Home Blog Page 52

இறக்குமதிக்கு வரி இல்லை… உள்ளூரில் 18% VAT – உண்மை அம்பலம்!

“உள்ளூரில் வாங்கினால் 18% வரி… இறக்குமதிக்கு பூஜ்ஜியம்!” – உள்ளூர் தொழில்களை நசுக்கும் வரி கொள்கையா? நாடாளுமன்றத்தில் ஹர்ஷ டி சில்வாவின் அதிரடி வெளிப்பாடு

இலங்கையில் உள்ளூர் தொழில்துறையைப் பாதுகாக்க வேண்டிய பொருளாதாரக் கொள்கைகளே, இன்று அந்தத் துறையின் கழுத்தை நெரிக்கும் ஆயுதங்களாக மாறியுள்ளனவா? என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் சூடுபிடித்த விவாதமாக வெடித்துள்ளது.

உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் வரிச் சுமைகள், மின்சாரக் கட்டண உயர்வுகள் மற்றும் ஏற்றுமதித் துறையில் உருவாகியுள்ள போட்டி இழப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்துக்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

SVAT (Simplified Value Added Tax) முறையின் நீக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பான அவரது உரை மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“வெளிநாட்டிலிருந்து பொருள் இறக்குமதி செய்தால் வரி இல்லை. ஆனால் அதே பொருளை இலங்கையின் உள்ளூர் உற்பத்தியாளரிடமிருந்து வாங்கினால் 18 சதவீத VAT செலுத்த வேண்டும். அப்படியானால் யார் உள்ளூர் பொருட்களை வாங்க முன்வருவார்கள்?” என அவர் நேரடியாகக் சபையில் அதிரடி கேள்வி எழுப்பினார்.

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான மூலப்பொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் கூடுதல் வரிச் சுமை ஏதுமில்லை. ஆனால் அதே பெறுமதியிலான பொருளை நாட்டின் உள்ளூர் தொழில்முனைவோரிடமிருந்து வாங்கினால் 18 ஆயிரம் ரூபாய் மேலதிக வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் கடுமையாக சுட்டிக்காட்டினார்.

இதன் விளைவாக, உள்ளூர் விநியோகச் சங்கிலி முற்றாக பாதிக்கப்படுவதோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தங்களது சந்தையையே இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் எச்சரித்தார்.

மேலும், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் தங்களது உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்க “Deemed Exports” எனப்படும் சிறப்பு வரிச் சலுகை முறையை நடைமுறைப்படுத்தி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்றுமதிக்குத் தேவையான பொதியிடல் பொருட்கள், துணிகள், ஒட்டுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் உள்ளூர் நிறுவனங்களுக்கு அந்த நாடுகள் ஊக்கத்தொகை மற்றும் வரிச்சலுகைகளை வழங்கும் நிலையில், இலங்கையில் அவ்வாறான சலுகைகள் நீக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது எனவும் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஹர்ஷ டீ சில்வா;

அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் சுமையை பலமடங்கு அதிகரித்துள்ள

சர்வதேச சந்தையில் போட்டியிட வேண்டிய இலங்கை உற்பத்தியாளர்கள், உற்பத்திச் செலவு அதிகரிப்பால் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்கள். மின்சார உற்பத்தியில் குறைந்த செலவிலான மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்தத் தவறியதன் விளைவாக தொழில்துறையே நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கம் உடனடியாக வரிக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும், SVAT முறையில் இருந்த குறைபாடுகளைத் திருத்தி மீளமைக்க வேண்டும், மேலும் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் தீர்வுகளை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

“நாட்டுக்குத் தேவையான டொலர்களை ஈட்ட வேண்டுமெனில், முதலில் உள்ளூர் உற்பத்தியாளர்களை வாழ வைக்க வேண்டும். உலகச் சந்தையை நோக்கிச் செல்ல வேண்டுமானால், நம் தொழில்துறைக்கு உயிர் கொடுக்க வேண்டியது அவசியம்,” என ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

உள்ளூர் தொழில்துறையைப் பாதுகாப்பதா? அல்லது இறக்குமதிக்கு முன்னுரிமை அளிக்கும் தற்போதைய கொள்கைகளைத் தொடர்வதா? என்ற முக்கியமான தீர்மானத்தின் முன் அரசாங்கம் நிற்கும் நிலையில், இந்த விவாதம் நாட்டின் பொருளாதார எதிர்காலம் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

சாஹிராவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது ஹமீட் அல் ஹுஸைனி!

இலங்கை 18 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய சம்பியன்சிப் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு சாஹிரா கல்லூரியை பெனால்டி சூட் அவுட் முறையில் வீழ்த்திய ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி கிண்ணத்தை சுவீகரித்தது.

கொழும்பு, சுகததாச அரங்கில் நேற்று முன்தினம் (07) நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. எனினும் முதல் பாதி கோலின்றி முடிவுற்றது. இதனால் இரண்டாவது பாதியில் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் போட்டியின் 68 ஆவது நிமிடத்தில் சாஹிரா அணிக்காக ஹதீம் அஹமட் தலையால் அபார அடித்து கோல் ஒன்றை புகுத்தினார்.

எவ்வாறாயினும் போட்டியின் இரண்டாவது பாதியின் மேலதிக நேரத்தில் வைத்து ஹமீட் அல் ஹுஸைனி பதிலுக்கு கோல் ஒன்றை அடித்து ஆட்டத்தை திசைதிருப்பியது. உயரவந்த பந்தை எம்.என்.எம். ரிஷாட் தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதனால் முழு நேர முடிவின்போது போட்டி 1–1 என சமநிலை பெற்றது. போட்டியின் முடிவைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை பயன்படுத்தப்பட்டதோடு அதில் சாஹிரா முதல் மூன்று முயற்சிகளிலும் கோல் பெறத் தவறிய நிலையில் ஹமீட் அல் ஹுஸைனி முதலாவது மற்றும் நான்காவது முயற்சிகளில் கோல் புகுத்தியது. இறுதியில் ஹமீட் அல் ஹுஸைனி 2–1 என பெனால்டி சூட் அவுட் முறையை வென்று சம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

முன்னதாக ஹமீட் அல் ஹுஸைனி அரையிறுதியில் கேட்வே கல்லூரியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியே இறுதிப் போட்டிக்கு முன்னேறியதோடு சாஹிரா தனது அரையிறுதியில் புனித ஹென்றி கல்லூரியை 4–0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று சரமாரியான மழைவீழ்ச்சிக்கு அதிக வாய்ப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது, மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என, எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வரை குறித்த கடல் பிராந்தியங்களுக்குள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாக்கமுள்ள சட்டங்கள் எங்கே?” – அரசை சவாலுக்கு உட்படுத்திய ஐ.தே.க!

“அரசு சட்டங்களை குவிக்கிறது; ஆனால் தாக்கமுள்ள சட்டங்கள் எங்கே?” – அரசை சவாலுக்கு உட்படுத்திய ஐ.தே.க.

கொழும்பு, ஜூன் 8 – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் முதல் 18 மாத காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும், தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதல் 18 மாத சட்டமன்ற செயல்பாடுகளையும் ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் துல்லியம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

உள்ளூர் கொள்கை ஆய்வு நிறுவனமொன்று வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய அரசாங்கம் அதிகளவிலான சட்டங்களை நிறைவேற்றியதாகக் கூறப்பட்டிருந்தது. எனினும், “எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அரசின் செயல்திறனை மதிப்பிட முடியாது; சட்டங்களின் தரமும் மக்களுக்கான தாக்கமும் முக்கியம்” என ஐ.தே.க. வலியுறுத்தியுள்ளது.

கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நல்லாட்சிக் கால அரசாங்கத்தின் முதல் 18 மாதங்களில் நாட்டின் ஜனநாயகம், நல்லாட்சி, பொதுமக்கள் நலன் மற்றும் சட்ட ஆட்சி ஆகியவற்றை வலுப்படுத்திய பல முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவற்றில் முக்கியமாக 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி நாடாளுமன்றத்தின் பங்கினை வலுப்படுத்திய இந்த திருத்தம், அந்நேர தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவும் இருந்தது.

மேலும், பொதுமக்கள் பயன்படுத்தும் மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் விலைகுறைவை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் கட்சி நினைவூட்டியுள்ளது.

அதேபோல், அரசின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சட்டமாக கருதப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களுக்கு அரசின் தகவல்களைப் பெறும் உரிமையை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டம் இயற்றப்பட்டதோடு, அனைத்து துறைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை அதிகாரபூர்வமாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) இணைவதற்கு வழிவகுத்த சட்டமும் அக்காலகட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களின் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்புச் சட்டம், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு சட்ட உதவி பெறும் உரிமையை உறுதிப்படுத்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம் ஆகியனவும் நல்லாட்சிக் காலத்தின் முக்கிய சாதனைகளாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மறுபுறம், “அமைப்பு மாற்றம்” என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஐ.தே.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சில சலுகைகளை நீக்கும் சட்டங்களைத் தவிர, நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான சட்டங்களை அரசு கொண்டு வரவில்லை என கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 26 மாத ஆட்சிக்காலத்தில் 75 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அவை நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதாகவும் ஐ.தே.க. சுட்டிக்காட்டியுள்ளது.

அவற்றில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், பொருளாதார மாற்றச் சட்டம், இலங்கை மத்திய வங்கிச் சட்டம், பொது நிதி முகாமைத்துவச் சட்டம் உள்ளிட்ட பல முக்கியமான சட்டங்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“தற்போதைய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை மக்கள் ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளனர். இவ்வாறான ஆய்வறிக்கைகள் அரசின் உண்மையான செயல்திறனை மறைத்து, வெள்ளையடிக்கும் முயற்சியாக மட்டுமே பார்க்கப்படுகின்றன” என ஐ.தே.க. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சட்டங்களின் எண்ணிக்கையா முக்கியம்? அல்லது மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சட்டங்களா முக்கியம்?” என்ற கேள்வி மீண்டும் தேசிய அரசியல் அரங்கில் மையக்கருவாக மாறியுள்ளது.

(இது டெய்லி மிர்ரர் இணைய ஊடகத்தில் வெளியிடப்பட்ட முக்கிய செய்தி)

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்:

மணிலா: பிலிப்பைன்ஸின் மிண்டனாவ் (Mindanao) பிராந்தியத்தில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரும் அழிவையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்த நிலையில், அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

உள்ளூர் நேரப்படி காலை 7.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், மிண்டனாவ் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. திடீரென பூமி அதிரத் தொடங்கியதால், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து அலறியடித்துக்கொண்டு மக்கள் வெளியில் ஓடினர். பல இடங்களில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதுடன், சில கட்டிடங்கள் முழுமையாக இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்குப் பின்னர், ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவான மற்றொரு அதிர்வும் உணரப்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் மேலும் அதிகரித்தது. தொடர்ச்சியான அதிர்வுகள் காரணமாக பலர் திறந்த வெளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஆரம்ப கட்ட தகவல்களின்படி, இந்த பேரிடரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நிலநடுக்கத்தையடுத்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி உயரமான பகுதிகளுக்கு அவசரமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளிகளில், பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் கணநேரத்தில் இடிந்து விழும் அதிர்ச்சி தரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.

இதற்கிடையில், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அனைத்து அரசு அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுனாமி எச்சரிக்கையை அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லுங்கள். காத்திருக்க வேண்டாம். நீங்கள் விட்டுச் செல்லும் எந்தப் பொருளையும் விட உங்கள் உயிர் மிகவும் முக்கியமானது” என்று மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நிலநடுக்கத்தின் உண்மையான சேத விபரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. உலகின் அதிக நில அதிர்வு அபாயம் கொண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” வளையத்தில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ், மீண்டும் ஒருமுறை இயற்கையின் பேராற்றலை நேரடியாக எதிர்கொண்டுள்ளது.

கல்பிட்டி பொலிஸில் அதிரடி மாற்றம்!

ஜூட் சமந்த

பொறுப்பதிகாரியைத் தவிர அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம் – பின்னணியில் ரகசிய அரசியல் சந்திப்பா?

புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொறுப்பதிகாரியைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், 24 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 15 அதிகாரிகள் எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவரும் புத்தளம் பொலிஸ் பிரிவின் கீழ் இயங்கும் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அவர்களுக்கு பதிலாக புத்தளம் பிரிவின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 35 அதிகாரிகள் உடனடியாக கல்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனுடன், நுரைச்சோலை (நொரொச்சோலை) பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய எட்டு அதிகாரிகளும் புத்தளம் பொலிஸ் பிரிவின் பிற நிலையங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடமாற்றங்கள் அனைத்தும், அரச சேவை ஆணைக்குழுவினால் 2022 டிசம்பர் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட 2310/29 இலக்க நடைமுறை விதிமுறைத் தொகுப்பின் 258(1)ஆம் பிரிவின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 15ஆம் திகதி சிலாபம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் தலைமையில் புத்தளம் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.

அந்த சந்திப்பைத் தொடர்ந்து, அமைச்சர், பொலிஸ்மா அதிபர் மற்றும் புத்தளம் மாவட்ட அரசியல் பிரதிநிதிகள் இடையே இரகசிய கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்கலந்துரையாடலின் போது, கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் பல்வேறு சட்டவிரோத வர்த்தக வலையமைப்புகளுடன் தொடர்பு பேணி, ஊழல் முறையில் கடமையாற்றுவதாக ஒரு பிராந்திய அரசியல்வாதி குற்றஞ்சாட்டியதாக அறியப்படுகிறது.

இதன் காரணமாகவே கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இந்த பாரிய அளவிலான இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கருத்து பொலிஸ் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த திடீர் மற்றும் விரிவான இடமாற்றம், புத்தளம் மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிர்வாகத்தில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்பது குறித்து பொதுமக்களும் அரசியல் வட்டாரங்களும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

கடந்த ஆண்டை விட 55% உயர்ந்த டெங்கு தொற்று!

இலங்கையில் டெங்கு தொற்றின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 முதல் 55 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவிக்கையில், இந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் நாடளவில் மொத்தமாக 36,168 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். அதில், சுமார் 50 சதவீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியிருப்பது கவலைக்கிடமான நிலையை வெளிப்படுத்துவதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேல் மாகாணத்திற்கு அடுத்ததாக தெற்கு மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலும், மேலும் புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

டெங்கு தொற்றின் அதிகரிப்புக்கு காரணமாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக நிலவிய மழையுடனான வானிலை முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் வைத்தியர் கபில கண்ணங்கர விளக்கமளித்தார். அதேவேளை, அண்மையில் தாக்கத்தை ஏற்படுத்திய ‘டிட்வா’ புயலுக்குப் பின்னர் பல இடங்களில் தேங்கிய குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் கொசுக்கள் பெருகுவதற்கான புதிய இனப்பெருக்கத் தளங்களாக மாறியுள்ளன என்றும் அவர் எச்சரித்தார்.

இதனையடுத்து, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், மழைநீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கொசு பெருகும் இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

டெங்கு என்பது சாதாரண காய்ச்சல் அல்ல. சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெறத் தவறினால் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கக்கூடிய ஆபத்தான நோயாகும். எனவே, காய்ச்சல், கடுமையான தலைவலி, கண் வலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகுமாறு பொதுமக்களிடம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“கொசுவை கட்டுப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பத்தினரின் விழிப்புணர்வும் நாட்டை டெங்கிலிருந்து பாதுகாக்கும் மிகப்பெரிய ஆயுதமாகும்” என்பதே சுகாதாரத் துறையினரின் வலியுறுத்தலாகும்.

“ஹொரகலே தோட்டத்தில் மணல் கொள்ளையா? சட்டபூர்வ வர்த்தகமா?

ஜூட் சமந்த

மஹவெவ – ஹொரகலே தோட்டத்தில் மணல் அகழ்வு சர்ச்சை: சுற்றுச்சூழல் பாதிப்பா? அரச அனுமதியுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையா?

பசுமை பாதுகாப்பை உறுதி செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கீழ், அரச நிறுவனத்துக்குச் சொந்தமான நிலப்பரப்பிலேயே மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவம் புத்தளம் மாவட்டத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மஹவெவ – ஹொரகலே தோட்டப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாக நாத்தாண்டிய பிரதேச சபையின் பொது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும், அந்த குற்றச்சாட்டுகளை கால்நடை அபிவிருத்தி சபை அதிகாரிகள் முற்றாக மறுத்து, இது முழுமையாக சட்டபூர்வமான வர்த்தக நடவடிக்கை என விளக்கமளித்துள்ளனர்.

சுமார் 800 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஹொரகலே தோட்டத்தில் கால்நடைப் பண்ணை நடவடிக்கைகளுடன் இணைந்து குறிப்பிடத்தக்க அளவில் தென்னைச் சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தத் தென்னைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 5ஆம் திகதி நாத்தாண்டிய பிரதேச சபையின் பொது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது. அப்போது சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மணல் அகழ்வு நடைபெற்றிருப்பது அவதானிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,

“சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மக்களிடம் உறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று நடைபெறுவது அதற்கு முற்றிலும் முரணான செயல்பாடுகளாகும். மணல் அகழ்வுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்த பல தென்னை மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மூன்று அடி அளவிலான மணல் அடுக்கு மட்டுமே அகற்றப்படும் என கூறப்பட்டாலும், அதைவிட அதிகளவு மணல் தோண்டப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது,” என குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கால்நடை அபிவிருத்தி சபையின் ஹொரகலே தோட்ட துணைப் பொது முகாமையாளர் நீலக்ஷ நிமல்சிறி விளக்கமளித்தார்.

“இங்கு எந்தவித மணல் கொள்ளையும் நடைபெறவில்லை. இது முற்றிலும் சட்டபூர்வமான செயற்பாடாகும். தோட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் தென்னைச் சாகுபடி வெற்றிகரமாக செய்ய முடியாத நிலை இருந்தது. ஆய்வுகளின் மூலம் அப்பகுதியில் இருந்த சிலிக்கா மணல் அடுக்கே அதற்குக் காரணம் என தெரியவந்தது. அதனால் அந்த மணல் அடுக்கை அகற்றி நிலத்தை தென்னைச் சாகுபடிக்குத் தகுந்தவாறு மாற்ற தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக புவியியல் மற்றும் சுரங்கத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களிடமிருந்து தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. மேலும், முறையான கொள்முதல் நடைமுறைகள் மற்றும் திறந்த டெண்டர் செயல்முறையின் ஊடாகவே மணல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் கால்நடை அபிவிருத்தி சபைக்கு சுமார் 180 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. எனவே இது மணல் கொள்ளையோ அல்லது சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தும் செயற்பாடோ அல்ல,” என அவர் தெரிவித்தார்.

அரச நிறுவன நிலத்தில் நடைபெறும் இந்த மணல் அகழ்வு தொடர்பான சர்ச்சை தற்போது புத்தளம் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இது தொடர்பாக சுயாதீன விசாரணை அவசியமென பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

“எங்களுக்கும் ஒரு வீடு” – பெரியபள்ளி குடும்பத்தின் கனவை நனவாக்கிய பைசல் எம்.பி!

புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெரியபள்ளி குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாழ்ந்து வரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பம் ஒன்றின் நீண்டநாள் சொந்த வீட்டுக் கனவு இன்று நனவாகும் பாதையில் முதல் அடியை எடுத்து வைத்தது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள நிரந்தர வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (06.06.2026) சனிக்கிழமை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ M.J.M. பைசல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குடும்பமொன்றிற்கு பாதுகாப்பான, நிலையான மற்றும் கண்ணியமான வாழ்விடத்தை வழங்கும் அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக சொந்த வீடு என்ற கனவை மனதில் சுமந்து வாழ்ந்த அந்தக் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு புதிய நம்பிக்கை ஒளி பிறந்துள்ளது.

நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ முஹம்மது பைசல் அவர்களுடன், புத்தளம் மாநகர சபையின் மேயர் கெளரவ ரின்ஷாட் அகமட், பிரஜா சக்தி CDC தலைவி சகோதரி எஸ்மின், சகோதரர் ரியாஸ், சகோதரர் சர்ராஜ் உள்ளிட்ட சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள், வீட்டு பயனாளிகள், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் பிரிவின் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டுத்திட்ட உத்தியோகத்தர்களும் நிகழ்வில் பங்கேற்று புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் தருணத்தை சிறப்பித்தனர்.

ஒரு வீடு என்பது வெறும் சுவர்களும் கூரையும் கொண்ட கட்டிடம் மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு, நம்பிக்கை, மரியாதை மற்றும் எதிர்கால கனவுகளின் அடையாளமாகும். அந்த வகையில், பெரியபள்ளி கிராமத்தில் இன்று நாட்டப்பட்ட இந்த அடிக்கல், ஒரு வீட்டிற்கான அடிக்கல் மட்டுமன்றி, ஒரு வறிய குடும்பத்தின் புதிய வாழ்விற்கான நம்பிக்கையின் அடிக்கல்லாகவும் அமைந்துள்ளது.

தில்லையடி பகுதியைச் சேர்ந்த மூவர் தழுவ கடலில் மூழ்கி உயிரிழப்பு!

அலைகளின் கோரப் பிடியில் மூன்று உயிர்கள் பலி; நுரைச்சோலையில் சோகத்தை ஏற்படுத்திய துயரச் சம்பவம்

இன்று மாலை நுரைச்சோலை தழுவ கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த துயரச் சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கடற்கரைக்கு சென்றிருந்த குடும்பத்தினரில் மூவர், எதிர்பாராத விதமாக கடலலைகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் தில்லையடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களும் ஒரு இளைஞரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இன்று மாலை குடும்பத்தினருடன் கடற்கரைக்கு சென்று கடற்கரையில் குதூகலித்துக்கொண்டிருந்த வேளையில் வீசிய பலத்த காற்றுடன் ஏற்பட்ட அலைகளில் சிக்கி அவர்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

பல போராட்டங்களுக்கு மத்தியில் இவர்களின் உடல்கள் கரைக்கு கொண்டுவரப்பட்ட வேலை இவர்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 25 வயதுடைய இளைஞர் ஒருவரும், 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. விடுமுறையை சந்தோசமாக கழிக்க குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்ற பயணம், சில நிமிடங்களில் மீள முடியாத சோகமாக மாறியிருப்பது உறவினர்களை மட்டுமன்றி முழு ஊரையும் உலுக்கியுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவம், கடற்கரைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது. குறிப்பாக பலத்த அலைகள் காணப்படும் பகுதிகளில் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்காமல், உயிர் பாதுகாப்பை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் எமக்கு உணர்த்துகிறது.