Home Blog Page 53

மத்திய வங்கி போராட்டம் திட்டமிட்ட நாடகம்; அரசின் முகமூடியை கிழித்த ஜயந்த அத்துகோரள!

அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு,  மத்திய வங்கிக்கு முன்பாக திரண்டு அதன் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவைப் பதவியிலிருந்து விலகுமாறு கோரி நடத்திய போராட்டம், அரசாங்கத்தின் மற்றுமொரு அரசியல் நாடகமென சர்வஜன அதிகாரம் கட்சியின் கம்பஹா மாவட்ட முதன்மை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஜயந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, அரசாங்கம் தற்போதைய தோல்விகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த காலங்களில் அரசாங்கம் தனது பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி மத்திய வங்கியையும் நாட்டின் நிதியையும் தனிநபர்களுக்குச் சாதகமாக மாற்றியதன் மூலம் பெரும் களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. 

இவ்வாறான சூழலில், அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தினால் ஏற்பட்ட கசப்பான விளைவுகளுக்குத் தற்போதைய மத்திய வங்கி ஆளுநரை மட்டும் பொறுப்பாக்கி, அவரைப் பதவியிலிருந்து நீக்குவதன் மூலம் தாங்கள் செய்த தவறுகளிலிருந்து தப்பிக்க அரசாங்கம் முற்படுகிறது.

குறிப்பாக, கடந்த காலங்களில் இடம்பெற்ற 2.5 மில்லியன் டொலர் மோசடி உள்ளிட்ட அனைத்து நிதி கொடுக்கல் வாங்கல்களும் மத்திய வங்கி ஆளுநரின் கட்டுப்பாட்டில் மாத்திரம் இருக்கவில்லை. மாறாக, நிதி அமைச்சர் தலைமையிலான நிதி அமைச்சின் பொறுப்பிலேயே அவை முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறான பின்னணியில், நாட்டை மீட்டெடுக்கப் போராடும் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்க அரசாங்கம் தனது ஆட்களைக் கொண்டு நேற்று நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளது. ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களை ஏமாற்றிவரும் இக்குழுவினர், தாங்கள் செய்த தவறுகளுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களை அடக்க இவ்வாறான நபர்களைப் பயன்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அத்துடன், அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. பாராளுமன்றத்தில் ஜயமங்கல காதாவைப் பாராயணம் செய்யத் தடை விதித்தது முதல், உள்ளூராட்சி மன்றங்களின் ஆரம்ப நிகழ்வுகளில் பஞ்சசீலத்தைப் பின்பற்றுவதைத் தடுத்தமை வரை இவை திட்டமிட்ட செயற்பாடுகளாகும். 

மேலும், வடக்கு மாகாணத்தில் பௌத்த பிக்குகளை அச்சுறுத்தியதும், அவர்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தியதும் அரசாங்கத்தின் பௌத்த விரோதப் போக்கையே காட்டுகின்றது. இவ்வாறான சூழலில், புனிதமிக்க வெசாக் பண்டிகை காலத்திலும் தொடர்ச்சியான மின்வெட்டுகளை மேற்கொண்டு பௌத்த மக்களின் மனதைப் புண்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என ஜயந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“எனக்கு எதிராக வாக்களித்தவர்கள் தேசபக்தி அற்றவர்கள்!” – டிரம்ப் கடும் தாக்கு

தனக்கு எதிராக ஈரான் போர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் “தேசபக்தி அற்றவர்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரான் மீதான டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) 215–208 என்ற வாக்குகள் கணக்கில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் முறையான அனுமதி அல்லது போர் பிரகடனம் இல்லாமல், டிரம்ப் தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுப்பதையும், ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதையும் இந்தத் தீர்மானம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனிடையே டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக (அதாவது டிரம்ப்பிற்கு எதிராக) ஜனநாயக கட்சியினருடன் இணைந்து வாக்களித்தனர்

ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இந்த வாக்குப்பதிவு “அர்த்தமற்றது” என்றும், இதில் பங்கேற்று எனக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேசநலன் மற்றும் தேசம் மீதான விசுவாசம் கேள்விக்குரியது என்றும் கடுமையாக சாடி இருக்கிறார்.

ஊடகவியலாளர்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம்: புதிய சட்டமூலம் வெளியீடு!

ஊடகத்துறைக்கு புதிய அத்தியாயம்! இலங்கையில் பட்டயம் பெற்ற ஊடக உயர்தொழிலர்களுக்கான நிறுவகம் உருவாகிறது

கொழும்பு: இலங்கையின் ஊடகத் துறையை மேலும் தொழில்முறைப்படுத்தும் நோக்கில், நாட்டின் ஊடகத் துறையில் பணியாற்றும் உயர்தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்தி அவற்றைப் பேணுவதற்காக “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” என்ற புதிய அமைப்பை நிறுவுவதற்கான சட்டமூலம் அரசாங்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, 2026 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள இந்த விசேட வர்த்தமானி, நாட்டின் ஊடகத் துறையில் புதிய மாற்றத்திற்கான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.

சட்டமூலத்தின் படி, புதிய நிறுவகம் சுயாதீனமாக இயங்கும் ஒரு கூட்டுத்தாபனமாக அமையவுள்ளதுடன், ஊடகத்துறையில் செயற்படும் பல்வேறு துறையினரையும் ஒரே தொழில்சார் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ளது.

எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பதிப்பாசிரியர்கள், தொகுப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து உயர்தொழிலாளர்களுக்கும் இந்த நிறுவகத்தில் உறுப்புரிமை வழங்கப்படவுள்ளது. அதேவேளை, தகைமை மற்றும் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ஊடகக் கல்வி மற்றும் பயிற்சி நெறிகளை மேம்படுத்துவதற்காக பரீட்சைகள், ஆராய்ச்சிகள் மற்றும் சர்வதேச தரத்திலான கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. உலகளாவிய ஊடகப் போக்குகளுக்கு ஏற்ப உள்ளூர் ஊடகத்துறையை முன்னேற்றும் முயற்சிகளும் இந்த நிறுவகத்தின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, உறுப்பினர்களும் மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய விசேட நடத்தைக் கோவை தயாரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஊடகத் துறையில் தொழில்சார் ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

நிறுவகத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ள 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் பேரவையொன்று அமைக்கப்படவுள்ளது. இதில் 8 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், மேலும் 7 பேர் நியமனத்தின் மூலம் இணைக்கப்படவுள்ளனர்.

ஆளும் பேரவை முறைப்படி உருவாகும் வரை, அமைச்சரால் நியமிக்கப்படும் இடைக்காலப் பேரவை ஒன்று செயற்படும். இதில் அமைச்சின் செயலாளருடன், ஊடகத் துறையில் குறைந்தது 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆறு நிபுணர்கள் இடம்பெறுவர் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டமூலம் அமலுக்கு வந்தால், இலங்கையின் ஊடகத் துறையில் தொழில்முறை தரநிலைகள், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய திருப்புமுனையாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகன இறக்குமதியில் சர்ச்சை: நெருக்கமானவர்களுக்கு முன்கூட்டிய அனுமதி?

வாகன இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகும் முன்னரே, அரசாங்கத்திற்கு நெருக்கமான தரப்பினருக்கு நாணயக் கடிதங்கள் (LC) திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான பொருளாதார நிர்வாகம் குறித்த கேள்விகளை எழுப்புவதாக தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) தற்போதைய அரசாங்கத்திற்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைத்திருந்த போதிலும், உள்நாட்டு சந்தையில் டொலரின் பெறுமதி கணிசமாகக் குறையாதது கவலைக்கிடமான விடயமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சந்தையில் நிலவும் நம்பிக்கையின்மை மற்றும் எதிர்கால பொருளாதார நிலை குறித்த நிச்சயமற்ற தன்மையே இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ரூபாயின் மதிப்பு மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்றுமதியாளர்களும் வணிகர்களும் தங்களிடம் உள்ள டொலர்களை சந்தைக்குள் விடாமல் வைத்திருப்பதாக கூறினார்.

மேலும், வாகன இறக்குமதி தொடர்பாக 1,700 வாகனங்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு முக்கியமான விடயமாக, ஜனாதிபதி மே 16ஆம் திகதி வாகன இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னரான மே 15ஆம் திகதியே 1,600 வாகனங்களுக்கான நாணயக் கடிதங்கள் அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளதாக அவர் அம்பலப்படுத்தினார்.

இந்த தகவல் முன்கூட்டியே சிலருக்கு வழங்கப்பட்டதா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார்.

அதேவேளை, வெள்ளிக்கிழமைகளில்தான் அதிகளவில் நாணயக் கடிதங்கள் திறக்கப்படுகின்றன என்று நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்த கருத்தை நிராகரித்த முஜிபுர் ரஹ்மான், அது “பச்சைப் பொய்” என விமர்சித்தார். உண்மையில் வாரத்தின் ஏனைய நாட்களுடன் ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமைகளில்தான் குறைவான அளவில் நாணயக் கடிதங்கள் திறக்கப்படுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

வர்த்தமானி அறிவிப்பு வெளியாகவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்த சிலருக்கு, வாகன இறக்குமதிக்கான நாணயக் கடிதங்களை திறக்க அரசாங்கம் வாய்ப்பளித்துள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், இது ஜனாதிபதியின் “நண்பர்களுக்கான பொருளாதாரக் கொள்கை” எவ்வாறு நடைமுறையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தெரிவித்தார்.

ஆட்சியில் இருப்பவர்கள் தமக்கு நெருக்கமானவர்களின் நலன்களையே முன்னிலைப்படுத்தி, சாதாரண மக்களின் தேவைகளையும் நலன்களையும் புறக்கணித்து வருகின்றனர் என அவர் கடுமையாக விமர்சித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசாங்கம் இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறது என்பது தற்போது கவனிக்கப்படும் முக்கிய விடயமாக மாறியுள்ளது.

இந்தியாவில் எபோலா அச்சம்! உகாண்டா பெண் தனிமைப்படுத்தல்!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் எபோலா வைரஸ் நோய் தொடர்பான சந்தேகத்திற்குரிய ஒரு சம்பவம் பதிவாகியுள்ளமை சுகாதாரத் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானத்தின் மூலம் வெள்ளிக்கிழமை காலை ஜெய்ப்பூரை வந்தடைந்தார். வழக்கமான விமான நிலைய சுகாதாரப் பரிசோதனையின் போது, எபோலா நோயுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சில அறிகுறிகள் அவரிடம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அந்தப் பெண் உடனடியாக ஜெய்ப்பூரிலுள்ள RUHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடுமையான தனிமைப்படுத்தல் பிரிவில் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என மருத்துவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். RUHS மருத்துவமனையின் மேற்பார்வையாளர் டாக்டர் அனில் குப்தா, “அந்தப் பெண்ணுக்கு எபோலா உறுதியாக இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை. நோய்க்கு ஒத்த சில அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆனால் ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே உறுதியான தகவலை வழங்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நோயாளியிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், தொற்று நோய் மேலாண்மை நடைமுறைகளுக்கு அமைய அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எபோலா உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படுவதால், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சுகாதார அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட்டு வருவதுடன், தற்போது அனைவரின் கவனமும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளின் மீதே திரும்பியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் டெங்கு உயிரிழப்புக்கள் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,228 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். 

தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 30% முதல் 40% வரையான அதிகரிப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நோயாளர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அவர்களுள் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தென் மாகாணத்தின் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்திலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

டெங்கு நோயாளர்களில் சுமார் 80 சதவீதமானோர் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்தே பதிவாகியுள்ளனர். 

‘டித்வா’ புயல் நிலைமையுடன் நாட்டில் ஏற்பட்ட பலத்த மழைவீழ்ச்சி மற்றும் அதன் பின்னர் அவ்வப்போது பெய்த மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, இன்றைய தினத்தில் (05) மற்றுமொரு டெங்கு மரணம் பதிவாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனுடன் இந்த வருடத்தின் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர மேலும் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்தவர்களில் ஐந்து ஆண்கள் அடங்குவதுடன், ஏனையோர் பெண்கள் எனவும் குறிப்பிட்ட அவர் இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக தகவல் வெளியிட்டுள்ளார். 

கடந்த 2025-ஆம் ஆண்டில் 29 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்திருந்தனர் என்றும் வைத்தியர் கபில கன்னங்கர அங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

இனி பணப் பரிமாற்றங்களுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்திற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன நேற்று (03) தனது சான்றொப்பத்தை இட்டுள்ளார்.

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பு மீதான விவாதம் கடந்த 2026 மே 19ஆம் திகதி நடைபெற்றதோடு, அதன் போது இச்சட்டமூலம் திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தைத் திருத்தங்களுடன் அங்கீகரித்ததன் மூலம், வரி நிர்வாகச் செயல்முறைகளை நவீனப்படுத்துதல், தற்போதுள்ள விதிகளின் தெளிவை அதிகரித்தல், வரி இணக்கம் மற்றும் வரிச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை வலுப்படுத்துதல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், வரி கணிப்பீடுகள் மற்றும் வரி விலக்குகளை மிகவும் துல்லியமாக்குதல், மூலோபாய பொருளாதாரத் தேவைகளுக்கு ஆதரவளித்தல், அத்துடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பணமோசடியைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை மேம்படுத்துவதுமே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

குறிப்பிட்ட சில நிதிப் பரிமாற்றங்களின் போது வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குதல், வருமானத்தைக் கணக்கிடும் முறையில் சில திருத்தங்களை மேற்கொள்ளுதல், குறிப்பிட்ட சில திட்டங்கள் மற்றும் வணிகங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குகளை மேலும் தெளிவுபடுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல்களை வெளிப்படுத்தும் வரம்பை விரிவுபடுத்துதல் போன்ற சில முக்கிய மாற்றங்கள் இந்த புதிய சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, இந்த உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.

கல்முனையில் சீனத் தூதுவர்: ‘சீனாவின் சகோதர பாசம்’ எனும் பெயரில் அன்பளிப்புகள்!

ஏ.எஸ்.எம்.அர்ஹம் – நிருபர் 

கல்முனை: கல்வி, மனிதநேயம் மற்றும் சர்வதேச நட்புறவின் உன்னத வெளிப்பாடாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் அதிமேதகு கீ ஜென்ஹொங் (HE. Qi Zhenhong) அவர்கள் நேற்று (04) கல்முனை நகருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

பாடசாலையின் அதிபர் திருமதி ரிஷானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், “சீனாவின் சகோதர பாசம்” எனும் தொனிப்பொருளின் கீழ் 3.8 மில்லியன் பெறுமதிமிக்க மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொதிகளும், தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், ‘ரஹ்மத் பவுண்டேஷன்’ அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் விசேட அழைப்பை ஏற்று சீனத் தூதுவர் இந்த விஜயத்தை அமைத்திருந்தார்.

கோலாகலமாக நடந்த வரவேற்பும் “சகோதர பாச” திட்டமும்

சீனத் தூதுவரின் வருகையை முன்னிட்டு, கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாடசாலையின் அதிபர் திருமதி ரிஷானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, இரு நாட்டு நட்புறவை பறைசாற்றும் வகையில் அமைந்தது.

“சீனாவின் சகோதர பாசம்” எனும் உன்னத தொணிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் மாணவர்களின் கல்வியையும் ஊக்குவிக்கும் வகையில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணப் பொதிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் இதன்போது தூதுவரால் நேரடியாகக் கையளிக்கப்பட்டன.

முக்கிய பிரமுகர்களின் பங்கேற்பு

இப்பிராந்தியத்தின் கல்வி மற்றும் சமூக நலனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வில் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஷஹ்துல் நஜீம் ஆகியோர் இதில் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

கல்முனை மண்ணில் சர்வதேச தூதுவர் ஒருவரின் பங்களிப்போடு நடைபெற்ற இந்த மனிதாபிமானப் பணி, வெறும் உதவித்திட்டமாக மட்டுமன்றி, மாணவர்களின் எதிர்காலக் கனவுகளுக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. கல்வியையும் மனிதநேயத்தையும் முன்னிறுத்தி ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் சீனத் தூதரகம் இணைந்து மேற்கொண்ட இத்தகைய முயற்சிகள், எதிர்காலச் சமூக முன்னேற்றத்திற்கான மிகச்சிறந்த முதலீடாகும் எனப் பிரதேச மக்கள் நன்றியோடு நினைவு கூருகின்றனர்.

வணாத்தவில்லு வெள்ளப் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

புத்தளம் மாவட்டத்தின் வணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சேரக்குளிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சின்னநாகவில்லுவ கிராமத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான அனர்த்த நிலைமைகளை நேரில் ஆராய்ந்து, அதற்கான உடனடி தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன சுமார் 7 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் நேற்று (03) அங்கு விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டார்.

ஏற்கனவே ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான காலநிலை காரணமாக மீண்டுமொரு இரட்டை அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், இதனால் சின்னநாகவில்லுவ பிரதேசத்தில் 24 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

அத்துடன், கிராமத்தில் அமைந்துள்ள தேவாலயம், முன்பள்ளி மற்றும் மேலும் 13 வீடுகள் இதுவரை வெள்ள நீரில் மூழ்கியிருப்பதுடன், தொடர்ந்தும் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

இதன்போது, குறித்த இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுத்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சேதமடைந்த பொது இடங்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் அங்கு வருகை தந்திருந்த உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியிலும், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கள்ளக்கண்டல் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு வழங்கலாம் என்பது குறித்தும் அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார். இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் அப்பிரதேசத்தின் பங்குத்தந்தையும் கலந்துகொண்டார்.

இவ்விஜயத்தின் போது அமைச்சருடன் வணாத்தவில்லு பிரதேச செயலாளர், அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

புத்தளத்தில் ‘தித்வா’ நிவாரணம்: 3-ஆம் கட்ட நிதியுதவி வழங்கிவைப்பு!

புத்தளம்: இயற்கையின் சீற்றத்திற்கு இலக்காகி, தங்களின் வாழ்வாதாரங்களையும் உடைமைகளையும் இழந்து தவித்த புத்தளம் பிரதேச மக்களுக்கு, புதிய நம்பிக்கையூட்டும் வகையில் மூன்றாம் கட்டமாக நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

‘தித்வா’ புயல் தாக்கத்தினால் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த வர்த்தகர்களுக்கான நிதியுதவிகள் வழங்கும் மூன்றாம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (01.06.2026) அன்று புத்தளம் பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

புயலின் கோரத்தாண்டவத்தால் வீடுகளை இழந்து தவித்த குடும்பங்களுக்கு, அவர்களின் மறுவாழ்விற்கான மூன்றாம் கட்ட காசோலைகள் இதன்போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

அதேநேரம், புயல் காரணமாக கடும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த உள்ளூர் வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில், அவர்களுக்கான விசேட இழப்பீட்டுத் தொகைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிதியுதவியானது, முடங்கிப்போயிருந்த புத்தளத்தின் உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகளுக்கு புதியதொரு புத்துயிரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்பு

பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் இந்த முக்கிய நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர்.

  • சகோதரர் எம்.ஜே.பைசல் – புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
  • சகோதரர் எம்.எப்.ரின்சாத் அஹமட் – புத்தளம் மாநகர சபை முதல்வர்
  • எஸ்.பி.விதனகே – புத்தளம் பிரதேச செயலாளர்

இவர்களுடன் புத்தளம் மாநகர சபை மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் (CDC) தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளான பொதுமக்கள் எனப் பலரும் சமூகமளித்திருந்தனர்.