(எம் என் முஹம்மது)
அக்கரைப்பற்று மாநகர சபையில் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடைப்பிடித்து வரும் அரசியல் அணுகுமுறைகள் குறித்து மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.எம். நுஃமான் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்; சபைக்குள் ஆளுங்கட்சியுடன் இணக்கமாக செயல்பட்டு, தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கும் சில உறுப்பினர்கள், சபைக்கு வெளியே எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், சபையில் ஒரு நிலைப்பாடு, பொதுமக்கள் மத்தியில் மற்றொரு நிலைப்பாடு, சமூக வலைத்தளங்களில் வேறொரு நிலைப்பாடு என செயற்படுவது கொள்கை அரசியல் அல்ல என்றும், அது சந்தர்ப்பவாத அரசியலின் வெளிப்பாடாகும் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவம் என்பது அறிக்கைகள் அல்லது புகைப்பட அரசியலால் அளவிடப்படுவதில்லை என்றும், மக்களுக்காக எடுக்கப்படும் பொறுப்புணர்வான மற்றும் துணிச்சலான முடிவுகளின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய காங்கிரஸின் மாநகர உறுப்பினர்களாகிய தாங்கள், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாகவும், அக்கரைப்பற்று மாநகர மேயரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வின் வழிகாட்டுதலின் கீழ் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடும் இரட்டை நிலைப்பாட்டு அரசியலை மக்களிடம் வெளிப்படுத்துவோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அக்கரைப்பற்று மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள் என்பதுடன், உண்மையாக மக்களுக்காக செயற்படுபவர்களையும், தேர்தல் காலங்களில் மட்டும் குரல் கொடுப்பவர்களையும் வேறுபடுத்தி அறிந்திருப்பார்கள் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


