Home Blog Page 46

கற்பிட்டி துப்பாக்கிச் சூட்டுத் தளத்தில் நடந்த சம்பவ பின்னணியில் டிவிஸ்ட்!

  • கற்பிட்டி இராணுவப் பயிற்சித் தளத்தில் விமானப்படையினருக்கும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் திடீர் மோதல் நிலை.
  • அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த மூவரால் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சியில் கடும் இடையூறு.
  • விசாரணையில் பிடிபட்ட பொலிஸ் அதிகாரியும் இரு பொதுமக்களும் – தடித்த வார்த்தைகளால் முற்றிய வாக்குவாதம்.
  • சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க விமானப்படை தளபதியால் விசேட விசாரணைச் சபை நியமனம்.

டெய்லி மிரர்: கற்பிட்டியிலுள்ள விமானப்படைக்கு சொந்தமான துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்தில் கடந்த 17ஆம் திகதி வழமையான இராணுவப் பயிற்சி ஒன்று போய்க்கொண்டிருந்தது. சும்மா சாதாரண பயிற்சி அல்ல, எந்நேரமும் வெடிக்கக்கூடிய ஆபத்தான வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் (Bomb Disposal Exercise) அதிமுக்கியமானதொரு ஒத்திகை அது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்ட, அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

விமானப்படை வீரர்கள் தங்களது கடமைகளில் தீவிரமாக இருந்த அந்த வேளையில்தான், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு ட்விஸ்ட் அரங்கேறியது. முறையான எவ்வித அனுமதியோ அல்லது முன்னறிவித்தலோ இன்றி, பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி மூன்று நபர்கள் திடீரென அந்த ஆபத்தான பகுதிக்குள் நுழைந்தனர். குண்டுகள் வெடிக்கும் பகுதியில் மனித நடமாட்டம் இருப்பதை அவதானித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக சுதாரித்துக்கொண்டனர்.

அங்கிருந்த விமானப்படை வீரர்களும், பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் (STF) சேர்ந்த அதிகாரியொருவரும் இணைந்து, அத்துமீறி நுழைந்த அந்த மூவரையும் இடைமறித்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்போதுதான் அந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது. பிடிபட்ட மூவரில் ஒருவர் சாதாரண சிவிலியன் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி என்பதும், மற்றைய இருவருமே அவருடன் வந்த பொதுமக்கள் என்பதும் தெரியவந்தது.

ஏன் இந்த பகுதிக்குள் வந்தீர்கள் என அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, அங்கு நிலைமை கைமீறிப்போனது. இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, வார்த்தைப் போர் முற்றியது. ஆபத்தான வலயத்தில் மக்களின் உயிரைப் பாதுகாக்கவே தாங்கள் விதிகளைப் பின்பற்றி கடமையாற்றியதாக விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பாதுகாப்புத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மோதல் சம்பவம் குறித்து, தற்போது இலங்கை விமானப்படைத் தளபதி நேரடி கவனஞ்செலுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற மற்றும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, அவசர அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசேட விசாரணைச் சபை (Board of Inquiry) ஒன்றையும் அவர் அவசரமாக நியமித்துள்ளார். பாதுகாப்பு வலயத்தில் நடந்த இந்த அத்துமீறலின் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பது இந்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியான பின்னரே முழுமையாகத் தெரியவரும்.

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இந்த வாரம் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) இஸ்ரேலுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் ஈரானின் ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஜே.டி. வான்ஸ், தற்போதைய உலகச் சூழலில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மட்டுமே இஸ்ரேலின் ஒரே சக்திவாய்ந்த நட்புசக்தி என்பதை இஸ்ரேல் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை ஜனாதிபதி வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை உறுப்பினர்கள் டொனால்ட் டிரம்ப் மீதும், இந்த அமைதி ஒப்பந்தம் மீதும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவதை வன்மையாகக் கண்டித்தார்.

இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தும் மூன்றில் இரண்டு பங்கு பாதுகாப்பு ஆயுதங்கள் அமெரிக்க மக்களின் வரிப்பணத்திலும், அமெரிக்கர்களின் கரங்களாலும் உருவாக்கப்பட்டவை என்பதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்கா ஆண்டுதோறும் இஸ்ரேலுக்கு சுமார் 4 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்கி வரும் நிலையில், தங்களின் உண்மையான பிரச்சினையை உணராமல் அமெரிக்க ஜனாதிபதியை இஸ்ரேல் அமைச்சர்கள் விமர்சிப்பது யதார்த்தமற்றது என்றும் அவர் சாடியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகமோ அல்லது அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும்; தெரிவிக்கவில்லை.

ஈரான் உடனான போர் காரணமாகப் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான இந்த ராஜதந்திர மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தூக்கி அடிப்பன்: கஜேந்திரகுமார் எம்.பியை மிரட்டிய அர்ச்சுனா எம்.பி!

வலிகாமம் வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றமையினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.  

குறித்த பிரதேச சபையின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஶ்ரீபவாநந்தராஜா தலைமையில் நேற்று (18) கூடியது.  

இதன்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதன் புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.  

இந்த யோசனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது எதிர்ப்பை தெரிவித்தார்.  

அது தொடர்ந்தும் மாகாண சபை நிர்வாகத்தின் கீழேயே இயங்க வேண்டும் என தெரிவித்ததுடன், குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு அரசாங்கத்தினால் முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.  

எவ்வாறாயினும் வைத்தியசாலையின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு அந்த வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என அர்ச்சுனா வலியுறுத்தினார்.  

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

இதனால் அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டது.  

இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், குறித்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான யோசனையை முன்வைக்க அபிவிருத்திக் குழு தலைவர் நேற்றைய தினம் தீர்மானித்தார்.  

ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அங்கு தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதியமைச்சர் முனீர் முளப்பருக்கு கடும் கண்டனம்!

முஸ்லிம் ஊடகங்கள் தொடர்பான பாராளுமன்ற உரைக்கு அதிருப்தி!

பிரதியமைச்சர் முனீர் முளப்பருக்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் கடிதம்!

முஸ்லிம் ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வோர் இனவாத சக்திகளுக்குத் துணை போவதாக சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் பிரதியமைச்சருக்கு 18.06.2026 திகதியிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 11.06.2026 அன்று பாராளுமன்றத்தில் தாங்கள் உரை நிகழ்த்திய போது, “முஸ்லிம் சமூக விவகாரங்களை அறிக்கையிடும் முஸ்லிம் ஊடகங்கள், தமது செய்தி அறிக்கையிடல்கள் மூலம் இனவாத சக்திகளுக்குத் துணைபோகும் வகையில் நடந்து கொள்கின்றன” எனக் குற்றம்சாட்டியிருந்தீர்கள்.

இந்த ஆதாரமற்ற பாரதூரமான குற்றச்சாட்டு தொடர்பில் எமது பலத்த அதிருப்தியையும் கவலையையும் தங்களுக்குத் தெரியப்படுத்தும் பொருட்டே இக்கடிதத்தை அனுப்புகிறோம்.

முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி இயங்குகின்ற ஏதேனும் ஊடகங்களோ அல்லது ஊடகவியலாளர்களோ அவ்வாறான பக்கச்சார்பான பின்னணிகளைக் கொண்டிருப்பின் அல்லது தமது செய்தி அறிக்கையிடல்களில் உண்மைக்குப் புறம்பான விடயங்களை உள்ளடக்கியிருப்பின், அவற்றை ஆதாரபூர்வமாக, உரிய தரப்பினரின் பெயரை குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டுவதே முறையானதும் பொருத்தமானதுமாகும்.

அதனை விடுத்து, முஸ்லிம் சமூக மற்றும் சமய விவகாரங்கள் தொடர்பில் ஊடக நெறிமுறைகளைப் பேணி, நடுநிலையாக அறிக்கையிட்டு வரும் ஒட்டுமொத்த ஊடகங்களையும் உள்ளடக்கும் வகையில் தாங்கள் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும்.

அண்மைக்காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து முஸ்லிம் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சமூகப் பொறுப்புணர்வுடன் மக்களை விழிப்பூட்டும் வகையில் செய்திகளை வெளியிட்டிருந்தனர். இது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்களின் இன்றியமையாத கடமையுமாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில், எவ்வித சான்றுகளுமின்றி பொதுப்படையாகத் தாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டு, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் மனவேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்விடயம் அமைப்பின் அங்கத்தவர்களால் எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, கடந்த 15.06.2026 அன்று நடைபெற்ற எமது செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இக்கடிதம் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான பாரதூரமான மற்றும் பொதுப்படையான குற்றச்சாட்டுக்களை பாராளுமன்றம் உள்ளிட்ட உயரிய சபைகளில் முன்வைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், தாங்கள் சபையில் முன்வைத்த மேற்படி கருத்தை திருத்திக் கொள்வதுடன், ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் ஊடகங்களின் சுயாதீன செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து, ஊடகவியலாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம் என்றும் அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவிங்களாம் பொறாமைக்காரங்க, இல்லாட்டி முட்டாளுங்க!

“அவிங்களாம் பொறாமைக்காரங்க, இல்லாட்டி முட்டாள்கள்!” – ஈரான் டீலை விமர்சித்தவர்களை ‘ட்ரூத் சோஷியலில்’ வச்சுச் செய்த டொனால்ட் ட்ரம்ப்!

ஈரானுடன் போடப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தத்தின் பின்னர், அமெரிக்காவிற்குள் ட்ரம்புக்கு எதிராக உள்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். “ஈரான் விஷயத்தில ட்ரம்ப் ரொம்ப சாஃப்ட்டா போயிட்டார், அமெரிக்காவுக்கு இதனால என்ன லாபம்?” என்று வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகள் எழத் தொடங்கின. இந்த விமர்சனங்களால் கடுப்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வழக்கம் போல தனது பாணியில் சவுக்கடிப் பதிலடியை ஒற்றைப் பதிவில் கொடுத்து உலகையே அதிர வைத்துள்ளார்!

விமர்சகர்களின் வாயை அடைக்க ட்ரம்ப் கையில் எடுத்த ஆயுதம் தான், தற்போதைய அமெரிக்காவின் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள்!

“நான் ஈரான் விஷயத்தில் இன்னும் கடுமையாக நடந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த முட்டாள்கள், தற்போதைய நிலவரத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டும்” என்று ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார். தான் கொண்டு வந்த இந்த இராஜதந்திர நகர்வால் தான் அமெரிக்கப் பங்குச்சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றுச் சாதனை உச்சத்தைத் தொட்டுள்ளது என்றும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ‘மளமளவென’ சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.

பொருளாதாரத்தின் இந்த அதிரடி முன்னேற்றங்களை கண்முன்னே வைத்தும், தன் மீது பழி போடுபவர்களை ட்ரம்ப் வார்த்தைகளால் வெளுத்து வாங்கியுள்ளார்!

“அமெரிக்கப் பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும்போதும், எண்ணெய் விலை தலைகீழாகச் சரியும்போதும், நான் ஈரான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூச்சல் போடும் இந்த முட்டாள்கள்… ஒன்று என் மீது பொறாமை கொண்டவர்களாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் கெட்டவர்களாக அல்லது அப்பட்டமான முட்டாள்களாகத்தான் இருக்க வேண்டும்!” என டொனால்ட் ட்ரம்பின் அதிகாரப்பூர்வ ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) வாஷிங்டனுக்குக் கிடைத்த ஒரு முழுமையான வெற்றிதானா? என்று அமெரிக்காவின் முக்கிய கொள்கை வகுப்பாளர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பி வரும் நிலையிலேயே ட்ரம்ப் இந்த அதிரடிப் பதிவை இட்டுள்ளார். வாஷிங்டனின் பாரம்பரிய அரசியல்வாதிகள் வழக்கம் போல போரை நீடிக்கவே விரும்புகிறார்கள் என்றும், ஆனால் ஒரு தொழிலதிபராகத் தான் அமெரிக்க மக்களின் பாக்கெட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாத்துள்ளதாகவும் ட்ரம்ப் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த அதிரடிப் பதிவு வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் இந்த அமைதி ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் மேலும் சூடுபிடித்துள்ளன. ட்ரம்பின் இந்த ‘மாஸ்’ இராஜதந்திரம் உலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகிறதா அல்லது உள்நாட்டு அரசியலில் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை அடுத்தடுத்த 60 நாள் பேச்சுவார்த்தைகள் தான் தீர்மானிக்கப் போகின்றன!

இஸ்ரேல் உறவில் விரிசலா? லெபனான் எல்லையில் திக் திக் நிமிடங்கள்!

  • வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது:
  • ஹொர்முஸ் ஜலசந்தி திறப்பு & எண்ணெய் விலை வீழ்ச்சி:
  • லெபனானில் தொடரும் தாக்குதல்:
  • இஸ்ரேல் புறக்கணிப்பு & அமெரிக்காவுடன் மோதல்:
அமெரிக்கா – ஈரான் ‘டீல்’ ஓகே! உலக சந்தையில் அதிரடி மாற்றம்; ஆனால் லெபனானில் ஓயாத போர் முரசு!

உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருந்த அந்தப் பெரும் போருக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது! ஆமாம், உலகளாவிய எரிபொருள் விநியோகப் பாதையை முடக்கி, உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளனர். எதிர்பார்த்ததை விட இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. இதன் நேரடி விளைவாக, சுமார் 6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்துகொண்டு 3 சவூதி அரேபிய சூப்பர் டேங்கர் கப்பல்கள் ஹொர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) ஊடாக வியாழக்கிழமை தடையின்றிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன.

ஆனால், இந்த உலகளாவிய நிம்மதிப் பெருமூச்சுக்கு மத்தியிலும் ஒரு பெரிய கேள்விக்குறி லெபனானில் தொங்கிக் கொண்டிருக்கிறது!

உலகப் பொருளாதாரத்தின் இதயமாகப் பார்க்கப்படும் ஹொர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்ட அடுத்த சில மணித்தியாலங்களில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் (Brent crude) விலை மேலும் 2 வீதத்தால் சரிந்து, பேரல் ஒன்று 78 டொலருக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. போர் தொடங்கிய காலத்திலிருந்து பதிவான மிகக் குறைந்த விலை இதுவாகும். போர்க்காலத்தில் தங்களின் இருப்பிடத்தை மறைப்பதற்காக ரேடார் சிக்னல்களை அணைத்துவிட்டுப் பயணித்த பன்னாட்டுக் கப்பல்கள், இப்போது தங்களின் சிக்னல்களை ஒளிரவிட்டு சுதந்திரமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா விதித்திருந்த ஈரானிய துறைமுகங்களுக்கான கடற்படை முற்றுகையும் உடனடியாக நீக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளதால், உலக வர்த்தகம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், இந்த ‘சமாதானப் புகைச்சல்’ இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கண்களைப் பழுக்க வைத்துள்ளது!

“ஈரானும் அமெரிக்கர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள், சரி… ஆனால் லெபனானில் இன்னும் எதுவும் ஓயவில்லை!”

“பெய்ரூட்டில் கூடார அடிவாரத்தில் அமர்ந்து, தனது மொபைல் திரையில் வரும் செய்திகளை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த லெபனான் அகதி முஹம்மது டொக்மனின் ஆதங்கக் குரல் இது”

காரணம், இந்த அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் போரை “நிரந்தரமாக நிறுத்த வேண்டும்” என்றும், அதன் “இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் அமெரிக்கா அப்பட்டமாக எழுதியுள்ளது. ஈரானின் பிரதான கோரிக்கைக்கு ட்ரம்ப் இணங்கியுள்ளதையே இது காட்டுகிறது. ஆனால், இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது! இதனால் ஆத்திரமடைந்துள்ள இஸ்ரேலிய படைகள், ஒப்பந்தம் கையெழுத்தான வியாழக்கிழமை காலையும் லெபனானின் தெற்குப் பகுதியில் கொடூர வான்வழித் தாக்குதல்களையும், எறிகணை வீச்சுகளையும் நடத்தியுள்ளன. பெய்ரூட் நகரின் வான்பரப்பில் இஸ்ரேலிய உளவு ட்ரோன்கள் இப்போதும் வட்டமிட்டுக் கொண்டிருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

நெருங்கிய நண்பர்களாக இருந்த ட்ரம்பிற்கும் நெதன்யாகுவிற்கும் இடையே இப்போது உருவாகியுள்ள இந்த விரிசல், வரலாற்றில் இல்லாத ஒரு பெரும் இராஜதந்திர மோதலாக வெடித்துள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள லிடானி ஆற்றின் தெற்குப் பகுதியை ஒரு பாதுகாப்பு வலயமாக மாற்றி, அங்கு தனது இராணுவத்தை தொடர்ந்து தக்கவைக்க இஸ்ரேல் ஒற்றைக்காலில் நிற்கிறது. இது தொடர்பாக வாஷிங்டனுடன் இஸ்ரேல் “பிடிவாதமான பேச்சுவார்த்தையில்” ஈடுபட்டுள்ளதாக நெதன்யாகுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலை மிரட்டிப் பணிய வைப்பாரா அல்லது நெதன்யாகுவின் பிடிவாதத்திற்கு இடம் கொடுப்பாரா என்பதில் தான் லெபனானின் அமைதி தங்கியுள்ளது.

“இஸ்ரேல் இப்போது ஒரு இக்கட்டான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது: ஒன்று இராணுவ அழுத்தத்தைத் தொடர்ந்து பிரயோகித்து ட்ரம்பின் இராஜதந்திர ஆதரவை இழப்பது, அல்லது ட்ரம்பின் குட்-புக்கில் நீடிப்பதற்காகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது” என இஸ்ரேலிய ஊடகங்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளன. இறுதி உடன்படிக்கைக்கான 60 நாள் காலக்கெடு ஓடத் தொடங்கிவிட்ட நிலையில், லெபனான் மக்களின் நிம்மதி இன்னும் சில நாட்களுக்குத் தத்தளிப்பில் தான் இருக்கப் போகிறதா?

அக்கரைப்பற்று மாநகர சபையில் இரட்டை நிலைப்பாட்டு அரசியல்!

(எம் என் முஹம்மது)

அக்கரைப்பற்று மாநகர சபையில் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடைப்பிடித்து வரும் அரசியல் அணுகுமுறைகள் குறித்து மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.எம். நுஃமான் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்; சபைக்குள் ஆளுங்கட்சியுடன் இணக்கமாக செயல்பட்டு, தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கும் சில உறுப்பினர்கள், சபைக்கு வெளியே எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், சபையில் ஒரு நிலைப்பாடு, பொதுமக்கள் மத்தியில் மற்றொரு நிலைப்பாடு, சமூக வலைத்தளங்களில் வேறொரு நிலைப்பாடு என செயற்படுவது கொள்கை அரசியல் அல்ல என்றும், அது சந்தர்ப்பவாத அரசியலின் வெளிப்பாடாகும் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவம் என்பது அறிக்கைகள் அல்லது புகைப்பட அரசியலால் அளவிடப்படுவதில்லை என்றும், மக்களுக்காக எடுக்கப்படும் பொறுப்புணர்வான மற்றும் துணிச்சலான முடிவுகளின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய காங்கிரஸின் மாநகர உறுப்பினர்களாகிய தாங்கள், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாகவும், அக்கரைப்பற்று மாநகர மேயரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வின் வழிகாட்டுதலின் கீழ் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடும் இரட்டை நிலைப்பாட்டு அரசியலை மக்களிடம் வெளிப்படுத்துவோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அக்கரைப்பற்று மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள் என்பதுடன், உண்மையாக மக்களுக்காக செயற்படுபவர்களையும், தேர்தல் காலங்களில் மட்டும் குரல் கொடுப்பவர்களையும் வேறுபடுத்தி அறிந்திருப்பார்கள் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கடத்தல்காரர்களுக்கு விமானப்படை பாதுகாப்பு? கல்பிட்டியில் பரபரப்பு சம்பவம்!

  • கற்பிட்டி – கந்தகுளிய, வெடிபிட்டி வான்படை பயிற்சி வலயத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபா பல இலட்சம் பெறுமதியான கடத்தல் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
  • சோதனை நடவடிக்கையின் போது அங்கு வந்த விமானப்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சிலர் பொலிஸாரின் கடமைகளுக்கு பலத்த இடையூறு விளைவித்துள்ளனர்.
  • கற்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் அண்மையில் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புத்தளம் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இந்த அதிரடி சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
வான்படை பயிற்சி எல்லையில் துணிகரம்: பொலிஸாருக்கு விழுந்த ‘முட்டுக்கட்டை’! பின்னணி என்ன?

கற்பிட்டி கடல் பிராந்தியம் எப்போதும் கடத்தல்காரர்களின் சொர்க்கபுரி என்ற அவப்பெயரை சுமந்து நிற்கிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், இம்முறை யாரும் ஊடுருவ அஞ்சும் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான, குண்டுகள் வீசி பயிற்சி பெறும் ‘வெடிபிட்டி’ வலயத்திலேயே கடத்தல் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புத்தளம் கோட்ட ஊழல் ஒழிப்பு பிரிவினர் கடந்த 17ஆம் திகதி முன்னெடுத்த மின்னல் வேக சோதனையிலேயே இந்த பெரும் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை அதிகாரிகள் வான்வழியாகவும் நிலவழியாகவும் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவீச்சு பயிற்சிகளை மேற்கொள்ளும் ஆபத்தான வலயத்திலேயே இந்த பொருட்கள் மிகச் சூட்சுமமாக மறைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக கொண்டுவரப்பட்ட 420 கிலோவும் 50 கிராம் எடையும் கொண்ட மஞ்சள், 1600 சோப்புக் கட்டிகள் மற்றும் 45,888 ஷாம்பூ பக்கெட்டுகளை பொலிஸார் அதிரடியாக மீட்டனர்.

ஆனால், இங்குதான் கதையின் அசல் திருப்பமே அரங்கேறியது!

பொலிஸார் கடத்தல் பொருட்களை கைப்பற்றிக் கொண்டிருந்த வேளையில், சம்பவ இடத்திற்கு வந்த விமானப்படை அதிகாரி ஒருவரும் அவரது குழுவினரும் பொலிஸாரின் சட்டபூர்வ கடமைகளுக்கு கடும் இடையூறு விளைவித்துள்ளனர். எனினும், அதற்கு அடிபணியாத பொலிஸ் அதிகாரிகள், வான்படையினரின் எதிர்ப்பையும் மீறி கடத்தல் பொருட்களை வெற்றிகரமாக பறிமுதல் செய்து மேலதிக விசாரணைக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் கடத்தல்காரர்கள் தப்பியோடியுள்ளனர்.

அரசியல் சர்ச்சை… ஒட்டுமொத்த இடமாற்றம்… இப்போது கடத்தல் வேட்டை!

கற்பிட்டி பொலிஸாருக்கு கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக கடந்த காலங்களில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. அண்மையில் சிலாபத்திற்கு விஜயம் செய்திருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் முன்னிலையில், உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் இந்த முறைகேடுகளை பகிரங்கமாக தோலுரித்துக் காட்டினார்.

இதன் உடனடி எதிரொலியாக, கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை (OIC) தவிர ஏனைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உடனடியாக இடமாற்ற பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த ஜூன் 08ஆம் திகதி 24 அதிகாரிகளும், ஜூன் 10ஆம் திகதி மேலும் 15 அதிகாரிகளும் அதிரடியாக தூக்கியடிக்கப்பட்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், புதிய அதிகாரிகளின் கண்காணிப்பில் இந்த சோதனை நடந்துள்ளது. கடலில் சட்டவிரோத கடத்தல்களை முறியடிக்கும் போது, ஏனைய பாதுகாப்புப் பிரிவினர் தங்களுக்கு முட்டுக்கட்டையாகவும், கடத்தல்காரர்களுக்கு சாதகமாகவும் செயற்படுவதாக பொலிஸ் அதிகாரிகள் தரப்பிலிருந்தே இப்போது பகிரங்க குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளமை பாதுகாப்பு தரப்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி தொகுப்பு: ஜூட் சமந்த

வறுத்தெடுத்த ட்ரம்ப்! இஸ்ரேல் விவகாரத்தில் ட்ரம்ப் திடீர் யூ-டர்ன்!

  • பிரான்சில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
  • பாலைவனப் பகுதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் விழுந்த இரு ட்ரோன்களுக்காக, பெய்ரூட் போன்ற மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது தேவையற்றது என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • அதிபர் ட்ரம்ப் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் நின்றிருந்த உயர் அதிகாரிகள் இருவரின் முகபாவனைகள் மற்றும் அசௌகரியமான அசைவுகள் தற்போது இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளன.

பரபரப்பான G7 மேடை: இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கொடுத்த ‘அதிர்ச்சி’ டோஸ்!

பிரான்சின் எவியன் நகரில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடிய G7 உச்சிமாநாட்டின் இறுதி ஊடகவியலாளர் சந்திப்பு, வழமையான அரசியல் அறிக்கைகளையும் தாண்டி உலகளவில் ஒரு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. மேடையில் மைக் பிடித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது மிக நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலின் அண்மைக்கால இராணுவ நகர்வுகளைக் கடுமையாக சாடியுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தான் எவ்விதத்திலும் ஏற்கவில்லை என்பதை ட்ரம்ப் வெளிப்படையாகவே போட்டுடைத்துள்ளார்.

வெறும் இரண்டு ட்ரோன்கள் வந்து விழுந்ததற்காக ஒரு நாட்டின் தலைநகரையே குண்டுவீசித் தாக்குவதா? என்பதுதான் ட்ரம்பின் கேள்வியாக இருந்தது. அதுவும் அந்த இரு ட்ரோன்களும் மக்கள் வாழாத வெற்றுப் பாலைவனப் பகுதியிலேயே எவ்வித சேதமுமின்றி விழுந்துள்ளன. “இதற்காக பெய்ரூட்டில் தாக்குதல் நடத்தியிருக்கத் தேவையில்லை” என ட்ரம்ப் குறிப்பிட்டது, மத்திய கிழக்கில் இஸ்ரேலின் போக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்கா நினைப்பதைக் காட்டுகிறது. இருப்பினும், தனது நாட்டின் எல்லையைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு முழு உரிமை உண்டு என்பதையும் அவர் சொல்லத் தவறவில்லை.

திரைக்குப் பின்னால் நடப்பது என்ன? ஈரானுடனான அந்த ‘மறைமுக’ டீல்!

அதிபர் ட்ரம்ப் ஏன் திடீரென இஸ்ரேல் மீது இவ்வளவு காட்டமாக இருக்கிறார் என்ற கேள்விக்கு விடை, உலகப் பொருளாதாரப் பாதையான ‘ஹோர்முஸ் நீரிணையில்’ தான் ஒளிந்திருக்கிறது. அமெரிக்காவின் இடைத்தரகு முயற்சியால் ஈரானுடன் ஒரு சுமுகமான பொருளாதார உடன்படிக்கையை எட்டவும், லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்புடன் போர் நிறுத்தத்தைக் கொண்டுவரவும் வாஷிங்டன் தீவிரமாக உழைத்து வருகிறது. இந்தச் சூழலில் இஸ்ரேல் நடத்தும் அதிரடித் தாக்குதல்கள், அமெரிக்கா கஷ்டப்பட்டுப் போட்ட சமாதானத் திட்டங்களைக் கெடுத்துவிடுமோ என்ற கோபமே ட்ரம்பின் பேச்சில் வெளிப்பட்டதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

நெட்டிசன்களிடம் சிக்கிய அதிகாரிகள்: உலகளவில் வைரலாகும் அந்த ‘கட்’ வீடியோ!

அரசியல் நகர்வுகள் ஒருபுறமிருக்க, சமூக வலைத்தளங்களில் இந்த ஊடக சந்திப்பின் 15 வினாடி வீடியோ கிளிப் ஒன்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதிபர் ட்ரம்ப் இஸ்ரேலை விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்த சமயம், அவருக்குப் பின்னால் நின்றிருந்த அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹாவர்ட் லட்னிக் (Howard Lutnick) மற்றும் வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ (Marco Rubio) ஆகிய இருவருமே கடும் அசௌகரியத்திற்குள்ளானதை கேமராக்கள் துல்லியமாகப் படம் பிடித்துள்ளன.

அதிபர் பேசப் பேச, பின்னால் நின்றவர்களின் முகத்தில் ஈயாடவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, தங்களின் திகைப்பை மறைக்க அவர்கள் தடுமாறிய விதம் நெட்டிசன்களுக்குப் பெரிய தீனியாக அமைந்துள்ளது. “அதிபரின் இந்தத் திடீர் பேச்சை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது இவர்களின் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது” என ‘X’ (முன்னாள் ட்விட்டர்) மற்றும் டிக்டொக் தளங்களில் மீம்ஸ்கள் பறக்கத் தொடங்கியுள்ளன. தந்திரோபாய ரீதியில் உலக நாடுகளின் கவனம் முழுவதையும் தன் பக்கம் ஈர்க்கும் அமெரிக்க ஊடக உத்தியின் அடுத்த கட்டமாகவே இந்த வீடியோ வைரலாக்கம் பார்க்கப்படுகிறது.

உலகளவில் சரசரவென சரிந்த உலக சந்தை மசகு எண்ணெய் விலை!

  • அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்திற்கான 14 அம்ச இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • ஒப்பந்த செய்தி வெளியானதும் உலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $1.64 (2.06%) ஆகவும், அமெரிக்க WTI எண்ணெய் விலை $1.80 (2.34%) ஆகவும் சரிந்துள்ளது.
  • ஈரானின் அணுசக்தி திட்டம் போன்ற சிக்கலான விவகாரங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதோடு, ஈரானின் பொருளாதார மீட்சிக்காக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் $300 பில்லியன் நிதியுதவித் திட்டத்தை உருவாக்க உடன்பட்டுள்ளனர்.

உலகப் பொருளாதாரத்தையே உலுக்கிக் கொண்டிருந்த ஈரான் யுத்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்காவும் ஈரானும் அதிரடியாக இடைக்கால ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வைத் தொடர்ந்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் வியாழக்கிழமையன்று ஒரு டொலருக்கும் அதிகமாக சடுதியாகச் சரிவடைந்துள்ளன. உலகளாவிய எரிசக்தி விநியோகம் இனி தடையின்றி சீராகும் என்ற எதிர்பார்ப்பே இந்த விலை வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும்.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) வர்த்தகம் 2.06 வீதத்தால் சரிவடைந்து, ஒரு பீப்பாய் 77.91 டொலராகப் பதிவாகியுள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் விலை 2.34 வீதத்தால் வீழ்ச்சியடைந்து, ஒரு பீப்பாய் 74.99 டொலராக வர்த்தகமாகியுள்ளது. ஈரான் தலைவர்கள் “முறையாக நடந்து கொள்ளாவிட்டால்” மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்களைத் தொடங்குவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை எச்சரித்ததால் ஏற்பட்ட தற்காலிக விலை உயர்வை, இந்த புதிய ஒப்பந்தச் செய்தி அப்படியே தலைகீழாக மாற்றியமைத்துள்ளது.

“அமெரிக்கா-ஈரான் இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஈரானிய மசகு எண்ணெய் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உலக சந்தைக்குள் வரும் என்பதை உலக எரிசக்தி சந்தை தற்போதே தீவிரமாக பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது” என சந்தை ஆய்வாளர் டோனி சிகாக்காமோர் தெரிவித்துள்ளார். இந்த 14 அம்ச இடைக்கால ஒப்பந்தத்தின்படி, அடுத்த 60 நாட்களுக்கு இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதுடன், உலக எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹொர்முஸ் நீரிணை’ ஊடாக ஈரான் கட்டணமற்ற கப்பல் போக்குவரத்தை அனுமதிக்கும். அத்துடன் அடுத்த 30 நாட்களுக்குள் இந்த நீரிணையின் போக்குவரத்துத் திறன் முழுமையாக வழமைக்குக் கொண்டுவரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், ஈரானின் அணுசக்தி திட்டம் போன்ற மிகவும் சிக்கலான மற்றும் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட ஈரானின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் இணைந்து 300 பில்லியன் டொலர் நிதியுதவித் திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால், மாற்று வழிகள் மூலம் ஏற்கனவே சில எண்ணெய் விநியோகங்கள் இடம்பெற்று வருவதாலும், தற்போதைய சூழலில் காப்புறுதி மற்றும் பாதுகாப்பு காரணங்களால் கப்பல் நிறுவனங்கள் உடனே இப்பகுதிக்கு வரத் தயங்கலாம் என்பதாலும், இந்த விலை வீழ்ச்சி நீடிக்குமா என்பதில் சில சந்தை வல்லுநர்கள் இன்னும் அவதானம் செலுத்தி வருகின்றனர்.

ஒருவேளை இந்த ஒப்பந்தம் முழுமையாக வெற்றியளித்து ஹொர்முஸ் நீரிணை திறக்கப்பட்டால், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டில் உலக சந்தையில் தேவைக்கு அதிகமான மசகு எண்ணெய் தேங்கும் நிலை (Supply Glut) உருவாகலாம் என சர்வதேச எரிசக்தி முகவராலயம் (IEA) எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு எண்ணெய் சந்தைக்குள் மீண்டும் வருவதால், அடுத்த வருடத்தில் மட்டும் நாளொன்றுக்கு தேவைக்கும் அதிகமாக 5.05 மில்லியன் பீப்பாய்கள் சந்தையில் உபரியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு மத்திய வங்கி (Fed) இந்த வருட இறுதியில் வட்டி வீதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உலகப் பொருளாதார வளர்ச்சியை மந்தமடையச் செய்து, எண்ணெய் தேவையை மேலும் குறைக்கலாம் என நம்பப்படுகிறது.