சில நாட்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் காட்டு யானையின் உடல் நவகத்தேகம-தம்மன்னாவதிய பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டு யானையின் உடல் நவகத்தேகம-தம்மன்னாவதிய பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த 3 ஆம் தேதி மாலை அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் இறந்த காட்டு யானையின் உடலைப் பார்த்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
சுமார் 25 வயதுடைய இந்த காட்டு யானையின் உடல் யானை வேலிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதால் குறிப்பாக குறிப்பிடத்தக்கது.
காட்டு யானையின் இறப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி முபா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கொழும்பு சாஹிரா கல்லூரியில் நடைபெற்று முடிந்த தேசிய மட்ட முஸ்லிம் கலாசார போட்டிகளில் புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி எம்.எம் முபா இரண்டாம் பிரிவின் நஷீத் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
சிறப்பான முறையில் தனது திறமையை வெளிப்படுத்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் பீ.எம் முஸ்னி தெரிவித்துள்ளார்
மேலும் மாணவிக்கும், பெற்றோர்களுக்கும், மாணவிக்கு ஊக்கமளித்த ஆசிரியருக்கும், பாடசாலை நிர்வாகம் சார்பாக தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதாக அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் சீனடிக் கலை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்று சாதனை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர்கள் தேசிய மட்ட இஸ்லாமிய கலாசார போட்டி நிகழ்ச்சியின் சீனடிக் கலை போட்டியில் முதலாம் இடத்தை பிடித்து தேசிய மட்டத்தில் சாதனை படைத்து பாடசாலைக்கும் புத்தளம் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஐ.ஏ நஜீம் தெரிவித்துள்ளார்.
சீனடிக் கலையின் தேசிய மட்ட போட்டிகள் கடந்த சனிக்கிழமை (01) கொழும்பு சாஹிரா தேசிய கல்லூரியில் இடம்பெற்றது.
சீனடிக் கலையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை சார்பில் உயர்தர மாணவர் குழுவினர் களான ஜே.சாஜித் (தலைவர்) எம்.ஏ.எம் ஆதில், எம்.கே கைஸ், எம்.எச் ஹைதம் காசிம், எம் ஏ எம் அஸ்மத். எஸ்.எம் அர்ஷத், எம் எம் எம் முன்தீர், எம் ஆர் எம் றஹீக் ஆகிய மாணவர்கள் தமது சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றிபெற்றுள்ளனர்.
குறித்த போட்டியை பயிற்றுவித்து வெற்றி பாதைக்கு வழிகாட்டிய எம்.ஏ.எம். சுபியான் ஆசிரியர் அவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் ஐ.ஏ. நஜிம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்றைய தினம் 03.11.2025 தருமபுரம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர், சிறுவர் நன்னடத்தை பிரிவினர், போதைப் பொருள் பாவனையில் ஏற்படக்கூடிய தீமைகள் தொடர்பாகவும் தொலைபேசியினால் ஏற்படும் பாரிய அளவிலான பாதிப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடாத்தப்பட்டது.
இதன் போது தர்மபுரம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசநாயக்க, தருமபுர மத்திய கல்லூரி அதிபர் திருமதி இந்திராணி, கண்டாவலைப் பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (03) 21 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களுடன் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின், பாங்காக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக வந்த 28 வயதுடைய இலங்கையர் ஒருவர் ரூ. 21 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 2.07 கிலோ குஷ் கஞ்சாவுடன் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்றபோது இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E1171 இல் வந்தபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று 3, 2025 குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட குஷ் ரக போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 21 மில்லியனுக்கும் அதிகமாகும். NCU அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபரும் மீட்கப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டன.
மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எருக்கலம்பிட்டி 81 வீட்டுத்திட்டத்தில் குறித்த அதிர்ச்சிகர சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தகராறு காரணமாக ஒரு பிள்ளையின் தாயான அஸ்லா என்ற இளம் பெண்ணே இவ்வாறு தன்னைத்தானே மாய்த்துக்கொண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் உயிரிழந்த குறித்த பெண் தூக்கிட்டு விடயத்தில் பாரிய சந்தேகம் இருப்பதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்த பெண்ணின் உடல் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான விசாரணைகளை மன்னார் போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படையால், இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் படகும் சந்தேக நபர்களும் இன்று நேற்று (2025 நவம்பர் 02) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய சிறப்பு பரிசோதனையின் போது, கடற்படையால் கைப்பற்றப்பட்ட பதினாறு (16) பொதிகளில் ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை இருந்தமை உறுதி செய்யப்பட்டதுடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் குறித்த போதைப்பொருட்களை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.
‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் “போதையற்ற நாடு -ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை, ஏனைய படையினர்,பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் உள்ளிட்ட சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து முழு நாட்டையும் உள்ளடக்கி போதைப்பொருள் கைப்பற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, கடற்படைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இலங்கையின் மேற்கு கடலில் கடற்படை நீண்ட தூர செயல்பாட்டுக் கப்பலால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த உள்ளூர் பல நாள் மீன்பிடி படகு போதைப்பொருள் அடங்கிய பதினாறு (16) பொதிகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு, ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை உள்ளிட்ட ஆறு (06) சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஜனாதிபதி நிதியத்தால் க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த
பெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கெளரவிப்பு
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம் இன்று (02) காலை பதுளை நூலக கேட்போர் கூடத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் 1-10 இடங்களைப் பெற்ற 240 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியத்தால் 24 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, தற்போதைய அரசாங்கம் கல்வியில் மிகப்பெரிய முதலீட்டைச் செய்து வருவதாகவும், ஒரு நாட்டில் கல்வியில் முதலீடு செய்வது போன்ற முக்கியமான மற்றும் மதிப்புமிக்க முதலீடு எதுவும் இல்லை என்றும் கூறினார். குழந்தைகள் பெறும் கல்வி மூலம் நாட்டிற்கு சேவை செய்தால், அந்த முதலீட்டின் பலனை நாடு அடைய முடியும் என்று சபாநாயகர் தெரிவித்தார் .
கல்வி மூலம் கல்வி ஞானமுள்ளவர்களாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.ஒரு புத்திசாலி ஒருபோதும் அணுகுண்டை உருவாக்க மாட்டார்.கல்வி கற்றவனாகி இருந்து ஏமாற்றினால், அந்தக் கல்வியில் எந்த மதிப்பும் இல்லை.அந்த இடத்தில் ஞானம் இல்லை,கல்வி மட்டுமே உள்ளது. எனவே, உங்கள் கல்வி நாட்டிற்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்பட்டால், உங்கள் பெற்றோர் உங்களை வளர்க்க வழங்கிய போசாக்கான சாப்பாட்டிற்கு நியாயம் கிடைக்கும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, புதிய அரசாங்க எண்ணக்கருவின் படி பிள்ளைகளின் வாழ்க்கையை வலுப்படுத்த இதுபோன்ற பங்களிப்பைச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார். இந்த வாய்ப்பை வழங்கிய ஜனாதிபதி நிதியத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், இந்த நாட்டில் கல்வி பெறும் குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி நிதியம் நிறுவப்பட்டது. தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை நெறிப்படுத்தும் நோக்கில் பிராந்திய மட்டத்திற்கு கொண்டு
சென்றுள்ளது. எனவே, தகுதியான பயனாளிகள் தற்போது நிதியத்தின் நன்மைகளைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதி நிதியத்தை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது குறித்த விசேட ஒரு நாள் செயலமர்வு நேற்று (01) பதுளையில் நடைபெற்றது. இதில் ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் விடயத்திறகுப் பொறுப்பான அலுவலர்கள் பங்கேற்றனர்.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதத் பலகல்ல, சட்டத்தரணி சரத் குமார, பதுளை மேயர் பந்துல ஹபுகொட, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன, பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேரத்ன, மொனராகலை மாவட்ட செயலாளர் ஏ.ஜி. நிஷாந்த, அரசு அதிகாரிகள் மற்றும் புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.
2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிளுக்கு இடையில் மும்பையில் இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து.
இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Shafali Verma அதிகபட்சமாக 87 ஓட்டங்களையும், Deepti Sharma 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் Ayabonga Khaka 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி 299 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி 45.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவி laura wolvaardt அதிகட்பசமாக 101 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Deepti Sharma 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று முதல் முறையாக செம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கடந்த 2024-2025 ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் பிரமாண்ட நிகழ்வு இன்று 02.11.2025 பு/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் கல்வியியலாளர்களுக்கான கெளரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் கலந்துகொண்டார்.
புத்தளம்-நாகவில்லு கிராமம் உருவாகுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு உருவாக்கித்தந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் MHM அஷ்ரப் அவர்களின் 25 வருட சிரார்த்த தினத்தை முன்னிட்டு குறித்த பரிசளிப்பு வைபவம் எருக்கலம்பிட்டி கல்வி வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2024-2025 ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த.சா/த பரீட்சை மற்றும் க.பொ. உ/த பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை மாணவர்கள் இதன்போது நினைவுச்சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தி சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொடுக்க அயராது பாடுபட்ட ஆசிரியர்களும் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.
நாகவில்லு கிராமத்தின் உருவாக்கத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் MHM அஷ்ரப் அவர்களின் பங்களிப்பு குறித்து நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்துகொண்ட புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் லரீப் காசிம் நினைவுபடுத்தினார்.
மேலும் நாகவில்லு கிராமத்தின் தற்போதைய அத்தியாவசிய தேவைப்பாடுகள் குறித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாகவில்லு கிராமத்தின் பெண்கள் அதிகளவில் தமக்கு வாக்களித்ததாகவும், நாகவில்லு கிராமத்தின் அபிவிருத்திக்கு தாம் முடியுமான பங்களிப்பை வழங்குவதாகவும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் தெரிவித்தார்.
நாகவில்லு கிராமத்தின் வைத்தியசாலை வீதியை புனரமைக்க தாம் முயற்சி செய்வதாகவும், நாகவில்லு வைத்தியசாலையில் பல் வைத்திய பிரிவை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில், புத்தளம் வலயக்கல்வி பணிமனையின் பிரதிப்பணிப்பாளர் திருமதி அஸ்கா, புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் அதிபர் ஜனாப் SM ஹுஸைமத் மற்றும் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் கலாநிதி நிஹ்மத்துல்லாஹ் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர் உற்பட பாடசாலை சமூகம், உலமாக்கள், கல்விமான்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.