Thursday, February 6, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 62

நேரடியாக மோதிக்கொண்ட காம்பிர்,விராட் கோலி

0

லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நேற்று லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக விராட் கோஹ்லி, கௌதம் கம்பீர் மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ரோயல் செலஞ்சர்ஸ் வீரர் கோஹ்லி, லக்னோவ் அணியின் ஆலோசகர் கம்பீர் ஆகியோருக்கு போட்டிக்கட்டணத்தில் 100% அபராதமும், லக்னோவ் அணியின் நவீன்-உல்-ஹக்கிற்கு போட்டி கட்டணத்தில் 50% வீத அபராதமும் விதிக்கப்பட்டது.

கம்பீர், கோஹ்லி மற்றும் நவீன் ஆகியோர் தத்தம் குற்றங்களை ஒப்புக் கொண்டு அபராதங்களை ஏற்றுக்கொண்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 127 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய லக்னோவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவியது.

போட்டியை தொடர்ந்து ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோலிக்கும் லக்னோவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக்குக்கும் இடையேயான உரையாடலில் அமைதியின்மை ஏற்பட்டது.

முன்னதாக 17 ஆவது ஓவரில் நவீன் உல்-ஹக் துடுப்பாடிக் கொண்டிருந்தபோது களத்தில் இருவருக்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆட்டத்தின் பின்னரான கைகுலுக்களின்போது இந்த முறுகல் மீண்டும் துளிர்விட்டது.

இதனையடுத்து பெங்களூர் அணியின் விராட் கோஹ்லியும் லக்னோவ் அணியின் நவீன் உல்-ஹக்கும் அவர்களது அணியினரால் விலக்கப்பட்டனர்.

இதனையடுத்து விராட் கோலி, லக்னவ் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீருடன் உரையாடியிருந்தார்.

எனினும் கௌதம் கம்பீர், விராட் கோஹ்லியுடனான உரையாடலிலும் அமைதியடையவில்லை.

இந்தநிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

குறையும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை

0
இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த எரிவாயுவின் விலை குறைந்தது 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை  1005 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த எரிவாயு கொள்கலன் தற்போது 3,738 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  இன்று நள்ளிரவு முதல் இந்த விலையில், மாற்றம் ஏற்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

27 வருட கால சாதனையை தவற விட்ட குசல்

0

டெஸ்ட் அரங்கில் இன்னிங்ஸ் ஒன்றில் 10 சிக்ஸர்கள் அல்லது 10 இற்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த முதல் இலங்கையராகவும் உலகின் 7 ஆவது வீரர் என்ற சிறப்பை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான குசல் மெண்டிஸ் பெற்றதுடன்,  இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை ஒரு சிக்ஸர் வித்தியாசத்தில் தவறவிட்டார்.

அயர்லாந்து அணிக்கெதிராக காலியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ்  291 பந்துகளில் 11 சிக்ஸர்கள் 18 பெளண்டரிகள் அடங்கலாக 245 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் அரங்கில் வசீம் அக்ரம் ஸிம்பாப்‍வே அணிக்கெதிராக 1996 இல் பாகிஸ்தானின் ஷேக்புராவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின், பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடியிருந்தபோது, 12 சிக்ஸர்கள் விளாசியிருந்தமையே சாதனையாகவுள்ளது.

இந்நிலையில், 11 சிக்ஸர்கள் விளாசியிருந்த குசல் மெண்டிஸ் மேலும், ஒரு சிக்ஸர் அடிப்பதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், வசீம் அக்ரமின் 27 வருட கால சாதனையை முறியடிப்பதற்கான அரிய  சந்தர்ப்பத்தை தவற விட்டார். எனினும், டெஸ்ட் அரங்கில் 10 அல்லது 10 இற்கு மேற்பட்ட சிக்ஸர்களை விளாசிய முதலாவது இலங்கையராகவும் உலகின் 7 ஆவது வீரராகவும் பதிவானார். இன்னிங்ஸ் ஒன்றில் 8 சந்தர்ப்பங்களில் 11 சிக்ஸர்கள் அடிகக்கப்பட்டுள்ளதுடன், இதில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பிரெண்டன் மெக்கலம் 2 தடவைகள்  11 சிக்ஸர்கள் விளாசியுள்ளமை கவனிக்கத்தக்கது.

டெஸ்ட் அரங்கில் இன்னிங்ஸ் ஒன்றில் 10 அல்லது 10 இற்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் சந்தர்ப்பங்கள் மற்றும் அடித்த வீரர்கள் விபரம்.

 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

0
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை, அதன் தற்போதைய வடிவில் நாடாளுமன்றில் முன்வைக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரு தேசிய கலந்துரையாடல் முடிவடைந்து, தெளிவான திட்டத்துடன் அதன் பரிந்துரைகள் வெளியிடப்படும் வரை காத்திருக்குமாறும் ஆணைக்குழு கோரியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் மேலும் ஆராய வேண்டியது அவசியமானது என மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் 30 வருடங்களுக்கும் மேலாக நீடித்த, பயங்கரமான உள்நாட்டுப் போரின் அழிவுகளின் கீழ் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு சமூகங்களுக்கு மாத்திரமல்ல என்றும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

70 மற்றும் 80 களில் தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் இந்த செயல்முறை அவசியம், அவர்களில் பலர் எழுச்சி மற்றும் அரசின் பதிலளிப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்முறையை சமமாக எதிர்கொள்ளும் ஒரு தேசிய உரையாடலை நிறுவுவது, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு சட்டமூலத்திற்கான சூழலின் அவசியத்தை சிறப்பாக வரையறுக்கும் என்பதை உறுதியான கருத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பில் 10 மணிநேர நீர் வெட்டு

0
கொழும்பின் புற நகர் பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (29) பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை நீர் வெட்டு அமுலாகவுள்ளது.

இதன்படி, கொலன்னாவ நகரசபை பகுதி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, அத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

கொலன்னாவ நீர்விநியோக நிலையத்தின் பிரதான கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாணக்கியனிடம் மன்னிப்புக்கோரிய அமைச்சர் அலிசப்ரி

0
இலங்கையின் நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்றத்திற்கு ஒவ்வாத சொல்லாடல் தொடர்பாகவும், நாடாளுமன்ற பதிவுப்புத்தகமான ஹன்சார்ட்டின் முக்கியத்துவம் தொடர்பிலும், பதிவுகள் இடம்பெற்றன.

நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் இடம்பெற்ற விவாதத்தின் போது, அன் பார்ளிமன்றி அதாவது நாடாளுமன்றத்திற்கு ஒவ்வாத சொற்பிரயோகத்தை அலி சப்ரி பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு இன்று முன்வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இதனை தமது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக கூறி சபாநாயகரிடம் முறையிட்டார்.

எனினும், அவ்வாறான வர்த்தை பிரயோகத்தை தாம் பயன்படுத்தவில்லை என்றும் அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் மனித பண்பு கொண்டவர் என்ற அடிப்படையில் அதற்காக மன்னிப்பு கோரவும் அந்த சொல்லாடலை மீளப் பெற தயார் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குறிப்பிட்டார்.

இந்த பதிலுக்கு பின்னர் அலி சப்ரிக்கும், சாணக்கியனுக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் இடம்பெற்றது.

இதன்போது, தமது அரசியலை முன்னிலைப்படுத்தி, சாணக்கியன் செயற்படுவதாக அலி சப்ரி குற்றம் சுமத்தினார்.

எனினும், தாம் நீதியமைச்சராக இருந்த போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த பலரை விடுவித்தமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட் -19 பரவல் நிலைமையின் போது முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்பட்ட போது, தாம் அரசாங்கத்தில் இருந்த போதும், அதற்கு எதிராக குரல்கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது இனமுறுகலை தாம் தடுக்கும் வகையில் செயற்பட்டதாகவும் சப்ரி தெரிவித்தார்.

தாம் தமிழ் மக்கள் மீது அன்பு கொண்டுள்ளதாகவும் அத்துடன் தாம் இனவாதி அல்லவென்றும் குறிப்பிட்ட அவர், தம்மால் நாடாளுமன்றத்திற்கு ஒவ்வாத வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மீண்டும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று முன்தினம் அமைச்சர் அலி சப்ரி, சாணக்கியனுக்கு எதிராக பயன்படுத்திய வார்த்தை பிரயோகத்தின் பதிவை நாடாளுமன்ற பதிவுப்புத்தகமான ஹன்சார்ட்டின் பிரதியை சபையில் சமர்ப்பித்து, அலி சப்ரி நாடாளுமன்றத்திற்கு ஒவ்வாத வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியமையை நிரூபித்தார்.

இதன்போது தலையீடு செய்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் அலி சப்ரி ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் தமது மன்னிப்பை கோரி விட்டதாக சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து உரையாற்றிய சாணக்கியன், அமைச்சர் அலி சப்ரி தமது தவறை ஏற்று மன்னிப்பு கோரியமையைக்கு வரவேற்பை வெளியிட்டார்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்

0

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திற்காக பெயரிடப்பட்டுள்ள 15 வீரர்களைக் கொண்ட இந்திய டெஸட் குழாத்தில் அஜின்கியா ரஹானேயும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக ரோஹித் ஷர்மா தொடர்ந்து பதவி வகிக்கவுள்ளார்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கடந்த வருடம் ஜனவரி மாதம் நிறைவடைந்த 3 போட்டிகள் கொண்ட தொடரிலேயே ரஹானே கடைசியாக விளையாடியிருந்தார். அந்த டெஸ்ட் தொடரில்  ரஹானே   6 இன்னிங்ஸ்களில் 136 ஓட்டங்களையே மொத்தமாக பெற்றிருந்தார்.

ஆனால், தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் சார்பாக துடுப்பாட்டத்தில்  ரஹானே   அசத்தி வருவதை கருத்தில் கொண்டு இந்திய தெரிவாளர்கள் அவரை மீண்டும் டெஸ்ட் அணியில் இணைத்துக்கொண்டுள்ளனர்.

பொதுவாக பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடும் வழக்கத்தைக் கொண்ட ரஹானே, நடப்பு ஐபிஎல் அத்தியாயத்தில் அதிரடி ஆட்டக்காட்டக்காரராக தன்னை மாற்றிக்கொண்டு ஓட்டங்களை மிக வேகமாக குவித்துவருகிறார்.

இந்த வருடம் விளையாடிய 5 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் 209 ஓட்டங்களைக் குவித்துள்ள ரஹானேயின் ஸ்ட்ரைக் ரேட் 199 ஆகும்.

82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே, 12 சதங்கள், 25 அரைச் சதங்களுடன் 4931 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாடிய இருபது 20 அதிரடி துடுப்பாட்ட வீரர் சூரியகுமார் யாதவ் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கருத்தில் கொள்ளப்படவில்லை.

அத்துடன் அந்தத் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த கே.எல். ராகுல் மீண்டும் குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா உபாதையிலிருந்து பூரணமாக மீளாததாலும் விக்கெட் காப்பாளர் ரிஷாப் பான்ட் கடந்த வருடம் கார் விபத்தில் சிக்கி இன்னும் பூரண ஆரோக்கியம் பெறாததாலும் டெஸ்ட் அணியில் அவர்கள் இருவரும் இணைக்கப்படவில்லை.

இந்திய டெஸ்ட் குழாம்

ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், சேத்தேஷ்வர் புஜாரா, விராத் கோஹ்லி, அஜின்கியா ரஹானே, கே. எல். ராகுல், கே.எஸ். பாரத் (விக்கெட் காப்பாளர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், ஷர்துல் தக்கூர், மொஹமத் ஷமி, மொஹமத் சிராஜ், உமேஷ் யாதவ், ஜய்தேவ் உனத்கட.

சைனோபெக் நிறுவன அதிகாரிகள் இலங்கை விஜயம்

0

எரிபொருள் விற்பனைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் உடன்படிக்கைகளை இறுதி செய்வதற்காக சீனாவின் சைனோபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

அமைச்சர் காஞ்சனவிஜயசேகர இதனை டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சைனோபெக்கின் அதிகாரிகளை நேற்று சந்தித்து நிபந்தனைகள் இணக்கப்பாடுகள் மற்றும் உடன்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மே மாதம் நடுப்பகுதியில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 45 நாட்களில் சைனோபெக் தனது நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கும் சிரேஷ்ட பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன

0

இடமாற்றம் செய்யப்பட்ட ஏழு பிரதி காவல்துறை அதிபர்களில் இருவர் தமது இடமாற்றங்களுக்கு எதிராக தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு முறையிட்டுள்ளனர்.

சிரேஷ்ட பிரதி காவல்துறை அதிபர்களான அஜித் ரோஹன, மற்றும் பிரியந்த வீரசூரிய ஆகியோரே தேசிய காவல்துறை ஆணைக்குழு தலைவர் சந்திரா பெர்ணான்டோவுக்கு இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ளார்கள்.

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் நியாயமற்ற இடமாற்றங்களை அங்கீகரிக்க வேண்டாம் என்று அவர்கள் தேசிய காவல்துறை ஆணைக்குழு தலைவர் சந்திரா பெர்னாண்டோவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தமது இடமாற்றம் தொடர்பான பரிந்துரைகளுக்கு ஆணைக்குழு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

தமது இடமாற்றங்களுக்கு உரிய காரணங்கள் கூறப்பட்டிருக்கவில்லை என்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னதாக அஜித் ரோஹண தென் மாகாணத்திற்கு பொறுப்பான பதவியில் இருந்து கிழக்கு மாகாண பிரதி காவல்துறை அதிபராக மாற்றப்பட்டார்.

மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரதி காவல்துறை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லலித் பத்திநாயக்க காவல்துறை களப் படைத் தலைமையகத்தில் இருந்து மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

குற்றங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவு சிரேஷ்ட பிரதி காவல்துறை அதிபர் எல்.கே.டபிள்யூ.கே. சில்வா காவல்துறை களப் படைத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

சஜீவ மெதவத்த சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு ஆகியோரும் இடமாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம்?

0

கடந்த பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த வாரம் வரை எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதுடன், பின்னர் மேலும் ஒரு வாரத்துக்கு அது நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில், எரிபொருள் இறக்குமதி, முகாமை, விநியோகம் மற்றும் விற்பனை தரவுகளை ஆய்வு செய்த பிறகு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பை மறு அறிவித்தல் வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் இன்று ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

தற்போது, முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றரில் இருந்து 8 லீற்றராகவும், உந்துருளிகளுக்கு 4 லீற்றரில் இருந்து 7 லீற்றராகவும், பேருந்துகளுக்கு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், மகிழுந்துகளுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், மண் அகழ்வு வாகனங்களுக்கு 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அவ்வாறே பாரவூர்திகளுக்கு 50 லீற்றரிலிருந்து 75 லீற்றர் வரையும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையிலும், வேன்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றர் வரையும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.