Home Blog Page 45

மன்னாரில் தவறுதலாக துப்பாக்கி வெடித்து இராணுவ வீரர் பலி!

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

இன்று (22) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், துப்பாக்கி வெடிப்பால் படுகாயமடைந்த குறித்த இராணுவ வீரர் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் சவுத் பார் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த 46 வயதான ஜெயத்திலக எனும் இராணுவ வீரரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது மன்னார் பிரதான பாலத்துக்கு அருகே உள்ள சோதனைச் சாவடியில் அவர் கடமையில் இருந்ததாகவும், குறித்த சோதனை சாவடியில் கடமையில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு அவரே துப்பாக்கிகளை வழங்கி வந்ததாகவும், அவ்வாறு வழங்க முற்படும்போது பெட்டிக்குள் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையே விபத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிலாபம் – புத்தளம் வீதியில் பகீர் விபத்து: ஒருவர் பலி!

ஆரச்சிக்கட்டுவ: மாலை நேரத்து பரபரப்பில் இயங்கிக்கொண்டிருந்த அந்த வீதியோரக் கடை, அடுத்த சில நொடிகளில் ஒரு மரணக் களமாக மாறும் என்று அங்கிருந்தவர்கள் எவருமே ஊகித்திருக்கவில்லை. சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் ஆரச்சிக்கட்டுவ பகுதியில் கடந்த 21ஆம் திகதி மாலை இடம்பெற்ற அதிவேக கார் விபத்து, ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது.

வழக்கம்போல வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த கடை உரிமையாளரான ராமசாமி கோவிந்தசாமி (வயது 46) என்பவரே இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கி அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, வீதியோரமாக இருந்த தற்காலிக கடைக்குள் பாய்ந்ததே இந்த விபரீதத்திற்கு காரணமாக மாறியுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த மோதலின் வீரியம், கடையை முற்றாக சிதைத்தது மட்டுமல்லாமல், காரில் பயணித்தவர்களையும் படுகாயங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. காரில் இருந்தவர்கள் தன்கொடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் மூவரும் தற்போது சிலாபம் பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தின் பின்னணியை ஆராய்ந்த பொலிஸாருக்கு அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் விபத்து நடக்கும் போது கடுமையான மதுபோதையில் இருந்ததாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிவேகமும், போதையும் ஒரு மனிதனின் உயிரைப் பறித்ததோடு, பலரை வைத்தியசாலைக் கட்டிலில் முடக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஆரச்சிக்கட்டுவ பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

செய்தித் தகவல்: ஜூட் சமந்த

எரிபொருள் விலை குறையப்போகுதா? அமைச்சர் பிமல் வெளியிட்ட அதிரடித் தகவல்!

உலக சந்தையின் தற்போதைய போக்கைக் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் இலங்கை வாகன ஓட்டிகளுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடும் செய்தி வெளியாகியுள்ளது. உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின், அதன் நேரடிச் சலுகைகளை எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் நாட்டு மக்களுக்கு அள்ளி வழங்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது தற்போதைய பொருளாதார சூழலில் சாமானிய மக்களின் மாதாந்த பட்ஜெட்டில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாபம் பார்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சரின் அதிரடிப் பேச்சு!

மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கேள்விக்கு அமைச்சர் மிக ஓப்பனாகப் பதிலளித்துள்ளார். எரிபொருள் விற்பனை மூலம் லாபம் ஈட்டும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்திற்கு எள் அளவும் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இப்போதும் கூட அரசாங்கம் சும்மா இருக்கவில்லை. ஒவ்வொரு லீட்டர் டீசலுக்கும் சுமார் 100 ரூபாயையும், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு சுமார் 20 ரூபாயையும் மானியமாக மக்களுக்காக அரசாங்கமே பொறுப்பேற்று வழங்கி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஏன் நினைத்தவுடன் விலையைக் குறைக்க முடியாது? பின்னணியில் இருக்கும் டெண்டர் ரகசியம்!

“உலக சந்தையில் விலை குறைந்த அடுத்த நிமிடமே ஏன் இலங்கையில் விலையைக் குறைக்கக் கூடாது?” என்ற பொதுமக்களின் ஆதங்கத்திற்கான காரணத்தையும் அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

“கடையிலிருந்து ஒரு பொருளை உடனே காசு கொடுத்து வாங்குவது போல எரிபொருளை சந்தையில் இருந்து உடனடியாக வாங்கிவிட முடியாது. அதற்கு சர்வதேச ரீதியில் முறையான டெண்டர் நடைமுறைகள் உள்ளன. முன்கூட்டியே கோரப்படும் டெண்டர்களின்படி, ஒப்புக் கொள்ளப்பட்ட விலையிலேயே நாம் எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது” என அவர் தொழில்நுட்ப ரீதியான நடைமுறையை விளக்கினார்.

எரிபொருள் விலை குறைப்பானது வெறும் வாகன ஓட்டிகளுக்கு மாத்திரமன்றி, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறைக்கும் ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

“இதே சாதகமான நிலைமை நீடித்தால் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் மக்களுக்கு ஒரு சலுகையை வழங்க முடியும் என நாம் உறுதியாக நம்புகிறோம். நாட்டின் பொருளாதாரத்திற்கும் அது மிக அவசியமாகும். பொருளாதாரத்தின் மேல் மட்டத்தை நாம் தற்போதைய சூழலில் மிக பலமாக கட்டியெழுப்பியிருப்பதனாலேயே இவை அனைத்தையும் எம்மால் செய்ய முடிந்துள்ளது. எங்களால் முடிந்தவரை விரைவில் எரிபொருள் விலையைக் குறைக்குமாறு நாமும் அதிகாரிகளிடம் கோரியுள்ளோம்” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது உரையை நம்பிக்கையோடு நிறைவு செய்துள்ளார்.

புதையல் ஸ்கேனருடன் வீடு புகுந்த போலி சாமியார்:42 இலட்சம் அபேஸ்!

“உங்கள் வீட்டில் பயங்கரமான பூத தோஷம் இருக்கிறது, அதனால்தான் குடும்பத்தில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள்”, உங்கள் வீட்டின் அடியில் பெரும் புதையல் இருக்கிறது எனக்கூறி இடம்பெற்ற பெரும் மோசடி சம்பவம் சிலாபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

சிலாபம், கொட்டவெஹெர – திகன்வெவ பகுதியைச் சேர்ந்த அபேசிங்க ஹேரத் முதியான்சேலாகே நிலாந்தி குமாரி அபேசிங்க என்ற பெண்ணின் வீட்டுக்கு, நவீன ‘ஸ்கேனர்’ (Scanner) இயந்திரத்துடன் வந்த மர்ம நபர் ஒருவர், வீட்டின் முற்றத்தை சோதிப்பது போல பாசாங்கு செய்துவிட்டு, அந்தப் பெண்ணிடம் சொன்ன வார்த்தைதான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிரவைத்துள்ளது.

“உங்கள் வீட்டில் பயங்கரமான பூத தோஷம் இருக்கிறது, அதனால்தான் குடும்பத்தில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள்” என்று கூறி பீதியை கிளப்பியுள்ளார்.

அத்தோடு நிறுத்தாமல், “அந்தப் பூதம் உங்கள் வீட்டின் அடியில் உள்ள பெரும் புதையல் ஒன்றை பாதுகாத்து வருகிறது, அந்தப் புதையலின் உண்மையான சொந்தக்காரர் நீங்கள்தான்” என ஆசையைத் தூண்டியுள்ளார்.

பேய் பயமும் 42 இலட்சம் ரூபாய் புதையலும்!

மந்திரவாதியின் பேச்சை அப்படியே நம்பிய அந்தப் பெண், வீட்டின் தோஷத்தை நீக்கி புதையலைத் தோண்டி எடுப்பதற்குச் சம்மதித்துள்ளார். இதற்காக முதற்கட்ட செலவு மற்றும் சடங்குகளுக்காகப் போலிச் சாமியாரால் கோரப்பட்ட 42 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு பவுன் தங்க நகையை அந்தப் பெண் தட்டாமல் கொடுத்துள்ளார்.

பணம் கைக்கு வந்ததும், பிரதான சந்தேக நபர் ஒரு விசேட மந்திரவாதி மற்றும் மேலும் மூன்று கூட்டாளிகளை அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அழைத்து வந்து நள்ளிரவில் விசேட சாந்திகர்மம் (பூஜை) ஒன்றை நடத்தியுள்ளார். பூஜையின் உச்சக்கட்டத்தில், புதையலில் இருந்து எடுத்ததாகக் கூறி இரண்டு புத்தர் சிலைகளையும், சில மாணிக்கக் கற்களையும் அந்தப் பெண்ணிடம் கொடுத்து நம்பவைத்துள்ளனர்.

முன்னேஸ்வரம் காளி கோவிலில் உடைந்த மர்மம்: போலி நகைகள் அம்பலம்!

நாடகம் இத்துடன் முடியவில்லை. புதையலில் கிடைத்த சிலைகளையும் மாணிக்கக் கற்களையும் சிலாபம் – முன்னேஸ்வரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சுடுகாட்டு காளி கோவிலுக்கு எடுத்துச் சென்று விசேட பூஜை செய்ய வேண்டும் என சாமியார் கட்டளையிட்டுள்ளார். அதன்படியே அந்தப் பெண்ணும் சிலைகளுடன் முன்னேஸ்வரம் கோவிலுக்குச் சென்று காத்துக்கொண்டிருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் சாமியார் கும்பல் அங்கு வரவில்லை.

அங்கேயே பெண்ணுக்கு சந்தேகம் தொற்றிக்கொண்டது. உடனடியாகத் தனக்குக் கிடைத்த புத்தர் சிலைகளையும் மாணிக்கக் கற்களையும் சோதித்துப் பார்த்தபோது, அவருக்குப் பேரிடி காத்திருந்தது. அந்தச் சிலைகள் எவ்வித பெறுமதியுமற்ற ஏதோ ஒரு சாதாரண உலோகத்தால் செய்யப்பட்டவை என்பதும், மாணிக்கக் கற்கள் யாவும் போலியானவை என்பதும் அம்பலமானது.

அதிரடி வேட்டையில் இறங்கிய சிலாபம் போலீஸ்: கம்பி எண்ணும் கும்பல்!

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், உடனடியாகச் சிலாபம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பெரேராவிடம் முறையிட்டார். அவரின் நேரடி உத்தரவின் பேரில், கொட்டாஞ்சேனை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மஹிந்த குணசேன தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் மின்னல் வேக விசாரணையில் இறங்கினர்.

வனாத்தவில்லுவ, மதுரங்குளி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் மறைந்திருந்த ஐந்து சந்தேக நபர்களையும் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தில் 14 இலட்சம் ரூபாய், உருக்கப்பட்ட நிலையில் ஒரு தங்கப் பவுன், போலிச் சிலைகள், போலி மாணிக்கக் கற்கள் மற்றும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் அனைவரும் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தகவல்: ஜூட் சமந்த

மாதம்பே – நாத்தாண்டியா வீதியில் பேராபத்து!

உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் வாகன சாரதிகள்: மாதம்பே வீதியில் ஏற்பட்டுள்ள திடீர் பேராபத்து!

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகன சாரதிகள் அடிக்கடி பயன்படுத்தும் மிக முக்கியமான மாற்றுப் பாதையொன்று தற்போது மரணப் பொறியாக மாறியுள்ளது. மாதம்பே – நாத்தாண்டியா வீதிக்கு இணையாக ஓடும் புகழ்பெற்ற ஹாமில்டன் கால்வாயின் கரைகள் பல இடங்களில் திடீரென உடைப்பெடுத்து, சரிந்து விழுந்துள்ளன. இதனால், அந்த வீதியூடாகப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சநிலை உருவாகியுள்ளது.

வீதி ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டதை அடுத்து, வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தற்காலிகமாக விபத்து எச்சரிக்கைப் பலகைகளையும், சைகைகளையும் மட்டுமே அந்த இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளது. ஆனால், வெறும் எச்சரிக்கைப் பலகைகள் மாத்திரம் வீதியால் பயணிக்கும் மக்களின் உயிரைப் பாதுகாத்துவிடுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கரை சரிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெறும் போர்டுகளைப் போட்டுவிட்டு அதிகாரிகள் மௌனம் காப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் மற்றும் குடிநீர் தடைப்படும் அபாயம்: அடுத்தடுத்து வரும் சிக்கல்கள்!

இந்தக் கரை சரிவானது வெறும் வீதிப் போக்குவரத்தை மாத்திரம் பாதிக்கவில்லை. கால்வாய் கரை முற்றாக அரித்துச் செல்லப்பட்டுள்ளதால், வீதியோரமாக இருக்கும் மின்சாரக் கம்பங்கள் மற்றும் பிரதான நீர் விநியோகக் குழாய்கள் என்பன எந்நேரமும் சரிந்து விழும் நிலையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை மின்கம்பங்கள் சரிந்தால், இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்குவதுடன், குடிநீர் விநியோகமும் முற்றாகத் தடைப்படும் அபாயம் காணப்படுகிறது.

நெரிசலைத் தவிர்க்க வந்து ஆபத்தில் சிக்கும் வாகனங்கள்: உடனடி நடவடிக்கை தேவை!

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் ஏற்படும் கடுமையான வாகன நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காக, இரவு பகல் பாராது பெரும்பாலான வாகன சாரதிகள் இந்த மாதம்பே – நாத்தாண்டியா வீதியையே பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறானதொரு பிஸியான வீதி, தற்போது பேராபத்தை எதிர்நோக்கியுள்ளது. எனவே, இந்த ஹாமில்டன் கால்வாய் கரைகளை உடனடியாகப் புனரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், வீதி முற்றாக அழிவடைவதுடன் பாரிய உயிர்ச்சேதங்களும் நிகழக்கூடும் என இப்பகுதி மக்கள் அவசரக் குரல் எழுப்புகின்றனர்.

தகவல்: ஜூட் சமந்த

புத்தளத்தை அதிரவைத்த முதலைப்பாளி மோட்டார் பைக் ரேஸ்!

முதலைப்பாளி மைதானம் இன்று எஞ்சின்களின் கர்ஜனையாலும், ரசிகர்களின் ஆரவாரத்தாலும் அதிரந்தது. இளைஞர்களின் அசாத்திய வேகத்திற்கும் விவேகத்திற்கும் களம் அமைத்துக் கொடுத்த “முதலைப்பாலி மோட்டார் பைக் ரேஸ்” (Mudalaipali Motorbike Rally) மிகவும் பிரம்மாண்டமான முறையில் இன்று அரங்கேறியது.

வழக்கமான அரசியல் மேடைகளைத் தாண்டி, துடிப்பான இளைஞர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த மோட்டார் சைக்கிள் ரேஸ் நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் NTM. தாஹிர் அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார்.

மைதானத்தைச் சுற்றி திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களின் உற்சாகக் கூச்சலுக்கு மத்தியில், களம் சுவாரஷ்யத்தின் உச்சிக்கே சென்றது. இந்த அதிரடி பந்தயக் களத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான பைஷர் மரைக்கார், பர்மின் மற்றும் மௌலவி பஸால் இஸ்மாயீல் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் வருகை தந்து வீரர்களைக் குதூகலப்படுத்தினர்.

வளைந்து நெளிந்து செல்லும் மைதானப் பாதைகளில், காத்தைக் கீறிக்கொண்டு பாய்ந்த பைக்குகளையும், இளைஞர்களின் அபாரமான சாகசத் திறமைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் NTM தாஹிர் அவர்கள் மிக உன்னிப்பாகக் கண்டு களித்தார். அத்தோடு நின்றுவிடாமல், போட்டியின் இறுதியில் வெற்றியீட்டிய வீரர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களுக்கான பரிசில்கள் மற்றும் நினைவு சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.

இளைஞர்களின் இவ்வாறான விளையாட்டுத் திறமைகள் மற்றும் அவர்களின் எதிர்காலக் கனவுகளுக்குத் தாம் என்றும் பக்கபலமாகவிருந்து, துணை நிற்போம் என்ற உறுதியையும் மக்கள் மத்தியில் அரசியல் தலைவர்கள் இதன்போது வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கல்வியால் உயர்வோம்! புத்தளம் ஆப்தீன் கல்லூரியில் முஹர்ரம் தின நிகழ்வு!

இஸ்லாமிய வரலாற்றின் தியாகத்தையும், உண்மையை நிலைநாட்டுவதற்காய் வாழ்ந்த உன்னத மனிதர்களையும் நினைவுகூரும் முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு, புத்தளம் ஆப்தீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் விசேட ஆன்மீக மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் மிக விமரிசையாக நடைபெற்றது.

மாணவர்களின் ஆளுமையையும் ஆன்மீக சிந்தனையையும் தூண்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, ஒட்டுமொத்தப் பிரதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாடசாலை மேடையை அலங்கரித்த மாணவர்களின் முஹர்ரம் கலாச்சார நிகழ்வுகள், நெஞ்சைத் தொடும் கவிதைகள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் உரைகள் என அனைத்தும் வந்திருந்தோரை கட்டிப்போட்டன. ஆன்மீக அதிர்வுகளோடு, கல்வி சார் ஒழுக்க விழுமியங்களையும் ஒருசேர விதைத்த பெருமை இந்த நிகழ்வைச் சாரும்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி-புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ சகோதரர் M.J.M. பைசல் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அரங்கமே உற்றுநோக்கிய அந்த தருணத்தில், மேடையேறிய நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்கள், மாணவர்களின் எதிர்காலப் பாதைக்கான திசைகாட்டியைத் தன் உரையில் மிக அழகாகப் பொதித்து வைத்தார்.

“முஹர்ரம் மாதம் என்பது இஸ்லாமிய வரலாற்றில் தியாகத்தின், பொறுமையின் மற்றும் உண்மையின் பக்கம் நிற்கும் உன்னத மாதமாகும். கர்பலா சம்பவம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், நாம் எப்போதும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்; உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என உணர்ச்சிப் பூர்வமாகத் தனது உரையைத் தொடங்கினார். அத்தோடு நின்றுவிடாமல், சமகாலப் போட்டி உலகில் கல்வியின் அவசியத்தையும் அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த எதார்த்தமான உரை, மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

மக்களின் பலத்த பாராட்டுக்களுக்கு மத்தியில், இந்த உன்னத விழாவானது பாடசாலைச் சமூகத்தின் கூட்டு முயற்சிக்குச் சான்றாக அமைந்தது.

பாடசாலை அதிபர், உப அதிபர், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஆசிரியர்கள், மாணவச் செல்வங்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDC), பழைய மாணவர் சங்கம் (OBA) மற்றும் ஊர் பிரமுகர்கள் எனப் பல தரப்பினரும் ஒன்றிணைந்து இந்நிகழ்வை முழுமையான வெற்றியாக மாற்றிக் காட்டினர்.

திடீர் திருப்பம்! இஸ்ரேல் – ஹெஸ்புல்லா இடையில் அவசர போர்நிறுத்தம்!

  • வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணி முதல் (GMT 1300) இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் தற்காலிக போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
  • அமெரிக்கா மற்றும் கட்டார் நாட்டு மத்தியஸ்தர்கள், ஈரானின் நேரடி ஒத்துழைப்புடன் இந்த முக்கிய உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
  • முழுமையான போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படாமல் வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர முடியாது என ஈரான் தங்களுக்குத் தெரிவித்திருந்ததாக ஹெஸ்புல்லா தரப்பு குறிப்பிட்டுள்ளது.

ரொய்ட்டர்: மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாகக் தணல் பறந்து கொண்டிருந்த போர் மேகங்களுக்கு மத்தியில், ஒரு முக்கிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், இந்த அமைதி அவ்வளவு இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த உடன்பாடு எட்டப்படுவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னர், லெபனான் எல்லைப் பகுதிகளில் இரவோடிரவாக உக்கிரமான குண்டுமழை பொழியப்பட்டது. லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மாத்திரம் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, தெற்கு லெபனானில் ஹெஸ்புல்லா நடத்திய பதில் தாக்குதலில் 4 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது இந்த யுத்தத்தில் இஸ்ரேலிய படைக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்தக் குருதி சிந்திய மோதல்கள்தான், அமெரிக்காவும் ஈரானும் இணைந்து உருவாக்கிய சமாதான முயற்சிகளைப் பெரும் கேள்விக்குறியாக்கின. கடந்த புதன்கிழமை மாத்திரமே மத்திய கிழக்கின் பரந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்க-ஈரான் இடைக்கால உடன்படிக்கை கையெழுத்தானது. ஆனால், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் லெபனான் எல்லையில் வன்முறை வெடித்ததால், ஒட்டுமொத்த உடன்படிக்கையும் முறியும் அபாயம் ஏற்பட்டது.

இதற்கிடையில், ஈரானின் இராஜதந்திர காய்நகர்த்தல்களும் இங்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. “முழுமையான போர்நிறுத்தம் ஒன்று அமுலாகாமல், அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்க முடியாது” என ஈரான் தங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்ததாக ஹெஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதன் விளைவாகவே, அமெரிக்க மற்றும் கட்டார் நாட்டுப் பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானின் பின்னணி உதவியுடன் இந்த அவசர உடன்பாட்டைச் சாத்தியமாக்கியுள்ளனர்.

அமெரிக்கா, ஈரான் மற்றும் அவர்களின் கூட்டணி நாடுகள் அனைத்தும் லெபனான் உள்ளிட்ட அனைத்துப் போர்முனைகளிலும் தங்களது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்த வேண்டும் என்பதே தற்போதைய பிராந்திய ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையாகும். வாரத்தின் தொடக்கத்தில் வன்முறைகள் ஓரளவு குறைந்திருந்தாலும், மீண்டும் வெடித்த உக்கிரப் போருக்குப் பின்னர் தற்போது அமுலாகியுள்ள இந்த போர்நிறுத்தம் நீடிக்குமா என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.

ஜெர்மன் அரசின் விசேட திட்டத்திற்கு தெரிவான அக்கரைப்பற்று மாநகர சபை!

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சர்வதேச அங்கீகாரம்

நிருபர் – எம் என் முஹம்மது

அக்கரைப்பற்று மாநகர சபை, ஜெர்மன் அரசின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சர்வதேச நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு தெரிவாகி, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

நேற்று (17) நடைபெற்ற அக்கரைப்பற்று மாநகர சபை அமர்வில், மாநகர முதல்வர் A.L.M. அதாஉல்லா அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானம் சபையின் ஏகமனதான அங்கீகாரத்தைப் பெற்றது.

இதன்படி, Engagement Global நிறுவனத்தினால் 2025 முதல் 2027 வரை நடைமுறைப்படுத்தப்படும் “Connective Cities Deep Dive Workshop – Water Resilience” எனும் சர்வதேச திட்டத்தில் பங்கேற்க அக்கரைப்பற்று மாநகர சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 84 முன்மொழிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 8 நகராட்சிகளில் ஒன்றாக அக்கரைப்பற்று மாநகர சபை இடம்பெற்றுள்ளதுடன், இலங்கையிலிருந்து தெரிவான ஒரே மாநகர சபையாகவும் திகழ்கிறது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, நகரின் நீர்வள முகாமைத்துவத்தை மேம்படுத்துவதையும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

திட்டத்தின் மூலம் வறட்சி மற்றும் வெள்ள அபாயங்களை சமாளிக்கும் நகரத்தின் திறன் மேம்படுத்தப்படுவதுடன், நீர்வள முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச சிறந்த நடைமுறைகள் பகிரப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளன. மேலும் மாநகர சபையின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் திறன்கள் வலுப்படுத்தப்பட்டு, நிலையான நகர அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தழுவல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேவேளை, திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளைப் பெற்றுக்கொள்ளவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூத்த கல்வியாளர்கள் நிபுணத்துவ ஆலோசகர்களாக இணைக்கப்படுவதற்கும் மாநகர சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த சர்வதேச அங்கீகாரம் அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாறை மாவட்டம், கிழக்கு மாகாணம் மற்றும் இலங்கை நாட்டிற்கு சர்வதேச அரங்கில் பெருமை சேர்க்கும் முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.

மேலும், இந்த வெற்றியானது அக்கரைப்பற்று மாநகர முதல்வரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான A.L.M. அதாஉல்லா அவர்களின் அபிவிருத்தி நோக்கு, நிர்வாக அனுபவம் மற்றும் தூரநோக்குச் சிந்தனையின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நெல்லை வாங்க ஆளில்லை: அக்கரைப்பற்றில் கொதித்தெழுந்த விவசாயிகள்!

நிருபர் – எம் என் முஹம்மது

  1. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் இறக்காமம் விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து நெல் கொள்வனவு கோரி பாரிய கவனயீர்ப்பு பேரணி.
  2. வெளிநாட்டு அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு விசேட மகஜர் கையளிப்பு.
  3. தற்போதைய நிர்ணய விலையான 120 ரூபாவுக்கே நெல்லை வாங்க மில் உரிமையாளர்கள் தயக்கம்; அடிமட்ட விலைக்கு விற்க நேரிடுவதால் விவசாயிகளுக்கு பாரிய நஷ்டம்.
நெல் கொள்வனவு நெருக்கடி: அம்பாறையில் வெடித்த விவசாயிகளின் போராட்டம்!

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக (யால) அறுவடை களைகட்டவுள்ள நிலையில், கிழக்கு மாகாண விவசாயிகளின் முகங்களில் மகிழ்ச்சிக்கு பதிலாக மரண பயமே குடிகொண்டுள்ளது.

தமது வியர்வையின் பலனுக்கு நியாயமான விலை கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று வீதியில் இறங்கியுள்ளனர். நெல் கொள்வனவு மற்றும் நியாயமான விலை நிர்ணயத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு பேரணியின் முடிவில், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் தமது உருக்கமான கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

இந்த மகஜர் நேரடியாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. எதிர்வரும் சிறுபோக அறுவடை நெல்லினை அரசாங்கம் உடனடியாகக் கொள்வனவு செய்ய வேண்டும், அத்துடன் ஒரு கிலோ நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை 140 ரூபாவாக நிர்ணயிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் அதிரடி கோரிக்கையாகும்.

இதற்குப் பின்னணியில் உள்ள கசப்பான உண்மை என்ன தெரியுமா? அரசாங்கம் ஏற்கனவே ஒரு கிலோ நெல்லுக்கு 120 ரூபா என விலை நிர்ணயித்துள்ள போதிலும், மில் உரிமையாளர்கள் அந்த விலைக்கு முழுமையாக நெல்லைக் கொள்வனவு செய்யத் தயங்குகின்றனர். இதனால், வேறு வழியின்றி தரகர்களிடமும், வியாபாரிகளிடமும் அடிமட்ட விலைக்கு தமது நெல்லை விற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நஷ்டம் தொடருமானால், எதிர்காலத்தில் எந்தவொரு இளைஞரும் விவசாயத் துறையை நோக்கி வரமாட்டார்கள் என்ற அபாய எச்சரிக்கையையும் அவர்கள் விடுத்துள்ளனர்.

பிரச்சினை விலை நிர்ணயத்துடன் மட்டும் முடிவடைந்துவிடவில்லை. உள்ளூர் களஞ்சியசாலைகளில் ஏற்கனவே நெல் மலைபோல் தேங்கிக் கிடக்கிறது. அதனை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதை அரசாங்கம் முற்றாக நிறுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் ஆவேசமாக கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளூர் விவசாயி நஷ்டத்தில் தவிக்கும்போது, வெளிநாட்டு அரிசி எதற்கு என்பது அவர்களின் நியாயமான கேள்வியாக உள்ளது.

எவ்வாறாயினும், இது அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு அரசியல் போராட்டமும் அல்ல என்பதை பேரணியில் கலந்து கொண்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மாறாக, தேங்கிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்வனவு செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதிக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் விடுக்கும் ஒரு ‘அவசர அபயக் குரல்’ இதுவாகும். ஜூலை மாத அறுவடைக்கு முன்னர் அரசாங்கம் இவர்களின் குரலுக்கு செவிசாய்க்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!