Wednesday, June 17, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 49

ஜனாதிபதி அநுரவுக்கு எச்சரிக்கை விடுத்த உதய கம்மன்பில!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்த ஜனாதிபதி அநுர எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் .

தனது உத்தியோக பூர்வ எக்ஸ் தனத்திலேயே இதனை பதிவிட்டுள்ளார் .

அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது ,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட காரணமாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையில் ஒரு குற்றமென்றால், இலங்கையில் இருந்த ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்பதே யதார்த்மாகும்.

தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி ஓஷல ஹேரத் என்பவரால் வுல்வர்ஹாம்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 இல் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தது ஒரு உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நாளிலிருந்தே நான் கூறி வருவது இது ஒரு பயனற்ற விவாதம் என்பதாகும்.

ஒரு ஜனாதிபதியின் பயணங்கள் உத்தியோகபூர்வமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாதுகாப்பு மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் வழங்க வேண்டும்.

அது உலக நியதியாகும். இல்லையெனில், நாட்டுத் தலைவர்கள் பாதுகாவலர்கள் இல்லாமலும், பாதுகாப்பு வாகனங்கள் இல்லாமலும் தனிப்பட்ட பயணங்களில் செல்லும் போது எதிரிகளால் இலக்கு வைக்கப்படுவார்கள்.

இந்தக் கைது நடவடிக்கையின் பின்னணியில் உள்ள ஜனாதிபதி அநுரவுக்கும், எதிர்காலத்தில் இந்தக் கைது நடவடிக்கை தன்னைத்தானே தாக்கும் செயலாக அமைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு போர்ச் காரணமாக தேயிலைத் துறை கடும் சரிவு!

0

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பிரதான வருமானமான தேயிலைத் துறை கடும் சரிவைச் சந்தித்து வருவதாக இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனெல் ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாழ் நில தேயிலையில் நூற்றுக்கு 50 வீதத்திற்கும் அதிகமான அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதிலிருந்து ஈரானுக்கு 10 முதல் 15 வீதத்திற்கும் அதிகமான அளவு செல்கிறது. அந்த நாட்டிற்கு நாம் அதிக விலையுடைய தேயிலையையே அனுப்புகின்றோம்.

அவர்களது யுத்த நிலைமை காரணமாக தேயிலை வாங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்குமான கடல் மார்க்கங்கள் தடைப்பட்டுள்ளதால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இது எங்களைப் பாதிப்பது எவ்வாறெனில், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு வாராந்தம் அவர்களது கொடுப்பனவுகளை வழங்க வேண்டியுள்ளது.

தேயிலை விற்பனை ஆகாவிட்டால் எங்களால் அதனை வழங்க முடியாது. இது தொடர்ந்தால் மிகவும் பாரிய நிதி நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டி வரும்.

இலங்கையில் சுமார் 5 இலட்சம் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் உள்ளனர். இத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு சுமார் 2 மில்லியன் பேரின் வாழ்வாதாரமாகவும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 20% அதிகரிப்பு!

0


(Reuters) ஈரானில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு, பாகிஸ்தான் அரசு டீசல் மற்றும் பெட்ரோல் விலையை சுமார் 20% உயர்த்தியுள்ளது.

பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக் ஒரு வீடியோ செய்தியின் மூலம், டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் லிட்டருக்கு 55 ரூபாய் (0.20 டாலர்) உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

இதன்படி, ஒரு லிட்டர் டீசல் 321.17 ரூபாய்க்கும், பெட்ரோல் 335.86 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், வேறு வழியின்றி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இந்தத் திடீர் உயர்வு நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்வதுடன், ஏழை மக்களைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, லாகூர் மற்றும் கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். லாகூரைச் சேர்ந்த தொழிலதிபர் இம்ரான் ஹுசைன் என்பவர், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் சுமார் 70 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பியதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார். தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், ஆனால் மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாததால், இருப்பை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தனது எரிபொருள் தேவையை முக்கியமாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் (UAE) இருந்து ஹார்முஸ் நீரிணை வழியாக இறக்குமதி செய்கிறது. இனிவரும் காலங்களில், எரிபொருள் விலைகள் வாராந்திர அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் மாலிக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானிய கப்பல்களுக்கு வாய்மொழி அழைப்பு விடுத்தது யார்?

0

இந்தியப் பெருங்கடலில் அண்மையில் அரங்கேறிய நிகழ்வுகள் குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஈரானிய போர்க்கப்பல்களான IRIS Dena மற்றும் IRIS Bushehr ஆகியவற்றை இலங்கைக்கு வருமாறு இலங்கை கடற்படை தளபதி வாய்மொழியாக அழைப்பு விடுத்ததாக தசநாயக்க தெரிவித்தார். இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஈரானிய தூதரைச் சந்தித்தபோது, அந்த இரண்டு கப்பல்கள் குறித்து பல விரிவான தகவல்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.

“கடற்படை தளபதி ஏன் இந்த இரண்டு கப்பல்களையும் இலங்கை கடற்பரப்பிற்கு வருமாறு வாய்மொழியாகக் கேட்டுக் கொண்டார் என்பது வியப்பாக இருக்கிறது. அரசாங்கம் இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும், அவர் தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டால் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2026 சர்வதேச கடற்படை அணிவகுப்பிற்காக (International Fleet Review) வந்த அந்த இரண்டு கப்பல்களையும் இந்தியா ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இந்த பொறுப்பு இலங்கை மீது சுமத்தப்பட்டதா என்ற சந்தேகத்தை எழுப்பினார். மத்திய கிழக்கு விவகாரங்களில் இலங்கை அரசு நடுநிலையாகச் செயல்பட வேண்டும் என்றும், இக்கட்டான சூழலில் யாருடனும் கைகோர்க்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், IRIS Bushehr கப்பலில் இருந்தவர்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக அவர் அரசாங்கத்தைப் பாராட்டியதுடன், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் ஒரு மிகப்பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்? இரகசிய ஆவணங்களால் பரபரப்பு!

0

கப்பலில் இருந்து மீட்கப்பட்டு இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈரானிய மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா, இந்த அழுத்தத்தை கொடுத்து வருவதாக, கசிந்துள்ள உள்நாட்டு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை, காலியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானின் ‘IRIS Dena’ போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் பல மாலுமிகள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் சிக்கியிருந்த ஈரானிய கடற்படை துணைக்கப்பலான ‘Booshehr’-ல் இருந்த 208 மாலுமிகளை இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டது.

இந்த நிலையில்,கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொறுப்பாளர் ஜேன் ஹொவெல், இலங்கை அரசாங்கத்திடம் இந்த மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

அவர்களை ஈரானுக்கு அனுப்பினால், அவர்கள் ஈரானின் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்பதால், அவ்வாறு செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் உள்ள இஸ்ரேலியத் தூதருடனான கலந்துரையாடலின் போது, கொழும்பில் தங்க வைக்கப்படுள்ள மாலுமிகளை ஈரானுக்கு அனுப்பும் திட்டம் இல்லை என்றும், அவர்களை மாற்று திட்டம் ஒன்றுக்கு ஊக்குவிப்பது குறித்து ஏதேனும் பேச்சுவார்த்தைகள் உள்ளதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிப்பதாக, ரொயட்டர்ஸ் கூறியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ள போதும் அது தொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்  எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களுக்கு எச்சரிக்கை!

0

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். 

ஹைஃபா (Haifa), நஹாரியா (Nahariya), எக்கர் (Acre), கலிலி (Galilee), அஃபுலா (Afula), கர்மேல் மலைத்தொடர் (Carmel Mountains), நாசரேத் (Nazareth), திபேரியா (Tiberias) உள்ளிட்ட வடக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள், லெபனான் திசையிலிருந்து வரக்கூடிய தாக்குதல்கள் மற்றும் நாட்டின் உட்பகுதிகளில் சில குழுக்களால் முன்னெடுக்கப்படக்கூடிய ஆத்திரமூட்டும் சம்பவங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் என நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், தற்போது ஈரானில் இருந்து முன்னெடுக்கப்படும் தாக்குதல்களில் குறைவு காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

வடக்கு இஸ்ரேல் பிராந்தியத்தில் 9,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதால், அந்நாட்டு பாதுகாப்புப் படைகள், அரச ஊடகங்கள், PIBA நிறுவனம் மற்றும் தூதரகம் வழங்கும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ஏதேனும் தாக்குதலின் போது இஸ்ரேலிய எம்புலன்ஸ் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், நீங்கள் இருக்கும் இடத்தை (Location) குறிப்பிட்டு 101 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. 

தேவையான மேலதிக அறிவுறுத்தல்களுக்கு தூதரகத்தின் WhatsApp இலக்கமான 00972-559305731 ஊடாக வாரத்தின் 7 நாட்களும் தொடர்புகொள்ள முடியும்.

தெஹ்ரானின் நிலத்தடி இராணுவப் பதுங்கு குழியை அழித்த இஸ்ரேல்!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனி பயன்படுத்திய தெஹ்ரானில் உள்ள நிலத்தடி இராணுவப் பதுங்கு குழியை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தகர்த்துள்ளன. இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளியை IDF சனிக்கிழமை பகிர்ந்துள்ளது.

‘ஆபரேஷன் ரோர் ஆஃப் தி ஹாரியர்’ (Operation Roar of the Harrier) என்ற நடவடிக்கையின் கீழ், சுமார் 50 இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் தெஹ்ரானில் உள்ள ஈரானிய தலைமை வளாகத்திற்கு கீழே இருந்த இந்த நிலத்தடி பதுங்கு குழியை அழித்தன. அவசர காலங்களில் போர் நடவடிக்கைகளை வழிநடத்துவதற்காக ஒரு பாதுகாப்பான இடமாக இது கட்டப்பட்டிருந்தது. கமேனியின் மறைவிற்குப் பிறகு, இந்த வளாகம் ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளின் தளமாகச் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏழாவது நாளை எட்டியுள்ள இந்தப் போர், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் வேகமாகப் பரவி, உலகளாவிய எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. இதனை “ஆட்சியின் உள்கட்டமைப்பை” குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. லெபனான் மற்றும் ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ள இஸ்ரேல், போரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்போவதாக உறுதியளித்துள்ளது.

தொடர் தாக்குதல்களால் ஈரானின் சாதாரண மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நெட்பிளாக்ஸ் (Netblocks) அமைப்பின் தகவல்படி, ஈரானில் இணைய இணைப்பு ஒரு சதவீதமாகக் குறைந்துள்ளது, இது போரின் பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியேறுவதைத் தடுக்கிறது. தெஹ்ரானின் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டாலும், பாதுகாப்புப் படைகள் மக்கள் மீது கடுமையான கட்டுப்பாட்டை வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியை பாராட்டி ரிஷாட் எம்.பி நன்றி தெரிவிப்பு!

0

இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்களைக் காப்பாற்றியதோடு, ஈரானின் மற்றொரு கப்பலை இலங்கைத் துறைமுகத்தில் தரிப்பதற்கும் அதில் பயணம் செய்த 208 பேருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும் மனிதாபிமான அடிப்படையில் தீர்மானம் மேற்கொண்ட, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தின் மூலம் ‘மனிதாபிமானமே எதிலும் முதன்மையானது’ என்பதை – அவர் நிரூபித்துள்ளார் என்றும், இது – இலங்கையர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் தருணம் எனவும் றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

”மத்திய கிழக்கில் நடந்து கொண்டிருக்கும் யுத்தம்  – ஈரான் மீது திணிக்கப்பட்டது. அந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள், அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தருணத்தில் ஈரானின் இரண்டு கப்பல்களிலும் பயணித்த மொத்தம் 240 ஈரானிய பிரஜைகளை, ஜனாதிபதியின் துணிவான முடிவின் மூலம் காப்பற்றக் கிடைத்தமையினால், உலக வரலாற்றில் இலங்கை உயர்ந்து நிற்கிறது” என்றும் றிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.

‘இந்த விவகாரம் தொடர்பில் பொய்யான, பயமுறுத்தும் நோக்குடனான அதிகமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதே உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில்தான் நாம் இந்த தலையீட்டை செய்தோம்.

இது நாடென்ற வகையில் மிகவும் தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பாகும்’ என்று, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக் தெரிவித்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள றிஷாட் பதியுதீன்; “இதன் மூலம் மனிதாபிமானமுள்ள தலைமைத்துவத்தின் பண்பினை – ஜனாதிபதியிடத்தில் நான் காண்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

‘ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையினால், அவர் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள நேரிடும்’ என்று வெளியிடப்படும் குரூரமான கருத்துக்களை, தான் கடுமையாக எதிர்ப்பதாகவும், ”ஒரு நன்மையை செய்யும் போது, அதன் பின்விளைவுளை கருணையுள்ள மனிதர்கள் ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள்” என்றும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுத்தீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

”இலங்கையின் மிக நீண்டகால நண்பராக ஈரான் இருந்து வருகிறது. இலங்கை பெரும் அனர்த்தங்களில் சிக்கித் தவித்த போதெல்லாம், ஓடிவந்து ஈரான் உதவியிருக்கிறது. அந்த வகையிலும், ஈரானுக்கு உதவ – இலங்கை கடமைப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானின் கப்பல்களில் இருந்த நூற்றுக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்திய படையினரையும் பராட்டி – நன்றி தெரிவிப்பதாகவும் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

உயரும் எரிபொருள் விலை குறித்து கவலையில்லை என டிரம்ப் அறிவிப்பு

0

ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை குறித்து தமக்கு எவ்வித கவலையும் இல்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தமக்கு ராணுவ நடவடிக்கைகளே தற்போதைய முன்னுரிமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல் நிலையங்களில் உயர்ந்து வரும் விலைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “எனக்கு இது குறித்து எந்த கவலையும் இல்லை. போர் முடிந்தவுடன் விலைகள் மிக வேகமாக குறையும். பெட்ரோல் விலை சற்று உயர்வதை விட இந்த ராணுவ நடவடிக்கை மிகவும் முக்கியமானது,” என்று கூறினார். கடந்த மாதம் தனது உரைகளில் பெட்ரோல் விலை குறைவை ஒரு சாதனையாகப் பேசிவந்த டிரம்பின் இந்த கருத்து, அவரது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து ஒரு மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

அதிபரின் பொதுவான கருத்துக்கள் இவ்வாறு இருந்தாலும், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இந்த விலை உயர்வு குடியரசுக் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசி வைல்ஸ், விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறினால் அது தேர்தலில் “பேரழிவை” ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

நிர்வாகத்தின் திரைமறைவு நடவடிக்கைகள்

விலை உயர்வைச் சமாளிக்க வெள்ளை மாளிகையின் எரிசக்தி மற்றும் தேசிய பாதுகாப்பு குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசி வைல்ஸ் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் ஆகியோர் எண்ணெய் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கூட்டாட்சி பெட்ரோல் வரி ரத்து மற்றும் எத்தனால் கலப்பு தொடர்பான சுற்றுச்சூழல் விதிமுறைகளைத் தளர்த்துவது போன்ற விருப்பங்கள் குறித்து அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை போர் தொடங்கியதில் இருந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 16% உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் தேசிய சராசரி பெட்ரோல் விலை கடந்த வாரத்திலிருந்து 27 காசுகள் உயர்ந்து ஒரு காலன் 3.25 டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 காசுகள் அதிகமாகும்.

உலகின் மிகப்பெரிய அவசரகால கச்சா எண்ணெய் சேமிப்பிலிருந்து (Strategic Petroleum Reserve) தற்போதைக்கு எண்ணெயை எடுக்கப் போவதில்லை என்று டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், ஈரானிய கடற்படை முடக்கப்பட்டிருப்பதால், எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை நீடிக்கும் என்று டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்துள்ள நிலையில், போரின் இறுதி இலக்கு குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லை என பாதுகாப்பு நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதற்காக இனி சமாதான நீதவான் பதவி இல்லை!

0

சமாதான நீதவான் பதவி இனி அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். 

இன்று (06) பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், ஒரு சமாதான நீதவான் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தற்போது முறையான வழிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

அதேபோல், நாடு முழுவதிலும் உள்ள சமாதான நீதவான்களின் தகவல்கள் அடங்கிய தரவுத்தளம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஒரு பிரதியை அத்தாட்சிப்படுத்தும் நபர் உண்மையான சமாதான நீதவான்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். 

இனிவரும் காலங்களில் இப்பதவிக்கான நியமனங்களை வழங்கும்போது, அதிகபட்ச வயது எல்லை 75 வயது வரை மட்டுமே அமையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இனி இந்தப் பதவி அரசியல் ரீதியாக வழங்கப்படமாட்டாது. அதேபோல், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சுய விபரக் கோவையை புதுப்பிப்பதற்கான புதிய முறையை நாம் உருவாக்கியுள்ளோம். 

கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகம் ஊடாக இதனை உறுதிப்படுத்தும் நடைமுறை பின்பற்றப்படும். 

தவறிழைக்கும் சமாதான நீதவான்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய வட்ஸ்அப் இலக்கம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை நாம் தயார் செய்துள்ளோம். 

முன்னர் நியமிக்கப்பட்டவர்களின் பதவிகளை உடனடியாக ரத்து செய்வது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. 

சிலர் 5-10 வருடங்களாக அனுபவம் பெற்றுள்ளனர். ஆனால், மிக விரைவில் தரவுத்தளம் ஒன்றை உருவாக்கும் பணியை முன்னெடுப்போம். அப்போது, எங்கு முத்திரை இடப்பட்டாலும் அவர் தகுதியுள்ள சமாதான நீதவான்தானா என்பதை எம்மால் அறிய முடியும். 

சிக்கலான ஆவணங்களை வாசித்துப் புரிந்துகொள்வதற்கு முறையான மனநிலை மற்றும் ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்பதால், எதிர்கால நியமனங்களுக்கான வயது எல்லை 75 என குழு தீர்மானித்துள்ளது. 

அதனை மாற்றுவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.