Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 71

பு/எருக்கலம்பிட்டி மு.ம.வித்தியாலயம் வெள்ளி விழா காணுகிறது

0

வட மாகாணத்தில்  மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி எனும்  கிராமத்தில்  3 பாடசாலைகளில் பயின்றுவந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட வடபுலத்து மாணாக்கர் அனைவரினாலும் கண்ணெனப் போற்றி கருத்தனமாய் வளர்க்கப்பட்ட கல்விச்செல்வம் பறிக்கப்பட்டு இம்மாணவர் அனைவரும் தமது தாயக பூமியிலிருந்து துரத்தப்பட்டு, ‘வன் தரையில் வீழ் பளிங்குகளாய் சிதறிச் சின்னாபின்னமாக்கப்பட்டனர்’.

இந்து சமுத்திர ஆழ்கடல் பரப்புக் கூடாகவும், தரைவழியாகவும், தங்கள் குடும்பங்களுடன் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் மிகக்கூடுதலான மாணவர்கள் அகதிகளாய் தஞ்சம் புகுந்தனர்.

ஏலவே, பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் விளங்கிய புத்தள மாவட்ட பாடசாலைகள் திடீரென அகதிகளான மாணவர்களை உள்வாங்கிக் கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டனர். எனினும் பல பாடசாலைகளில் கல்வி கற்பதற்குறிய அனுமதி வழங்கப்பட்டன.

பல பாடசாலைகளில் சம வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் சில பாடசாலைகளில் இடவசதியின்மையால் மாலைநேர வகுப்புக்களே நடாத்தப்பட்டன. இம்மாலை நேரப்பாடசாலைகளால் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பூரணமற்றதாகவும், மாணவர்களின் கல்வித்தரத்தை பூர்த்தி செய்ய முடியாததாகவும் அமைந்தன.

இத்தகைய பிற்புலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிதறி வாழ்ந்த சமூக, பாரம்பரிய விழுமியங்களை பேணுவதில் சவால்களை எதிர்கொண்டு திண்டாடிக்கொண்டிருந்த எருக்கலம்பிட்டி மக்களை ஒண்றினைத்து ஓரிடத்தில் குடியேற்றுவதன் மூலம் சமூக, கலாசார, பொருளாதார துறைகளில் குறிப்பாக கல்வித்துறையிலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி உயர்வு காணலாம், எனும் நோக்கில் எருக்கலம்பிட்டி மாண்புறு பெருமக்களால் (EDA) ‘எருக்கலம்பிட்டி அபிவிருத்திச் சங்கம்’ புத்தளம் எருக்கலம்பிட்டி மீள்குடியேற்றக்கிராமம் உருவாக்கப்பட்டது. இப்புதிய கிராமத்தில் அமையப்பெற்றதே
பு/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயமாகும்.

மறைந்த முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான  அல்ஹாஜ் நூர்தீன் மசூர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புனர்வாழ்வு, புனரமைப்பு, கப்பல்துறை, துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் அஷ்ஷஹீத் M.H.M. அஷ்ரப் அவர்களால் தற்காலிக ஓலைக்கொட்டிலில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ந் திகதி சம்பிரதாய பூர்வமாக இம் மகா வித்தியாலயம் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இப்பாசாலையில் இயங்கிவரும் இடத்தில் நிரந்தரக் கட்டிடங்களுக்கான அடிக்கல்லும் நடப்பட்டது.

மாணவர்களினதும், பாடசாலையினதும் அலுவலக கோவைகள், உபகரணங்கள் ஒவ்வொரு நாளும் காவிச் செல்லப்பட்டன. இடநெருக்கடியை உணர்ந்து ஓலைக்கொட்டில்களுக்கு அண்மையிலுள்ள நலன் விரும்பிகள் தங்களது வீடுகளில் வகுப்புக்களை நடாத்த உதவி புரிந்தமையை நினைவு கூறுதல் பொருத்தமானது.

ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பத்துக்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இத்தகைய சூழலில் முதன் முதலாக சந்தித்த க.பொ.த. (உயர்) தரப் பரீட்சையில் 32 மாணவர்களில் 29 மாணவர்கள் சித்தியடைந்தனர். இவர்களில் 28 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றனர். 1996 டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. (சாதாரண) தரப் பரீட்சையிலும் 25 மாணவர்கள் சித்தி பெற்றனர்.

சிறந்த பரீட்சை பெறுபேறுகளுடன் மட்டுமன்றி புறக்கிருத்தியச் செயற்பாடுகளிலும் எமது கலைக்கூடம் மிளிர்ந்து வருகிறது. மாணவ மன்றங்கள் நடாத்தப்பட்டதுடன் தமிழ் ஆங்கில மொழித் தினப்போட்டிகளிலும், சமூகக் கல்வி, விஞ்ஞான, பொது அறிவு, விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு கடந்த பத்தாண்டுகளில் எம் கல்லூரி மாணவர்கள், கோட்ட, வலய, மாவட்ட, மாகாண மட்டங்களில் மட்டுமன்றி அகில இலங்கை ரீதியிலும் பங்கு கொண்டு முன்னணி இடங்களைப் பெற்று எமது கல்லூரியின் கீர்த்தியை தேசிய மட்டத்திற்கு உயர்த்தி உள்ளனர்.

விவசாய, சுற்றாடல், வர்த்தக கழகங்கள், முதலுதவி, வீதி ஒழுங்குச் சங்கங்கள், பாடசாலை இசைக்குழு போன்றவை உருவாக்கப்பட்டு மாணவர்ளின் திறன்கள் வளர்க்கப்படுகின்றன. கல்விச் சுற்றுலாக்கள், களப் பயணங்கள் என்பன தவணைக் கால பருவங்களில் மேற்கொள்ளப்படுவதுடன் விஷேட வகுப்புக்கள், இரவு நேர கற்றல்கள், பருவ கால கருத்தரங்குகள் என்பன மிகச் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு நடாத்தப்படுவதுடன்,
பு/எருக்கலம்பிட்டி கல்வி அபிவிருத்தி அமைப்பு உருவாக்கப்பட்டு மாணவர் தம் கல்வி மேம்பாட்டுக்கு புத்தாக்கம் அளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

எமது கலாசாலையின் பரீட்சை பெறுபேறுகளும், புறக்கிருத்திய செயற்பாடுகளும் மிகச் சிறப்பாக அமையப் பெற்றதைத் தொடர்ந்து புத்தளப் பகுதியின்  பல்வேறு இடங்களில் இருந்தும் மாணாக்கர்கள் இக் கல்லூரியில் கல்வி கற்பதற்காக படையெடுத்தனர். இடம்பெயர்ந்த ஆசிரியர்களும், உள்ளூர் ஆசிரியர்களும் விருப்புடன் கடமையாற்ற இடமாற்றம் பெற்று வந்தனர். இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த எமதூர் மக்கள் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்தின் துரித வளர்ச்சியைக் கண்டு தங்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை விரைவு படுத்தியமையினால் மாணவர் தொகை 400 இலிருந்து 1450 ற்கும் கூடுதலாக அதிகரிக்கத் தொடங்கியது.

இத்தகைய சுழலினால் பல வகுப்புக்ககள் மர நிழல்களின் கீழ் நடாத்தப்பட்டதுடன், சமாந்தர வகுப்புக்கள் ஒன்றிணைக்கப்பட்டும் நடாத்தப்பட்டன. அதிகரித்துச் செல்லும் மாணவர் தொகைக்கேற்ப பௌதிக வளம் போதாமை பெரும் குறையாகவும், கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பெரும் தடையாகவும் இருந்தமை உணரப்பட்டது.

இந்நிலையினை 1997ம் ஆண்டு ஓரளவேனும் தீர்க்கும் வகையில் பாடசாலையின் அபிவிருத்திச் சபையின் அணுசரணையுடன் எமதூர் நலன் விரும்பிகள் பு/எருக்கலம்பிட்டி கல்வி அபிவிருத்தி அமைப்பினை உருவாக்கி பாம்பு நடன நிகழ்ச்சி ஒன்றினை நடாத்தி பெற்றுக் கொண்ட நிதித் தொகையுடன் அயல் கிராம ரஸூல் நகர் மக்களின் நிதி உதவியுடன் 100 x 20 அடி கட்டிடத்திற்கான அடித்தளம் இடப்பட்டு அதில் தற்காலிக ஓலைக் கொட்டில் கட்டப்பட்டு சில வகுப்புக்கள் நடாத்தப்பட்டன.

2000ஆம் ஆண்டு கௌரவ அமைச்சர் M.H.M. அஷ்ரப் அவர்களால் 125 x 25 அடி அளவான இரண்டு மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டு சமாந்தர வகுப்புக்கள் பிரிக்கப்பட்டு கற்பித்தல் நடவடிக்​கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு கௌரவ அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்களினால் தரம் 6 அதாடக்கம் 9 வரையிலான மாணவர்கள் பயன்படுத்தத்தக்க விஞ்ஞான ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது.

எமது கலாபீடத்தில் அமைந்து பெருமளவிலான பௌதீக வளங்கள் நலன் விரும்பிகளாலும், கொடை வள்ளல்களாலும், பழைய மாணவர்களாலும், வழங்கப்பட்டும், அமைக்கப்பட்டும் மாணவர் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

எமது பாடசாலை 2007.04.30 ஆம் திகதி ” நவோதயா” செயற்றிட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டது.

பெளதீக வள அபிவிருத்திக்கேற்ற தேவையும் காணியும் இருந்தும் விவசாய, மனையியல், விஞ்ஞான, சமூகக் கல்வி கூடங்கள், செயற்பாட்டு அறை, காரியாலயம், நூலகம், அதிபர், ஆசிரியர் விடுதிகள், களஞசிய அறைகள், மாணவர் விடுதிகள்,  உட்பட அத்தியாவசிய தேவைகள் பலவும் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன. தற்போது சுமார் 1200 க்கும் அதிகமான மாணாக்கர் கல்வி பயின்று வரும் நிலையில் ஏறத்தாள 62 ஆசிரியர்களும் பணிபுரிந்தி வருகின்றனர்.

  பு/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கற்றல், கற்பித்தல், அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஆரம்ப காலப் பகுதிகளில் (EDA) எருக்கலம்பிட்டி அபிவிருத்திச் சங்கமும், தற்போது பு/எருக்கலம்பிட்டி கல்வி அபிவிருத்தி அமைப்பும், வர்த்தக தனவந்தர்களும், நலன் விரும்பிகளும், பொதுநல மன்றங்களும், கழகங்களும், பெற்றார்களும், ஆசிரியர்களும், பழைய மாணவர்களும், மாணவர்களும் முன்னின்று உழைத்து வருகின்றனர்.

பௌதீக வளக் குறைபாடுகளும், ஆசிரியர் ஆளணிகளும் பூர்த்தி செய்யப்பட்டு அனைவரினதும் கவனம் எமது மாணவரின் கல்வியின் பால், பூரணமாக திசை திருப்பப்பட்டு மங்கிப் போன எமது மாண்பும், எமது கலாசாலையின் புகழும் இறைவன் அருளோடு வானுயர எழுந்து கொண்டிருக்கின்றது  என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

பு/எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு இணைய வசதி ஆரம்பம்!

0

 “Cyber Lowata Piyapath” சைபர் லொவட பியபத் திட்டத்தின் கீழ் இலவச இணையத்தளம் மற்றும் பயிற்ச்சி திட்டங்களை பெற்றுக்கொள்ள பு/எருக்கலம்பிட்டி மு.ம.வித்தியாலயம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 11.10 மணியளவில் பு/எருக்கலம்பிட்டி பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

(LK Domain registry) எல்.கே டொமைன் பதிவேட்டின் நிதியுதவி மற்றும் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் வெப்காம்ஸ் குளோபல் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.

மாணவர்களின் இணைய பயன்பாடு மற்றும் டிஜிடல் தொழிநுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேளைத்திட்டம் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன், கம்பளை,குருநாகல் மற்றும் புத்தளம் கல்வி வளயத்திற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 100 பாடாசாலைகளுக்கு முதற்கட்டமாக இவ் இணைய சேவை முன்னெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதில் பு/எருக்கலம்பிட்டி மு.ம.வித்தியாலயமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை ஓர் விஷேட அம்சமாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு மேற்படி அங்குரார்ப்பண நிகழ்வு ZOOM சூம் தொழிநுட்பத்தின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், தகவல் தொழிநுட்ப பிரிவு ஆசிரியர்கள், பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் தகவல் தொழிநுட்ப பிரிவு மாணவர்கள் சமூக இடைவெளியை பேணி கழந்துகொண்டனர்.

எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள்…

0

மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களில் வருமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

சுமார் 45 வறிய மாணவர்களுக்கான இக் கற்றல் உபகரணங்கள் எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரியின் ஓய்வுபெற்ற பெற்ற முன்னால் அதிபர் திருமதி தாஹிரா உம்மா கப்பாபிச்சை அவர்களால் வழங்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை அதிகரிக்கும் இம் முயற்சிக்கு பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. அஸ்மி அவர்கள் நன்றி கூறியதுடன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் ஓய்வுபெற்ற அதிபர் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

எருக்கலம்பிட்டி மகனின் பெயரில் தூதுவராலயத்தில் வாசிகசாலை

0

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவில் கஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைக்கப்பட்டதோடு வழங்கப்பட்ட சிறப்புரிமையும் நீக்கப்பட்ட தருணம் அது.

முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்ததுடன், கஷ்மீர் வாழ் மக்களும் பெரும் அவலங்களுக்குள்ளாகி இருந்தனர்.

அவ்வேளையில் நீண்ட காலமாகக் கஷ்மீருக்காகக் குரலெழுப்பி வந்தவரும், முன்னாள் இலங்கை வானொலி ஹிந்தி சேவைப் பணிப்பாளரும், வர்த்தக சேவைப் பணிப்பாளரும், கஷ்மீர் மூவ்மென்ட், மற்றும் கஷ்மீர் ஸ்டடி போரம் ஆகியவற்றின் தலைவருமான அல் ஹாஜ் முஹம்மது ஜமால்தீன் அவர்கள் பதிவிட்ட சில கருத்துக்களை எமது eNews1st இணையம் தொகுத்து வழங்குவதில் பெருமிதம் அடைகிறது.

1934ல் மன்னார் எருக்கலம்பிட்டியில் மொஹிதீன்
கப்புடையார் – குல்சும் உம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராகப் பிறந்த மர்ஹூம் ஜமால்தீன் அவர்கள் ஆரம்பம் முதல்
மன்னார் எருக்கலம்பிட்டியில் கல்வி கற்றதோடு தரம் 5 படித்து முடித்துவிட்டிருந்த நேரத்தில் சீ.டபிள்யூ. டபிள்யூ கண்ணங்கராவின் இலவச கல்வித் திட்டம் உதயம் பெற்று பல வரிய மாணவர்களின் கல்வியில் வெளிச்சம் வீசியது. கண்ணங்கராவின் இலவச கல்வித் திட்டத்தினால் தொடர்ந்து கல்விகற்கும் வாய்ப்பு இறைவன் கிருபையால் அவருக்கு கிடைத்தது.

பின்னர் யாழ் மத்திய கல்லூரிக்கு உயர்தர கல்விக்காகச் சென்று கல்வியைத் தொடர்ந்த மர்ஹூம் ஜமால்தீன் அவர்கள் அங்கு எல்லா விளையாட்டுக்களிலும் கலந்துகொண்டு பல பதக்கங்களையும் வென்றதன் விளைவாக அதன் அபார ஈடுபாடு பல்கலைக்கழக நுழைவுக்கு பெரும் சவாலாக மாறியதுடன் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் ஆசிரியராக 3 வருடம் சேவையாற்றவும் வழி வகுத்தது.

இந்தியாவிற்கு மேல்படிப்பிற்காக சென்று லக்னோ பல்கலைக்கழகத்தில் (University of Lucknow) பட்டப்படிப்பும் பூர்த்தி செய்ததன் மூலம் இந்திய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்ததுடன் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் சிறப்பு தேர்ச்சியும் பெற்றிருந்தார்.

பட்டப்படிப்பை நிறைவு செய்து நாடு திரும்பி இருந்த நிலையில் இலங்கை தேசிய வானொலி சேவையில் இணைவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கப்பெற்றது.

இலங்கை தேசிய வானொலி சேவையின் நேர்முகப் பரீட்சைக்கு சென்று தெரிவாகியதுடன் தேசிய வானொலி சேவையின் வெளிநாட்டுப் பிரிவின் வெளிநாட்டுச் சேவைகளுக்கான உதவி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

குறுகிய காலம் செய்திப்பிரிவில் சேவை செய்த போதிலும் வெளிநாட்டுச் சேவைப் பிரிவு அவரது தலைமையின் கீழ் இருந்தமையானது அவரின் முதல் வெற்றியாகவே அவரால் பார்க்கப்பட்டது.

இலங்கை தேசிய சேவையில் ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் அவரின் கவர்ச்சிகரமான வர்ணனை மூலம் உள் நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மக்களின் மனதை வென்றிருந்ததுடன் அவரது வர்ணணை மற்றும் மொழி ஆற்றல் தொடர்பாக இந்தியாவில் அவரை பற்றிய ஒரு புத்தகமும் வெளிவந்திருந்தமை ஓர் சிறப்பம்சமாகும்.

1987 யில் இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் பணிப்பாளராக பதவியேற்ற மர்ஹூம் ஜமால்தீன் அவர்கள் 1993ல் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.

இந்திய பொலிவூட் திரைப்பட பாடல்களை உலகிற்கேயே ஒலிபரப்புச் செய்த பெருமை அப்போதைய தேசிய வானொலி சேவைக்கே உரித்தாகும்.

அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் தேசிய ஊடகங்களில் இந்திய பாடல்கள் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்ததனால் இந்தியாவின் கோவாவிலுள்ள மக்கள் ஆங்கில பாடல்களை கேட்டு வந்தனர். இதைப் பாரத்த மும்பையிலுள்ள திரைப்பட இயக்குநர்கள் மற்றும் இந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இலங்கைக்கு வந்து அவர்களது திரைப்படங்களின் பாடல்களை ஒளிபரப்புவதற்காக ஒரு அலைவரிசையினை தேசிய வானொலி சேவையிடம் பல நிபந்தனைகளுக்கு மத்தியில் வாங்கினார்கள்.

இந்தியாவிற்கு மட்டுமன்றி முழு ஆசியாக் கண்டத்திலும் பொலிவூட் இசைகள் கேட்கக் காரணமே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் என்பது பலரும் அறிந்திராத உண்மை.

முன்னாள் பணிப்பாளர் மர்ஹும் ஜமால்தீன் அவர்கள் இந்தியாவில் இருந்த நாட்களின் போது காஷமீர் மக்களுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்ட அத்துமீறல்கள், அடக்குமுறைகள் எல்லாம் அவரின் உள்ளத்தினுள் ஆழமாய் பதிந்தது.

அந் நாட்களில் இந்திய பிரதமர் கஷ்மீர் தொடர்பான ஐ.நா.வின் தீர்மானம் பொருத்தமற்றது என்று கூறியதற்கு மர்ஹும் ஜமால்தீன் அவர்கள் மறுப்பு தெரிவித்து ஓர் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.

அன்றுதான் இந்த கஷ்மீர் மூவ்மண்ட் அமைப்பு ஆரம்பமாகியது. கருப்புத் தினம் மற்றும் ஒற்றுமை நாள் ஆகிய தினங்கள் கஷ்மீரில் முக்கிய தினங்களாக இன்றுவரை அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் இருந்துகொண்டு கஷ்மீருக்காக குரல் கொடுத்து வந்த மர்ஹும் ஜமால்தீன் அவர்கள் காஷ்மீர் ஆதரவு கூட்டம் ஒன்று மஹாவெலியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் வாசுதேவ நாநயக்கார போன்ற இடது சாரி அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சனிக்கிழமை மாலை நேரத்தில் இந்த கூட்டம் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் வியாழக்கிழமை ஒரு தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்தது.

குறித்த தொலைபேசி அழைப்பை மஹாவெலி நிர்வாகசபையின் தலைவர் மேற்கொண்டு உங்களது இந்த கூட்டத்தைப் பற்றி இந்தியாவின் இரகசிய சேவையாட்கள் இந்திய உயர் ஸ்தானிகரிடம் தப்பான முறைப்பாடுகளை தெரிவித்துள்ளார்கள் எனவும் தாங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாக பொய்யான தகவல்களைத் தெரிவித்துள்ளார்கள் எனவும் தெளிவுபடுத்தினார்.

அந்த கூட்டத்தை தடுக்க இந்தியா கடும் திட்டங்களை தீட்டியதுடன் மர்ஹூம் ஜமால்தீன் அவர்களுக்கு பல நெருக்கடிகளையும் கொடுத்தது.

குறித்த நிகழ்ச்சிக்கு வருவோரை வை.எம்.எம்.ஏ. மண்டபத்திற்கு வரும் படி கூறுமாரு மகனிடம் சொல்லிவிட்டு ஜமால்தீன் அவர்கள் நிகழ்ச்சியை வேறு இடத்திற்கு மாற்றி பெரும் சவாலுக்கும் குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் குறித்த நிகழ்வை நடத்தி முடித்து வெற்றியும் கண்டார்.

இவ்வாறான பெரும் முயற்சிக்கும் அர்ப்பணிப்பிற்காகவும் பாகிஸ்தானுக்கான சேவைகள் விருதான “சிதாரா ஐ இம்தியாஸ்” எனும் விருது 2016ல் பாகிஸ்தான் இஸ்லாமாபாதில் வைத்து அந்நாட்டு ஜனாதிபதியால் மர்ஹும் ஜமால்தீன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

வெளிநாட்டொருவரால் காஷ்மீர் மக்களுக்காக ஒலிக்கப்பட்ட மிக முக்கிய குரல் என்றால் அது மர்ஹும் ஜமால்தீன் அவர்களின் குரல் என்றால் மிகையாகாது.

ஒக்டோபர் 27ம் திகதி கறுப்புத் தினமும் பெப்ரவரி 5ம் திகதி ஒருமைப்பாட்டு தினமும் வருடாந்தம் காஷ்மீரில் நடாத்தப்படுகின்றது. இங்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது முஸ்லிம் அல்லாதவர்களும் வருகை தருவதால் அந்த தினம் மேலும் சிறப்பு பெறுகிறது.

காஷ்மீர் மக்கள் மீது மர்ஹூம் ஜமால்தீன் அவர்கள் வைத்த அன்பும் பற்றும் பல சந்தர்ப்பங்களில் அவருக்கு பல கஷ்டங்களையும் சோதனைகளையும் கொடுத்திருந்தாலும் அவரின் ஆத்மார்த்தமான சேவையை பாகிஸ்தான் அரசாங்கம் மறந்துவிடவில்லை.

மர்ஹூம் ஜமால்தீன் அவர்களின் சேவையை நினைவுகூரும் வகையில் அவரின் நினைவு சின்னமாக பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கையிலுள்ள தனது பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் அன்னாரின் பெயரில் வாசிகசாலை ஒன்றை நிறுவியுள்ளமையானது எருக்கலம்பிட்டி மண்ணுக்கும் மக்களுக்கும் என்றென்றும் மகிழ்ச்சி தரும் அழியாச்சின்னமாகும்.

காஷ்மீர் மக்களுக்காக அன்று ஒலித்த மர்ஹூம் ஜமால்தீன் அவர்களின் குரல் என்றென்றும் அம்மக்களுக்காக ஒலித்துக்கொண்டே இருக்கும்.

மக்களின் துயர் துடைக்க தன்னையே அர்ப்பணித்த இம் மாமனிதர் மர்ஹூம் ஜமால்தீன் அவர்களுக்காக நாமும் இரு கரம் ஏந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக….

தாய் மண்ணின் மான்பை பறை சாற்றிய மர்ஹூம் மொஹிதீன் கப்புடையார் முஹம்மது ஜமால்தீன் அவர்களை நினைவுகூருவதில் பெருமிதம் கொள்கிறது எருக்கலம்பிட்டி.

தகவல்: M.A.C. முகம்மது கமால்தீன் (JP)

எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தின் (EWO-London)மற்றுமொரு பணி

0

எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தின் (EWO-London) மற்றுமொரு வேளைத்திட்டம் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

எருக்கலம்பிட்டி கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டும் எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தினால் (EWO-London)) புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த வாகன தரிப்பிட வசதியின்மைக்கான தீர்வு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு வரும் ஆசிரியர்களின் மோட்டார் சைக்கில்கள் மற்றும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான இடப்பற்றாக்குறை மற்றும் தரிப்பிட வசயின்மை என்பன நீண்ட நாட்களாக நிலவி வந்துள்ள நிலையில் எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தினால் சுமார் 1லட்சத்து 25ஆயிரம் ரூபா செலவில் நிரந்தர வாகன தரிப்பிடம் ஒன்று பாடசாலை வளாகத்தினுல் அமைக்கப்பட்டு பாவனைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வருடம் க.பொ.த.(சா.த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளும் மேற்படி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் எருக்கலம்பிட்டி மகளிர் வித்தியாலயத்தில் இவ்வருடம் க.பொ.த.(சா.த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளும் எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தினால் (EWO-London) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை ஓர் சிறப்பம்சமாகும்.

கடந்த பல வருடங்களாக க.பொ.த.(சா.த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக பல லட்சத்திற்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட அமைப்பின் சில உறுப்பினர்கள் அவர்களின் சொந்த நிதியில் இருந்தும் பாடசாலைகளுக்கான நிதி உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி அமைப்பினரால் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன தரிப்பிடம் பெரிதும் பாராட்டத்தக்க விடயம் என பாடசாலை அதிபர் ஜனாப் S.M. Husaimath அவர்கள் தெரிவித்ததுடன், இவற்றை செய்து தந்தமைக்காக பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்திற்கு (EWO-London) நன்றி தெரிவிப்பதாகவும், மேலும் இது போன்ற சேவைகள் தொடர இறைவனை பிரார்த்திப்பதாகவும் எமது eNews1st இணையத்திற்கு தெரிவித்தார்.

இவர்களின் சேவைகள் தொடர eNews1st இணையச் சேவையும் வாழ்த்துவடன் இது போன்று மேலும் பல அமைப்புக்களும் முன் வந்து சமூக தேவைகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்யவேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.

“G80” அமைப்பிற்கு நன்றி தெரிவித்த முதலைப்பாலி பாடசாலை அதிபர்

0

முதலைப்பாலி பாடசாலை அதிபரின் நன்றி நவிலல்

புத்/கல்/முதலைப்பாலி முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அறை நிரந்தர அதிபர் அறையாக அண்மையில் புதுப்பிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

எருக்கலம்பிட்டி G80 அமைப்பினரால் குறித்த அதிபர் அறை புனரமைக்கப்பட்டு பதுப்பொழிவுடன் நிரந்தர அதிபர் அறையாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நிரந்தர அதிபர் அறை ஒன்று பாடசாலையில் இல்லாமை சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து மேற்படி அமைப்பினரால் அதிபர் காரியாலயம் திருத்தம் செய்யப்பட்டு பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிபர் அறை நிரந்தர அதிபர் அறையாக மாற்றப்பட்டமையை பாராட்டி பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன G80 அமைப்பிற்கு நன்றி தெரிவித்து வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த அமைப்பின் பல அங்கத்தவர்கள் அப்பாடசாலையின் பழைய மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லன்டன்-எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்திற்கு அதிபர் பாராட்டு

0

லன்டன்-எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தின் (EWO) இவ்வருடத்திற்கான க.பொ.த சா/த மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் இப் பொதுநல மன்றத்தினால் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலையின் க.பொ.த சா/த மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக இலவச வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றமை ஓர் விஷேட அம்சமாகும்.

அந்த வகையில் கடந்த வருடம் ஒன்பது பாடங்களிலும் திறமையான சித்திகளைப் பெற்று வரலாற்று சாதனை படைக்க இவ்வமைபு முக்கிய பங்களிப்பு வழங்கியதாக பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. அஸ்மின் அவர்கள் எமது eNews1st இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மேலும் எருக்கலம்பிட்டி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான இவர்களின் பங்களிப்பை பாராட்டுவதுடன் பாடசாலை சமூகம் சார்பாக நன்றியையும் தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. அஸ்மின் அவர்கள் தெரிவித்தார்.

நாகவில்லுவில் பாரிய வேளைத்திட்டங்கள் ஆரம்பம்!

0

எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவரும், முன்னால் உயர்ஸ்தானிகரும், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஆலோசகருமான அல்ஹாஜ் இப்ராஹிம் அன்சார் மற்றும் முன்னால் மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புத்தளம் மாவட்ட இணை அமைப்பாளரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளன புத்தளம் மாவட்ட தலைவருமான கௌரவ றியாஸ் அவர்களுக்கிடையேயான சினேக பூர்வ சந்திப்பொன்று நேற்றைய தினம் (16.01.2021) சகோதரர் றியாஸ் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது பு/எருக்கலம்பிட்டியின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் இப்ராஹிம் அன்சார் அவர்களினால் பிரத்தியேகமாக சில கோரிக்கைகளும் சகோதரர் றியாஸ் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக 2 கி.மீ. பொத்துவில்லு பாதை புனரமைப்பு இடம்பெறவுள்ளதுடன் மேலதிகமாக நாகவில்லு வைத்தியசாலை வீதியை காபட் வீதியாக செய்து தருவதாக சகோதரர் றியாஸ் அவர்கள் வாக்குறுதியளித்துள்ளார்.

மேலும் எமது ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுத்தரும் நோக்கில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் RO PLANT திட்டமொன்றும் மேலதிகமாக செய்து தருவதாக எமது பள்ளிவாசல் தலைவரிடம் தெரிவித்துள்ளமை ஓர் முக்கிய அம்சமாகும்.

எனவே சகல வழிகளிலும் உதவி நல்கிவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் சகோதரர் றியாஸ் அவர்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக பள்ளிவாசல் தலைவர் நன்றி தெரிவித்ததுடன் மிக விரைவில் பொத்துவில்லு வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் இப்ராஹிம் அன்சார் அவர்கள் eNews1st ற்கு தெரிவித்தார்.

இவ்வாரான சமூக பணிகளில் ஈடுபடும் சகலருக்கும் அல்லாஹ் உயர்ந்த கூலியை வழங்குவானாக ஆமீன்…