போது வலுவாக எழுகிறது.

யானையின் கால்களில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளன. அந்த துப்பாக்கிச் சூட்டு காயங்கள் ஊடாக உடலில் ஏற்பட்ட கொடிய கிருமித்தொற்றே (விஷம் ஏறியதால்) இந்த தாய் மற்றும் குட்டியின் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் தொடர்பான முழுமையான பிரேதப் பரிசோதனைகளை நிக்கவெரட்டிய மிருக வைத்திய காரியாலயத்தின் வைத்திய அதிகாரி செல்வி ஏ.எம்.பி.எம். அசாசூரிய தலைமையிலான மருத்துவக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். மனிதர்களின் இரக்கமற்ற செயலுக்கு மீண்டும் ஒரு தாயும் சேயும் பலியாகியுள்ளமை சமூக வலைத்தளங்களிலும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வென்னப்புவவில் கோர விபத்து: முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

ஜூட் சமந்த

வென்னப்புவ: வென்னப்புவ கிரிமட்டியான பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ஒரு பயங்கர விபத்து, வீதியில் சென்றவர்களை உறைபனியாய் உலுக்கியெடுத்துள்ளது. லொறியொன்றுடன் நேருக்கு நேர் மோதிய த்ரீவீலர் ஒன்று, கண் இமைக்கும் மூடித் திறப்பதற்குள் வீதியில் பம்பரமாகச் சுழன்று பலமுறை குடைசாய்ந்து உருக்குலைந்துள்ளது. இந்த விபத்தின் கோரத்தாண்டவத்தில், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியாகியுள்ளார்.

அப்படியென்றால், அந்தப் பாதசாரிகள் கண்முன்னே சில நொடிக் கணத்தில் அரங்கேறிய அந்த அதிர்ச்சிச் சம்பவம் எப்படி நடந்தது?

கிரிமட்டியான பகுதியிலிருந்து வென்னப்புவ நோக்கி ஒரு த்ரீவீலர் வழமை போல பயணித்துக் கொண்டிருந்தது. திடீரென, யாரும் எதிர்பாராத விதமாக அந்த த்ரீவீலர் தனது கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் வலது பக்கமாகத் திசைமாறி அசுர வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அதேநேரம் அதற்கு நேர் எதிரே ஒரு லொறி வந்துள்ளது. அடுத்த நொடி… காதைப்பிளக்கும் பெரும் சத்தத்துடன் அந்த த்ரீவீலர் லொறியின் முன் பக்கத்தில் (Face to Face) பயங்கரமாக மோதியது.

லொறியின் வேகத்தோடு மோதிய த்ரீவீலர், வீதியிலேயே பல தடவைகள் தூக்கி வீசப்பட்டு, குடைசாய்ந்து உருண்டது. இந்த மிகக் கொடூரமான அதிர்வில், த்ரீவீலரைச் செலுத்திக் கொண்டிருந்த முதியவர், அதன் பக்கவாட்டுப் பகுதியினூடாக வீதிக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு கடினமான தார் வீதியில் அபாண்டமாக விழுந்துள்ளார். தலையிலும் உடலிலும் ஏற்பட்ட மிகக் கடுமையான காயங்கள் காரணமாக, மீட்புக் குழுவினர் அங்கு வருவதற்கு முன்பாகவே, அந்த இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

விசாரணையில் தெரியவந்த அந்தப் பரிதாபத்துக்குரிய முதியவர் யார் தெரியுமா?

விபத்தில் பலியானவர் தங்கொடுவ, மெத கோனவில பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஜயசிங்க ஆரச்சிகே தொன் பொலிகாப் அப்புஹாமி எனப் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த வயதிலும் அவர் தனது வாழ்வாதாரத்திற்காக த்ரீவீலரைச் செலுத்தினாரா அல்லது தனிப்பட்ட தேவைக்காகச் சென்றாரா என்பது இன்னும் முழுமையாகத் தெரியவரவில்லை. தற்போது அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் (Marawila Base Hospital) வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் கொஸ்வத்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் உடனடியாகக் களத்தில் குதித்தனர். விபத்துக்குக் காரணமான லொறியைத் தமது பொறுப்பில் எடுத்துள்ள பொலிஸார், அதன் சாரதியைச் சம்பவ இடத்திலேயே வைத்துக் கைது செய்துள்ளனர். விபத்துக்கான உண்மையான காரணம் என்ன, த்ரீவீலரின் பிரேக் துண்டிக்கப்பட்டதா அல்லது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவா என்பது குறித்து கொஸ்வத்த பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் அதிஉச்சத்தை தொட்ட டெங்கு: 5,000 பேருக்கு வழக்கு!

ஜூட் சமந்த

  • இலங்கையில் டெங்கு காய்ச்சல் மிக மோசமான ‘அதி-தொற்று’ (Hyper-epidemic) நிலையை எட்டியுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIs) எச்சரித்துள்ளது.
  • டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருந்த 5,000 இற்கும் மேற்பட்டோருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
  • டெங்கு நோயாளர்களின் வருகை சடுதியாக அதிகரித்துள்ளதால், நாட்டின் பல பிரதான வைத்தியசாலைகள் தங்களின் கொள்ளளவை மீறி நிரம்பி வழிகின்றன.

கொழும்பு: “கொரோனாவுக்குப் பிறகு இலங்கை சந்திக்கும் அடுத்த பெரிய ஹெல்த் எமர்ஜென்சி இதுதான்!” என்று சொல்லுமளவுக்கு நிலைமை விபரீதமாக மாறியிருக்கின்றது. நாடளாவிய ரீதியில் கொட்டித்தீர்க்கும் பருவமழைக்கு மத்தியில், டெங்கு காய்ச்சல் இப்போது இலங்கையில் கட்டுப்பாட்டை மீறி அதி-தொற்று நிலையை எட்டியுள்ளது. அரசாங்கமும் சுகாதாரப் பிரிவினரும் தங்களின் அன்றாட கடமைகளை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, இரவும் பகலும் வீதிகளில் இறங்கி வேலை செய்தும் கூட, டெங்கு அரக்கனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த ஒட்டுமொத்தப் போராட்டத்துக்கும் பின்னணியில் இருக்கும் ஆகப்பெரிய வில்லன் யார் தெரியுமா?

பொதுமக்களில் ஒரு சாராரின் பொறுப்பற்றத்தனமே இந்த நிலைக்குக் காரணம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் அதிகாரிகள் வீதி வீதியாக நடத்திய அதிரடிச் சோதனைகளில், நுளம்புகள் முட்டையிட்டுப் பெருகுவதற்குத் தாராளமாக இடமளித்த 5,000 இற்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அந்தந்தப் பிரதேச நீதிமன்றங்களில் உடனடியாக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டின் பிரதான ஆஸ்பத்திரிகள் அனைத்தும் டெங்கு நோயாளர்களால் முற்றாக ‘ஹவுஸ்புல்’ ஆகியுள்ளன. அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வைத்தியசாலைகளின் கொள்ளளவை விடவும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், பல இடங்களில் கட்டில்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, தரைகளிலும் நோயாளர்களைப் பராமரிக்க வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது. நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தும், உங்கள் வீட்டுத் தோட்டத்தில் தேங்கி நிற்கும் ஒரு மூடித் தண்ணீரே அடுத்த உயிரைப் பறிக்கும் ஆயுதமாக மாறக்கூடும் என்பதைப் பலர் உணர்வதாக இல்லை.

அப்படியென்றால், இந்தத் தொற்று இவ்வளவு வேகமாக பரவுவதற்கு வீடுகள் மட்டும்தான் காரணமா? அதிகாரிகளின் புலனாய்வில் வெளிவந்த உண்மை இதோ…

நகர்ப்புறங்களில் சத்தமில்லாமல் டெங்குவை வளர்த்து வரும் பிரதான ‘சைலண்ட் கில்லர்கள்’ யார் என்பதை அதிகாரிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் போன்ற பிரதான நகரங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிறு நகரங்களில் பூட்டப்பட்டு, பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ள பிரம்மாண்டமான கட்டிடங்களே இந்தத் தொற்றின் பிறப்பிடங்களாக மாறியுள்ளன. உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கும் அல்லது வழக்குக் காரணங்களால் கைவிடப்பட்டுள்ள இந்த வர்த்தகக் கட்டிடங்களின் மொட்டை மாடிகளும், நிலத்தடி நிலவறைகளும் இன்று கோடிக்கணக்கான டெங்கு நுளம்புகளின் சொகுசு விடுதிகளாக மாறியுள்ளன.

“இனிமேல் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என கறாராகக் கூறியுள்ளார் உபுல் ரோஹண. உங்களுக்குச் சொந்தமான பாழடைந்த கட்டிடங்கள் இருந்தால், இந்த நிமிடமே அதனைத் துப்பரவு செய்ய முனையுங்கள். தவறும்பட்சத்தில், கட்டிட உரிமையாளர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தின் மூலம் அதியுயர் தண்டனை பெற்றுத்தர சுகாதாரப் பிரிவு தீர்மானித்துள்ளது. நீங்கள் விழிப்புடன் இல்லாவிட்டால், அடுத்த முறை உங்கள் வீட்டு வாசலில் நிற்பது டெங்கு நுளம்பு மட்டுமல்ல, நீதிமன்ற பிடியாணையும்தான்!