Sunday, June 21, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 87

நுரைச்சோலை வீட்டுத்திட்டம்: பல வருட மர்மம் விலகுமா?

0

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாததன் மர்மம் குறித்து பல்வேறு தரப்பினராலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.

கடந்த 2004ம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெரும் தொகையில் சகல வசதிகளும் கொண்ட கிராமமாக இவ்வீடமைப்புத்திட்டம் சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்டபோதிலும் நாளையுடன் (26)  21 வருடங்களாக மக்களுக்கு கையளிக்கப்படாம் இன்று காடு மண்டிக் காணப்படுகின்றது. சவூதி அரேபியாவின் நன்கொடை நிதியத்தின் 552 மில்லியன் ரூபா நிதியுதவியில் சுனாமி வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இவ்வீட்டுத்திட்டத்துக்கான ஒப்பந்தம் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு, வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சிடம் வழங்கப்பட்டது.

சுமார் 40 ஏக்கர் காணியில் 500 வீடுகள் உட்பட பல்தேவை கட்டிடம், சந்தைக் கட்டிடம், ஆண்கள் பாடசாலை, பெண்கள் பாடசாலை, பள்ளிவாயல், வைத்தியசாலை, பஸ்தரிப்பு நிலையம், விளையாட்டு மைதானம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளது.அப்போது வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பேரியல் அஷ்ரப் பதவி வகித்தார்.சுமார் 40 ஏக்கர் காணியில் அமைந்துள்ள இந்த வீட்டுத்திட்டத்தில் 500 வீடுகள் உள்ளன

இவ்வீட்டுத்திட்டமானது இது வரை மக்களுக்கு கையளிக்கப்படாததன் காரணம் நீதி மன்றத் தீர்ப்பு மற்றும் அரசியல் காரணங்கள் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இங்கு  வீடுகள்,சந்தைக் கட்டிடம், பாடசாலை, பள்ளிவாசல் மற்றும் விளையாட்டு மைதானம், பாதைகள்  போன்ற அனைத்து வசதிகள்  இருந்தும் கடந்தகாலம் ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் இவ்வீடுகளை கையளிக்காமல் மரங்களாலும் புற்களாலும் சூழப்பட்ட காடு மண்டி வனமாக தற்போது காட்சி அளிக்கின்றது.தற்போது இம்மீள்குடியேற்ற கிராமம் காடுகளால் சூழப்பட்டு, கொடிய விச ஜந்துக்கள், யானை மற்றும் ஆபத்தான விலங்குகள், பிராணிகளின் உறைவிடமாக மாறியுள்ளதுடன் வீடுகள் யாவும் சேதமாகியுள்ளது.தற்போது இவ்வீடுகளை பகிர்ந்தளித்தாலும் கூட பயனாளிகளால் உடனடியாக குடியேறமுடியாத நிலையில் மிகவும் மோசமாக சேதமடைந்த நிலையிலேயே வீடுகள் காடுமண்டிய நிலையில் காணப்படுகின்றன.

எனவே தான்  அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நுரைச்சோலையில் கட்டப்பட்ட 500 வீடுகளும் விரைவில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல காலமான மக்கள் கோரிக்கையாகும்.

தற்போது கூட நாட்டில் ஏற்பட்ட டிக்வா  புயல் அனர்த்தம் காரணமாக பல மக்கள் வீடுகளை இழந்திருக்கின்றார்கள்.எனவே இவ்வாறு இயற்கை அனர்த்தங்களினால் தங்களது வீடுகளை இழந்தவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் வீடுகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.இதனை எல்லோரும் சாதி மத பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமான ரீதியில் நோக்க வேண்டும்.

அரசியல் வேறுபாடுகள் இதர காரணங்களினால் இவ்வாறான பெறுமதியான வீடுகள் உரிய காலத்தில் மக்களிற்கு  கையளிக்காததன் காரணமாக பெறுமதி இழந்து வருவதுடன் பல மடங்கு செலவுகளையும் மீண்டும் மக்களுக்கு வழங்கப்படும் போது ஏற்படுகின்றது.காரணம் தற்போதுள்ள வீட்டுத்திட்டங்களிலுள்ள கதவுகள் போன்ற பெறுமதியான பொருட்களும் களவாடப்பட்டுள்ளன. வீட்டுத்திட்டம் முழுக்க காடு வளர்ந்துள்ளது. வீடுகளில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் பாரிய புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதால் அதற்காக பாரியளவான நிதியினை ஒதுக்க வேண்டிய தேவையுள்ளது.

எனவே  சகல தரப்பினரும் இவ்வாறான விடயங்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வருவதுடன் மக்களுக்காக ஒருமித்த கருத்துடன் பணியாற்ற வேண்டும்.பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் இதுவரை மக்களிடம் கைளிக்கப்படாமல் காடாகக் காட்சியளிக்கும் நிலைமை குறித்து தற்போதைய  அரசாங்க  இவ்வீட்டுத்திட்டம் மக்களிடம் கையளிக்க வேண்டும் என்பதற்காக   பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர்! 

0

இலங்கையில்  படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை தேவராசாவின்  39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் வள நிலையத்தில் இன்று (25) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. 

கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணன் இல்லத்தின் செயலாளர் உ.உதயகாந்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது மறைந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் திருவுருவப் படத்துக்கு அன்னாரின் உறவினரான அக்கரைப் பாக்கியனால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் உறுப்பினர்களால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணனால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது.

பின்னர், அன்னாரது உறவினரான அக்கரைப் பாக்கியன் பேருரை ஆற்றினார். 

1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  இலங்கையில்  படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளராக கணபதிப்பிள்ளை தேவராசா கருதப்படுகிறார்.   

விமான விபத்தில் லிபியா ராணுவ தலைமைத் தளபதி பலி!

0

லிபியாவில் அரசுக்கு ஆதரவாகத் துருக்கி ராணுவம் செயல்பட்டு வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக லிபியா ராணுவ உயர் அதிகாரிகள் குழு துருக்கி சென்றிருந்தது.

அங்காராவில் இப்பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் அவர்கள் லிபியா தலைநகர் திரிபோலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் திடீர் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் கெசிக்காவக் கிராமம் அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் லிபியா ராணுவ தலைமைத் தளபதி முகமது அலி அகமது அல்-ஹட்டாத், தரைப்படை தளபதி அல்-பிதூரி கரிபில் உட்பட 5 அதிகாரிகளும், 3 விமான ஊழியர்களும் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

இதுகுறித்து லிபியா பிரதமர் அப்துல் ஹமீத் தபேபா வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டிற்காக உழைத்த ராணுவத் தலைவர்களை இழந்து தவிக்கிறோம், உயிரிழந்த வீரர்களுக்குத் நாடு அஞ்சலி செலுத்துகிறது. 3 நாட்கள் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சேருநுவர – மஹிந்தபுர சந்தியில் கோர விபத்து: 14 பேர் படுகாயம்

0

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹிந்தபுர சந்தியில் வைத்து பஸ்வண்டி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (25) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்தி திருகோணமலைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றேஇவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலை மற்றும் சேருநுவர பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி!

0

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும்.

கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின் போதனையான, இக்கட்டான காலங்களில் அயல் வீட்டாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னதமான மனிதப் பண்பையும், அசைக்க முடியாத உறுதியையும் கடந்த அனர்த்த நிலைமையில் இந்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

அமைதி, நல்லிணக்கம், தியாகம் மற்றும் இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தாரின் அர்த்தத்தை உண்மையில் புரிந்துகொண்டதனாலேயே, ஒருபோதும் பயணிக்க எதிர்பார்க்காத வீதிகளில் கூட தமது சகோதர மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை மக்கள் சுமந்து சென்றார்கள் என்று நான் நம்புகிறேன்.

இருள் நீங்க வேண்டுமானால், ஒளியின் பிரகாசம் பரவ வேண்டும். பெத்லகேமில் ஒரு ஏழை தொழுவத்தில் பிறந்து, கல்வாரி மலைப் பகுதியில் மனித சமூகத்தை பாவத்திலிருந்து மீட்க சிலுவையில் தன்னை அர்ப்பணித்த இயேசு, மிகுந்த உறுதியுடனும், நம்பிக்கையுடனும், ஞானத்துடனும் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவம் கூறுகிறது.

யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக அமைய வேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன்.

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2025 டிசம்பர் 25

பேரழிவின் அதிர்ச்சியுடன் இம்முறை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

0

ஜூட் சமந்த

உண்மையான கிறிஸ்தவர்கள் இந்த ஆண்டு கடும் பேரழிவின் பின்னர் தமது கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள் என்று சிலாபம் ஆயர் மேதகு விமல்சிறி ஜெயசூரியா கூறினார்.

சிலாபம் மறைமாவட்டத்தில் கிறிஸ்துமஸ் தின ஆராதனையில் பங்கேற்றபோது ஆயர் இவ்வாறு கூறினார்.

சிலாபம், திசோகமவில் உள்ள ஸ்ரீ குருச தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின ஆராதனையில் பிரதான பிரசங்கத்தை நிகழ்த்திய ஆயர் விமல்சிறி ஜெயசூரியா மேலும் பின்வருமாறு கூறினார்.

“டிசம்பர் மாதம் வரும்போது, ​​கத்தோலிக்கர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்துமஸ் டிசம்பரில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு, டிசம்பர் மாதம் வந்துவிட்டது, அவர்கள் வசிக்கும் கிராமங்களில் பெரும்பாலான மக்களை அகதிகளாக்கியது. சிலர் நீண்ட காலமாக கடின உழைப்பால் கட்டிய வீடுகளையும் இழந்தனர். பலர் தங்கள் ஆடைகளை மட்டுமே வைத்திருந்தனர். அதனால்தான் அவர்கள் வசித்த அதே நிலத்தில் அகதிகளாக மாறினர்.

அகதிகள் ஆனவர்கள், அவர்களின் அளவு அல்லது வயதைப் பொருட்படுத்தாமல், பல நாட்கள் முகாம்களில் கழித்தனர். அந்த முகாம்களில்தான் உண்மையான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடினர். பலர் தங்களுடன் ஒருபோதும் பேசாதவர்களுக்கு உதவ வேண்டியிருந்தது. அது இந்த வழியில் நிறைவேறியது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

பேரழிவால் அதிர்ச்சியடைந்த மக்கள் இன்னும் நம்மிடையே உள்ளனர். அவர்களின் மனநிலையை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.”

கைது செய்யப்பட்டார் அர்ச்சுனா எம்.பி!

0

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை (24) சரணடைந்துள்ளார். 

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதனையடுத்து அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இதனையடுத்து அர்ச்சுனா எம்.பி இன்று கோட்டை பொலிஸ் நிலையத்தில்  சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்பிட்டி பிரதேசத்தில் மீண்டும் நிவாரண கொடுப்பனவு ஆரம்பம்!

0

ஜூட் சம்மந்த

கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவின் கிராம அலுவலர்கள் மற்றும் பொருளாதார அலுவலர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பில் இருந்து விலகி, இடைநிறுத்தப்பட்டிருந்த “தித்வா” பேரிடர் நிவாரண கொடுப்பனவை மீண்டும் வழங்க தொடங்கியுள்ளனர்.

அனர்த்த உதவி விநியோகத்தின் போது ஏற்பட்ட தொடர்ச்சியான அழுத்தம் மற்றும் தடைகள் காரணமாக, கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவின் அனைத்து கிராம அலுவலர்களும் கடந்த 20 ஆம் தேதி நடவடிக்கைகளில் இருந்து விலகினர். கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவின் பொருளாதார மேம்பாட்டு அலுவலர்களும் அனர்த்த உதவி விநியோகத்தை ஆதரிப்பதில் இருந்து விலக நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவின் கிராம அலுவலர்கள் மற்றும் பொருளாதார அலுவலர்கள், கல்பிட்டி – வன்னிமுந்தலம மற்றும் ஆலங்குடா பகுதிகளில் தங்கள் கடமைகள் தடைபடுவதாக கடந்த 19 ஆம் தேதி கல்பிட்டி பொலிஸாரிடம் புகார் அளித்தனர்.

கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் 31 கிராம அலுவலர் பிரிவுகள் இருப்பதுடன், 22 கிராம அலுவலர்கள் மட்டுமே சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கல்பிட்டி பிரதேச செயலகத்தில் 25,324 குடும்பங்கள் சமீபத்திய பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 14,824 குடும்பங்கள் ரூ.25,000 ரூபா பேரிடர் உதவியைப் பெற தகுதி பெற்றிருந்தன. இதற்காக அரசாங்கம் ரூ.370.60 மில்லியன் ஒதுக்கியுள்ளது. 20 ஆம் தேதி நிலவரப்படி, ரூ.210 மில்லியன் பேரிடர் உதவியாக விநியோகிக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட செயலாளருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, அவர்கள் பேரிடர் உதவியை விநியோகிக்க ஒப்புக்கொண்டனர், மீதமுள்ள ரூ.160 மில்லியனை அடுத்த சில நாட்களில் செலுத்தி முடிப்பார்கள் என்று கல்பிட்டி பிரதேச செயலகத்தின் கிராம அலுவலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

0

டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

இந்தப் போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் 200 கோடி ரூபா எனப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். 

கடந்த 9 ஆம் திகதி கந்தர பிரதேசத்திலிருந்து 5 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற குறித்த மீன்பிடிப் படகு, போதைப்பொருளைக் கடத்திச் சென்றுகொண்டிருந்த போதே நேற்று (23) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. 

இன்று காலை 6 மணியளவில் டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட இப்படகிலிருந்து, ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் அடங்கிய 11 பைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளத்தால் தவித்த மக்களுக்கு கைகொடுத்த ISRC நிறுவனம்!

சிலாபம் மற்றும் நாத்தாண்டியா பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ISRC Sri Lanka

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிலாபம் மற்றும் நாத்தாண்டியா பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று 23 டிசம்பர் 2025 அன்று ISRC Sri Lanka அமைப்பினால் மனிதாபிமான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தது.

இத்திட்டத்தின் கீழ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் மற்றும் நாத்தாண்டியா பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 500 குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளது பராமரிப்பு நிலையங்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றிற்கு 1,000 படுக்கை விரிப்புகள் (Blankets) மற்றும் 1,000 போர்வைகள் வழங்கப்பட்டன.

சமீபத்திய வெள்ளப் பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, இடம்பெயர்வு மற்றும் குறைபாடான வாழ்விட நிலைகளில் வாழும் நலிவடைந்த சமூகங்களுக்கு உதவுவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் வசிக்கும் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பாகுபாடற்ற மனிதாபிமான உதவிகள் செய்யப்பட்டன.

இந்நிவாரணத் திட்டத்திற்கு குவைத் நாட்டைச் சேர்ந்த தனவந்தர்கள் வழங்கிய நிதி உதவியுடன், அல் புன்யான் மற்றும் தன்மியா ஆகிய அமைப்புகள் அணுசரனை வழங்கின. இது இலங்கையின் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குவைத் நாட்டின் உறுதியான மனிதாபிமான ஒத்துழைப்பை வெளிக்காட்டுகிறது.

இந்நிவாரணப் பொருட்கள் விநியோகம், பிரதேச செயலகங்கள் உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் முறையான ஒத்துழைப்பினால் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ISRC Sri Lanka பிரதிநிதிகள், பேரிடர் காலங்களில் மனிதாபிமான உதவிகளூடாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, உடனடி நிவாரணத்தை வழங்கி களப்பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.