இலங்கை 18 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய சம்பியன்சிப் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு சாஹிரா கல்லூரியை பெனால்டி சூட் அவுட் முறையில் வீழ்த்திய ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி கிண்ணத்தை சுவீகரித்தது.
கொழும்பு, சுகததாச அரங்கில் நேற்று முன்தினம் (07) நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. எனினும் முதல் பாதி கோலின்றி முடிவுற்றது. இதனால் இரண்டாவது பாதியில் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் போட்டியின் 68 ஆவது நிமிடத்தில் சாஹிரா அணிக்காக ஹதீம் அஹமட் தலையால் அபார அடித்து கோல் ஒன்றை புகுத்தினார்.
எவ்வாறாயினும் போட்டியின் இரண்டாவது பாதியின் மேலதிக நேரத்தில் வைத்து ஹமீட் அல் ஹுஸைனி பதிலுக்கு கோல் ஒன்றை அடித்து ஆட்டத்தை திசைதிருப்பியது. உயரவந்த பந்தை எம்.என்.எம். ரிஷாட் தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதனால் முழு நேர முடிவின்போது போட்டி 1–1 என சமநிலை பெற்றது. போட்டியின் முடிவைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை பயன்படுத்தப்பட்டதோடு அதில் சாஹிரா முதல் மூன்று முயற்சிகளிலும் கோல் பெறத் தவறிய நிலையில் ஹமீட் அல் ஹுஸைனி முதலாவது மற்றும் நான்காவது முயற்சிகளில் கோல் புகுத்தியது. இறுதியில் ஹமீட் அல் ஹுஸைனி 2–1 என பெனால்டி சூட் அவுட் முறையை வென்று சம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
முன்னதாக ஹமீட் அல் ஹுஸைனி அரையிறுதியில் கேட்வே கல்லூரியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியே இறுதிப் போட்டிக்கு முன்னேறியதோடு சாஹிரா தனது அரையிறுதியில் புனித ஹென்றி கல்லூரியை 4–0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.









