இலங்கையின் அந்நிய செலாவணி சந்தை தற்போது ஒரு அபாயகரமான “நச்சுச் சுழற்சியில்” (Vicious Cycle) சிக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவதைத் தடுக்கவேண்டுமானால், சந்தையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிக அவசரமானத் தேவை என அவர் வலியுறுத்தினார்.
வேகமாக வீழ்ச்சியடையும் ரூபாயின் மதிப்பு
சந்தையானது முழுக்க முழுக்க “நம்பிக்கை” என்பதன் அடிப்படையிலேயே இயங்குகிறது என்று குறிப்பிட்ட அவர், அந்த நம்பிக்கை உடையும் போது ஒட்டுமொத்த சந்தையும் வீழ்ச்சியடையும் என எச்சரித்தார். இலங்கை வங்கியின் தரவுகளின்படி, ஒரு அமெரிக்க டாலரின் விற்பனை விலை 354 ரூபாயைக் கடந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த வீழ்ச்சி எங்கு போய் நிற்கும் என்ற கேள்வி எழுந்துள்ளதாகக் கூறினார்.
சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த நிச்சயமற்ற தன்மையால் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.
ஏற்றுமதியாளர்கள் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பில், தங்களிடமுள்ள டாலர்களை ரூபாயாக மாற்றாமல் காலம் தாழ்த்துகின்றனர்.
இதேபோல இறக்குமதியாளர்கள் எதிர்காலத்தில் டாலரின் விலை இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், தற்போதே டாலர்களைக் கொள்வனவு செய்ய முற்படுகின்றனர்.
இதன் காரணமாக சந்தையில் டாலருக்கான தட்டுப்பாடு அதிகரிப்பதுடன், முறையான கேள்வி மற்றும் வழங்கல் (Bid and Offer) இல்லாத நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு
சந்தையில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய அடுத்த வாரமளவில் வட்டி விகிதங்கள் 50 முதல் 100 புள்ளிகள் (0.5% – 1%) வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார். அவ்வாறு வட்டி விகிதம் அதிகரித்தால்:
- அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் வட்டி அதிகரிக்கும்.
- மக்கள் மீது சுமத்தப்படும் வரி அளவு மேலும் அதிகரிக்கக்கூடும்.
அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பு
“நாடு வீழ்ச்சியடைய நான் விடமாட்டேன்” என ஜனாதிபதி கூறுவது மட்டும் சந்தைக்குப் போதுமானதல்ல என்று குறிப்பிட்ட அவர், சந்தை அரசியல் ரீதியானது அல்ல என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். நிதி அமைச்சு, திறைசேரி மற்றும் மத்திய வங்கி ஆகியவை இணைந்து சந்தையில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பத் தேவையான முறையான பொறிமுறையை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தவறும் பட்சத்தில், இந்த பொருளாதார நச்சுச் சுழற்சி நாட்டை மேலும் பாரிய விபரீதத்திற்கு இட்டுச் செல்லும் என அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.


