Friday, June 19, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 54

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி – ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பு!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

இஸ்ரேலிய விமானப்படை, ஈரான் மற்றும் லெபனானின் பெய்ரூட் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. ஈரானிய ஆட்சி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்குச் சொந்தமான ராணுவ நிலைகளே தங்களின் இலக்கு என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, லெபனானில் உள்ள பாப்தா (Baabda) பகுதியில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

மறுபுறம், அமெரிக்க மத்திய கட்டளை (U.S. Central Command), ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கட்டுப்பாட்டு மையங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை அழித்துள்ளதாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து தனது பணியாளர்களை வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

இந்த மோதலின் மிக முக்கிய விளைவாக, உலக எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் பாதையை கடக்க முயலும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

உலகின் மொத்த எண்ணெய் நுகர்வில் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது,. தற்போதைய மோதலில் நான்கு எண்ணெய் டாங்கர்கள் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 150 கப்பல்கள் அந்தப் பகுதியில் முடங்கியுள்ளதால் காப்பீட்டு நிறுவனங்கள் அந்தப் பிராந்தியத்தில் செல்லும் கப்பல்களுக்கான போர் அபாயக் காப்பீட்டை (War risk coverage) ரத்து செய்துள்ளன.

எகிறும் எண்ணெய் விலை மற்றும் பொருளாதாரத் தாக்கம்

எரிசக்தி விநியோகத் தடையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 2.2% உயர்ந்து ஒரு பேரல் 79.44 டாலராக எட்டியுள்ளது. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலையும் 1.6% உயர்ந்து 72.40 டாலராக உள்ளது.

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கத்தார், தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இந்த நிலை நீடித்தால் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் (Inflation) கணிசமாக உயரும் என்றும், உற்பத்தித் திறன் வீழ்ச்சியடையும் என்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் பிலிப் லேன் எச்சரித்துள்ளார்.

எரிசக்தி தட்டுப்பாட்டை எதிர்கொள்ள தைவான் போன்ற நாடுகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. தற்போதைக்குத் தட்டுப்பாடு இல்லை என்றாலும், நிலைமை மோசமானால் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிடமிருந்து எரிவாயுவைப் பெறவும், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுடன் இணைந்து செயல்படவும் தைவான் திட்டமிட்டுள்ளது,.

மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர்ச் சூழல் உலக நாடுகளைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளும் என்று அஞ்சப்படுகிறது.

சவூதியை அமெரிக்காவே தாக்கியதா?

ரியாத்தில் உள்ள ஹோட்டல் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் தற்போது பெரும் சர்ச்சையையும், பரஸ்பர குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளன.

​RIA Novosti செய்தி நிறுவனத்திடம் பேசிய ஈரானிய அதிகாரி ஒருவர், ரியாத் ஹோட்டல் மீதான தாக்குதல் அமெரிக்காவால் நடத்தப்பட்ட ஒரு “பொய் வழி நடவடிக்கை” (False Flag Operation) என்று கூறியுள்ளார்.

அரபு நாடுகளை ஈரானுக்கு எதிராகப் போரில் ஈடுபடத் தூண்டுவதற்காக அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இதைச் செய்ததாக அந்தத் தரப்பு குற்றம் சாட்டுகிறது.​ இருப்பினும் ​இந்தத் தாக்குதல் குறித்த செய்திகளை சவூதி அரேபிய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது.​

ரியாத்தில் உள்ள ஹயாட் ரீஜென்சி (Hyatt Regency) ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் பொய்யானவை என சவூதி தகவல் தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளது.​ மேலும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஹோட்டல் எரியும் காட்சிகள் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டவை என்றும், அவை உண்மைக்குப் புறம்பானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.​

கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஈரானியத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக சவூதி உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் சில இடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என அந்த நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.

ஈரானிய எல்லைக்குள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் “ஆபரேஷன் ரோரிங் லயன்” (Operation Roaring Lion) என்ற இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இச்சம்பவங்கள் பார்க்கப்படுகின்றன.

சட்டக்கல்லூரியில் மு.கா தலைவர் ஹக்கீம் கடும் பேச்சு!

உலகப் போர்ப் பதற்றமும் இலங்கையின் பொருளாதார சவால்களும்

இப்பொழுது உலகம் முழுவதும் பதற்றமாக இருக்கிறது. பெரியதொரு போர் மூண்டிருக்கிறது. மத்திய கிழக்கு எங்கும் யுத்தப் பேரிகை முழங்கிக் கொண்டிருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே இன்னொரு நாட்டைத் தாக்குவதற்கு இருக்கிற அதிகாரம் ஒரு வல்லரசின் கைகளில் வந்திருக்கிறது. இது பற்றி கண்டனங்கள் எவ்வளவுதான் வந்தாலும், இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு இதனால் ஏற்படுகிற பாதிப்புகள் மிகவும் பாரதூரமானவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

சனிக்கிழமை (28) மாலை, சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் பவளவிழா தொடர்பில் வித்தக விழா மற்றும் “நீதி முரசு” வெளியீட்டு நிகழ்வு – 2025 என்பன கொழும்பு, இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெற்றது.அதில், சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

இந்தத் தமிழ் மன்றத்தின் தலைவராக 1982ஆம் ஆண்டில் நான் நான் பதவி வகித்தேன். 75 ஆண்டுகளைக் கடந்து பவளவிழா தொடர்பில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்ற இந்தத் தமிழ் மன்றத்தின் நிகழ்ச்சியைப் பார்க்கின்ற பொழுது மிகப் பூரிப்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில் எங்களுடைய காலத்தில் உங்களை விடவும் நான்கு மடங்கு கூடுதலாகத் தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவர்கள் இருந்தார்கள். இன்று அந்த நிலைமை சட்டக் கல்லூரியில் இல்லை . இதை நிவர்த்தி செய்யவதற்கு அவ்வப்போது முயற்சிகள் எடுக்கப் பட்டாலும் கைகூடவில்லை.

எங்களுடைய காலத்தில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரிக்கு இடையிலான மரபு ரீதியான போட்டிகள், சட்ட பீடத்திற்கும் எங்களுக்குமிடையிலான விவாதம், இந்த எழுந்தமான பேச்சுப்போட்டி, அறங்கூறும் அவையத்துப் போட்டி இவைகள் என்ற இந்த மாமூலான விடயங்களை மாத்திரம் நடத்திவிட்டு நாங்கள் திருப்தியடைந்துவிட்டோம். ஆனால், இன்று நீங்கள் நிறைய பரிசில்கள் மாத்திரமல்ல, இன்னும் விவாதப் போட்டிகளையும் கூடுதலாகச் சட்ட பீடம், மருத்துவப் பீடத்திற்கிடையிலான விவகாரங்களையும் கூட்டியிருக்கிறீர்கள் என்பது மிகவும் மனநிறைவைத் தருகிறது. குறிப்பாக, இந்த நிர்வாகம் மிக விமர்சையாக நடத்திய உங்களுடைய 75வது அகவை கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்தது; அதில் அடியேனும் பங்குபற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றிருந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்.

இப்பொழுது உலகம் முழுவதும் பதற்றமாக இருக்கிறது. பெரியதொரு போர் மூண்டிருக்கிறது. மத்திய கிழக்கு எங்கும் யுத்தத்தின் பேரிகை முழங்கிக் கொண்டிருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே இன்னொரு நாட்டைத் தாக்குவதற்கு இருக்கிற அதிகாரம் ஒரு வல்லரசின் கைகளில் வந்திருக்கிற துர்ப்பாக்கிய நிலையைக் காண்கிறோம். இன்று நேற்றல்ல, ஐக்கிய நாடுகள் சபையை ஆரம்பித்ததும் ஐ நா சாசனம் (UN Charter )என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ஐக்கிய நாடுகள் சாசனத்தை வைத்துக் கொண்டு, இன்று நாங்கள் உள்நாட்டில் பேசுகிற சட்டத்தின் ஆட்சி (Rule of Law)என்பது வெறும் நாட்டின் உள்விவகாரத்தில் மாத்திரமல்ல, சர்வதேச விவகாரத்திலும் அது தேவை என்பதற்காக Rule-based International Order என்று ஒன்று இருக்கிறது.

அதைத் தொடர்ந்தும் மீறுகிற, எடுத்த எடுப்பில் நினைத்ததையெல்லாம் செய்துகொண்டு போகிற ஒரு வல்லரசின் இந்தப் போக்கு சம்பந்தமாகக் கண்டனங்கள் எவ்வளவுதான் வந்தாலும், எங்களைப் போன்ற சிறிய நாடுகளுக்கு இதனால் ஏற்படுகிற பாதிப்புகள் மிகவும் பாரதூரமானவை.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். இப்பொழுது யுத்தத்தின் காரணமாக எண்ணெய் விலை பல மடங்கு அதிகரிக்கப் போகிறது. இதற்கு எப்படி நாங்கள் ஈடுகொடுக்கப் போகிறோம்? அடுத்த வருடத்திலிருந்து நாங்கள் பில்லியன் டொலர் கணக்கில் கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கடப்பாடு வருகிறது. இதை ஒத்திவைப்பதற்கும் சர்வதேச நாணய நிதியம் முன்வருமா என்பது தெரியாது.அதுவும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

அவர்களாக யுத்தங்களைத் தொடங்கி, இப்படி அக்கிரமங்களைப் புரிந்துகொண்டு செல்லும்போது, மத்திய கிழக்கில் இருக்கின்ற இஸ்ரேல் என்ற ஒரு நாட்டின் தேவைக்காக இவ்வளவு பாரிய ஒரு யுத்தத்தை அவர்கள் அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் என்பது மிகக் கண்டனத்துக்குரிய விடயமாகும்.

சிறிய நாட்டில் இருக்கின்ற எங்களுக்கு இதைக் கண்டித்துப் பேசுவதைத் தவிர வேறேதும் செய்துவிட முடியாது.

ஆனால் இதற்கு ஒர் அடிப்படைக் காரணம் இருக்கிறது, அந்த அடிப்படைக் காரணம் எங்களுடைய நாட்டிலும் எங்களுடைய அரசியல் யாப்பிலும் இருப்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. நிறைவேற்று அதிகாரம் ஒருவரின் கைகளில் இருக்கிறபோது எடுக்கும் இவ்வாறான முடிவுகள் மிகவும் ஆபத்தானவை.

1978ஆம் ஆண்டு ஆக்கிய அரசியலமைப்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைக் கொண்டுவந்ததிலிருந்து அது நல்லதா,கெட்டதா? என்ற விவாதம் தொடர்ந்து கொண்டு போகிறது. இன்று ஆட்சியில் இருப்பவர்களும் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவோம் என்று வாக்களித்துவிட்டு வந்தவர்கள்தான். ஆனால், அவர்களுடைய ஆட்சி முடிந்து போகும் வரை இதைச் செய்யமாட்டார்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது

ஏனென்றால் இதில் இருக்கிற அதிகாரத்தைப் பாவித்து எதையும் செய்யலாம். இது சட்டத்தின் ஆட்சியை மிகப் பெரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்குகின்ற, ஒரு தனிநபரின் கையில் இருக்கிற அதிகாரமாக இருப்பதுதான் இன்று இந்த மிகப் பெரிய அனர்த்தத்தை உலகளாவிய ரீதியிலும் உருவாக்கியிருக்கிறது.

இந்நாட்டிலும் இலைமறை காயாகத் தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் இந்த விவகாரம் மிகப்பெரிய பாதிப்பான விடயமாக இருக்கிறது. எடுத்த எடுப்பில் நிறைய மாற்றங்களைச் செய்வதற்கான அதிகாரம் இன்றைய ஆட்சியாளர்கள் கைகளிலும் இருக்கிறது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் நாட்டு மக்கள் இவர்களுக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டார்கள். யாரிடத்திலும் எதையும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது.

நீதிமன்றத்தில் இது அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டதா இல்லையா என்கிற விவகாரத்தில் அடிக்கடி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடக்கின்ற போது, (Constitutional Matters) வாதிடும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் இருக்கின்ற இந்த நிலையில், எங்களைப் பொறுத்தமட்டில் வருங்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றிச் சட்ட மாணவர்கள் மிகவும் உன்னிப்பாக இருக்க வேண்டும்.சட்டத்தரணிகள் சங்கமமும் உன்னிப்பாக இருக்க வேண்டும்.

அண்மையில் சட்டத்தரணியொருவர் கொல்லப்பட்டபோது முழுச் சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால் அதைவிடவும் மிகப்பெரிய பாதிப்பு அரசியல் யாப்பில் கைவைக்கின்றபோது ஏற்படும்.

எதேச்சதிகாரமாகப் பல விடயங்களைச் செய்வதற்கு எத்தனம் நடக்கிறது என்று கேள்விப்படுகிறோம். எனவே, அவ்வாறான விடயங்கள் நடக்கின்ற போது ,அதற்கெதிராகக் குரல் கொடுப்பதில் சட்ட மாணவர்களும், சட்டத்தரணிகளும் முன்னிலை வகிக்க வேண்டும். அது சம்பந்தமாக மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டும் என்பது எங்களுக்கிருக்கிற மிகப்பெரிய தார்மீகப் பொறுப்பாகும்.

மத்திய கிழக்கு பதற்றம்: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்!

0

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கை அரசாங்கம் விரிவான இராஜதந்திர, விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. மோதல் நடைபெறும் பகுதி இலங்கையிலிருந்து தொலைவில் இருந்தாலும், அந்தப் பிராந்தியத்துடனான வலுவான வர்த்தக, சுற்றுலா மற்றும் தொழிலாளர் உறவுகள் காரணமாக இலங்கை இந்தத் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இராஜதந்திர நிலைப்பாடு மற்றும் அமைதிக்கான அழைப்பு

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இந்தப் போர்ச் சூழல் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் சர்வதேச அமைதிக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என எச்சரித்துள்ள வெளிவிவகார அமைச்சு, அனைத்துத் தரப்பினரும் உச்சக்கட்ட நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், பதற்றத்தைத் தணிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் தற்போது 10 இலட்சத்திற்கும் அதிகமான (1,007,855) இலங்கையர்கள் வசிக்கின்றனர். இதில் குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம்: 350,000 பேர், சவூதி அரேபியா: 246,139 பேர், குவைத்: 175,000 பேர், கத்தார்: 140,000 பேர் பணிபுரிகின்றனர்.

இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் 24 மணிநேர அவசர செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இலங்கையர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், தூதரகங்களுடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசரத் தேவைகளுக்கு 1989 என்ற துரித இலக்கத்தையோ அல்லது +94 74 259 5546 என்ற இலக்கத்தையோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கான விசேட சலுகைகள்

மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டதால் இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் தாயகம் திரும்புவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தணிக்க, பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாட்கள் இலவச விசா நீடிப்பு வழங்க ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் உதவிக்காக 1912 என்ற 24 மணிநேர துரித அழைப்பு இலக்கம் செயல்பாட்டில் உள்ளது.

விமானப் போக்குவரத்து பாதிப்புகள்

பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை சில இடங்களுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை வருகை மற்றும் புறப்பாடு உட்பட 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பா மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் வழமை போல இயங்குகின்றன. அவசர தரையிறக்கங்களுக்கு மத்தல மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் இருப்பு மற்றும் உள்நாட்டு நிலைமை

நாட்டில் ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளது. எனினும், மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம் காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. எரிபொருளைப் பதுக்குபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு எச்சரித்துள்ளது.

இதேவேளை இலங்கை வான்பரப்பில் வெளிநாட்டு இராணுவ விமானங்கள் பறப்பதாகப் பரவிய வதந்திகளை விமானப்படை முற்றாக மறுத்துள்ளது. வான்படையின் ஆண்டு நிறைவு ஒத்திகைகள் காரணமாகவே விமான நடமாட்டம் அதிகரித்துள்ளதாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இலங்கை இந்த மோதலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், தனது நாட்டு மக்களின் பாதுகாப்பு, சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையைப் பேண அரசாங்கம் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“ஆரோக்கிய” நடமாடும் சுகாதார முகாம் 58வது கட்டம் முன்னெடுப்பு!

0

ஜூட் சமந்த

இலங்கையின் மிகப்பெரிய நடமாடும் சுகாதார சேவையான “ஆரோக்கிய” (Arogya) திட்டத்தின் கீழ், அதன் 58வது நடமாடும் சுகாதார முகாம் அண்மையில் படபொத்த (Batapotha) ஸ்ரீ சுதர்சனாராம புராண விகாரை வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் வழிகாட்டல் மற்றும் வள பங்களிப்புடன், “Healthy Sri Lanka” (ஆரோக்கியமான இலங்கை) என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த மனிதாபிமானப் பணியை படபொத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விசேட முகாமின் ஊடாக பொதுமக்களுக்குப் பல மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன, இதில்

  • கண் பரிசோதனை மற்றும் பல் சிகிச்சை.
  • உடல் நிறை சுட்டெண் (BMI) பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனை.
  • இரத்தச் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகள்.
  • பெண்களுக்கான “சுவநாரி” கிளினிக் மற்றும் சுவாச நோய்களுக்கான சிகிச்சை.
  • ஆயுர்வேத மற்றும் மேற்கத்திய மருத்துவ ஆலோசனைகள்.
  • மனநல மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகள் ஆகிய சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் நோயாளிகளுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டதுடன், மேலதிக மற்றும் நீண்டகால சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், அரச பிரதான வைத்தியசாலைகளில் உள்ள நிபுணத்துவ சிகிச்சை பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த முகாம் ஆரம்பமான போதே படபொத்த, நுஹேதெனிய, விமலதிஸ்ஸ மாவத்தை, தேவால வீதி, அருக்கபிட்டிய உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (செய்தி மற்றும் விளம்பரம்) லக்ஷ்மேந்திர தமயந்தகுமார தென்னக்கோன் அவர்களின் கண்காணிப்பின் கீழ் இந்தத் திட்டம் நடைபெற்றது.

இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் சனிக்கிழமைகளில் கிராமப்புற மக்களுக்காகவும், தெரிவு செய்யப்பட்ட புதன்கிழமைகளில் அரச ஊழியர்கள், பொலிஸார் மற்றும் முப்படையினருக்காகவும் இம்முகாம்கள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை, கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் ஆகியவற்றின் விசேட வைத்தியர்கள் மற்றும் தாதியர் குழுவினர் இந்த முகாமில் சேவையாற்றினர்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மக்களும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் இந்த “ஆரோக்கிய” திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் படபொத்த விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய அத்தனாயாயே சந்தரதன ஹிமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மனைவியின் கழுத்தை அறுத்த கொடூர கணவன்!

0

ஜூட் சமந்த

மாரவில, கட்டுநேரிய பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் ஒருவரால் தனது மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மார்ச் முதலாம் திகதி இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தக் கொடூரக் கொலையில் உயிரிழந்தவர் கட்டுநேரிய – பாங்கட சந்தியில் வசித்து வந்த 44 வயதான அதிகாரி முதியன்சேலாகே துஷாரி அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, படுக்கையறையில் வைத்து கணவன் தனது மனைவியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேக நபரான கணவன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும், கைது செய்வதற்குமான விசேட விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கியூஆர் (QR) முறை தற்போதைக்கு அவசியமில்லை!

0

இலங்கையில் தற்போது எரிபொருள் விநியோகத்தில் எந்தவித சிக்கலும் இல்லாததால், எரிபொருளைப் பெறுவதற்கு மீண்டும் கியூஆர் (QR) குறியீடு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய உடனடித் தேவை எதுவும் ஏற்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருவதாகவும், தற்போதைய நிலையில் பொதுமக்கள் தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில், முன்னதாக நாட்டில் நிலவிய கடுமையான எரிபொருள் நெருக்கடி காரணமாக, எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது மட்டுமே கியூஆர் குறியீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரப்படி, நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று உறுதிபடத் தெரிவித்த அமைச்சர், விநியோகச் சங்கிலியில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் கூறினார். இருப்பினும், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு தேவை அல்லது நெருக்கடி நிலை ஏற்பட்டால் மட்டுமே, மீண்டும் கியூஆர் குறியீடு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின் மூலம், எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் நாட்டின் சகல பாகங்களிலும் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்ந்துகொண்டே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கும், இலங்கை எரிபொருள் விடயத்திற்கும் தொடர்பு இல்லையா?

ஈரானுக்கும் (Iran) ஹார்முஸ் நீரிணைக்கும் (Strait of Hormuz) இடையிலான உறவு என்பது புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானது.

ஹார்மூஸ் நீரிணை ஈரானின் தெற்கே அமைந்துள்ளது. இது பாரசீக வளைகுடாவையும் (Persian Gulf) ஓமன் வளைகுடாவையும் (Gulf of Oman) இணைக்கும் ஒரு குறுகிய கடல் வழியாகும். இதன் வடக்குக் கரை முழுவதையும் ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

தற்போது மூண்டுள்ள போர்நிலை காரணமாக ஈரான் ஹார்மூஸ் நீரிணை போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளமை முழு உலகையும் கலங்கடித்துளளது.

ஈரான் அரசாங்கம் இது குறித்து இன்னும் முறையான உலகளாவிய அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், ஈரானிய கடற்படை வானொலி (Radio Broadcast) வழியாக அந்தப் பகுதி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு, “எந்தக் கப்பலும் ஹார்மூஸ் நீரிணையைக் கடக்க அனுமதி இல்லை” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹார்மூஸ் நீரிணை உலகிலேயே கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இடமாக இது கருதப்படுவதுடன், உலகில் கடல் வழியாக கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய்களில் சுமார் 20% முதல் 30% வரை இந்த நீரிணை வழியாகவே செல்கிறது. ஈரான் இந்த பாதையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.

அமெரிக்கா அல்லது பிற நாடுகளுடன் பதற்றம் ஏற்படும் போது, “ஹார்மூஸ் நீரிணையை மூடிவிடுவோம்” என்று ஈரான் அவ்வப்போது எச்சரிக்கை செய்வதுவரும் அதேவேளை, அப்படி நடந்தால் உலக சந்தையில் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்வடையும்.

ஈரான் தனது கடற்படை மற்றும் ஏவுகணைத் தளங்களை இந்த நீரிணையை ஒட்டிய பகுதிகளில் அமைத்துள்ளது. சர்வதேச சட்டப்படி இது ஒரு சர்வதேச நீரிணையாகக் கருதப்பட்டாலும், இதன் பெரும்பகுதி ஈரானின் கடல் எல்லைக்குள் இருப்பதால், இப்பகுதியைக் கடக்கும் கப்பல்களைக் கண்காணிக்கும் அதிகாரம் ஈரானிடம் உள்ளது.

ஈரானைப் பொறுத்தவரை, ஹார்மூஸ் நீரிணை என்பது ஒரு “பொருளாதார ஆயுதம்”. இதன் மூலம் உலக நாடுகளைத் தன் பக்கம் திரும்பச் செய்யும் வலிமையை ஈரான் இயற்கையாகவே பெற்றுள்ளமை உலக நாடுகளுக்கு விடுக்கப்படும் பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

ஈரான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள வெறும் 33 கிலோமீட்டர் அகலம் கொண்ட ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழித்தடம், ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கும் வல்லமை கொண்டது என்பது வியப்பிற்குரிய உண்மையாகும்

உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20%, அதாவது தினமும் சுமார் 1.7 கோடி பேரல்கள் இந்த ஒரு குறுகிய பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 90% எண்ணெய் ஏற்றுமதி இந்த வழித்தடத்தைச் சார்ந்தே உள்ளது. ஒருவேளை ஈரான் இந்த வழியைத் தடுத்தால், உலக நாடுகள் சந்திக்கப்போகும் விளைவுகள் மிகவும் பாரதூரமாக அமைய வாய்ப்புள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் தனக்குத் தேவையான எரிபொருளில் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே பெற்றுக்கொள்கிறது. 2024 மற்றும் 2026-ஆம் ஆண்டின் தற்போதைய தரவுகளின்படி இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை வழங்கும் மிகப்பெரிய நாடாக சிங்கப்பூர் உள்ளது. அதேபோல் பெருமளவு பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போதைய ஹார்மோஸ் நீரினை போக்குவரத்து தடையால் மிக மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடம்பிடித்துளளது.

இந்தியா தனது எண்ணெய் தேவையில் 85%-ஐ இறக்குமதி செய்கிறது, இதில் 60% எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுகிறது. இதனால் இந்தியாவில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் எனவும், தொழிற்சாலைகள் முடங்கி வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் நிலைகுலையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியிலும், இலங்கையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடையோ அல்லது தாமதமோ ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய CPC தலைவர் டி.ஜே. ராஜகருண, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டை வந்தடையும் எனத் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், 37 நாட்களுக்குப் போதுமான பெட்ரோல், 35 நாட்களுக்குப் போதுமான டீசல், 72 நாட்களுக்குப் போதுமான சூப்பர் டீசல், 47 நாட்களுக்குப் போதுமான விமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தாலும், போர் சூழல் தொடருமானால் இலங்கை போன்ற சிறிய நாடுகள் எரிபொருள் கொள்வனவில் பெரும் சிக்கலை சந்திக்கும் அதேவேளை, எரிபொருள் விலையிலும் பாரிய அதிகரிப்பு ஏற்பட்ட அதிக வாய்ப்புள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலே நேற்று மாலை தொடக்கம் இன்று வரை நாடு பூராகவும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் பெற்றுக்கொள்வதுடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இல்லை என்ற விடயத்தையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்தத் தடையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 150 டாலரைத் தாண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது உலகெங்கிலும் கடுமையான பணவீக்கத்தை உருவாக்கி, ஒரு மிகப்பெரிய உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு (Global Recession) வழிவகுக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், இந்த 33 கிலோமீட்டர் கடல் பகுதி அடைக்கப்பட்டால், அது உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பிற்கு விடப்படும் பெரும் சவாலாக அமையும்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பாரிய ஊழல் மற்றும் மாஃபியா!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹஷான் திலகரத்ன, நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஒரு “மாஃபியா” கும்பல் வேரூன்றியுள்ளதாகத் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடைபெற்றுவரும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறியதைத் தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி உடனான நேர்காணலில் அவர் இதனை வெளிப்படுத்தினார்.

கிரிக்கெட் கட்டமைப்பில் வீரர்கள், முகாமையாளர்கள், தெரிவாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் ஒரு மாஃபியா கும்பல் அல்லது குழு செயல்படுவதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஓய்வு பெற்ற ஒரு வீரர் பொதுவாகக் கூறத் தயங்கும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை திலகரத்ன முன்வைத்துள்ளமை இலங்கை கிரிக்கட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

“2015 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த அனைத்து ஜனாதிபதிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் இந்த ஊழலில் ஒரு பங்கைப் பெற்றுள்ளனர்” என்றும், இதன் விளைவாக கிரிக்கெட் நிர்வாகத்தின் 80 சதவீதப் பகுதி சீரழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இலங்கை கிரிக்கெட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்ல நிர்வாகத்தின் தலைமையில் யார் இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டபோது, ரொஷான் மகாநாம (Roshan Mahanama) ஒருவரே அதற்குப் பொருத்தமானவர் எனத் திலகரத்ன குறிப்பிட்டார்.

ஹஷான் திலகரத்ன மற்றும் ரொஷான் மகாநாம ஆகிய இருவரும் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முக்கிய வீரர்களாவர். மேலும், மகாநாம சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) போட்டி நடுவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது அவரது நேர்மைக்கும் திறமைக்கும் சான்றாகும்.

இலங்கை கிரிக்கெட் துறையில் நிலவும் இந்த முறைகேடுகள் குறித்த அவரது வெளிப்பாடுகள் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அவசர செய்தி!

0

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியிலும், இலங்கையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடையோ அல்லது தாமதமோ ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.

நேற்று மாலை தொடக்கம் இன்று வரை நாடு பூராகவும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் பெற்றுக்கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.

இது தொடர்பாக இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய CPC தலைவர் டி.ஜே. ராஜகருண, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டை வந்தடையும் எனத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் நிலைமைகள் இலங்கையின் எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்காது என்பதைத் தாம் பொறுப்புடன் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு, இன்று (01) திட்டமிடப்படாத போதிலும் ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாளை பௌர்ணமி (Poya) தினமாக இருந்தபோதிலும், தடையின்றி எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தலின்படி, பீப்பாய்களில் (Barrels) எரிபொருள் வழங்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எரிபொருளைப் பீப்பாய்களில் கொள்வனவு செய்து, அதனை அதிக விலைக்கு மீள்விற்பனை செய்ய முயற்சிப்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், 37 நாட்களுக்குப் போதுமான பெட்ரோல், 35 நாட்களுக்குப் போதுமான டீசல், 72 நாட்களுக்குப் போதுமான சூப்பர் டீசல், 47 நாட்களுக்குப் போதுமான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், நீண்ட வரிசையில் நின்று பீதியை உண்டாக்கவேண்டாம் வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.