“உள்ளூரில் வாங்கினால் 18% வரி… இறக்குமதிக்கு பூஜ்ஜியம்!” – உள்ளூர் தொழில்களை நசுக்கும் வரி கொள்கையா? நாடாளுமன்றத்தில் ஹர்ஷ டி சில்வாவின் அதிரடி வெளிப்பாடு
இலங்கையில் உள்ளூர் தொழில்துறையைப் பாதுகாக்க வேண்டிய பொருளாதாரக் கொள்கைகளே, இன்று அந்தத் துறையின் கழுத்தை நெரிக்கும் ஆயுதங்களாக மாறியுள்ளனவா? என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் சூடுபிடித்த விவாதமாக வெடித்துள்ளது.
உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் வரிச் சுமைகள், மின்சாரக் கட்டண உயர்வுகள் மற்றும் ஏற்றுமதித் துறையில் உருவாகியுள்ள போட்டி இழப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்துக்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
SVAT (Simplified Value Added Tax) முறையின் நீக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பான அவரது உரை மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
“வெளிநாட்டிலிருந்து பொருள் இறக்குமதி செய்தால் வரி இல்லை. ஆனால் அதே பொருளை இலங்கையின் உள்ளூர் உற்பத்தியாளரிடமிருந்து வாங்கினால் 18 சதவீத VAT செலுத்த வேண்டும். அப்படியானால் யார் உள்ளூர் பொருட்களை வாங்க முன்வருவார்கள்?” என அவர் நேரடியாகக் சபையில் அதிரடி கேள்வி எழுப்பினார்.
ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான மூலப்பொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் கூடுதல் வரிச் சுமை ஏதுமில்லை. ஆனால் அதே பெறுமதியிலான பொருளை நாட்டின் உள்ளூர் தொழில்முனைவோரிடமிருந்து வாங்கினால் 18 ஆயிரம் ரூபாய் மேலதிக வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் கடுமையாக சுட்டிக்காட்டினார்.
இதன் விளைவாக, உள்ளூர் விநியோகச் சங்கிலி முற்றாக பாதிக்கப்படுவதோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தங்களது சந்தையையே இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் எச்சரித்தார்.
மேலும், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் தங்களது உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்க “Deemed Exports” எனப்படும் சிறப்பு வரிச் சலுகை முறையை நடைமுறைப்படுத்தி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்றுமதிக்குத் தேவையான பொதியிடல் பொருட்கள், துணிகள், ஒட்டுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் உள்ளூர் நிறுவனங்களுக்கு அந்த நாடுகள் ஊக்கத்தொகை மற்றும் வரிச்சலுகைகளை வழங்கும் நிலையில், இலங்கையில் அவ்வாறான சலுகைகள் நீக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது எனவும் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஹர்ஷ டீ சில்வா;
அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் சுமையை பலமடங்கு அதிகரித்துள்ள
சர்வதேச சந்தையில் போட்டியிட வேண்டிய இலங்கை உற்பத்தியாளர்கள், உற்பத்திச் செலவு அதிகரிப்பால் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்கள். மின்சார உற்பத்தியில் குறைந்த செலவிலான மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்தத் தவறியதன் விளைவாக தொழில்துறையே நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த நிலையில், அரசாங்கம் உடனடியாக வரிக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும், SVAT முறையில் இருந்த குறைபாடுகளைத் திருத்தி மீளமைக்க வேண்டும், மேலும் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் தீர்வுகளை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
“நாட்டுக்குத் தேவையான டொலர்களை ஈட்ட வேண்டுமெனில், முதலில் உள்ளூர் உற்பத்தியாளர்களை வாழ வைக்க வேண்டும். உலகச் சந்தையை நோக்கிச் செல்ல வேண்டுமானால், நம் தொழில்துறைக்கு உயிர் கொடுக்க வேண்டியது அவசியம்,” என ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
உள்ளூர் தொழில்துறையைப் பாதுகாப்பதா? அல்லது இறக்குமதிக்கு முன்னுரிமை அளிக்கும் தற்போதைய கொள்கைகளைத் தொடர்வதா? என்ற முக்கியமான தீர்மானத்தின் முன் அரசாங்கம் நிற்கும் நிலையில், இந்த விவாதம் நாட்டின் பொருளாதார எதிர்காலம் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.


